புனித தோமையார் நவநாள் செபம்
புனித தோமையார் நவநாள் செபம்
ஆரம்பப்பாடல்
திருத்தூதரே எங்கள் தோமையாரே
இயேசுவின் நெருங்கிய உறவினரே
நீரே என் ஆண்டவர் என் கடவுள்
என்று இயேசுவை புகழ்ந்தீரே
வாழ்க உமது புகழ் வாழ்க உமது நாமம்
உமது திருவடி பணிகின்றோம்
1. தேவ அன்னையின் திருப்படத்தை
உலகறிய செய்த நாயகனே
இயேசுவின் ஆணி காயங்களில்
கை விட்டு ஐயம் தீர்த்தீரே
வாழ்க உமது புகழ் வாழ்க உமது நாமம்
உமது திருவடி பணிகின்றோம்
2, இயேசுவின் சாட்சியாய் வாழ்ந்தவரே
கிறிஸ்தவம் பரவ காரணரே
இயேசுவின் மீதுள்ள பாசத்தினாலே
பரங்கி மலையில் உயிர் நீத்தீரே
வாழ்க உமது புகழ் வாழ்க உமது நாமம்
உமது திருவடி பணிகின்றோம்
3. உயிர்த்த யேசுவைக் கண்டையம் தீர்த்தத்தால்
உலகெங்கும் அவர் நாமம் பறை சாற்றீனீர்
இரத்த சாட்சியாய் வாழ்ந்து மரித்ததால்
புனித நிலைக்கு நீர் உயர்த்தப் பட்டீர்
வாழ்க உமது புகழ் வாழ்க உமது நாமம்
உமது திருவடி பணிகின்றோம்
முதல்வர்: தந்தை மகன், தூய ஆவியாரின் பெயராலே
அனைவரும்: ஆமென்
முதல்வர்: தம் அன்பு சீடரை நம் நாட்டிற்கு அனுப்ப திருவுளமான இறை மகனாகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும் பரிசுத்த ஆவியின் நட்புறவும் நம் அனைவரோடும் இருப்பதாக
அனைவரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக
முதல்வர்: கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி வேதசாட்சியாய் மரித்த புனித தோமையாரை நாடி வந்திருக்கும் நாம் அனைவரும் மூவொரு இறைவனின் அருளை வேண்டுவோமாக.
அனைவரும்: எல்லாம் வல்ல பரம தந்தையே! புனித தோமையாரை எங்கள் விசுவாசத்தின் சாட்சியாகவும், எங்கள் பாதுகாவலராகவும் தந்தருள திருவுளமானீரே! அந்த அன்பு சீடரின் வழியை பின்பற்றி வாழும் எங்களை உமது ஆசீரால் நிரப்பியருளும் அன்புத் தந்தையின் ஒரே மகனாகிய இயேசுவே! நீர் உயிர்த்தபோது உம் அன்பு சீடருக்கு காட்சி தந்து, “என் ஆண்டவரே, என் தேவனே,” என பறைசாற்ற செய்து விசுவாசத்தை உறுதிபடுத்தினீரே! அவரை வாழ்த்தி வணங்கும் நாங்களும் விசுவாச செயல்களால் உமக்கு சான்று பகர உமது ஆவியின் வல்லமையை பொழிந்தருளும்!
முதல்வர்: அன்பே உருவான தூய ஆவியே! எம் ஆன்மாவின் ஆன்மாவே! புனித தோமையாரை மகிமைப் படுத்த கூடியிருக்கும் எங்களை உமது ஆலயங்களாக மாற்றி வீரமிக்க விசுவாசிகளாய் வாழச் செய்தருளும்! ஆமென்.
நன்றி மன்றாட்டு
முதல்வர்: அப்போஸ்தலரான புனித தோமையாரை மாபெரும் கொடையாக எம் நாட்டிற்கு அனுப்பிய உம் திட்டத்திற்காக.
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முதல்வர்: எங்கள் மத்தியில் உமது நற்செய்தியை பரப்பி உமது மகன் இயேசுவை எங்கள் ஆண்டவரே எங்கள் தேவனே என்று வெளிப் படுத்தியதற்காக.
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முதல்வர்: தூய தோமையார் உமக்காக இரத்தம் சிந்தி அளித்த வல்லமையை இன்றும் எங்களுக்கு தருவதற்காக.
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முதல்வர்: தூய தோமையாருடைய திரு இரதத்தினால் நாங்கள் வாழும் இம் மண்ணை புனிதப் படுத்தியதற்காக.
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முதல்வர்: அன்னையின் மகிமையை துய தோமையாரின் வழியாகப் பெற்றதற்காக.
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முதல்வர்: தூய தோமையாரின் போதனை மற்றும் புதுமைகள் வழியாக ஆயிரக்கணக்கான மக்களை திருச்சபையில் சேர்த்ததற்காக.
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முதல்வர்: சந்தேகப்படுவோர், கவின் கலைஞர்கள், பார்வையற்றோர், கட்டிடக்கலைஞர், நில அளவையாளர்கள், இறையியலார்கள், அனைவருக்கும் தூய தோமையாரை பாதுகாவலராக அளித்ததற்காக.
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முதல்வர்: புனித தோமையாரை எங்கள் அன்பியத்தின் பாதுகாவலராக கொடுத்ததற்காக.
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
புனித தோமையாரின் விசுவாச அறிக்கை
முதல்வர்: உமது ஆவியில் எளியோரை உயர்த்தும்.
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: தாழ்நிலையில் இருப்பவரை தூக்கி நிறுத்தும்.
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்கும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: பலம் அற்றவர்க்கு வலிமையாய் விளங்கும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: நோயுற்றோர்க்கு நற்சுகம் நல்கும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: விசுவாசத்தில் எம்மை திடப்படுத்தும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: சோர்ந்து போன எங்களை திடப்படுத்தும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: நற்கருணையில் என்றும் பிரசன்னமாய் இருக்கும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: எங்களுக்கு புது வாழ்வு அளிக்கும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: தந்தையிடம் எங்களுக்காக பரிந்து பேசும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: எங்கள் வேதனையில் ஆறுதல் தரும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: உண்மையான அமைதியை அளிக்கும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: குறையுள்ள எங்களுக்கு மீட்பு வழங்கும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: புனித தோமையாரை சீடராக தேர்ந்து கொண்ட
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: உயிர்த்த பின்பு தோமையாருக்கு காட்சிக் கொடுத்த
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: விசுவாச அனுபவத்தை அறிக்கையிட வாய்ப்பளித்த
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: புனித தோமையாரை நற்செய்தி அறிவிக்க அனுப்பிவைத்த
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: புனித தோமையாரின் போராட்டங்களில் அவருக்கு வல்லமை அளித்த
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: புனித தோமையாருக்கு அற்புத வரங்கள் அளித்த
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: புனித தோமையாரை உமக்கு சாட்சியாக விளங்கச் செய்த
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
முதல்வர்: எங்கள் ஜெபங்களை கேட்டு விரைந்து பதில் அளிக்கும்
அனைவரும்: என் ஆண்டவரே! என் தேவனே!
புனித தோமையாரை நோக்கி ஜெபம்
முதல்வர்: இந்தியாவின் அப்போஸ்தலரே! புனித தோமையாரே! எங்கள் பாதுகாவலரே! கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி நற்செய்தியை அறிவித்தவரே! நாங்கள் உம்மை வாழ்த்துகிறோம்! எங்கள் இந்திய மண்ணில் விசுவாசத்தை அறிவித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ‘என் ஆண்டவரே, என் தேவனே’ என்று கிறிஸ்துவின் மேல் இருந்த விசுவாசத்தை நீர் அறிக்கையிட்டது போல் நாங்களும் கிறிஸ்துவின் மேல் ஆழ்ந்த பற்று கொள்ளவும், அவரை ஆவலோடு பின்பற்றவும், விசுவாசத்திற்காக உயிரை அளிக்க தயாராயிருக்கவும் உமது பரிந்துரையை நாடுகிறோம். எங்கள் பாதுகாவலரான புனித தோமையாரே! வாழ்விலே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், நிகழும் துன்ப துயரங்களையும் எதிர் கொள்ள வேண்டிய சக்தியைப் பெற்றுத் தாரும்! இங்கு கூடியிருப்போர் அனைவரின் தேவைகளும் நிறைவேற மன்றாடும்! எங்களுக்கு விசுவாச விழிப்புணர்வும், சாட்சிய வாழ்வும் சுடர் விட ஆவியின் வரங்களைப் பெற்றுத் தாரும்! இந்த வேண்டுதல்களையெல்லாம் உம் பேறுபலன்களினால் பெறுவோம் என நம்புகிறோம். எங்கள் பாதுகாவலரான புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
அனைவரும்: ஆமென்.
புனித தோமையார் மன்றாட்டுமாலை
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா.
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா.
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா.
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா.
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: புனித மரியாயே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித சூசையப்பரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித அந்தோணியாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித குரியாகோஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித தோமா அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: முக்திபேறு பெற்ற கார்லோஸ் அடிகளாரே!
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: கலிலேயா நாட்டிலே உயர்ந்த கோத்திரத்தில் பிறந்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: சமாதானத்துக்குரிய நற்செய்தியை பக்திப் பற்றுதலுடன் போதித்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: தம் தந்தையின் சொற்படியே அவர் தொழிலை செய்து வந்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: இயேசுவை உண்மையான உலக மீட்பரென விசுவசித்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராக தெரிந்துகொள்ள பெற்ற புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: இயேசு உயிர்த்தெழுந்த பின்பு நான் அவர் திரு காயங்களில் என்னுடைய விரலை வைத்து பார்த்தாலொழிய விசுவசியேனென்ற புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: உயிர்த்த இயேசு உமக்கு தரிசனையாகவே, அவரைக் கண்டு மகிழ்ந்து “என் ஆண்டவரே என் தேவனே” என்று பறைசாற்றிய புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: இயேசுவின் உயிர்ப்புக்கு புகழ் பெரும் சாட்சியாய் அமைந்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: கண்டு விசுவசிப்பதைவிட காணாமல் விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர் என்று சொல்லக் கேட்ட புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: தேவதாயாரை மிகவும் நேசித்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: தேவதாயாரின் அடக்கத்திற்கு மிகவும் ஆவலுடன் ஓடி வந்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு தேவதாயும் அப்போஸ்தலர்களும் ஒன்றிணைந்து செபித்து சபையிலே மேதியா முதலான நாடுகளில் நற்செய்தி அறிவிக்க அழைக்கப்பட்ட புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நாடுகளிலே தனக்கு வரவிருக்கும் துன்பங்களையும் அவமானத்தையும் நினைத்து மகிழ்ச்சிக்கொண்ட புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: இயேசுவையும் தேவதாயாரையும் நினைத்து இரவும் பகலும் விண்ணை நோக்கி கையேந்தி இடைவிடாமல் செபித்துக்கொண்டிருந்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு கிறிஸ்துவை போதிக்கும்போது சம்மனசை போல காணப்பட்ட புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: உயிரையும் உடலையும் பொருட்படுத்தாமல் எல்லா மக்களையும் உண்மையின் ஒளிக்கு அழைத்து சென்ற புனித தோமையாரே
அனைவரும்:எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: மோட்சத்தின் வரங்களைத் தாங்கிய உன்னத மரக்கலமாகிய புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: இயேசுவை காண வந்த மூன்று ஞானிகளுக்கு திருமுழுக்கு அளித்து திருமறையின் உண்மைகளை கற்பித்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: மேலை நாட்டில் திருச்சபையை உருவாக்கிய புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: கேரளத்தில் ஏழு கோயில்களை எழுப்பிய புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: சென்னை மயிலாப்பூரில் பல ஆண்டுகளாக நற்செய்தியைப் போதித்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: சின்ன மலையில் அற்புதமான நீர் ஊற்றைச் சுரக்க செய்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: பெரிய மலையில் சிலுவை செதுக்கி இரத்தம் கசிந்ததால் பல புதுமைகளை செய்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: கடலில் சுற்றிவந்த மிகப் பெரிய மரத்தை அநேகரால் இழுக்க முடியாத நிலையில் தனது இடுப்பில் இருந்த கயிற்றினாலே கட்டி சிலுவை அடையாளத்தை வரைந்து இழுத்துக் கொண்டு கரைசேர்த்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: பல வல்லமையான செயல்களால் மக்களை இயேசுவிடம் ஈர்த்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: மரணம் அடைந்த குழந்தையை கடவுளின் வல்லமையினால் உயிர்ப்பித்த புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: தனக்கு பின் புனித சவேரியார் சிந்து நாட்டிற்கு வரப்போகின்றதை முன்னதாகவே உணர்ந்துகொண்டு மக்களுக்கு வெளிப்படுத்தின புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: ஈட்டியினால் குத்தப்பட்டு மனமகிழ்வோடு வேதசாட்சி முடிவு பெற்று நித்திய காலமும் இறைவனோடு வாழ ஆசி பெற்ற புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: உமது திருவடியைத் தாங்கிய பாரதநாடு மனம் திரும்பும்படியாக புனித தோமையாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக:
முதல்வர்: எங்கள் பேரிலே கொண்ட அன்பினாலே எங்களுக்காக உயிர்துறந்த இயேசுவே உமது ஊழியராகிய புனித தோமையாரைக் கொண்டு எம் பாரத மண்ணில் நற்செய்தி போதிக்க திருவுளமானீரே! அவருடைய பேறு பலன்களினாலே நாங்கள் எப்போதும் இறைவனுக்கு ஏற்புடையவராக வாழவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கவும், ‘என் ஆண்டவரே என் தேவனே’ என துணிவோடு சான்று பகரவும் அருள் தாரும்.
அனைவரும்: ஆமென்.
குணமளிக்கும் செபம்
முதல்வர்: அன்புத் தந்தையே இறைவா! அப்போஸ்தலரான புனித தோமையாரை எம் இந்திய நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பியதற்க்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர் வழியாக எண்ணற்ற நோயாளிகளைக் குணப்படுத்தினீர். துன்புறுவோருக்கு துணையானீர், ஆறுதல் அற்றவர்களுக்கு ஆறுதல் அளித்தீர், வருந்தி வாழ்வோரை பலப்படுத்தினீர். இன்று உமை நாடிவரும் எல்லா மக்களையும் நவ நாளில் பக்தியோடு பங்கேற்கும் அனைவரையும் நிறைவாக ஆசிர்வதியும். தீராத வியாதியிலிருந்தும் துன்ப துயரங்களில் இருந்தும், மன கவலைகளிலிருந்தும் பலவிதமான தீய சக்திகளின் அடிமை தனங்களிலிருந்தும் எங்களை விடுவித்து, நாங்கள் உடல் நலனும், மன அமைதியும் பெற்று உமக்கு சாட்சியம் பகர புனித தோமையாரின் வல்லமையுள்ள பரிந்துரையால் உம்மை வேண்டுகிறோம்.
அனைவரும்: ஆமென்
இறுதி செபம்
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை செபம் என்றும் நமக்கு கிடைக்கும்படியாக
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
அனைவரும்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
அனைவரும்: தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: ➕ தந்தைக்கும் ➕ மகனுக்கும் ➕ தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
அனைவரும்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
நிறைவுப்பாடல்
திருத்தூதரே எங்கள் தோமையாரே
இயேசுவின் நெருங்கிய உறவினரே
நீரே என் ஆண்டவர் என் கடவுள்
என்று இயேசுவை புகழ்ந்தீரே
வாழ்க உமது புகழ் வாழ்க உமது நாமம்
உமது திருவடி பணிகின்றோம்
1. தேவ அன்னையின் திருப்படத்தை
உலகறிய செய்த நாயகனே
இயேசுவின் ஆணி காயங்களில்
கை விட்டு ஐயம் தீர்த்தீரே
வாழ்க உமது புகழ் வாழ்க உமது நாமம்
உமது திருவடி பணிகின்றோம்
2, இயேசுவின் சாட்சியாய் வாழ்ந்தவரே
கிறிஸ்தவம் பரவ காரணரே
இயேசுவின் மீதுள்ள பாசத்தினாலே
பரங்கி மலையில் உயிர் நீத்தீரே
வாழ்க உமது புகழ் வாழ்க உமது நாமம்
உமது திருவடி பணிகின்றோம்
3. உயிர்த்த யேசுவைக் கண்டையம் தீர்த்தத்தால்
உலகெங்கும் அவர் நாமம் பறை சாற்றீனீர்
இரத்த சாட்சியாய் வாழ்ந்து மரித்ததால்
புனித நிலைக்கு நீர் உயர்த்தப் பட்டீர்
வாழ்க உமது புகழ் வாழ்க உமது நாமம்
உமது திருவடி பணிகின்றோம்
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.