இந்தச் சடங்குமுறையானது ஒரு அருள்பணியாளர் (குருவானவர்) ஒருவரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். குரு அல்லாத தனி நபர் எவரும் நடத்த அனுமதி இல்லை. ஆலயத் திருப்பலிக்காக இறந்தவரின் உடலைக் கொண்டு செல்லும் முன்னர் இது செய்யப்படும்.
தொடக்கப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
(இறந்தவரின் உடலை கல்லறைக் குழிக்கு அருகில் வைத்தப் பின், அருள்பணியாளர் கீழுள்ள செபத்தைச் சொல்கிறார்)
தொடக்கச் செபம்:
அப: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
அப: மன்றாடுவோமாக! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் கல்லறையில் மூன்று நாள்கள் துயில் கொண்டதால், உம் மீது விசுவாசம் கொண்ட அனைவரின் கல்லறைகளையும் புனிதப்படுத்துகின்றீர். எனவே, உடல் அடக்கத்திற்குப் பயன்படும் இக்கல்லறைகள் உயிர்த்தெழும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. நீர் உம் அடியாரை உயிர்ப்பித்து இவருக்குப் பேரொளி தரும் அந்த நாள் மட்டும் இவர் இக்கல்றையில் அமைதியுடன் துயில் கொண்டு இளைப்பாறச் செய்தருள்வீராக. உயிர்ப்பும் உயிரும் நீரே. ஆதலால் இவர் உயிர்த்தெழுந்த பின் உம் திருமுக ஒளியில் விண்ணகத்தின் நித்திய ஒளியைக் காண்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றல் நீரே.
எல்: ஆமென்.
(இப்போது அருள்பணியாளர் கல்லறைக் குழியின் மீது தீர்த்தம் தெளித்து, தூபம் காட்டுவார்)
அப: நம் சகோதரரை (சகோதரியை) இவ்வுலக வாழ்வினின்று தம்மிடம் அழைத்துக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் திருவுளம் கொண்டதால், இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும்படி இவர் உடலை நிலத்திற்கு கையளிக்கிறோம். ஆவியினும், இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார். ஆதலால் நம் சகோதரரை (சகோதரியை) ஆண்டவரிடம் ஒப்படைப்போம். ஆண்டவர் இவரைத் தம் அமைதியினுள் ஏற்றுக்கொள்வாராக, இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வாராக.
எல்: ஆமென்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு:
அப: உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான். உயிர் வாழ்க்கையில் விசுவாசம் கொள்பவன் எவனும் ஒருபோதும் சாகான் என்று உரைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம் சகோதரருக்காக (சகோதரிக்காக) மன்றாடுகிறோம்.
முத: இறந்து போன லாசருக்காக கண்ணீர் சிந்தினீரே, எங்கள் கண்ணீரையும் துடைக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறந்தோர் உயிர்பெற்றெழச் செய்தீரே, எங்கள் சகோதரருக்கு (சகோதரிக்கு) நிலைவாழ்வளிக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: மனம் திரும்பிய கள்வனுக்கு நீர் பேரின்ப வீட்டில் இடம் தருவதாக உறுதியளித்தீரே, எங்கள் சகோதரரையும் (சகோதரியையும்) பேரின்ப வீட்டில் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: எங்கள் சகோதர (சகோதரியை) திருமுழுக்கு நீரினால் கழுவி, உறுதிப்பூசுதலால் முத்திரையிட்டீரே, இவரை விண்ணகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: எங்கள் சகோதரருக்கு (சகோதரிக்கு) உம் உடலையும் இரத்தத்தையும் திருவிருந்தாக அளித்தீரே, விண்ணக விருந்திலும் இவரை அமரச் செய்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: எங்கள் சகோதரரின் (சகோதரியின்) பிரிவாற்றமையால் துயருரும் நாங்கள் நம்பிக்கையிலும், நிலைவாழ்வின் நம்பிக்கையினாலும் ஆறுதல் பெற உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
(அனைவரும் சேர்ந்து கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்ல, அருள்பணியாளர் இறந்தவரின் உடல் மீது தீர்த்தம் தெளித்து, தூபம் காட்டுகிறார்)
அப: மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது திருவுளப்படி வாழ்ந்து இறந்த உம் அடியார் தம் தீய செயல்களுக்குத் தண்டனை பெறாதபடி இரக்கம் காட்டியருளும். இவரது மெய்யான நம்பிக்கை இவ்வுலகில் இவருக்கு நம்பிக்கையாளர்களின் கூட்டத்தில் இடம் அளித்தது போல், உமது இரக்கம் இவரை மறுவுலகில் வானதூதரின் கூட்டத்திலும் சேர்க்க வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
அப: ஆண்டவரே, நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்.
எல்: முடிவில்லாத ஒளி இவர் மேல் ஒளிர்வதாக.
(இறந்தவரின் உடலை கல்லறையில் வைக்கும் போது அல்லது குழியை மூடும் போது கீழ்வரும் பாடலைப் பாடலாம்)
இறுதிப் பாடல்:
பாடல் 1:
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா விண்ணில் தேவன் இன்பம் தருவார்
அன்று உன்னை அழைத்த தேவன் இன்று உன்னை அழைக்கின்றார்
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா விண்ணில் தேவன் இன்பம் தருவார்
1.
இன்று உறவு நாளை பிரிவு மனிதன் வாழும் எட்டிலே - 2
என்றும் அழியா உறவு உண்டு இறைவன் வாழும் வீட்டிலே (மண்ணில் வாழ்ந்து)
2.
படைப்பின் இறைவன் படைப்பைக் காண கடைக்கண் ஒன்றைக் காட்டினான் - 2
பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு படைத்தவனிலே மூழ்கினான் (மண்ணில் வாழ்ந்து)
பாடல் 2:
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் ஆண்டவரே
முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக
இறைவா சீயோனில் உம்மைப் பாடுதல் ஏற்றதாம்
எருசலேமில் உமக்கு பொருத்தனை செலுத்தப்படும்
நீர் எம் மன்றாட்டைக் கேட்டருளும்
மாந்தர் அனைவரும் உம்மிடம் வருவார்.
பாடல் 3:
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா நீர் இவர் பரிசாய் இருந்தருளும்
1.
உம் மகன் இவர்க்கென உயிர் துறந்தார் தம் உதிரமும் உடலும் பலி ஈந்தார் - 2
இறப்பில் அவருடன் ஒன்றித்த இவர் உயிர்ப்பிலும் இணைந்து மாட்சியுற (நித்திய சாந்தி)
2.
செபங்களும் புகழ்ச்சிப் பலிகளுமே யாம் செய்தோம் இறந்தோர் சாந்தியுற - 2
எம் பலிப்பொருள் இதை ஏற்றருளும் எளியயோர் எம் செபங்களைக் கேட்டருளும் (நித்திய சாந்தி)
பாடல் 4:
1.
கல்லறை மேட்டினில் மனுக்குலம், கண்ணீர் சிந்தும் காட்சியினை
கருணைக் கண்ணால் நோக்கினார், கவலையைக் கர்த்தர் போக்கினார்.
2.
அன்று கல்லறை அருகினில், அவரும் கண்ணீர் விட்டழுதார்.
துன்புறும் மனிதர் கண்ணீரைத் துடைக்க அன்றே முன்வந்தார்.
3.
நானே உயிரும் உயிர்ப்பாவேன். நம்புவோர் இதனை இறந்திடார்.
என்றே உரைத்து இறந்தவனை, எழுப்பி உண்மை அறிவித்தார்.
4.
மூன்று நாட்கள் கல்லறையை மூடிக் கிடந்த இருளகற்றி
முன்பே உரைத்த வாக்கின்படி மூவுலகாள்பவர் உயிர்த்து வந்தார்.