முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே!
அனைவரும்: ஆமென்.
தொடக்கச் செபம்
இயேசுவின் கல்வாரிப் பயணத்தின் பாதப் பதிவுகள். இயேசுவின் சிலுவைப்பாதை ஒரு போராட்டப்பாதை. சமுக மாற்றத்திற்கான புதியபாதை. இது என்றோ, எங்கோ நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வல்ல. நம்மவரின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் வாழ்க்கைப் பாதை.
இயேசுவின் இச்சிலுவைப் பாதையில் பங்கேற்க வந்திருக்கும் நாம் ஓரம் நின்று, நிகழ்வதைக் கண்டு, சிறிதும் மாற்றம் இல்லாமல் வந்த வழி செல்லும் வெறும் பார்வையாளராய் இருந்திடாமல், இயேசுவோடு உடன் நடந்து, வாழ்க்கையில் மாற்றம் காணும், இயேசுவின் அன்புச்சீடராக இப்பாதப் பதிவுகளில் பங்கேற்று பயனடைவோம்.
எங்கே சுமந்து போறீர்?
சிலுவையை நீர் எங்கே சுமந்து போறீர்
பொங்கும் பகைவராலே, அங்கம் நடுநடுங்க
எங்கே போறீர்.
மனித பாவத்தாலே, மரணத் தீர்வை பெற்று
தூய செம்மறி போல, துக்கத்துடன் வருந்தி
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: வெளி வேடமாகப் பேசுகிறவர்களை விட்டுவிட்டு வெளிப்படையாக பேசிய இயேசுவின் மேல் விசாரணை வைக்கிறார்கள். கட்டுகளை அவிழ்த்துப் போகவிடுங்கள் என்று மொழிந்து எல்லாவிதமான அடிமைத்தனங்களின் கட்டுகளையும அவிழ்க்க வந்த அவரது கரங்களையே கட்டி வைக்கிறார்கள்.
குற்றமில்லாத இயேசுவை வார்த்தை அணிகளால் வதைக்கிறார்கள். “அவனை சிலுவையில் அறையும்” என்று உரக்க கத்திய யூதர்களின் , மதக் குருக்களின் குரல் கேட்டு இயேசுவை சிலுவைக்கு கையளிக்கிறான் பிலாத்து.
இயேசு: என்னுடைய ஆதங்கமெல்லாம் உங்கள் அநியாயத் தீர்ப்புகள் எல்லாம் என்னோடு முடிந்து போகட்டு என்பதே. கூர்மையான உங்கள் வார்த்தை ஆயுதங்களால் எத்தனை இதயங்கள் கிழிந்து போயிருக்கின்றன. தவறான உங்களது வார்த்தைகளால் எத்தனை தற்கொலைகள் அரங்கேறியிருக்கின்றன.
சுய லாபங்களுக்காக அடுத்தவர்களை குற்றவாளிகளாக்கி பிலாத்துவாக நடந்து கொண்ட வேளைகளை நினைத்துப் பாருங்கள். இனியேனும் திராவகம் பூசிய வார்த்தைகளைத் தவிர்த்து, கனிவான வார்த்தைகளால் கலங்கிய உள்ளங்களைத் தேற்றுங்கள்.
செபம்:
அனைவரும்: அன்பான இயேசுவே! எங்களுடைய சுயநலன்களுக்காக அடுத்தவர்களை வதைக்கின்ற மனநிலையை எங்களிடமிருந்து நீக்கியருளும். உம்மைப் போன்று உறவை வளர்க்கும், வாழ்வை வளமாக்கும் வார்த்தைகளைப் பேச எங்களுக்கு வரமருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பாரச் சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அணைத்து, பாரத்துடன் நடந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: சாதனை செய்தவர்களுக்கு சரித்திரத்தில் இடமுண்டு. சன்மானமாகச் சில பரிசுகளும் கிடைப்பதுண்டு. ஆனால் சென்ற இடமெல்லாம் நல்லதே சொல்லி வாழ்க்கை முழுவதும் நன்மையே செய்த இயேசுவுக்கு, வேதனையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை விருந்தாக. கைமாறு கருதாமல் பணியில் தனை முழுதும் கரைத்துக் கொண்டதற்கு பரிசாக காரி உமிழ்ந்து, எட்டி உதைத்து, சாட்டையால் அடித்து, முள்முடி சூட்டி பாரச் சிலுவையை இயேசுவின் தோள்களில் சுமத்துகிறார்கள்.
இயேசு: சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்று மொழிந்த நான், இன்று உங்கள் முன்னோடியாக சிலுவை சுமக்கிறேன். உங்களில் எத்தனை பேர் குடும்பப் பொறுப்புகளை, ஆற்ற வேண்டிய கடமைகளை, சிலுவைகளாக எண்ணி உதறித் தள்ளுகின்ற உதவாத மனநிலை கொண்டிருக்கிறீர்கள்.
வயது முதிர்ந்த பெற்றோர்களை இடத்தை அடைக்கும் குப்பைகளாக எண்ணி அப்புறப்படுத்தும் பொறுப்பற்ற மனநிலை கொண்டிருக்கிறீர்கள். சுமப்பவர்களுக்கு சுகமளிக்கும் சுமைதாங்கி தேவன் நான். உங்கள் அன்றாட வாழ்வின் சிலுவைகளை உவந்து ஏற்று, சுமந்து வாழுங்கள்.
செபம்:
அனைவரும்: எங்களுக்காக சிலுவையின் பாரம் சுமந்த இறைவா, பிறருக்கு சுமையாக வாழாமல், யாரையும் எங்களுக்கு சுமையாகக் கருதாமல், பிறர் சுமைகளை உமைப்போல் இன்முகத்தோடு சுமந்து வாழும் பறந்த மனம் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கல்வாரி மலை நாடி, தள்ளாடித் தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களை தனிமையாய் சுமந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: சுமை என்று வந்தவர்க்கு தோள் கொடுத்து தாங்கியவர். தாழ்நிலை நின்றவர்க்கு கரம் கொடுத்து உயர்த்தியவர். சிலுவையின் பாரத்தாலும், பயணத்தின் களைப்பாலும் வலுவிழந்து முகம் குப்புற மண்ணில் வீழ்கிறார். மண்ணோடு மண்ணாய் வீழ்ந்தபோதும் மௌனமாய் மடிந்து போகாமல் மீண்டெழுந்து தொடர்கிறார் இயேசு மீளாத பயணத்தை.
இயேசு: ஏன் விழுந்து விட்டேனென்று எண்ணுகிறீர்களா? விழவில்லை நான். விழுத்தாட்டப் பட்டிருக்கிறேன். என் கால்கள் இடறுவதை நினைத்து கலங்கவில்லை நான். உங்கள் வார்த்தையிலும், வாழ்க்கையிலும் அன்றாடம் நீங்கள் வழுக்கி விழுவதை எண்ணி வருந்துகிறேன். உங்களது தவறான முன்னுதாரணங்களால் பிறரை வழுக்கி விழச்செய்வதை எண்ணி உள்ளம் கலங்குகிறேன். வீழ்வது பலவீனம், பிறரை வீழ்த்துவது மதியீனம், வீழ்ச்சியில் எழுச்சிபெறுவதே தெய்வீகம்.
செபம்:
அனைவரும்: வீழ்ந்தபோதும் மீண்டெழுந்த இறைவா, உம்மைப்போல் நாங்களும் எங்கள் வீழ்ச்சிகளில் துவண்டுவிடாமல் துணிந்தெழுந்து பயணிக்க உமதருள் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங்கண்டு
மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த
எங்கே போறீர்:
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: “பிழையென்ன செய்தான் என் மகன்? தொழுநோயைக் கூட தொட்டு தூய்மையாக்கியவனை, யாரும் நினையாதவர்களையும் நாடிச் சென்று அரவணைத்தவனை, வழி தவறியவர்களையும் தேடிச் சேர்த்து நல்வழி நடத்தியவனை, வழியெங்கும் அடித்துத் துவைத்து, தலையிலே முள்முடி, தோள்களிலே சிலுவை சுமத்தி, ஊர்வலமாய் இழுத்து வருகிறார்களே” என்ற உள்ளக்குமுறலோடு துயரத்தின் விளிம்பில் இயேசுவை சந்திக்கிறாள் அன்னை மரியாள்.
இயேசு: உலகமே என்னைக் கைவிட்டபோதும் உடனிருந்து தேற்றினாள் என் அன்னை மரியாள். தவமிருந்து பிள்ளைகள் பெற்று, பேணி பராமரிக்கும் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் பருவ வளர்ச்சியில் உடனிருந்து உதவி வரம்புகளைச் சுட்டிக்காட்டி, ஒழுக்கத்தை ஊட்டி, ஞானத்தில் வளர உதவுங்கள். விமர்சனங்களால் அவர்களை விரக்தியடையச் செய்திடாமல், வெற்று அறிவுரைகளால் அவர்களை பொறுமை இழக்கச் செய்திடாமல், உங்கள் வாழிவில் உதாரணங்களால் வழிகாட்டுங்கள் என் அன்னையைப் போல்.
செபம்:
அனைவரும்: தாயான தெய்வமே! எங்கள் குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே புரிதல் மேம்பட, உறவுகள் வலுப்பெற, உறவின் பாலமாய் இருந்து உதவிடுவாய். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
உதிரம் ஆறாய் சிந்தி, உள்ளம் உரமிழந்து
சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: கல்வாரிப் பயணத்தில் களைத்துப்போன இயேசுவுக்கு கரம் தந்து உதவிட யாருமே முன்வரவில்லை. அவரது வல்லமையால் பார்வையடைந்தவர்கள், அவரது புதுமைகளால் புத்துயிர் பெற்றவர்கள், அவர் அல்லல் பட்ட வேளையில் உதவிட வரவில்லை. ஒட்டி உறவாடிய அன்புச் சீடர்களும் ஓடி ஒளிந்து கொண்ட அத்தருணத்தில் இயேசுவின் சிலுவை பாரத்தைப் பகிர்ந்து கொள்ள வருகிறான் சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்.
இயேசு: என் பயணம் பாதியில் முடிந்து விடுமோ என பயப்படுகிறார்கள். என் சிலுவையைச் சுமக்க வழியில் வந்தவனுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்கள். அன்பர்களே, பகிர்ந்து கொள்ளும் போது கனமான பாரம் கூட பாதியாகி விடுகிறது. மனதை அழுத்துகின்ற பாரமான நினைவுகளை, மறக்கவே முடியாது என்று நினைக்கின்ற துரோகங்களை, நினைத்துப் பார்க்கவும் இயலாத இழப்புகளை, பகிர்ந்து கொள்ளும் போது இதயம் இலகுவாகின்றது. பகிர்ந்து கொள்ளும் இதயங்களுக்கு செவிமெடுக்கின்ற போதும், உதவுகின்ற போதும் நீங்களும் சீமோனைப் போல என் பாரம் பகிர்ந்தவர்களாவீர்கள்.
செபம்:
அனைவரும்: துன்ப வேளையில் எங்கள் ஆறுதலே இறைவா! பார இதயத்தோடு வருபவர்களுக்கு பரிவாக செவிமடுத்து, உதவிக் கரம் நீட்டும் உயர்ந்த உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெரோணிக்காள், வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: கொளுத்தும் வெயிலும், குத்தும் முள்முடியும் இரக்கமின்றி தலையில் இறங்க, முகமெல்லாம் வழிந்த வியர்வையும், இரத்தமும் இமைகள் நனைத்து பார்வை மறைக்க, தட்டுத் தடுமாறி பயணம் தொடர்ந்த வேளையில் கலங்கிய கண்களோடும், கனிந்த இதயத்தோடும், உருகுலைந்த முகத்தை ஒற்றியெடுக்க வருகிறாள் வீர மங்கை வெரோணிக்காள்.
இயேசு: ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்த்திருக்க ஒருத்தி மட்டும் தடை கடந்து, முகம் துடைத்து, என் சோர்வு போக்கினாள். ஊர் என்ன சொல்லும், உலகம் என்ன நினைக்கும் என்ற சிந்தனைகளாலேயே கூட்டுக்குள் புதைந்த நத்தையைப் போல வாழ்க்கையை, வாய்ப்புகளை புதைந்து போக, கடந்து போக விட்டுவிடாமல், நல்ல சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தேவையில் இருப்பவர்களுக்கு உதவவும், வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கிடக்கும் வெரோணிக்காள் உயிர்பெறட்டும்.
செபம்:
அனைவரும்: எங்களுக்காக இன்னுயிர் ஈந்த இயேசுவே, தேவையில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் எங்களால் இயன்றதைச் செய்திடும் தாராள மனதையும், மனித நேயத்தையும் நிறைவாகத் தந்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: சேரவேண்டிய இடமின்னும் வந்து சேரவில்லை. அதற்குள் ஆயிரம் அடிகள் உடலைக் கிழிக்கின்றன. உடைக்கப்பட்டாலும் அவர் உள்ளம் தளர்ந்து போகவில்லை. சிதைக்கப்பட்டாலும் அவர் கொண்ட இலட்சியம் சிதைந்து போகவில்லை. அவர் பட்ட வேதனையையும், துயரத்தைப் பார்த்து பூமியே தன் புவியீர்ப்பு விசையால் இழுத்து அரவணைத்துக் கொள்கிறது. விதை மண்ணில் வீழ்வது போல் வீழ்ந்தாலும், விழுந்த விதை முளைவிட்டு எழுவதுபோல் மீண்டும் எழுகிறார். கல்வாரி நோக்கி தன் பயணத்தைத் தொடர்கிறார்.
இயேசு: இலட்சியப் பாதையில் அடியெடுத்து வைக்கையில் கால் இடறி கீழே விழுந்தேன் இரண்டாம் முறையாய். இங்கு வாழ்பவர்களில் எத்தனைபேர் பிரச்சனைகளைத் தவிர்ப்பதாக எண்ணிக்கொண்டு வாழ்க்கையை வாழாமலேயே மடிந்து போகிறார்கள். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். பள்ளம் மேடுகள் நிறைந்தது தானே பாதை. பாதையில் வருகின்ற தடைகளை எல்லாம் பட்டியலிட்டு, கணக்கெடுத்துக் கொண்டிருந்தால், பயணத்தை துவங்குவது எப்போது? பாதங்கள் நடக்கத் துணிந்துவிட்டால், பாதைகள் மறுப்பதில்லை. பாதைகளில் கோடி தடைவரினும், பாதங்களும் அயர்வதில்லை.
செபம்:
அனைவரும்: துவளாது துணிவோடு பயணித்த இறைவா, எங்கள் பாதைகளில் கோடி தடை வந்தபோதும், உம் துணை கொண்டு எதிர்கொள்ளும் துணிந்த உள்ளம் தந்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: எப்பாடுபட்டேனும் இவன் கதையை இன்றோடு முடித்திட வேண்டும் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கூட்டம். என்னதான் நடக்கிறது என்று வேடிக்கைப் பார்ப்போம் என்று பார்வையாளர்களாய் இன்னொரு கூட்டம். இவர்கள் மத்தியில் மாரடித்துப் புலம்பி, ஒப்பாரி வைத்த வண்ணம் இயேசுவை பின்தொடர்ந்து வருகிறார்கள் எருசலேம் பெண்கள்.
இயேசு: பெண்களே, இன்னும் எத்தனை காலம்தான் உங்கள் எதிர்ப்புகளையும், ஏக்கங்களையும், அதிருப்திகளையும் அழுகையாலும், கண்ணீராலும் மட்டுமே அறிக்கையிடப் போகிறீர்கள்?
குடிவெறியால் குடும்பத்தை சீர்குலைக்கும் கணவனையும், பெண்களை பணம் காய்க்கும் மரங்களாகக் கருதும் சோம்பேறிகளையும், ஆணாதிக்க மனப்பான்மையால் அடிமைப்படுத்தும் தாழ்வுமனநிலை கொண்டவர்களாய், போகப் பொருளாக எண்ணி பயன்படுத்தும் காமுகர்களையும் எண்ணி எண்ணி அழுவதையும், கண்ணீர் சிந்துவதையும் அடியோடு நிறுத்துங்கள். அதைத்தவிர உங்களால் செய்யக்கூடியதென்ன என்பதை ஆக்கப்பூர்வமாய்ச் சிந்தியுங்கள். உங்கள் அழுகை மகிழ்ச்சியாக மாறட்டும்.
செபம்:
அனைவரும்: சமத்துவத்தின் நாயகனே இறைவா! இறைவனின் படைப்பில் ஆணும், பெண்ணும் சமம் என்ற ஆழமான உண்மையை நாங்கள் உணர்ந்து, எந்நாளும் மதித்து வாழ உமதருள் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
சிலுவைப் பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: எட்டிவிடும் தூரத்தில் கல்வாரியின் எல்லை, இருப்பினும் ஒத்துழைக்க மறுக்கின்றன கால்கள். கலிலேயா, யூதேயா, சமாரியா என்று எங்கும் அலைந்து திரிந்த இறைமகனின் தெய்வீகக் கால்கள், பிணியாளரையும், பாவிகளையும் தேடிச்சென்ற திருக்குமாரனின் திருக்கால்கள், இன்று சிலுவையின் பாரத்தாலும், பயணத்தின் கொடுமையாலும் நிலை தடுமாறுகின்றன. சதை கிழிய, இரத்தம் சிதர, நரம்புகள் சுண்டி இழுக்க, கால்கள் சோர்ந்து மூன்றாம் முறையாக இயேசு மண்ணில் வீழ்கிறார்.
இயேசு: இனியவர்களே! தடுமாற்றம் இல்லாமல் வாழ்க்கையில்லை. வீழ்தல் இல்லாமல் பயணம் இல்லை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும்,
ஆசையில் தடுமாறி, பாவத்தில் விழுந்து, கோபத்தில் தடுமாறி, பகையில் விழுந்து, தட்டுத்தடுமாறி விழுந்து, எழுந்து தான் பயணம் செய்கிறோம். துணிவோடு, நம்பிக்கையோடு, விருப்பத்தோடு முயல்கின்றபோது எந்த தடுமாற்றத்திலிருந்தும், வீழ்தலிலிருந்தும் உறுதியாக எழுந்து பயணிக்க முடியும் எனைப்போல.
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! எங்கள் வாழ்க்கையின் தடுமாற்றங்களின் போது விழுந்து கிடப்பதில் நாங்கள் சுகம் கண்டுவிடாமல், முயன்று, துணிந்து, எழுந்து நடந்திட உமதருள் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நீடாடை கழற்றவே, கோடாகோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய் பெருகி, வேதனையால் வருந்தி
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: இதுவரை இயேசுவுக்கு செய்த அவமானங்கள் போதாதென்று, குற்றுயிராய் அவர் கல்வாரியின் உச்சியை அடைந்த போது, அவர்தம் ஆடைகளையும் களைந்து அவமானத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். அவருடைய மேலுடையை நான்கு பாகங்களாகப் பிரித்து, ஆளுக்கு ஒன்றாகப் பங்குபோட்டுக் கொள்கிறார்கள். அவரது அங்கி மேலிருந்து கீழாக தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருக்க அதை அப்படியே எடுத்துக் கொள்ள தங்களுக்குள் சீட்டுப் போட்டுப் பார்க்கிறார்கள்?
இயேசு: அன்பர்களே, என் ஆடைகளையா அவர்கள் அகற்றினார்கள்? இல்லை, என் அடிப்படை உரிமைகளையே அபகரித்துக் கொண்டார்கள். என்னையும் மனிதராகப் பார்க்காமல், நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்துகிறார்கள்.
நண்பர்களே! எங்கெல்லாம் மனித மாண்புக்கு எதிரான நிகழ்வுகள் நடந்தேருகின்றனவோ,எங்கெல்லாம் சாதி, மதம், பணம், பதவி என்ற பெயரால் மனிதம் கூறுபோடப்பட்டு, நசுக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் நான் ஆடையிழந்து அவமானப்படுகிறேன்.
செபம்:
அனைவரும்: அன்பு ஆண்டவரே! உமக்கு நேர்ந்த அவமானம் கண்டு உருகும் நாங்கள், எங்கள் குடும்பங்களிலும், சமூகத்திலும் மனிதத்தை அவமானப்படுத்தாமல், மனித மாண்பையும், பிறர் நலத்தையும் பேணும் வரமருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நீட்டிய கால் கரத்தில், நீண்ட இரும்பாணிகள்
நிஷ்ட யூதர் அறைந்தும், நேசத்திலே வெந்து
பலியானீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: இதோ கழுமரத்தின் கருணை வள்ளல், குருடர்களையும், சூம்பிய கையரையும், பிடிவாதக்காரரையும் தொட்டுக் குணப்படுத்திய பரமனின் பட்டுக் கரங்கள் பாரச் சிலுவையோடு ஒட்டி அறையப்படுகின்றன. காடு மேடெல்லாம் கடந்து சென்று கடமையாற்றிய கால்கள், சிலுவைக் கட்டையோடு சேர்த்து அறையப்படுகின்றன. உடம்பிலே எஞ்சியிருந்த கொஞ்சம் இரத்தமும் ஆணிக் காயங்கள் வழியே வழிந்தோடுகின்றன. கன்னியின் வயிற்றில் கருவானவர் இங்கே சிலுவையில் சிதைக்கப்படுகின்றார்.
இயேசு: கடிதங்கள் மீது குத்தப்படும் முத்திரைகளை விட அடுத்தவரின் இதயங்கள் மீது குத்தப்படும் முத்திரைகள் தான் அதிகம். வாள் வீச்சினால் காயப்பட்டவர்களை விட, மற்றவர்களுடைய வார்த்தை வீச்சுகளால் வீழ்ந்து போனவர்களே அதிகம்.
முகத்தில் எறியப்படுகின்ற கற்களால் காயப்பட்டவர்களை விட முதுகுக்குப் பின்னால் வீசப்படும் சொற்களால் நொடிந்து போனவர்களே அதிகம் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? பிரியமானவர்களே, என் உடலில் இறங்கிய அடிகளையும், ஆணிகளையும் பார்த்து பரிதாபப்படுகின்ற நீங்கள், உங்கள் வார்த்தையாலும், செயல்களாலும் யாரையும் சிலுவையில் அறையாதீர்கள்.
செபம்:
அனைவரும்: அன்பான இறைவா! விமர்சனம் என்கிற பெயரில் அடுத்தவர்களை ஆணிகொண்டு அறையாமல், உண்மையான அன்பு செய்து வாழும் உயர்ந்த உள்ளத்தைத் தந்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
சிலுவைப் பீடமேறி, மும்மணி நேரம் தொங்கி
வான் பிதாவை வேண்டி, ஆருயிர் ஒப்படைத்து
பலியாகினீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
என் இறைவா, என் இறைவா
ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்
மெய்யாகவே அவர் நம் பிணிகளைத்தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைத் தன்மேல் சுமந்து கொண்டார். அவரே நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் செயல்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வு அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
தந்தையே உம் கையில் என்
ஆவியை ஒப்படைக்கின்றேன்.
செபம்:
அனைவரும்: எமக்காக உம் மகனையே கையளித்த இறைவா! உமது மகனின் இறப்பை நினைத்து அழுது புலம்பி, அமைதியாகச் சென்று விடாமல், எங்களுடைய முரண்பட்ட வாழ்வை நினைத்து கண்ணீர் வடித்து, வாழ்க்கைப் பாதையை சீரமைத்துக் கொள்ளும் உள்ளத் துணிவைத் தந்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மரி தாய் மடிமீதில், மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால், ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: ஆசிர்வதிக்கப்பட்டவருக்கு அவலநிலை. இறைவனின் வார்த்தையை இதயத்தில் சுமந்தவள். உலகத்தின் உதயத்தை உதிரத்தில் சுமந்தவள். இன்று கண்ணீர் முத்துக்களை கண்களில் தாங்கியவராக, நார் நாராக கிழிபட்டிருக்கும் இறைவனின் ஓவியத்தை, இறைமகன் இயேசுவின் உயிரற்ற உடலை மடியில் தாங்கி, மீளாத் துயரத்தில் மௌனித்திருக்கிறாள் அன்னை மரியாள்.
இயேசு: உலகிற்கே உயிர் கொடுத்தவன். இன்று உயிரற்ற உடலாய், எனக்காக உதிரத்தை பாலாக்கியவளின் மடியில் கிடக்கிறேன்.
நண்பர்களே! வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று வாழ்வதா வாழ்க்கை? இலட்சியம் இல்லாத மனிதன் நடந்து திரியும் பிணம். இலக்குகளோடு, இலட்சியத்தோடு வாழ்கின்றபோதுதான் வாழ்க்கையின் பக்கங்களுக்கு நாம் அர்த்தம் சேர்க்கிறோம். அப்போது மரணத்தாலும் அழிக்க முடியாதவர்களாவோம்.
செபம்:
அனைவரும்: நிறைவாழ்வின் ஊற்றே எம் இறைவா! கடமைக்காக பணி செய்தோம், பேருக்கு வாழ்க்கை நடத்தினோம் என்று வாழாமல் பொறுப்போடு, மகிழ்வோடு, நிறைவோடு வாழும் வரம் தருவாய். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கர்த்தரின் உடல்தனை, கல்லறைக்குள் அடக்க
உத்தானம் ஜீவனுமாய், உயிருடன் எழுந்து
எப்போ வருவீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்:
நிகழ்வு: ஒரு சமாதானப்புறா இங்கு சமாதியில்.ஒரு தெய்வீக ராகம் இன்று முகாரியில். விண்ணுக்கும் மண்ணுக்கும் இருந்த வேறுபாடுகளை களைவதற்கு இந்த மண்ணுக்கு வந்த மானிட மகனை மண்ணுக்குள்ளே பொத்தி வைக்கிறார்கள். மண்ணைத் தோண்டியல்லவா தங்கத்தை எடுப்பார்கள். இங்கு மண்ணைத் தோண்டி மாசில்லாத தங்கத்தைப் புதைக்கிறார்கள். உயிர்ப்பும் உயிரும் நானே என்றவரை இருட்டறையில் - கல்லறையில் புதைக்கிறார்கள்.
இயேசு: பிரியமானவர்களே! பிரிகின்ற நேரம் இது. எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்தவர்கள், உண்மை உறங்குவதில்லை என்பதை உணரவில்லை!
கருவறையில் பாலின பேதம் பார்ப்பது முதல், கல்லறைகளில் சாதி பேதம் பார்ப்பது வரை, மனிதத்தின் முகமெங்கும் பிரிவினைக் கோடுகள். பேதங்களை, பிரிவினைகளை கல்லறைகளில் புதைத்து, மனிதத்திற்கு உயிர் கொடுங்கள், உண்மைகள் உயிர் பெறட்டும்.
செபம்:
அனைவரும்: சமத்துவ நாயகனே இறைவா! பிரிவினைகளை, பேதங்களைக் கடந்து, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை மதித்து வாழும் உயர்ந்த உள்ளத்தைத் தந்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
முதல்வர்: இயேசுவில் பிரியமானவர்களே!
ஒவ்வொரு சிலுவைப் பாதையிலும், மீட்பராம் இயேசுவின் பாடுகளை நினைவு கூறுகின்ற நாம், நம் வாழ்க்கைப் பாதையில், நாம் அனுதினமும் சுமக்கின்ற சிலுவைகளை உவந்து ஏற்று, சுமந்து வாழும் வலிமையையும், மன உறுதியையும் நம்மில் வளர்த்துக் கொள்வோம்.
சிலுவைப்பாதைச் சிந்தனைகள், நம் சிந்தனைகளைத் தூய்மையாக்கி, செயல்களை செம்மைப்படுத்தி, வாழ்க்கையை நெறிப்படுத்தட்டும்.
என்றும் இயேசுவின் உண்மைச் சீடராய் வாழ்ந்திருப்போம்.
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக...
➕ ஒரு பரலோக மந்திரம்
➕ அருள் நிறைந்த மந்திரம்
➕ திருத்துவ செபம்.
முதல்வர்: இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்- தத்தங்களுக்கு, நாங்கள் பாத்திரமா-யிருக்கத்தக்கதாக, புனித வியாகுல மாதாவே!
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.