➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே,
➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்,
➕ எங்கள் சர்வேசுரா!
➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே. ஆமென்.
முதல்வர்:
புனித தந்தை பியோவே,
எல்லோரும்:
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்:
புனித தந்தை பியோவே,
எல்லோரும்:
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்:
புனித தந்தை பியோவே,
எல்லோரும்:
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எல்லோரும்:
ஐந்து காய வரம் பெற்ற முதற்குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி, பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, செபமாலை பக்தியை சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே, தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி, பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து, இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம்பெற்ற வள்ளலே, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே, இறைவனால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரான தூய பியோவே, இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும், தீராத நோய்களோடும், வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடி தேடி வரும் எங்களைக் கண்ணோக்கி பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்கு பெற்றுத் தாரும்.
(உங்கள் சொந்தக் கருத்துகளுக்காக மௌனமாக செபிக்கவும்)
அகிலம் போற்றும் அற்புதத் தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து,வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும், உலகிற்கு அமைதியைக் கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத் தாரும். ஆமென்.
இயேசுவின் திரு இருதயத்திடம் தந்தை பியோவின் சக்தி வாய்ந்த செபம்
“உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். கேளுங்கள் கொடுக்கப் படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள்” என மொழிந்த என் இயேசுவே! இதோ நான் கேட்கிறேன், நான் தேடுகிறேன், நான் தட்டுகிறேன். என் மன்றாட்டுக்களைக் கேட்டு அருள் புரிவீராக.
(உங்களுடைய தேவைகளை கேளுங்கள்)
(கர்த்தர் கற்பித்த செபம் மங்கள வார்த்தை செபம் மூவொரு இறைவன் புகழ்)
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.
“உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். என் பெயரால் தந்தையிடம் நீங்கள் எதைக் கேட்டாலும் அதை உங்களுக்கு அவர் அருள்வார்” என்று கூறிய என் இயேசுவே! இதோ உமது தந்தையிடம் உமது திருப்பெயரால் பணிவோடும் அவசரமாகவும் நான் எழுப்பும் மன்றாட்டுக்களைக் கேட்டு அருள் புரிவீராக.
(உங்களுடைய தேவைகளை கேளுங்கள்)
(கர்த்தர் கற்பித்த செபம் மங்கள வார்த்தை செபம் மூவொரு இறைவன் புகழ்)
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.
“உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். விண்ணும் மண்ணும் அழிந்து போகும் ஆனால் என் வார்த்தையோ அழியாது” என்று உரைத்த என் இயேசுவே! இதோ என் மன்றாட்டுக்களைக் கேட்டு அருள் புரிவீர் என்று உண்மையாகவே நம்புகிறேன்.
(உங்களுடைய தேவைகளை கேளுங்கள்)
(கர்த்தர் கற்பித்த செபம் மங்கள வார்த்தை செபம் மூவொரு இறைவன் புகழ்)
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.
ஆதறவற்றோர் மீதும் துன்புறுவோர் மீதும் இரக்கப்படாமல் இருக்க இயலாத இயேசுவின் திரு இருதயமே, மிகப்பெரும் பாவிகளாகிய எங்கள் மேல் இரக்கமாயிருக்க, உமது அன்புத்தாயும் எங்கள் அன்னையுமான தூய மரியாயின் மாசற்ற இதயத்தின் பரிந்துரை வழியாக, நாங்கள் பணிவுடன் கேட்கும் அருளை எங்களுக்கு வழங்குவீராக. ஆமென்.
தந்தை பியோவின் நற்கருணை மன்றாட்டு
என்னோடு தங்கும் ஆண்டவரே, உம்மை நான் மறவாதிருக்க நீர் என்னோடு பிரசன்னமாயிருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக உம்மைக் கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.
என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாதிருக்க உமது பலம் எனக்குத் தேவை.
என்னோடு தங்கும் ஆண்டவரே, எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லையென்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை.
என்னோடு தங்கும் ஆண்டவரே, நீரே என் ஒளி. என்னோடு நீர் இல்லையென்றால் நான் இருளில் வீழ்கிறேன். உமது சித்தம் எதுவெனெ எனக்குக் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே, உமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே.
என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மை அதிகமாக நேசிக்கவும், எப்போதும் உம் உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன். நான் உமக்குப் பிரமாணிக்கமாக இருக்க நீர் விரும்பினால் என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் எனது எளிய ஆன்மா உமக்கு ஆறுதல் தரும் இல்லமாக, ஒரு அன்புக் கூடாரமாக இருக்க ஆசிக்கிறேன்.
என்னோடு தங்கும் ஆண்டவரே, பொழுது சாய்கின்ற இந்த நாள் முடிகின்றது. கடந்து போகும் வாழ்விலே மரணமும் தீர்ப்பும் முடிவில்லா வாழ்வும் எதிர்நோக்கி நிற்கின்றன. வழியில் நான் நின்று விடாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கு நீர்தான் தேவை ஆண்டவரே. பொழுது சாய்ந்து, மரணமும் எதிர்நோக்கும் வேளையில் இருள், சோதனைகள், வறட்சி, சிலுவை, துன்பங்கள் அனைத்தையும் கண்டு அஞ்சுகிறேன். இருள் படரும் இவ்வேளையில் ஓ இயேசுவே நீர்தான் எனக்குத் தேவை.
இன்று இரவு என்னோடு தங்கும் ஆண்டவரே, பல்வேறு ஆபத்துக்கள் நிறைந்த இவ்வாழ்வில் நீரே எனக்குத் தேவை. அப்பம் பிட்கையில் உம்மை சீடர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். நற்கருணைத் திருவிருந்து இருளை அகற்றும் ஒளியாகவும் என்னைப் பலப்படுத்தும் அமுதமாகவும், என் இதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும் இருக்கும்படி உம்மை நான் கண்டுகொள்ளச் செய்தருளும்.
என்னோடு தங்கும் ஆண்டவரே, இறுதி வேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும் உமது அன்பு, அருள் மூலமாக என்னோடு தங்கும்.
என்னோடு தங்கும் இயேசு ஆண்டவரே, தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங்கொடையை எனக்குத் தாரும்.
என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் தேடுகிறேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு, உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.
தந்தை பியோவுக்கு மன்றாட்டு மாலை
முத : ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத : கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முத : ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத : கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல் : கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முத : விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா…
எல் : எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத : உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா…
எல் : எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத : தூய ஆவியாராகிய இறைவா…
எல் : எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத : மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா…
எல் : எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத : தூய மரியே…
முத : இறைவனின் தூய மாதாவே…
முத : குடும்பங்களின் பாதுகாவலரானப் புனித யோசேப்பே…
முத : அசிசியின் புனித பிரான்சிசே…
முத : புனித தந்தை பியோவே…
முத : பிரான்சிஸ்கன் சபையின் மணிமுடியாகியப் புனித தந்தை பியோவே…
முத : பிரான்சிஸ்கன் சபையின் நன்மாதிரியானப் புனித தந்தை பியோவே…
முத : புனிதர்களுள் புனிதராக விளங்கும் புனித தந்தை பியோவே…
முத : பாவிகள் மனம் திரும்பத் தன்னையே வருத்திக் கொண்டப் புனித தந்தை பியோவே…
முத : அன்னை மரியாவிடம் ஆழ்ந்த பக்தி கொண்டப் புனித தந்தை பியோவே…
முத : இயேசுவின் பாடுகளில் பங்கேற்று, ஐந்துக் காயங்களைத் தன் உடலில் சுமந்தப் புனித தந்தை பியோவே…
முத : புனித பிரான்சிஸின் அடிச்சுவட்டில் வாழ்ந்தப் புனித தந்தை பியோவே…
முத : திருப்பலியில் உம்மையே பலியாக்கியப் புனித தந்தை பியோவே…
முத : ஒப்புரவு அருள்சாதனத்தை வழங்கப் பேரார்வம் காட்டியப் புனித தந்தை பியோவே…
முத : சில நாள்கள் திவ்விய நற்கருணையை மட்டுமே உணவாகக் கொண்டிருந்தப் புனித தந்தை பியோவே…
முத : இறைப் பிரசன்னத்தில் அடிக்கடிப் பரவசமடைந்தப் புனித தந்தை பியோவே…
முத : அனைவரின் நல்ல ஆன்மீக ஆலோசகரானப் புனித தந்தை பியோவே…
முத : தன்னை நாடிய உத்தரிக்கும் தலத்து ஆன்மாக்களின் வேதனைகளைத் தணித்தப் புனித தந்தை பியோவே…
முத : ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பியப் புனித தந்தை பியோவே…
முத : சாத்தானின் சோதனைகளை வென்றவரானப் புனித தந்தை பியோவே…
முத : ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் வரம் பெற்றப் புனித தந்தை பியோவே…
முத : எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரானப் புனித தந்தை பியோவே…
முத : அடுத்தவர் அறியாமல் நடமாடும் ஆற்றல் பெற்றப் புனித தந்தை பியோவே…
முத : தீராத நோய்களையும் குணமாகும் வல்லவரானப் புனித தந்தை பியோவே…
முத : வயிற்றில் தோன்றியக் கட்டியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கியப் புனித தந்தை பியோவே…
முத : இறை ஞானத்தால் தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்கியப் புனித தந்தை பியோவே…
முத : பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தப் புனித தந்தை பியோவே…
முத : குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அளித்தப் புனித தந்தை பியோவே…
முத : மருத்துவர்களால் கைவிடப்பட்டச் சிறுவனைக் குணமாக்கியப் புனித தந்தை பியோவே…
முத : புற்று நோயாளிகளை அற்புதமாகக் குணமாக்கியப் புனித தந்தை பியோவே…
முத : பேய்களை நடுநடுங்கச் செய்தவரானப் புனித தந்தை பியோவே…
முத : சுய நினைவு இழந்தவர்களை உம் வல்லமையுள்ள செபத்தால் குணமாக்கியப் புனித தந்தை பியோவே…
முத : தீயவர்களை மனம் மாற்றியப் புனித தந்தை பியோவே…
முத : இயேசுவின் பிரசன்னத்தை எல்லோருக்கும் உணர்த்தியப் புனித தந்தை பியோவே…
முத : அவிவிசுவாசிகளை மனம் திருப்பியப் புனித தந்தை பியோவே…
முத : தொழிலாளர்களின் நலனைப் பேணியப் புனித தந்தை பியோவே…
முத : எல்லோருக்கும் எல்லாமுமானப் புனித தந்தை பியோவே…
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல் எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படியாக…
எல்: இறைவனின் புனித தந்தை பியோவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: மன்றாடுவோமாக… விண்ணகத் தந்தையாகிய எங்கள் இறைவா! புனித தந்தை பியோவை மக்களின் புனிதராகவும், எங்களின் தேவைகளில் பரிந்து பேசுகிறவராகவும் நீர் எங்களுக்கு அளித்த்தீரே. அதற்காக, நாங்கள் உமக்குக் கோடானக் கோடி நன்றி செலுத்துகிறோம். அவரது அருள் உதவியால் நாங்கள் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைக் கடைப்பிடிக்கவும், எங்கள் கடமைகளில் தவறாதிருக்கவும், கீழ்ப்படித்தலில் சிறந்திருக்கவும் செய்தருளும். எங்களுக்கு நேரிடும் இன்னல்களில் எல்லாம் உமது ஆதரவைக் கண்டுணரவும் செய்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.
தந்தை பியோவை நோக்கிச் செபம்
(திருத்தந்தைப் புனித இரண்டாம் ஜான் பவுல் எழுதியது)
ஐந்து காய வரம் பெற்றப் புனித தந்தை பியோவே, இதயத் தாழ்ச்சியை எங்களுக்கும் கற்பித்தருள உம்மை மன்றாடுகிறோம். ஏனென்றால் இறை ஆட்சியின் மறைபொருள்களை வெளிப்படுத்த விண்ணகத் தந்தை வாக்களித்துள்ள நற்செய்தியின் சிறுவர்களுள் நாங்களும் எண்ணப்படுவோம். ஏழைகளிலும் துன்புறுவோர்களிலும் இயேசுவின் முகத்தையே அடையாளம் காண உதவும் விசுவாசப் பார்வையை எங்களுக்குப் பெற்றுத் தாரும். துன்ப நேரத்திலும், சோதனை வேளையிலும் நாங்கள் வீழ்ந்துவிட நேரிட்டால் ஒப்புரவு திருஅருள்சாதனத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க எங்களுக்கு உதவியருளும். இயேசுவின் தாயும் எங்களின் தாயுமான கன்னி மரியாவிடம் நீர் கொண்டிருந்த மென்மையான பக்தியை எங்களுக்கும் கற்றுத் தாரும். தந்தை, மகன், தூய ஆவியாரின் மகிமையை எப்போதும் தியானிக்க, நாங்களும் வருவோம் என்று நம்புகின்ற, நமது விண்ணகத் தாய் நாட்டுக்கான மண்ணகத் திருப்பயணத்தில் எங்களுக்குத் துணையாக வாரும். ஆமென்.
இறுதி செபம்
பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாகவும்,
நமது தமிழ் குடும்பங்களில் உள்ள அனைவரின் நலனுக்காகவும்,
மரித்த விசுவாசிகளின் ஆன்ம இளைப்பாற்றிகாகவும் ஜெபிப்போமாக :
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
திருத்துவப் புகழ்
➕தந்தைக்கும் ➕ மகனுக்கும் ➕ தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!
தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே,
➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்,
➕ எங்கள் சர்வேசுரா!
➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே. ஆமென்.