A-01-S.V.VENKATARAMAN

S.V.VENKATARAMAN

எஸ்.வி. வெங்கட்ராமன் -1

by

P.G.S. மணியன்

"இசை அரசி" எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய திரை இசைப் பாடல்களில் முதல் இடம் பிடிப்பது "காற்றினிலே வரும் கீதம்" தான்.

பண்டிதர் முதல் பாமரர் வரை - தலை முறைகளைக் கடந்து இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும் அற்புதப் பாடல் அது.

அது போலவே அவர் நடித்த படங்களில் முதல் இடம் பிடிப்பதும் "மீரா" திரைப்படம் தான்.

புலன்களை ஊடுருவி பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும் அற்புதச் சித்திரம் அது.

பாடல்கள், பின்னணி இசை, காட்சி அமைப்பு, படப்பிடிப்பு, பங்கேற்ற நட்சத்திரங்களின் நடிப்பு என்று அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கிய படம் அது.

வண்ணப்படம் அல்ல.

ஆனால் எண்ணத்தில்

எந்நாளும் நிலையாக நிலைத்திருக்கும்

அற்புதக் காவியம் அது.

"மீரா" - படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முழு முதற் காரணம் பாடல்களும் இசையும் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் வண்ணம் அமைந்த பாடல்கள்.:

*********************************************

"நந்தபாலா"

"காற்றினிலே வரும் கீதம்"

"கிரிதர கோபாலா"

"கண்ணன் லீலைகள் புரிவானே"

"பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த"

"மறைந்த கூண்டிலிருந்து"

"எங்கும் நிறைந்தாயே"

”எனது உள்ளமே"

"மறவேனே எந்நாளும்"

"ஹே. ஹரே. தயாளா"

"ஜனார்த்தனா ஜெகன்னாதா"

YOU CAN LISTEN TO ALL THE ABOVE SONGS AT

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/00-0-songs-from-meera-film-tamil--1945

*************************************************

- ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அமைந்த பாடல்கள்.

அவை அனைத்தையும் அற்புதமாக வடிவமைத்துக்கொடுத்த பெருமைக்குரிய இசை அமைப்பாளர் தான் திரு. எஸ். வி. வெங்கட்ராமன்.

அபாரமான இசை ஞானம் அவருக்கு கடவுள் கொடுத்த வரப்ரசாதம்.

எப்படிப்பட்ட சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி பாடல்களை தன்னால் கொடுக்கமுடியும் என்று நிரூபித்தவர்.

"மிகுந்த திறமைசாலி.. ஆனால் குறைவாக மதிப்பிடப்பட்டவர்" (talented but sadly under-rated film music composer) என்று அவரைப்பற்றி "ஹிந்து" நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் திரு. "ராண்டார் கை" அவர்கள்.

இது உண்மை தானா?

வாருங்கள். அவரது வாழ்க்கை சரிதத்தில் நுழைந்து நாமே தெரிந்து கொள்வோம்.

********

சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன் என்னும் நமது எஸ்.வி. வெங்கட்ராமன் பிறந்தது அய்யம்பாளையம் சிவன் கோவில் வாசலில். 1911 - ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பிறந்தார்.

வெங்கட்ராமனின் தாயார் லக்ஷ்மி அம்மாள் கர்ப்பவதியாக இருக்கும் போது அய்யம்பாளையத்தில் தனது சகோதரியின் வீட்டுக்கு வரும் போது சிவன் கோவில் வாசலில் பிரசவ வலி ஏற்பட அங்கேயே அப்போதே ஈன்றெடுத்த பாலகன் தான் வெங்கட்ராமன்.

அவரது தந்தை வரதராஜ அய்யர் சோழவந்தானில் ஒரு கம்பவுண்டராக பணியாற்றி வந்தார்.

சற்றும் எதிர்பாராத விதமாக அவர் இறந்தபோது வெங்கட்ராமனுக்கு இரண்டு வயசு.

அதன்பிறகு அவன் வளர்ந்ததெல்லாம் மானாமதுரையில் இருந்த அவனது சிற்றப்பாவின் ஆதரவில்தான். இளம் வயதிலேயே இசையில் அவனையும் அறியாமல் அவன் மனம் ஈடுபட்டது. பள்ளிப் படிப்பை விட பாட்டையே அவன் மனம் பெரிதும் விரும்பியது.

மூன்று வயதிலேயே காதில் விழுந்த கிராமபோன் இசைத்தட்டுப் பாடல்களை எல்லாம் பாட ஆரம்பித்தான் அவன். ஆனால் முறையாக ஒரு குருவிடம் பாட்டு கற்றுக்கொள்ள முடியவில்லை.. அந்த அளவு வசதியற்ற நிலை.

"மூணு வயசுலே எனக்கு பாட்டு வந்தது. அஞ்சு வயசுலே என்ன பாடறோம் என்கிற ஞானம் வந்தது." - எழுத்தாளர் திரு. வாமனன் அவர்களுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி இப்படி குறிப்பிட்டிருக்கிறார் வெங்கட்ராமன்.

நமது சிறுவன் வெங்கட்ராமனுக்கு அழகான களையான முகம். துருதுருவென்றிருப்பான்.

நாடகத்தில் நடிக்க தேவையான வசீகரம் அவனிடம் இயற்கையிலேயே இருந்தது.

பாட்டு கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவலும் சிறுவனுக்கு இருந்தது.

"நாடக கம்பெனியிலே பாட்டு, நடனம் எல்லாமே கற்றுக் கொடுப்பார்களாமே" - செவி வழி சேதி அவன் மனதில் அழுத்தமாக பதிந்தது.

ஆனால் அவன் குடும்பத்தாரிடம் இருந்து அவனது ஆசைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது..

"நம்ம அகத்துப் பிள்ளை ட்ராமா கம்பெனியிலே சேருவதாவது? " - என்று அவனது ஆசைக்கு ஆணை போடப்பட்டது. அப்போது சிறுவன் வெங்கட்ராமனுக்கு பத்து வயது.

ஒரு நாள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மானா மதுரைக்கு வந்திருந்த சென்னை பாவலர் கிருஷ்ணசாமி நாடகக் குழுவில் சேர்ந்து சென்னைக்கு வந்துவிட்டான்.

அவன் வீட்டினர் போலீசில் புகார் செய்து சென்னை வந்து சிறுவனை மீட்டுச் சென்று விட்டனர்.

வீட்டுக்கு வந்ததும் சிறுவனுக்கு பலத்த எதிர்ப்பு. தகப்பன் இல்லாத பையன். அடுத்தவர் ஆதரவில் வளரும்போது .. அவர்களுடைய எண்ணங்களுக்கு மாறாக செயல் பட்டால் என்ன நடக்குமோ அதுவே நடந்தது.

அந்தச் சமயத்தில் தான் அவனது தாயார் லக்ஷ்மி அம்மாள் யோசித்தார்.

"அப்பா இல்லாத குழந்தை. படிக்கவைக்கவோ வசதி இல்லே. பகவான் கிருபையிலே பாட்டு நல்லா வரது. டிராமா கம்பெனியிலே சேர்ந்து முன்னுக்கு வந்தா வந்துட்டு போகட்டுமே." என்று குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி பத்து வயது சிறுவனை நாடகத்தில் சேர ஆசி வழங்கி அனுமதித்தார் அவர்.

மதுரை ஜகன்னாத அய்யர் பாய்ஸ் கம்பெனியின் வாசல் கதவு பத்து வயது சிறுவன் வெங்கட்ராமனுக்காக திறந்து கொண்டது.

கண்ணுக்கு தெரியாத அவனது வெற்றிக்கான வாசல் கதவு திறந்துகொண்டதும் அப்போதுதான். ( TO BE CONTINUED)