நோயில் பூசுதல் சடங்கு முறை
குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு : ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக.
எல் : உம்மோடும் இருப்பதாக.
குரு: இத்தீர்த்தம் நாம் பெற்ற திருமுழுக்கை நினைவூட்டுவதாக. தம் பாடுகளாலும், உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட கிறிஸ்துவை நமக்கு நினைவுபடுத்துவதாக.
எல்: ஆமென்.
குரு : அன்புள்ள சகோதரர்களே, நோயுற்றோர் உடல் நலம் தேடி ஆண்டவரிடம் வந்தார்கள் என்று நற்செய்தி கூறுகிறது. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்காக கொடிய பாடுபட்ட எம்பெருமான், இதோ தம் பெயரால் கூடியிருக்கும் நம் மத்தியில் எழுந்தருளியிருக்கிறார். உங்களுள் ஒருவன் நோயுற்றிருந்தால் அவன் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும்;
அவர்கள் ஆண்டவர் பெயரால் அவன் மீது எண்ணெய் பூசி அவனுக்காகச் செபிப்பர். விசுவாசமுள்ள செபம் நோயாளியைக் குணமாக்கும். ஆண்டவர் அவனை எழுப்பி விடுவார். அவன் பாவம் செய்தவனாயிருந்தால் மன்னிப்புப் பெறுவான் என்று அப்போஸ்தலரான புனித யாகப்பர் வழியாக நமக்குக் கட்டளை தருபவரும் அந்த ஆண்டவரே எனவே, நோயுற்றிருக்கும் நம் சகோதரர் மீது கிறிஸ்து பெருமானின் அருளும், வல்லமையும இறங்கி, இவரது வேதனையைத் தணித்து, உடல் நலம் அருளுமாறு உருக்கமாக மன்றாடுவோம்.
பாவ மன்னிப்பு வழிபாடு
குரு : சகோதரரே, இத்திருச்சடங்கில் நாம் தகுதியுடன் பங்குபெற நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு மனம் வருந்துவோம்.
எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதரரே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும், பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே; ஆகையால், எப்போதும் கன்னியான பரிசுத்த மரியாளையும், வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரரே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்.
குரு : இரக்கம் நிறைந்த தந்தையாகிய இறைவன், தம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிய இறைவன், பாவ மன்னிப்புக்காகத் தூய ஆவியைப் பொழிந்தருளிய இறைவன், திருச்சபையின் திருப்பணி வழியாக உமக்கு மன்னிப்பும் சமாதானமும் அருள்வாராக. நானும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் உம் பாவங்களிலிருந்து உம்மை விடுவிக்கிறேன்.
எல்: ஆமென்
இறை வார்த்தை வழிபாடு
மத்தேயு 8:5-13
"இயேசு கப்பர் நகூம் ஊருக்குள் போனபோது நூற்றுவர் தலைவன் ஒருவன் அவரிடம் வந்து அவரை வேண்டி, 'ஆண்டவரே, என் வேலையாள் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான்' என்றான். இயேசு அவனை நோக்கி, நான் வந்து அவனை குணமாக்குவேன்' என்றார். நூற்றுவர் தலைவன் மறுமொழியாகக் கூறியதாவது, ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்; ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்; என் வேலையாள் குணமடைவான். ஏனெனில் நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும், எனக்கு அடியிலும் படைவீரர்கள் உள்ளனர்; ஒருவனை நோக்கி 'போ' என்றால் போகிறான்; வேறொருவனை நோக்கி 'வா' என்றால் வருகிறான். என் வேளையாளைப் பார்த்து 'இதைச் செய்' என்றால் செய்கிறான். இதைக்கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர் ந்தவர்களை நோக்கி, இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவனை தலைவனை நோக்கி, 'நீ போகலாம், விசுவசித்தப்படியே உனக்கு ஆகட்டும்' என்று சொன்னார். அந்நேரமே வேலையாள் குணமடைந்தான்."
இது கிறிஸ்துவின் நற்செய்தி
கிறிஸ்துவே உமக்குப் புகழ்!
விசுவாசிகளின் மன்றாட்டு
குரு : சகோதரரே, நம் சகோதரருக்காக இறைவனைத் தாழ்ந்து பணிந்து விசுவாசத்தோடு மன்றாடுவோம்.
ஆண்டவரே, இத்திருப்பூசுதல் வழியாகத் தேவரீர் பரிவன்புடன் இவரைச் சந்தித்து தேற்றியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இவரின் வேதனைகளையும் தேவரீர் தணித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் தேவரீர் துணை நிற்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இவரைப் பாவத்திலிருந்தும், சோதனை அனைத்திலுமிருந்தும் விடுவிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு: உமது பெயரால் நாம் இவர் தலைமீது கைகளை வைப்பதால், இவருக்கு நல்வாழ்வும், உடல் நலமும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு : அன்புத் தந்தையே, உம் அடியார் மீது திரு எண்ணெய் பூசுகிறோம். இதனால் அவர் வேதனை தணிந்து, ஆறுதல் பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.
திரு எண்ணெய் பூசுதல்
குரு : இப்புனித பூசுதலினாலும், தம் அன்பு மிகுந்த இரக்கத்தாலும், ஆண்டவர் தூய ஆவியின் அருளைப் பொழிந்து, உமக்கு துணை புரிவாராக.
எல் : ஆமென்
குரு : இவ்வாறு, உம் பாவங்களைப் போக்கி, உமக்கு நலமளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக.
எல் : ஆமென்.
மன்றாடுவோமாக
இரக்கமுள்ள எங்கள் மீட்பரே, தூய ஆவியின் அருளால், இந்த நோயாளியின் சோர்வையும், பிணிகளையும் தணித்து இவருடைய புண்களை ஆற்றி பாவங்களைப் போக்கி, உள்ளத்திலும், உடலிலும் இவர் படும் வேதனைகளை அகற்றி, உள்ளும் புறமும் இவர் முழுமையாக நலம்பெறத் தயை புரியும். இவ்வாறு இவர் உமது பரிவன்பினால் நலமடைந்து, பழைய நிலைபெற்று, தம் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.
நற்கருணை வழிபாடும் ஆசீரும்
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்பித்தபடியே நாம் ஒருமித்து இறைவனை வேண்டுவோம்.
எல் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே.........
(தேவைப்படின் இங்கு குரு தேவநற்கருணை வழங்கலாம்)
குரு : தந்தையாகிய இறைவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்
குரு : இறைவனின் திருமகன் உம்மைக் குணப்படுத்துவாராக.
எல் : ஆமென்
குரு : தூய ஆவி உம்மீது ஒளி வீசுவாராக
எல் : ஆமென்
குரு : உமது உடலைக் காத்து ஆன்மாவை மீட்பாராக
எல் : ஆமென்.
குரு: உமது உள்ளத்திற்கு ஒளி தந்து உம்மை வானக வாழ்விற்கு வழி நடத்துவாராக.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல அன்புத் தந்தையாக இறைவன், தந்தை, மகன், தூய ஆவி உங்களை ஆசீர்வதித்து, உடல் உள்ள நலன் தருவாராக.
எல்: ஆமென்.