தொடக்கச் செபம்
முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே!
அனைவரும்: ஆமென்.
முதல்வர்: “சிலுவை” - இது சாபத்துக்குரியவர்களைச் சுமக்கும் மரம். சாவுக்குத் தீர்ப்பிட்டவர்களைச் சுமக்கும் மரம். முதல் ஆதாம் இன்பவனத்தில் சாபத்தையும் சாவையும் விளைவிக்கும் மரத்தைத் தொட்டாரே, அதே மரம் தான் இந்த சிலுவை மரம். சாபமும், சாவும் மனிதருக்குள்ளே சென்று வாழ்வை இழக்கச் செய்தது. இனி மனிதர் சாபத்தையும் சாவையும் கடந்து வாழ்வுக்கு வர இயலாது என்பதை அறிந்த இறைவன் வாழ்வாகிய தம் மகனை உலகிற்கு அனுப்பி மனிதருக்குப் புது வாழ்வு கொடுக்கிறார்.
தந்தையின் திருவுளப்படி வாழ்வாகிய இயேசு சாபமும் சாவும் அடங்கிய சிலுவையை ஏற்று கல்வா¡¢யின் உச்சியில் பலியாகிறார். மனிதன் எதிர்கொள்ள வேண்டிய சாபமும், சாவும், இயேசுவுக்குள் சென்று மறைந்து விடுகிறது.
இந்த நிகழ்வைத்தான் நாம் சிலுவைப்பாதை வழியாகக் கொண்டாடுகின்றோம்.
ஆவியின் கனிகளான நம்பிக்கை, அன்பு, கனிவு, தன்னடக்கம், நன்னயம், பரிவு, பொறுமை, அமைதி, மகிழ்ச்சி ஆகிய ஒன்பது பண்புகளில் இயேசு நிலைத்திருந்து இந்தச் சிலுவைப்பாதையை எதிர்கொள்கிறார். சிலுவையில் அவர் ஆணிகளால் அடித்துத் தொங்கவிடப்பட்டதால் சிலுவையில் பாவம் நீங்கிப் புனிதம் புகுகின்றது.
“சிலுவை” - பாவத்தைப் போக்கும் மீட்பின் சின்னம், அடிமைத்தனத்தை முறிக்கும் விடுதலை சின்னம், அன்பைப் பிரதிபலிக்கும் அன்பின் சின்னம், நம்மை நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வழிகாட்டி, நம்மை மறு கிறிஸ்துவாய் மாற்றிய பேரொளி, கிறிஸ்தவத்தின் நாடித்துடிப்பு, தந்தை மகன் தூய ஆவியின் சங்கமம்.
எனவே, ''சிலுவை ஒரு சுமையல்ல''. அது நம் வாழ்க்கை. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ கிறிஸ்துவாய் நாம் மாற இன்று இயேசு சிலுவைப்பாதை வழியாக நமக்குக் கற்றுத்தரப் போகும் சிலுவைப் பாடுகளை தியானிக்கக் கல்வாரியை நோக்கி...
நம் கண்களை உயர்த்துவோம். வாருங்கள் கல்வாரிக்கு!
பழிகளை சுமத்தி பரிகசித்தார், உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
பிலாத்து இயேசுவுக்கு அநீதத் தீர்ப்பை வழங்கி அவரை சிலுவைச் சாவுக்குக் கையளிக்கின்றான்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இயேசு அநீதத்தீர்ப்பை ஏன் ஏற்றுக்கொண்டார்? அதிலிருந்து அவர் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? சிந்திப்போம்....
இயேசு தந்தையின் அன்பில் நம்பிக்கை கொண்டு பிறருக்கு அநீதம் இழைத்த யூத சங்கத்தினரையும், அவர்களின் அறிவு சார்ந்த நடைமுறைத் திட்டங்களையும் எதிர்த்தார். அதனால் அவருக்கு நேர்ந்த அநீதத்தை ஏற்றுக்கொண்டார். நாமும் அவ்வாறே செய்வோம்.
ஏனெனில் மீட்படையவும் இறையரசு வளரவும் இதுவே வழி. அநீதத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டதில் அர்த்தம் உள்ளது. ஆதாயம் உள்ளது என்கிறார் இயேசு. நம் அறிவுக்கு இது புரியாது. புரிந்து கொள்ளக்கூடியவை மட்டுமே உண்மை என நினைக்காதே! ''நான் தான் உண்மை'' என்கிறார் இயேசு.
இந்த உண்மையை நிலைநாட்ட தந்தையின் விருப்பப்படி சிலுவை மரத்தில் நம்பிக்கை வைக்கின்றார். எனவே சிலுவை நம்பிக்கையின் சின்னமாய் விளங்குகிறது
செபம்:
அனைவரும்: நம்பிக்கை நிறைந்த இயேசுவே! எங்களைப் பற்றிக் கூறப்படும் அநீதத் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ளும் போது எங்களுக்கு வெளியே காணப்படும் அநீதங்களை நீர் அகற்றி அழிக்க முடியும் என்பதை உணர்த்துகிறீர்.
இந்த இறை உண்மையில் நாங்கள் நம்பிக்கை கொண்டு வாழவும் சிலுவையின் பண்பாகிய நம்பிக்கையில் உறுதியோடு வளரவும் அருள் தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
தாளாச் சிலுவை சுமக்க வைத்தார், உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் மீது பாரமான சிலுவையைச் சுமத்துகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கொடுமையான குற்றவாளிகள் மீது சுமத்தப்படுகின்ற சிலுவையை இயேசு ஏன் ஏற்றுக்கொண்டார்? சிந்திப்போம்....
உலகில் மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் பகைமைகளைச் சுமத்தி வேதனைப்படுத்துகிறார்கள். ஆனால் இயேசுவோ நம்மை வேதனைகளிலிருந்தும் பாவச்சுமைகளிலிருந்தும் விடுவிக்க சிலுவை வடிவில் அவர்மேல் சுமத்தப்பட்ட நம் பாவச்சுமையை வேதனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்.
மனிதர் மட்டில் தந்தையாம் இறைவனின் அன்பும், இயேசுவின் அன்பும், தூய ஆவியின் அன்பும் இங்கு சிலுவையில் சங்கமமாகிறது. மனுக்குலத்தின் ஜென்மப்பாவம் இங்கு இயேசுவால் சிலுவையில் சுமந்து தீர்க்கப்படுகிறது. அப்பேற்பட்ட புனிதமான அன்பையும் தியாகத்தையும் சுமந்ததினால் சிலுவை அன்பின் சின்னமாகத் திகழ்கிறது.
செபம்:
அனைவரும்: எங்களை சிலுவை சுமக்கும் சீடத்துவ வாழ்விற்கு அழைத்த இயேசுவே! சிலுவையின் பண்பான அன்பின் மகிமையை நாங்கள் உணரவும் அதன் வலிமையைக் கொண்டு எங்கள் மீது சுமத்தப்படும் சுமைகளை உம்மைப்போல் ஏற்று அன்புறவை நிலைநாட்டவும் அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
விழுந்தீர் சிலுவை பளுவோடு, மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு மனம், உடல் சோர்ந்து தள்ளாடி முதல்முறையாக தரையில் முகம் குப்புற விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: பாவத்தில், மனநோயில், உடல்நோயில் விழுந்து கிடந்த மனிதரையெல்லாம் தூக்கி நிறுத்திய இயேசு ஏன் தரையில் விழுகிறார்? இதிலிருந்து அவர் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? சிந்திப்போம்...
நிற்பவன்தான் வீழ்ந்தவனைத் தூக்கி நிறுத்த முடியும் என்பது உலக நியதி. மனிதர்களாகிய நம்மைப் பாவப் படுகுழியிலிருந்தும், உடல், மன நோயிலிருந்தும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் நிரந்தரமாகத் தூக்கி நிறுத்த நம்மீது கொண்ட கனிவினால் தன் வீழ்தலை இயேசு ஏற்றுக்கொள்கிறார்.
இது தந்தையின் திட்டம் என்பதால் தனது வீழ்தல் சரியானதாகத்தான் இருக்கும் என நினைத்து தன் கல்வாரிப் பயணத்தைக் கனிவோடு தொடர்கின்றார். இதனால் சிலுவை கனிவின் பண்பைக் கொண்டதாக மாறுகின்றது.
செபம்:
அனைவரும்: கனிவு நிறைந்த இயேசுவே! விழுதலை ஏற்றுக்கொண்டு என்னை விழாதவாறு தாங்கியவரே! எங்களைப் பிறர் தடுக்கி விழச்செய்யும் போதும், துன்ப அவமானங்களில் விழும்போதும், உம்மைப்போல விழுதலை ஏற்றுக் கொண்டு பிறர் விழாதிருக்கச் செய்ய, சிலுவையின் பண்பாகிய கனிவில் வளர அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு தன் தாய் மரியாளைச் சந்திக்கின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: தான் சுமந்து பெற்ற மகனின் அகோரமுகம், அவலநிலை, தன் தாயின் உடைந்த உள்ளம், அவளது மனக்குமுறல். இந்தத் தியாக உள்ளங்களின் சந்திப்பு பற்றி இயேசு என்ன சொல்கிறார்? சிந்திப்போம்...
என் தாயின் சந்திப்பு உணர்ச்சி வசப்பட்டதல்ல. எனது இந்த நிலைக்குக் காரணமானவர்களை அவர் தூற்றவில்லை. அவர் என் சீடராய் இருந்ததால், என் துன்பத்தில் தன்னடக்கத்தோடு பங்கேற்க வந்திருப்பதாகச் சொல்லவே வந்தார். தன்னைப்போல அநேக சீடர்கள் எனது பாடுகளில் பங்கேற்பதாகவும் சொன்ன செய்திதான் எனக்கு ஆறுதல் என நமக்குச் சொல்கிறார்.
தன்னடக்கம் மிகுந்த தாய்மரியின் இந்தச் சந்திப்பினால், பிறருக்குப் பயன்தரக்கூடிய சிலுவைப்பயணத்தை இயேசுவும் முணுமுணுக்காமல் தன்னடக்கத்தோடு தொடர்கின்றார். எனவே, சிலுவை தன்னடக்கம் மிகுந்த கருவியாக மாறுகின்றது.
செபம்:
அனைவரும்: தன்னடக்கம் மிகுந்த இயேசுவே! எம் உணர்வுகளையும், கற்பனைகளையும் கடந்து தூய ஆவியின் இயக்கமே வாழ்க்கை என்று, தன்னடக்கத்தோடு இன்ப துன்பங்களை ஒரே மனநிலையில் ஏற்று வாழ்ந்த உம் தாய் மரியாளைப்போல நாங்கள் வாழவும் சிலுவையின் பண்பாகிய தன்னடக்கத்தில் சிறந்து விளங்கவும் அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மறுத்திட முடியா நிலையாலே, சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் உதவி செய்கிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: ஒரு சாதாரண மனிதனின் உதவி இறைமகனுக்குத் தேவைப்பட்டதா? ஏன் சீமோன் உதவியை இயேசு ஏற்றுக்கொண்டார்? இதன்மூலம் இயேசு நமக்குச் சொல்லும் செய்தி என்ன? சிந்திப்போம்...
தேவையிலும், துன்ப நிலையிலும் இருப்பவர்களுக்கு உதவுவது சாதாரண மனிதரல்ல. உதவும் பண்பு தெய்வத்தினுடையது. சீமோனிடமிருந்து உதவும் பண்பு நன்னயமாக இயேசுவுக்குக் கிடைக்கிறது. மாபெரும் உலக மீட்பருக்கு உதவிய பெருமை சீமோனுக்குக் கிடைக்கிறது. ஆபிரகாமிடம் விருந்தோம்பல் பண்பு இருந்ததால் இறைவனுக்கே விருந்தளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அன்பும், இரக்கமும் கொண்ட நன்னயத்தினால் அன்னை தெரசா, வின்சென்ட்-தி-பவுல் போன்றவர்கள் இறைவனில் பெருமையடைந்தார்கள். கல்வாரிப் பாதையில் நன்னயம் மிகுந்த சீமோன், இயேசுவோடு சிலுவையை சுமந்ததால், சிலுவை நன்னயம் மிகுந்த கருவியாய் மாறியது.
செபம்:
அனைவரும்: நன்னயத்தை மதித்து அதைப் பிரதிபலிக்கின்ற எங்கள் இயேசுவே! பிறருக்கு உதவி செய்கின்றவர்-களுக்கே இறையரசில் இடம் என்று கூறியவரே! உதவுதலே உண்மையான ஆன்மீகம் என்ற உமது வழியில் நடக்கவும் சிலுவையின் பண்பாகிய நன்னயத்தில் நாங்கள் மேலோங்கி வளரவும் அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நிலையாய் பதிந்தது உம் வதனம், அன்பின்
விலையாய் மாதின் சிறுதுணியில்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இரத்தம் வழிந்தோடிய இயேசுவின் திருமுகத்தை வெரோணிக்காள் துடைக்கிறாள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: வெரோணிக்காள் இயேசுவின் மேல் கொண்ட அன்பு, அவள் அந்த நேரத்தில் காட்டிய துணிவு, மற்றும் இயேசு தன் முகத்தை அவள் துடைத்த துணியில் பதிய வைத்தது இவைகள் மூலம், இயேசு நமக்குச் சொல்ல விரும்புவது என்ன? சிந்திப்போம்...
உரோமை வீரர்களின் அராஜகமான செயல்களையும், அஞ்சி நடுங்கக்கூடிய சூழ்நிலையையும் கடந்து ஒரு சாதாரண இளம்பெண் இயேசுவை அணுகி அவர் முகம் துடைக்கத் துணி கொடுத்து உதவ முடிந்ததென்றால், அது அவளது இதயத்தில் பொங்கி வழிந்த அன்பினால் தான்.
உண்மையான அன்பு உலகை வெல்லும். அது அறிவிற்கு அப்பாற்பட்டது. இதற்கு சாட்சிதான் வெரோணிக்காள். அவளது அன்பையும், துணிவையும் கண்ட இயேசு, அவள் மேல் பரிவு கொண்டு அவள் கொடுத்த துணியில் தன் முகத்தைப் பதித்து பா¢சாகத் தருகின்றார். இங்கு சிலுவை பா¢வின் சின்னமாய் மாறுகிறது.
செபம்:
அனைவரும்: பரிவிரக்கம் மிகுந்த இயேசுவே! எங்கள் மீது நீர் கொண்ட அன்பு தான் பரிவாய் மாறி, எங்களை மீட்கத் தூண்டியது. நாங்களும் வெரோணிக்காளைப் போல துணிவுடன் கூடிய அன்பில் நிலைக்கவும், சிலுவையின் பண்பாகிய பரிவில் வளர்ந்து இறையரசை வளர்க்கவும் அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால், அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு இரண்டாம் முறையாகத் தரையில் விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இயேசு இரண்டாம் முறையாகத் தரையில் விழக்காரணம் என்ன? அந்த விழுதல் வழியாக அவர் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார்? சிந்திப்போம்...
மனிதன் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவன். விழுதல் என்பது மனிதனுக்கே உள்ள பலவீனம். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஆனாலும் விழுதலைக் குறித்து யாரும் மனம் சோர்ந்து போகக்கூடாது. விழுகின்ற போதெல்லாம் இடர்பாடுகளைப் பொறுமையுடன் ஏற்று ஆவியின் தூண்டுதலால் எழுதலுக்குச் செவிசாய்த்து எழுந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இயேசுவும் அவ்வாறே, இரண்டாம் முறை தரையில் விழுந்தபோதும் பொறுமை காத்து தூய ஆவியின் தூண்டுதலால் எழுந்து தன் இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறார். இயேசு பொறுமையோடு சிலுவையைத் தொடர்ந்து சுமந்ததால் சிலுவை பொறுமையின் சின்னமாய் மாறுகிறது.
செபம்:
அனைவரும்: பொறுமையை வாழ்வாக்கிய இயேசுவே! நாங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சா¢வுகளையெல்லாம் உம்மைப்போல் பொறுமையோடு ஏற்று தூய ஆவியின் தூண்டுதலான எழுதலுக்குச் செவிசாய்த்து நிறை உண்மையை நோக்கி நடக்கவும், சிலுவையின் பண்பான பொறுமையில் வளர்ந்தோங்கவும் அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு, அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
அழுது புலம்பும் எருசலேம் நகரத்துப் பெண்களை இயேசு சந்திக்கிறார்.
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: உணர்ச்சிவசப்பட்ட எருசலேம் நகரத்துப் பெண்களை சந்தித்து,'' எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்'' எனக் கூறிய வார்த்தைகள் மூலம், இயேசு என்ன சொல்கிறார்? சிந்திப்போம்...
அறிவினால் இயக்கப்படும் மனிதர்கள் பலவீனமானவர்கள். மனிதன் எப்போதுமே நிறைவற்ற நிலையில்தான் இருக்கிறான். அவ்வாறு நிறைவற்ற நிலையிலுள்ள மனிதர்களின் ஆறுதல், இயேசுவுக்கு அந்தத் துயரமான நேரத்தில் தேவைப்படவில்லை.
ஏனெனில், அதே மனிதம் தான் அவரைப் போற்றியும், தூற்றியும் சிலுவை மரணத்திற்குக் கையளித்தது. மனித உணர்வு சார்ந்த ஆறுதலில் பயனில்லை என்பதை உணர்ந்த இயேசு அமைதியோடு ''உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்' எனக்கூறி தன் சிலுவைப் பயணத்தைத் தொடர்கின்றார்.
சிலுவை அமைதியின் சின்னமாய் மாறுகிறது.
செபம்:
அனைவரும்: ''அமைதி கொண்டு நானே கடவுள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்'' என்ற இயேசுவே! உம்மைப் போல நாங்களும் பிறா¢ன் உணர்வுகளை அமைதி கொண்டு மதிக்கவும், மனித உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்க சிலுவையின் பண்பாகிய அமைதி என்னும் பண்பில் வளரவும் அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர், கால்
ஊன்றி நடந்திடும் மெய் நொந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு மூன்றாம் முறை தரையில் விழுகின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: மீண்டும் மீண்டும் தன் உறுதியில் தளர்ந்து, சோர்ந்து தள்ளாடி விழும் இயேசுவின் விழுதலும் எழுதலும் நமக்கு என்ன சொல்கிறது? சிந்திப்போம்...
மனிதநிலை இயேசுவை உள்ளம் சோரச்செய்து மண்ணில் சாய்க்கிறது. எழுந்து நடக்கத் தன் உடலில் எந்த சக்தியும் இல்லை. ஆனாலும் இயேசு எழுகிறார். தன் தந்தை மீதும், மனிதர் மீதும் கொண்ட அன்பினால் மீட்பின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி, மனிதரை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் எனும் தூய ஆவியின் அறிவுறுத்தலினால் உறுதியடைந்து எழுகின்றார்.
எழமுடியாத நிலையிலிருந்து எழுந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. இன்னும் சிறிது தூரத்தில் கல்வா¡¢யின் உச்சியை அடைந்துவிட முடியும் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி. இன்னும் சிறிது நேரத்தில் தனது இலட்சியப்பயணம் சிலுவை மரணத்தினால் முடிவடையப் போவதில் அவருக்கு மகிழ்ச்சி. இத்தனை மகிழ்ச்சிகளோடு இயேசு தன் சிலுவையைத் தொடர்ந்து சுமந்ததால் சிலுவை மகிழ்ச்சியின் சின்னமாய் மாறியது.
செபம்:
அனைவரும்: எங்களை நிபந்தனையற்ற முறையில் மகிழ்ச்சியோடு அன்பு செய்யும் இயேசுவே! விழுதலைக் குறித்து விரக்தியடையாமல், உமது அன்பு எங்களுக்குள் இருப்பதை உணர்ந்து, வலிமை பெற்று எழுந்து, எங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர சிலுவையின் பண்பாகிய மகிழ்ச்சியை எங்களுக்குத் தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர், இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் ஆடைகள் களையப்படுகிறது
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: தன்னை நிர்வாணமாக்கி ஏளனம் செய்த செயலை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்ட இயேசு, அதன் மூலம் நமக்குக் கூறும் செய்தி என்ன? சிந்திப்போம்...
உடுத்த ஆடையில்லா ஏழை, ஆடையின்மையை அவமானமாகக் கருதுவதில்லை. மனநோயாளி, தான் துன்புறுத்தப்படுவதையோ காறி உமிழப்படுவதையோ, கேலி செய்யப்படுவதையோ அவமானமாகக் கருதுவதில்லை.
சீடத்துவ வாழ்வில், அவமானங்களையும், கேலிப்பேச்சுகளையும் கொள்கையோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, இறைவனால் பல மனிதர்களை அவமானம் அடையாதபடி காப்பாற்றமுடியும். எனவேதான் இயேசு அந்த உச்சக்கட்ட அவமானத்தை ஓர் ஏழையைப் போல, ஒரு மன நோயாளியைப் போல எவ்வித பாதிப்புமின்றி ஏற்று நம்மையெல்லாம் அவமானத்திலிருந்து காத்தார். சிலுவையின் பண்புகளாகிய தூய ஆவியின் ஒன்பது கனிகளும் அவா¢ல் நிலைத்திருந்ததால் ஒரு செம்மறியைப் போல் கல்வா¡¢யின் உச்சியில் நிற்கிறார்.
செபம்:
அனைவரும்: அன்பான இயேசுவே! நீர் அவமானத்தை ஏற்றுக்கொண்டதன் வழியாக அவமானப்படுத்தப்படுபவர்களுக்கு விண்ணகத்தில் பெருமையும், மதிப்பும் உண்டு என்ற நிச்சயத்தை வெளிப்படுத்துகின்றீர். வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கும் அவமானங்களை சிலுவையின் பண்பைக் கொண்டு தாங்கிக்கொள்ள அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பொங்கிய உதிரம் வடிந்திடவே, உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: தன் புனிதமான கால்களையும், கைகளையும் பாவச்சுமையான சிலுவையில் ஆணிகளால் அடிக்க இயேசு ஏன் சம்மதித்தார்? அதன் மூலம் அவர் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? செவிமடுப்போம்...
மகளே! மகனே! இதோ உன் பாவங்களையெல்லாம் சிலுவை வடிவில் கல்வாரி உச்சி வரை சுமந்து வந்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் நான் கற்றுத்தந்த தூய இயல்புகளை நீ வாழ்வாக்கு. என் கைகளும், கால்களும் சிலுவையில் வைத்து ஆணிகளால் துளைக்கப்பட்டதால் உன் பாவங்கள், சாபங்கள், நோய்கள், பிணிகள் அனைத்தும் என் உடலுக்குள் பாய்ந்திருக்கின்றன. இப்போது, சிலுவை என்ற இந்த அவமானச் சின்னம், புனிதமான விடுதலையின் சின்னமாக, மீட்பின் கருவியாக, அன்பின் சின்னமாக மாறியிருக்கிறது.
சிலுவையை உன் வாழ்வின் விடுதலைக்கு, வளர்ச்சிக்கு, சமாதானத்திற்குத் திறவுகோலாகப் பயன்படுத்திக்கொள். ஏனெனில் சிலுவை வழியாக நான் உன்னை மீட்டெடுத்திருக்கிறேன். சிலுவையில் என் இரத்தத்தை உன் விடுதலைக்கு விலையாகக் கொடுத்திருக்கிறேன். என் அன்பை உணர்ந்து வாழப் பழகு.
செபம்:
அனைவரும்: அன்பான இயேசுவே! அடைபட்ட என் வாழ்விற்கு திறவுகோலும் வழிகாட்டியுமான சிலுவையை என் வாழ்க்கையில் எந்நாளும் பயன்படுத்தவும், நீர் தெளிவுபடுத்திய பாதையில் நடக்கவும் அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
இன்னுயிர் அகன்றது உமைவிட்டு, பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
எல்லாம் நிறைவேற்றிய இயேசு சிலுவையில் உயிர் விடுகின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: நண்பகல் பனிரெண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. இயேசு,''ஏலி, ஏலி லெமா சபக்தானி!'' அதாவது, '' என் இறைவா, என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்!'' என்று உரத்த குரலில் கத்தினார்.
இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி உண்மையாகவே இவர் இறைமகன் என்றார்கள்.
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர் சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின் பிள்ளைகளாக்கிட நீர் எம்மில் ஒருவராக மாறினீர். சிலுவையில் தொங்கிய போது நீர் உரைத்த ''தாகமாயிருக்கிறது'' சொற்களை நினைத்துப் பார்க்கிறோம்.
இயேசுவே! எங்கள் ஆன்ம தாகத்தை வளர்த்தருளும். '' எல்லாம் நிறைவேறிற்று '' என்று கூறி உயிர் நீத்த இயேசுவே! நாங்கள் கடவுளின் திருவுளத்தை நன்கு நிறைவேற்றிட அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
துயருற்றுத் துடித்தார் உளம்நொந்து அன்னை
உயிரற்ற உடலினை மடிசுமந்து,
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் உடல் தன் தாயின் மடியில் கிடத்தப்படுகிறது
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோஸ்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: தன் மீது அளவற்ற அன்பைக் கொண்ட சில சகோதர சகோதாரிகளால் தன் உயிரற்ற உடல் தன் தாய் மரியாளின் மடியில் கிடத்தப்படுகிறது. இதன் மூலம் இயேசு நமக்குக் கொடுக்கும் செய்தி என்ன? செவிமடுப்போம்...
மகனே! மகளே! எனது உலக வாழ்க்கையில் நான் தந்தையின் விருப்பப்படி பிறர் நலனில் அக்கறை கொண்டே வாழ்ந்தேன். அப்படி என் அன்பினால் நன்மை அடைந்தவர்கள்தான் என்னை சிலுவையிலிருந்து இறக்கி, என் தாயின் மடியில் கிடத்தி, எனது இறுதிச்சடங்கில் நான் அநாதையல்ல என்பதையும், பிறர்நலனில் அக்கறை கொள்பவர்கள் என்றுமே அநாதைகள் அல்ல என்பதையும் நிரூபித்தார்கள். பிறருக்காக வாழாமல் தன்னலத்தோடு வாழ்பவர்கள்தான் அநாதைகள். பிறர் உதவியையோ, அன்பையோ பெறத் தகுதியற்றவர்கள். எனது உலகவாழ்க்கை உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.
எப்பொழுதும் தூய ஆவியின் கனிகளான ஒன்பது பண்பிலும் நிலைத்திரு. அதுவே நீ மறு கிறிஸ்துவாக்கப்பட்டதற்கு அடையாளம். உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்பதே என் அடக்கத்திற்குமுன் நான் உனக்குக் கூறும் செய்தி.
செபம்:
அனைவரும்: இரக்கம் மிகுந்த இயேசுவே! பிறர்நலனில் அக்கறை கொள்பவர்களாக வாழ்ந்து உரிமைகளைப் பெறுதலே சிறந்த ஞானம் என்பதை நாங்கள் உணர்ந்து வாழ அருள்தாரும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு, நீர்
அடங்கிய கல்லறை உமதன்று,
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் திருவுடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோஸ்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: மாட்டுக்குடிலில் பிறந்து, தங்குவதற்கு நிரந்தரமான இடமின்றி அலைந்து திரிந்து, பணியாற்றி நிந்தை அவமானங்களோடு சிலுவைச்சாவை ஏற்று, இறுதியாகப் பிறருக்குச் சொந்தமான கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசு நமக்குக் கூறும் செய்தி... செவிமடுப்போம்...
மகனே! மகளே! இருள் வாழ்விலிருந்து அருள் வாழ்விற்கு உன்னை மீட்டெடுக்கவே மனிதனாய் பிறந்து, மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று உனக்குக் கற்றுக்கொடுத்தேன். உன் பாவக் கட்டிலிருந்து உன்னை விடுவிக்க சிலுவை வழியாக உன் பாவங்களையெல்லாம் சுமந்து என் உடலில் ஏற்றுக்கொண்டேன். நான் சுமந்த சிலுவையை உனக்கு விடுதலையின் சின்னமாக, அன்பின் கருவியாக உனக்கு விட்டுச் செல்கிறேன்.
எப்பொழுதெல்லாம் சிலுவையை நம்பி நீ செயல் படுகிறாயோ அப்பொழுது என் அன்பின் வல்லமையால் நீ ஆசீர்வதிக்கப்படுகிறாய், விடுதலை மற்றும் சமாதானம் பெறுகிறாய். சிலுவை என்பது அன்றாடம் நீ கடைபிடித்து நிலைத்திருக்க வேண்டிய தூய ஆவியின் கனிகளான நம்பிக்கை, அன்பு, கனிவு, தன்னடக்கம், நன்னயம், பா¢வு, பொறுமை, அமைதி, மகிழ்ச்சி என்னும் ஒன்பது பண்புகளுமேயாகும். இந்த அர்த்தத்தில்தான் ''என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் அன்றாடம் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின் செல்லட்டும்'' எனக் கூறினேன்.
எனவே, மகனே! மகளே! சிலுவை ஒரு சுமையல்ல., அது உன் வாழ்க்கை. உனக்கு வாழ்வு கொடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி... நிம்மதி... பாவத்திற்கு என்னோடு இறந்த நீ, புத்துயிர் பெற்று என்னோடு உயிர்த்தெழு!!
செபம்:
அனைவரும்: பாவ இயல்பை அழிக்கவும், புதுப்படைப்பாக மாறவும், உமது உயிர்ப்பில் பங்குபெற்று மகிழவும் வழிகாட்டிய இயேசுவே! சிலுவை ஒரு சுமையல்ல, அது எங்கள் வாழ்வின் வழிகாட்டி, நன்மையின் திறவுகோல் என்பதை உணர்ந்து வாழ வரமருளும். ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர், எம்
வாழ்வில் ஒளியை மிளிரச் செய்தீர்
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு சாவை வென்று உயிர்த்தெழுகின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: வாரத்தின் முதல் நாள் விடியற்காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள். கல்லறை வாயிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென மின்னலைப்போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, ''உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர்.
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணர நீர் வந்தீர். உமக்கு எதிராகச் செயல்பட்ட உமக்குக் கொலைத் தண்டனை விதித்தபோதிலும், நீர் சாவின் மீது வெற்றி கொண்டீர். எங்களைப் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து எங்களுக்குப் புது வாழ்வு தந்தீர்.
உயிர்த்தெழுந்த ஆண்டவராகத் தந்தையின் வலம் அமர்ந்து எங்கள் அரசராக ஆட்சி செய்கின்றீர்.
உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்க வாக்குறுதி அளித்துள்ளீர். உமது அன்புச் சீடராக நாங்கள் வாழவும், நீர் சென்ற வழியில் நடக்கவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
செபிப்போமாக!
முதல்வர்: வாழ்வும், வழியும் உயிருமானவர் நானே என்றவரே,
வாழ்வின் பாதையில் உண்மை வாழ்வு என்பது என்ன என்று சொல்லித்தர உலகுக்கு வந்தவரே,
அந்த வாழ்வின் பாதைகளை தெளிவுற கற்றுக் கொடுக்க உம்மைத் தாழ்த்தி மனித அவதாரம் ஏற்று வந்தவரே,
வாழ்வின் பாதைகளில் கொடுப்பதற்கென்றே பல உண்டு என்று சொல்லிக் கொடுக்க பாடுகளையும் ஏற்றவரே,
உம்மிடம் கற்றுக் கொள்ள பல உண்டு என இன்று பயணிக்கும் எங்களுக்கும் உம் வழியைக் கற்றுக் கொடுத்தவரே, உம் வாழ்விற்கு செவி கொடுக்கின்றோம். எம் வாழ்வை மாற்றும் என மன்றாடுகின்றோம்.
கொடுப்பதில் தான் எங்களது பேறுடைமை உண்டு என எங்களுக்கு கற்றுக் கொடுத்தவரே, கொடுங்கள். அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி கொடுங்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் நானும் அளப்பேன் என்று சொன்னவரே, தியானித்து இருக்கின்றோம். கொடுப்பதற்கும் எம்மில் பலவுண்டு என எங்களுக்கு உணர்த்தியிருக்கின்றீர், நன்றி கூறுகிறோம். பெற்றவைகளை தாராளமாக கொடுத்து, எங்களது வள்ளல் தன்மையை நிரூபிக்க வரம் தாரும். நல்ல நிலத்தில் தூவப்பட்ட விதையை போல கேட்டவைகளை, தியானித்தவைகளை, அசை போட்டு வாழ்வாக்க வரம் தாரும். வாக்களித்த உம் ஆவியை எம்மில் தங்க செய்து, அவர் அருள் பெற துணை செய்யும். ஆமென்.
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே,
தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
முதல்வர்: இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு, நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக - புனித வியாகுல மாதாவே!
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.