அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்
மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா
தொடக்க வழிபாடு
குரு: இந்த நிறுவனத்தில் பணி செய்பவர்கள், இங்கு வருவோர் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக. தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
குரு: விண்ணகத் தந்தையின் பரிவும், அவரது திரு மகனின் அன்பும், தூய ஆவியாரின் அருளும் உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
குரு: அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இந்த வழிபாட்டில் நாம் அனைவரும் தகுந்த முறையில் பங்குபெற்று இறை அருளைப் பெற, நம் பாவங்களை நினைத்து மனம் வருந்துவோம்.
குரு: அனைத்தையும் படைத்த ஆண்டவரே இரக்கமாயிரும்...
எல்லோரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
குரு: பாவிகளைத் தேடி மீட்க வந்தக் கிறிஸ்துவே இரக்கமாயிரும்
எல்லோரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
குரு: ஆறுதல் தரும் ஆண்டவரே இரக்கமாயிரும்...
எல்லோரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்லோரும்: ஆமென்.
குரு: மன்றாடுவோமாக...
எல்லாம் வல்ல விண்ணகத் தந்தையே, இந்த நிறுவனத்தையும், இங்கு வரும் வாடிக்கையாளர்கள், இங்குள்ள பொருட்கள், இயந்திரங்கள், கருவிகள்குக்காக உம்மை மன்றாடுகிறோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் இல்லங்களை நீர் ஆசீர்வதிக்கத் திருவுளம் கொண்டது போல, இந்த நிறுவனத்தையையும் இங்குள்ள அனைவரையும் இங்குள்ள பொருட்கள், இயந்திரங்கள், கருவிகளையும் நீர் ஆசீர்வதித்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆமென்.
முதலாம் வாசகம்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள் வாக்கு
எல்: இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப்பாடல்
ஒருவர்: நீதிமான்களே, ஆண்டவரில் களி கூருங்கள். நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழ் இசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
எல்: ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
ஒருவர்: ஆண்டவரின் வாக்கு நேர்மையானது. அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார். அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
எல்: ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
ஒருவர்: நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமுமாவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களி கூரும். ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
எல்: ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
நற்செய்தி வாசகம்
குரு: யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். (15: 9 – 12)
எல்லோரும்: ஆண்டவரே மாட்சி உமக்கே.
குரு: அக்காலத்தில் இயேசு கூறியதாவது 'என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்து இருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.
குரு: இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்லோரும்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
மன்றாட்டுக்கள்
குரு: இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உலகெங்கும், சிறப்பாக இந்த நிறுவனத்தில் உண்மையான அன்பு என்றும் தொடர்ந்து வளர மன்றாடுவோமாக.
ஒருவர்: உலகிலும் திரு அவையிலும் அமைதி நிலவவும், திரு அவையின் ஒற்றுமை மேன்மேலும் வளரவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: இந்த நிறுவனத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் அன்போடும் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட இவர்கள் அனைவரும் உமது திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாக விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: எங்கள் பங்கிலுள்ள அனைத்து நிறுவனங்களையும், வியாபர நிலையங்களையும் நீர் ஆசீர்வதித்து, அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து, சமுதாயத்தில் செழித்தோங்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு: நமது சொந்தக் கருத்துகளுக்காக சற்று மௌனமாக மன்றாடுவோம்.
குரு: அனைத்து நிறுவனங்களையும், வியாபர நிலையங்களையும் காத்துப் பராமரித்து ஆட்சி செய்யும் இறைவா, இங்கிருக்கும் அனைவரும் உம் திருமுன் சமர்ப்பித்த இம்மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்து, உம் திருவுளப்படி இவர்களது இதயத்தின் ஆவல்களை நிறைவேற்றுவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல் ஆமென்.
தொழிலாளரான புனித யோசேப்பை நோக்கி செபம்
அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா! நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே! நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும், பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதை யோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயன் அடையச் செய்தருளும். ஆமென்.
தொழிலாளியின் பாதுகாவலரான புனித யோசேப்பே! உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியது போல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்தது போல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடம் மன்றாடுவீராக.
ஆமென்.
இயேசுவின் திவ்ய இருதயமே!
எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
மரியாளின் மாசற்ற இருதயமே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோசேப்பே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித நீர் தெளித்தல்
குரு: மன்றாடுவோமாக...
எல்லாம் வல்ல விண்ணகத் தந்தையே, இந்த நிறுவனத்தையையும், இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும், இங்குள்ள பொருட்கள், இயந்திரங்கள், கருவிகளை நீர் ஆசீர்வதித்தருளும். எல்லாத் தீமைகளிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றியருளும். உமது அமைதியை இவர்கள் மீது பொழிந்து, என்றும் உம் தூய ஆவியை இவர்கள் மீது தங்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆமென்.
குரு: நாம் பெற்றத் திருமுழுக்கை இந்தப் புனித நீர் நினைவுபடுத்துவதாக. தமது பாடுகளாலும் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் இது நமக்கு நினைவுபடுத்துவதாக.
எல்லோரும்: ஆமென்.
குரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்பித்தவாறே, நாம் நம் விண்ணகத் தந்தையை நோக்கி நம்பிக்கையுடன் மன்றாடுவோம்.
பரலோக மந்திரம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே,
தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
இறுதி ஆசீர்
குரு: விண்ணகத் தந்தை உங்கள் மீது அன்பு கூர்ந்து உங்களுடன் வாழ்வாராக...
எல்லோரும்: ஆமென்.
குரு: இறை மகன் உங்களோடு தங்கி, உங்களுக்கு தம் அமைதியை அருள்வாராக...
எல்லோரும்: ஆமென்.
குரு: தூய ஆவியார் உங்கள் மீதிறங்கி உங்களுக்கு அனைத்தையும் கற்பிப்பாராக...
எல்லோரும்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து என்றென்றும் காப்பாராக...
எல்லோரும்: ஆமென்.
மாதாவே ! துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரம் தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன்பாக எமைப் பாரும்.
வானோர் தம் அரசே தாயே - எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற்காரும்.
ஒன்றே கேட்டிடு வோம் தாயே - நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனும் செய்திடாமல் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்.