MS ன் இளமைக்கால நினைவுகள்

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/ms-early-life-narrated-by-herself

( by GOWRI RAMNARAYAN)

thamizh translation by NITHYA-ARUN

================================

ஒருகாலத்தில் நடந்தவற்றை கதையாகச் சொல்வதில் பாட்டிகள் கை தேர்ந்தவர்கள்.

இந்தப் பாட்டியும் இப்பொழுது ஒரு கதை சொல்லப் போகிறேன்.

முன்னொரு காலத்தில் மலையத்வஜன் என்றொரு அரசன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான்.அக்காலகட்டத்தில் பாண்டிய நாடு தமிழ் தேசம் முழுவதும் விஸ்தரித்திருந்தது. பெரிய பெரிய கோயில்களும், மாட மாளிகைகளும் நிறைந்திருந்த மதுரை தான் தலைநகரம். மலையத்வஜன் தான் ஆசைகொண்ட அனைத்தும் பெற்றிருந்தான். ஆனால், குழந்தை பேறு மட்டும் இன்றி துன்புற்றிருந்தான். எனவே ஒரு மாமுனிவரின் சொற்படி பெரும் யாகம் ஒன்று வளர்த்து தன் குறை போக்க முற்பட்டான்.

அந்த யாகம் நெய், பூ, பழம் என எல்லா மங்களப் பொருட்களும் சமர்பித்து நடத்தப்பட்டது. யாகத் தீ தங்க ஜுவாலையாக ஓங்கி வளர்ந்தது. அப்பேர் ஒளியிலிருந்து ஒரு அழகான பெண் குழந்தை எழுந்து வந்தாள். அக்குழந்தை வானத்து விண்மீன்கள் மத்தியில் நின்று மிளிரும் நிலவின் அழகை ஒத்திருந்தாள். அவ்வாறே அத்தெய்வம் இம்மண்ணுலகம் வந்திறங்கியது. மகிழ்ச்சியில் மூழ்கிய அரசன் அப்பெண் குழந்தைக்கு மீனாட்சி எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தான்.

மீனாட்சி வளரும் பருவத்திலேயே பாண்டிய நாட்டை விஸ்தரிக்கும் எண்ணம் கொண்டிருந்தாள். கடல் போன்று பெரியதொரு வெற்றிப்படையை உருவாக்கினாள். அப்படை சென்ற திசையெங்கும் வெற்றியைக் குவித்தது. கடைசியில் இமயம் சென்றடைந்த மீனாட்சி சிவபெருமானின் உரைவிடமான கைலாயத்தை சூறாவளி எனத்தாக்க முடிவெடுத்தாள். ஆனால் எம்பிரானின் மகிமையை நேரில் பார்த்து, அவள் கையில் இருந்த அம்பு நழுவி விழுந்தது. சொக்கநாதரும் அவள் அழகில் சொக்கிப்போனார்.

இதைத் தொடர்ந்து அவர்களின் கல்யாண உற்சவம் மதுரையில் ஆரம்பமானது. அன்னை மீனாட்சியின் கரம் பிடிக்க கைலாய நாதர் அவரின் சர்ப்ப அணி, உடல்முழுதும் இட்டிருந்த திருநீற்றுப் பட்டை இவற்றை எல்லாம் துறந்து பட்டு வஸ்தரங்களும், தங்க நகைகளும் அலங்கரிக்க பாண்டிய இளவரசிக்கு ஏற்ற சுந்தரேஸ்வரராக உருவெடுத்தார். இப்பொழுது உங்களுக்கெல்லாம் புரியும், நம் மதுரையின் பெருமை!

நான் சிறுமியாக இருந்தபொழுது அடிக்கடி மீனாட்சி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டேன். அப்பொழுதெல்லாம் உள் சன்னதியில் தெரியும் அந்த அற்புதமான உருவத்தை வெறித்து பார்த்தவண்ணம் நிற்பேன். புரோகிதர் தீபாராதனை சுத்திக் காட்டும் பொழுது தெரியும் அம்பாளின் அந்த அழகிய கண்கள் ... அவை என்னில் சிலிர்ப்பை உண்டாக்கின. அந்தக் கண்கள் அன்பும், அருளும் நிறைந்துத் ததும்புவதாக இருந்தன. இவ்வாறு பிரார்த்தனைகளும், நம்பிக்கைகளும் என் சிறுவயது முதலே வளர ஆரம்பித்தன

-------------------------------------------------------------------------

பின்னாட்களில், நான் கச்சேரிகளில் பாட ஆரம்பித்த பிறகு, சில சந்தர்ப்பங்களில் மீனாட்சியைப் போற்றும் பாடல்களைப் பாடுவதுண்டு. அப்பொழுது அப்பாடலில் வரும் 'மதுராபுரி நிலையே ....' எனும் வரிகளைப் பாடும்போதெல்லாம் என்னை சிறு வயதில் ஆட்கொண்ட அந்த அழகிய கண்கள் நினைவில் வந்து செல்லும்.

எனது குழந்தைப்பருவம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில், ஹனுமந்தரையன் எனும் தெருவில் இருந்த மிகச்சிறிய, வெறும் மரத்தடுப்பு கொண்ட, நெரிசலாக அமைந்த வரிசை வீடுகள் ஒன்றில் கழிந்தது. இன்றும் மதுரையின் இப்பகுதிக்குச் சென்றால், அவ்வீட்டைக் காணலாம். இன்று போலவே அன்றும் அத்தெரு குறுகியும், தூசு படிந்தும், ஜன நெருக்கடியுடனும் காணப்பட்டது.

அச்சிறு சந்து அவ்வப்பொழுது சிறிதும் நகர மறுக்கும் பசுக்களால் ஆக்கிரமிக்கப்படுவதுண்டு. எந்த வாகனமும் அவ்வழி அவற்றை கடந்து செல்ல முடியாது. மனிதர்களின் கூச்சல்களையும், வாகனங்களின் இரைச்சல்களையும் பொருட்படுத்தாது அப்பசுக்கள் நன்கு வசதியாக அமர்ந்து அசை போட்ட வண்ணம் இருக்கும்.

ஆனால் பல இசைக் கலைஞர்கள், வீணை வாசிப்பில் தேர்ச்சிப் பெற்ற என் தாய் சண்முகவடிவை நாடி அங்கு வந்து செல்வதுண்டு. வீணை என்பது மிகப்பழமையானதொரு இசைக்கருவி. ஓவியங்களிலும், கோவில் சிற்பங்களிலும் காணப்படும் கலைமகள் சரஸ்வதி, கைகளில் வீணை ஏந்தி வீற்றிருப்பதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். வீணையின் நாதம் மேன்மையானதாகவும், இனிமையானதாகவும் இருக்கும். அதிலிருந்து எழும் இசை கேட்போர் மனதை அமைதியடையச் செய்து, நல்லெண்ணங்களை வருவிக்கக் கூடியது என்பார்கள். அக்கூற்று உண்மை என்பதை என் தாய் பயிற்சி மேற்கொள்ளும் பொழுதும், மேடைகளில் வாசித்த பொழுதும் இவ்வகை எண்ணங்களே என்னில் மேலோங்கி நின்றதின் மூலம் நான் உணர்ந்தேன்.

என் பெயரின் முன் உள்ள எம், எஸ் எனும் இரு எழுத்துக்களும் என் வாழ்வில் இரு பெரும் தாக்கங்களாக அமைந்த என் சொந்த ஊர் மதுரையையும், என் தாய் சண்முகவடிவையும் குறிப்பன. என் தாயே எனது முதல் குரு ஆவார். இன்றிருக்கும் இந்த கர்நாடக இசைப் பாடகியாக என்னை உருவாக்கியவர் அவரே.

நாங்கள் ஏழ்மையில் உழன்றிருந்தாலும், இசைச் செல்வம் நிறையப் பெற்றிருந்தோம். எங்கும் இசை வியாபித்திருந்த சூழலிலேயே நான் வளர்க்கப்பட்டேன். பேசுவதை விட மிக எளிதாகவும், இயல்பாகவும் பாட்டு எனக்கு வசமானது. நான் இயல்பிலேயே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள், அம்மாவின் கண்டிப்பு என்னை மேலும் அமைதிகொள்ளச் செய்தது.

என்னையும், என் சகோதரி வடிவாம்பாளையும் தேவை இல்லாது எதற்காகவும் வீட்டை விட்டு வெளிவர எங்கள் தாய் அனுமதித்தது கிடையாது. சொல்லபோனால் நாங்கள் வாசற்கதவருகில் நிற்பதையோ, சன்னல் வழி வெளியே பார்பதையோ கூட அவர் விரும்பியதில்லை. ஆனால் என் சகோதரன் சக்திவேல் சற்று கூடுதல் சுதந்திரம் பெற்றவனாக இருந்தான். பெண் பிள்ளைகளான நாங்கள் இருவரும் வீட்டினுள்ளேயே விளையாடி திருப்தி அடைந்து கொண்டோம். இவ்வளவு கட்டுபாடுகளுக்கு இடையில் நண்பர்கள் எவ்வாறு சாத்தியமாக முடியும்?

எங்கள் வீடு ஒரு முற்றமும், இரு அறைகளும், ஒரு அடுக்களையும் மட்டுமே கொண்ட மிகச்சிறிய வீடு. வீட்டின் மொட்டை மாடிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் ஒருபுறம். உடல்நலம் குன்றிய குடும்பத்துப் பெரியோர்களையும் உள்ளடக்கிய குடும்பம் ஆகையால், வீட்டில் எப்பொழுதும் அமைதி காத்திட வேண்டும்.

எங்கள் வாழ்க்கை மிகவும் எளிமையாகவும், குறைந்த பொருட்செலவில் நகரக் கூடியதாகவும் இருந்தது. தினமும் காலையில் குடிப்பதற்கு வறுத்த மல்லி, சிதளவு வெல்லம் மற்றும் மிகக் குறைந்த அளவு பால் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்த மல்லி காபி கொடுக்கப்படும். இரவு உணவாக மோர் சோறு. மல்லிகைப் பூ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றபோதிலும், தினமும் பூக்கள் வாங்கும் அளவு வசதி பெற்றிருக்கவில்லை. நானும், வடிவும் சேர்ந்து புளி, மிளகாய் இவற்றை சர்க்கரை சேர்த்து சிறு உருண்டைகளாகச் செய்து, அவ்வுருண்டைகளில் சிறு குச்சிகளைச் செருகி மிட்டாய்கள் செய்வோம். எங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டிய லாலிபப்புகள் அவையே!

எங்களிடம் ஏதுவும் இல்லை என்ற உணர்வே எனக்கு இருந்ததில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பெற்றிருந்தோம் தானே? நாங்கள் மூவரும் சேர்ந்தே பயின்றமையால், இசைக்கல்வி எங்களுக்கு வேடிக்கையாகவும், விளையாட்டாகவுமே வசமானது.

நான் பாட ஆரம்பித்தவுடன், வடிவா வீணை இசைக்கத் தொடங்குவாள். எங்களுடன் அறையை எதிரொலிக்கச் செய்யும் சக்திவேலின் மிருதங்கமும் இணைந்துகொள்ளும். அவனுடைய வாசிப்பு மிகவும் அருமையானதொரு அனுபவம். அவனிடமிருந்தே நான் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். நாங்கள் பேசிச் சிரித்த வண்ணம் பயிற்சி மேற்கொள்வோம். ஆனால் அம்மாவின் சிறிய கலடியோசைப் போதும், எங்கள் ஆர்பாட்டங்கள் அடங்கி, அமைதி திரும்ப. அத்தகைய கவனச்சிதரல்களை அம்மா ஒருபோதும் பொறுத்ததில்லை.

நான் குழந்தையாக இருந்தபொழுது தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்திருக்கவில்லை. மிகச்சில திரைப்படங்களே! அவையும் ஒருவர் பேசக் கேட்பதே மிகவும் அரிது. நான் ஒரு திரைப்படம் கூட பார்த்திருக்கவில்லை.

ஆனால் கதாகாலட்சேபம் (ஹரிகந்தா) எனும் கலை வடிவம் அனைவர் மத்தியிலும் மிகவும் பிரசித்திப் பெற்றதாய் இருந்தது. அதைப் பார்க்கவும், கேட்கவும் கோவில் வளாகங்களிலும், கல்யாணப் பந்தல்களிலும் பெரும் கூட்டம் கூடும். பாகவதர்கள் கூறும் தொன்மைக் கதைகளும், புராண இதிகாசக் கதைகளும் கேட்போரை மெய்மறக்கச் செய்யும். இக்கதை கூறுவோர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி என பல மொழிகளில் இருந்தும் வசனங்கள் கூறக்கூடிய திறமைபடைத்த மொழியாளர்களாகவும், அறிஞர்களாகவும் விளங்கினர். மேலும் அவர்கள் இசை கலந்து உயிரோட்டமிக்க கதைகளைச் சொல்லும் பொழுது அது கேட்போரைக் கவருவதாக அமைந்தது. இசை வல்லுனர்களே வந்து இருந்து கேட்கும் அளவிற்கு சில பாகவதர்கள் இசையிலும் கை தேர்ந்தவர்களாக விளங்கினர்.

பொதுவாக ஹரிகந்தா ஆண்களால் பாடப்படுவதாயினும், ஒரு சில பெண்களும் அதில் புலமை பெற்றவர்களாய் இருந்தனர். சரஸ்வதி பாய் என்பவர் அவர்களுள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒருவர். அப்போதிருந்த பல கலைஞர்களைப் போன்று அவரும் காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார். மேலும் அவர் சுதந்திர இந்தியாவிற்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய பிரச்சாரங்களை ஆதரித்துப் பேசினார்.

ஒருநாள் நான் அவருடைய நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தேன்

. அன்று அவரின் சொற்பொழிவில், கடற்கரையில் கூடிய ராமனின் வானர சேனையை விவரிக்கும் படலம் இடம்பெற்றது. திடீர் என இலங்கையில் இருந்து தப்பித்து ராமனிடம் சரணாகதி அடைய வந்த ராவணனின் சகோதரன் விபீசணன் வானில் தோன்றும் காட்சி. சரஸ்வதி பாய் அக்காட்சி முழுதையும் உணர்ச்சி மிக்கதாகவும், உற்சாகத்தின் விளிம்பிற்கும் எடுத்துச் சென்றிருந்தார். அவரின் கணீர் குரலில் ராக காமாஸ் ராகத்திலும், ஆதி தாளத்திலும் அமைந்த பாடல் ஒன்று ஓங்கி ஒலித்தது. யாரும் எதிர்பாராவண்ணம் அப்பாடல் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

(TO BE CONTINUED)

-------------------------------------------------------------------------

(3)

“This is the occasion,

for our liberation!

This is Congress Resolution,

Gandhiji’s inspiration!”

“இதுவே விடுதலைக்கான தருணம்!

இதுவே காங்கிரஸின் தீர்மானம்!

அண்ணல் காந்தியடிகளின் உத்வேகம்!”

மத்தளங்கள் இடிய, சிப்லா மணிகள் சலசலக்க, ஜால்ராக்கள் அதிர வெடித்து எழுந்து உச்சத்தைத் தொடுவதாய் அமைந்தது அப்பாடல். வெள்ளையர்களை நடுநடுங்கச் செய்யவே அப்பெண்மணி ஆங்கிலத்தில் பாடியிருக்க வேண்டும்.

ரீங்கரித்த கடைசி சந்தச் சவாலை முடித்தபின், பின்வரும் வார்த்தைகளைத் தமிழில் இடி என கர்ஜித்தார்,

"இவ்வாறாக விபீஷணன் வானிலிருந்து மண்ணிறங்கி ரகுநந்தனின் பாதங்களை பணிந்தான்.”

அக்கணமே சிரிக்காது இருக்குமாறு வலியுறுத்தி என் அம்மாவின் கைவிரல்கள் என்னை நெருடுவதை உணர்ந்தேன்.

நான் பள்ளிக்கு செல்வதற்கு முன்பாகவே எழுதவும் படிக்கவும் கற்றிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது ஒரு விசித்திரமான சம்பவம்!

சிறுவயதில் அதிகாலையிலேயே எழுந்து வாசலில் நின்றபடி வாசலை சுத்தம் செய்யும் பெண்களை வேடிக்கைப் பார்ப்பது என் வழக்கமாய் இருந்தது.

அவர்கள் பசுஞ் சாணம் கரைத்த நீரை வாசலில் தெளித்து அற்புதமான வடிவங்களில் மாக்கோலமிடுவார்கள்.

அப்படியொரு நாளில் அத்தெரு வழியே வந்த பெரியவர் ஒருவர் என்னைக் கடந்து சென்றார்.

அவர் காவி உடை தரித்தும், நெற்றியிலும் கைகளிலும் திருநீறுப் பட்டையிட்டும், கழுத்தில் ருத்திராட்சை மாலையணிந்தும் தோற்றமளித்தார்.

அவர் கைகளில் கமண்டலமும், தண்டமும் இருந்தன. ஏனென்று அறியவில்லை, முதல் பார்வையிலேயே அவர் மீது மரியாதை உண்டானது. பக்தியும், கருணையும் அவரில் குடிகொண்டிருந்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர் குளித்துத் திரும்புகையில் கனிவான புன்னகையுடன் என்னைக் கடந்து சென்றார்.

ஒருநாள் சற்றே நின்ற அவர், "குழந்தாய்! உன்னக்கு கற்பிக்க விழைகிறேன், உன் விருப்பமென்ன?" என வினவினார். நான் மகிழ்வுடன் சம்மதித்தேன்.

உடனே அவர் வாசற்படியில் கைகளை மடித்து, கண்களை மூடி அமர்ந்து, "ஜிஹரித குட பயசம்..." எனும் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார். நானும் அவரைப் பின்தொடர்ந்து அவ்வாறே செய்யலானேன்.

அவர் என்னக்கு கற்பித்தது என்னவென்று அறிவீர்களா? வேதங்களின் மொழியான சமஷ்கிருதம் அல்ல! நம் தாய் மொழியான தமிழும் அல்ல! அவர் என்னக்கு கற்பித்தது க்ரந்தா எனப்படும் மிகப் பழமையான, இன்று நடைமுறையில் மறைந்துபோன குறிப்பு மொழி! மிகப்பழம் புத்தகங்களிலும், கோவில் கல்வெட்டுகளிலும் மட்டுமே இன்று அவற்றை உங்களால் காண முடியும். இல்லையேல் பண்டைய காலங்களில் கணக்கெழுத பயன்படுத்திய செப்புப் பட்டயங்களில் காணக்கிடைக்கலாம்.

என் குடும்பத்தினர் இந்நிகழ்வுகளை மிகுந்த ஆச்சரியத்தோடு கவனித்தனர். சொல்லப்போனால் அவ்வயோதிகர் எனைப் போன்றதொரு சின்னஞ் சிரியாளுக்கு கற்பித்தமை அவர்களுக்கு வேடிக்கையாய் இருந்தது. இருப்பினும் எவரும் எங்களைத் தடுக்க முற்படவில்லை.

அந்த நாட்களில், வயதில் முதிர்ந்த கற்றறிந்த சான்றோர்கள், ஏழ்மையில் உழன்றிருந்தாலும் நன்மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தனர். ஆனாலும், அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் வடிவு மற்றும் சக்தியால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களிருவரும் என்னை ஏளனம் செய்யலானார்கள். ஒவ்வொரு நாளும் பிரார்த்தனையில் ஓதும் பொழுதும் அவர் எழுப்பும் விசித்திர ஒலியை கேலிசெய்யும் வகையில் சக்தி அவரை "பழைய திரிதகுல பயசம்" என அழைக்கத் தொடங்கினான். இருந்தபோதிலும், அவர் மீண்டும் பனாரஸ் திரும்பும் வரை எங்கள் வகுப்புகள் தடையின்றி தொடர்ந்தன. இவ்வாறே பெயர் அறியா அப்பெரியவர் என் முதல் ஆசான் ஆனார். மேலும் க்ரந்தா நான் கற்றறிந்த முதல் மொழியானது.

இதன் பின்னே நான் அனைவரையும் போல் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். துரதிஷ்ட வசமாக அது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தொடர்ந்தது. அறியா குற்றத்திற்காக வகுப்பு ஆசிரியர் ஒருவரிடம் நான் வாங்கிய அடி என் உடல்நிலையை பாதிக்கவே, பள்ளிப் படிப்பை நிறுத்த வீட்டுப் பெரியோர் முடிவெடுத்தனர். பள்ளிப் படிப்பைத் தவறவிட்டமை என்னில் பாதிப்பை ஏதும் ஏற்படுத்தவில்லை. உண்மையில் பள்ளி ஆசிரியர்களும், பள்ளிச்சுழலுமே என்னை அச்சுறுத்துவதாக இருந்தது. எனவே வீட்டில் இருக்கக் கிடைத்த வாய்ப்பு என்னில் பெரும் அமைதியைத் தந்தது.

இருப்பினும், என்னுடைய கற்றல் தடைப்பட்டதாகக் கருத வேண்டாம். ஏனெனில் என் அன்னையிடமிருந்து கற்க ஏராளமானவை இருந்தன. அவரையே நான் எனது முதல் குருவாக கருதும்போதிலும், ஒருநாளும் அவர் எனக்கு ஓரிடத்தில் அமர்ந்து கற்பித்ததில்லை. அவர் மற்ற மாணாக்கர்களுக்கு கற்பிக்கும் பொழுதும், பயிற்சி மேற்கொள்ளும் பொழுதும், மேலும் அவர் வீணை வாசிக்க நான் பாடும் பொழுதும் அது மிகவும் இயல்பாக நிகழ்ந்தது. இதை தொடர்ந்து என் தாய் ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவரை எனக்கு இசைப் பயிற்றுவிக்க தேர்ந்தெடுத்தார். ஒரு சுபயோக சுப தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறு பூஜையில் தேங்காய் உடைத்து இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். நான் எனது தாய் மற்றும் குருவின் ஆசிர்வாதம் பெற்றபின், எனது முதல் பாடத்தை கற்க கீழே விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அமர்ந்தேன். எனது குரு தம்புராவின் தந்திகளை சரி பார்த்தார். அவை சீராக இருந்தன. அவர் தெளிவான கணீர் குரலில் "ச ரி க ம ப த நி ச..." எனப் பாடியபடியே மெதுவாக தம்புராவையும் மீட்டத் தொடங்கினார். நானும் அவரைப் பின் தொடர்ந்து பாடினேன். நான் சிறப்பாக செய்திருக்க வேண்டும், ஏனெனில் அவர் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்பைத் தொடர்ந்தார்.

----------------------------- to be continued