புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு நவநாள் செபம்
புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு நவநாள் செபம்
தொடக்க செபம்
முதல்வர்: அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும், எங்கள் சர்வேசுரா! தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
அனைவரும்: ஆமென்.
முதல்வர்: புனித பிரான்சிஸ் அசிசியாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித பிரான்சிஸ் அசிசியாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித பிரான்சிஸ் அசிசியாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: ஓ,புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் அசிசியாரே, உம் இல்லத்தின் அனைத்து வசதிகளையும் செல்வங்களையும் துறந்து ஏழ்மை நிலையை ஏற்று இயேசு கிறிஸ்துவின் துறவு வாழ்க்கையை முழுமையாகப் பின்பற்றினீர். உடலில் அற்புத ஐந்து காயங்களை தாங்க தகுதியுடையவர் ஆனீர், இதன் மூலம் நீர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உயிருள்ள உருவமாக ஆனீரே, தூய்மையும், பரிசுத்தமுமான எளிய வாழ்வை வாழ்ந்து காட்டி எங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தீர்
அனைவரும்: புனித பிரான்சிஸ் அசிசயாரே,/ நாங்கள் துன்பங்களினால் துவண்டுவிடாமல்/ மன உறுதியோடு எங்கள் சிலுவைகளை மனமுவந்து ஏற்று/ ஏசுநாதரும் தேவஅன்னையும் நடத்தி வந்த எளிய வாழ்வை/ நாங்கள் பின்பற்ற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்./ ஆமென்./
நவநாள் செபம்
முதல்வர்: எம் மீட்பரே, தாழ்ச்சியின் பெயரால் புனித பிரான்சிஸ் அசிசியார் உம்முடைய படிப்பினைகளினால் மிகுந்த சாந்த குணத்தைக் கற்றுக்கொண்டார். அன்றியும் அதில் ஆழ்ந்து நிலைத்திருந்தார். நிர்ப்பாக்கியப் பாவிகளாகிய நாங்களோ குற்றங்களால் நிரப்பப்பட்டு எங்கள் இதயத்தின் கர்வத்தை எப்படி கீழ்ப்படுத்துவதென்று கலங்கி நிற்கின்றோம். நாங்கள் கர்வம் கொண்டு நடவாதபடிக்கு சாந்த குணத்தை உம்முடைய தெய்வீகக் கிருபையால் தந்தருளும்படியாய் உம்மை மன்றாடுகிறோம். இந்தப் பெரிய புனிதரைக் குறித்து நாங்கள் தியானிப்பதால் உம்முடைய தெய்வீகப் படிப்பினைகளில் நாங்கள் எப்பொழுதும் உறுதியாக இருக்கவும், உம்முடைய சிலுவையோடு எப்பொழுதும் சம்பந்தப்பட்டிருக்கவும் தயை செய்தருளும்.
அனைவரும்: மகிமை பொருந்திய புனித பிரான்சிஸ் அசிசியாரே,/ நாங்கள் விரும்புகிறபடி/ உம்மைப் போல மற்றவர்களுக்குக் கீழ்ப்படிந்து/ உலக வெகுமானத்தில்/ உண்மையான பேறு இல்லை/ என்று நினைத்துப் பொறுமையாய் இருக்க செய்தருளும்./ ஆண்டவருடைய அன்பில் மகிழ்ச்சியாக இருப்பதே/ உண்மையான பேறு என்று விசுவசிப்பதற்கு/ நாங்கள் மறவாதபடிக்கு உம்முடைய சாந்தகுணமானது/ எங்களுடைய படிப்பினைகளாக இருக்க/ தயவு செய்தருளும்./ இந்த நவநாள் மூலமாக/ நாங்கள் கேட்கும் வேண்டுதல்களை/ ஆண்டவரிடம் சமர்ப்பிக்க உம்மை மன்றாடுகிறோம்./ ஆமென்.
(நமது வேண்டுதல்களை மௌனமாக சமர்பிப்போம்)
புனித பிரான்சிஸ் அசிசியாரிடம் ஜெபம்
முதல்வர்: எளிய வாழ்வாலும் தாழ்ச்சி நிறை பண்பாலும் கிறிஸ்துவை போல் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அசிசியரே! ஐந்து காய வரம் பெற்ற அண்ணலே ! குறையாத மகிழ்ச்சி குன்றாத மன சுதந்திரம் மெய்யான மன நிறைவு என்ற பண்புகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தீரே! கிறிஸ்துவின் மீது உயிருக்கு உயிரான அன்பும் ஆழமான உறவும் கொண்டு விளங்கினீரே! உம் வீட்டையும் உரிமை சொத்தையும் துறந்து ஏழ்மையை அணிந்து கொண்டீரே! வறுமையை உம் கோமகளாக தேர்ந்து கொண்டீரே ! நற்செய்தி வாழ்க்கை முறையும் இயேசுவின் சாயலும் உம்மிடம் துலங்கி ஒளி வீசியதை போல வேறு எவரிடமும் எக்காலத்திலும் விளங்கியது இல்லை என்ற உம் தனி பெருமையை எண்ணி வியக்கிறோம். மாமன்னனுக்கு கட்டியம் கூறுபவர் என்றும் மறு கிறிஸ்து என்றும் உம்மை மகிழ்ச்சியுடன் போற்றுகிறோம்.
அனைவரும்: இறைவனே உம்மை தம்மவராக்கி கொண்டதால்/ நீர் இறைவனின் திரு முன்/ வலிமை மிக்க புனிதராய் துலங்குகின்றீர்./ தந்தையே! உம்மை போல கிறிஸ்துவின் மறை பொருளை/ எங்கள் வாழ்வின் மையமாக கொண்டு வாழ்ந்திட கற்று தாரும்./ உம்மிடம் விளங்கிய இறை அன்பு,/ நற்செய்தியை போதிக்கும் ஆர்வம்,/ இயற்கையோடு இணைந்த வாழ்வு எம்மிடமும் வளர செய்தருளும்./ இதனால் நிறை மகிழ்ச்சியோடு நாங்களும்/ அனைவரின் மீட்புக்காக உழைக்க எங்களுக்காக மன்றாடும்./ ஆமென்.
புனித பிரான்சிஸ் அசிசியாரின் சமாதானத்திற்கான மன்றாட்டு
முதல்வர்: இறைவா! எம்மை உம் சமாதானத்தின் கருவியாக்கும். எங்கே தீமை நிகழ்ந்ததோ அங்கே அன்பையும், எங்கே இருள் உண்டோ அங்கே ஒளியையும், எங்கே மனவருத்தம் விளைந்ததோ அங்கே அகமகிழ்வையும், எங்கே ஐயம் தோன்றியதோ அங்கே விசுவாசத்தையும், எங்கே அவநம்பிக்கை ஏற்பட்டதோ அங்கே நம்பிக்கையும், நாங்கள் விதைத்து வளர்க்க எங்களுக்கு உதவி புரியும்.
அனைவரும்: தெய்வீகக் குருவே!/ ஆறுதல் தேடுவதை விட,/ அதைக் கொடுப்பதையும்,/ பிறர் எங்களைப் புரிந்து கொள்வதை விட,/ நாங்கள் அவர்களைப் புரிந்து கொள்ளவும்,/ அன்பு செய்யப்படுவதை விட,/ அன்பு செய்வதையும்,/ நாங்கள் நாடும்படி எங்களுக்கு அருள் புரியும்./ ஏனெனில் தருவதால் நாங்கள் பெறுகிறோம்./ மன்னிப்பு அளிப்பதால் மன்னிப்பு பெறுகிறோம்./ மரிப்பதால் நித்திய வாழ்வுக்குப் பிறக்கிறோம்./ ஆமென்.
குழுவினருடைய வேண்டுதல்
(விண்ணப்பங்கள்)
முதல்வர்: அன்பின் ஆண்டவரே! அசிசியின் புனித பிரான்சிஸ்! கடவுள் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து, இயேசுவை முழுமையாகப் பின்பற்றி, அவரின் சீடர்களைப் போலத் தாமும் "நடமாடும் போதகராக", கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு நற்செய்திப் பணிபுரிந்தார். இயேசுவின் துன்பங்களில் தாமும் பங்கேற்க வேண்டும் என்று உளமார விரும்பி இறைவேண்டல் செய்து உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும், விலாவிலும் இயேசுவின் காயங்கள் போன்ற காயங்களை பெற்றார். மக்கள் போர் செய்வதைத் தவிர்த்து அமைதியாகவும் ஒருவர் ஒருவர்மீது அன்புடையவர்களாக வாழ வேண்டும் என்று போதித்து, இயேசுவுக்கான தனது அர்ப்பணிப்பில் உறுதியாக இருந்தார். எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு நாங்கள் கேட்கும் விண்ணப்பங்களைக் கருணையோடு எங்களுக்கு அளித்தருளும்.
முதல்வர்: எங்கள் திருத்தந்தைக்கும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்திட வேண்டுமென்று…
அனைவரும்: புனித பிரான்சிஸ் அசிசியாரின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்திட வேண்டுமென்று…
அனைவரும்: புனித பிரான்சிஸ் அசிசியாரின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் தூய ஆவியார் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று…
அனைவரும்: புனித பிரான்சிஸ் அசிசியாரின் மூலம் , ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும்
அனைவரும்: புனித பிரான்சிஸ் அசிசியாரின் மூலம் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: புனித பிரான்சிஸ் அசிசியாரிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக் கூறுவோம்.
நன்றியறிதல்
முதல்வர்: புனித பிரான்சிஸ் அசிசியார் எளிமை, அன்பு மற்றும் சமாதானத்தின் தூதுவராக விளங்கினார். தம் எளிய வாழ்வாலும் தாழ்ச்சி நிறை பண்பாலும் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார். விண்ணகத் தந்தையே, பிரான்சிஸ் அசிசியாரை சமாதானத்தின் பாதுகாவலராக தந்து எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வரும் உமது வல்லமை நிறைந்த நன்மைத் தனத்திற்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்
முதல்வர்: ஐந்து காய வரம் பெற்ற புனித பிரான்சிஸ் அசிசியாரின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும்
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: மனத்தாழ்ச்சியின் பிம்பமான புனித பிரான்சிஸ் அசிசியாரின் வழியாக திருச்சபைக்கு நீர் வழங்கிய அனைத்து அருள் வரங்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும்
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: குருத்துவத்தின் மீது ஆழ்ந்த மதிப்பை கொண்டிருந்த புனித பிரான்சிஸ் அசிசியாரின் மன்றாட்டால் அனைத்து துறவரத்தாருக்கும் நீர் கொடுத்த ஆசீருக்காக
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்
முதல்வர்: துன்பங்களினால் துவண்டுவிடாத புனித பிரான்சிஸ் அசிசியாரின் மன்றாட்டால் நோயாளிகள் பெற்ற நலத்திற்காக
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்
முதல்வர்: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள நன்மைகளுக்காக புனித பிரான்சிஸ் அசிசியாரின் வழியாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்
(மௌனமாக நன்றி சொல்லுதல்)
நோயாளிகளை ஆசீர்வதித்தல்
முதல்வர்: செபிப்போமாக
அனைவரும்: ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும்./ நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும்./ நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து/ உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள்புரிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
முதல்வர்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பாதுகாக்க நம் நடுவிலும், நம்மைக் காப்பாற்ற நமக்குள்ளும், நமக்கு வழிகாட்ட நம் முன்னும், நமக்கு காவலாயிருக்க நம் பின்னும், நம்மை ஆசீர்வதிக்க நம் மேலும் இருப்பாராக.
முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
அனைவரும்: ஆமென்.
மன்றாட்டு மாலை
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே...
முதல்வர்: புனித சூசையப்பரே
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே
முதல்வர்: புனித அந்தோணியாரே
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே
முதல்வர்: புனித தோமா அடிகளாரே
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே
முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே
முதல்வர்: அசிசி நகரில் செல்வக் குடும்பத்தில் பிறந்தவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: உல்லாச இளைஞராக வாழ்ந்து வந்தபோது, நோயில் விழவே, உலக வாழ்வின் வெறுமையை உணர்ந்து முற்றும் மாறியவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: ஏழைகளின் நண்பராய், அப்போஸ்தலர்களின் தோழராய், ஒப்பற்ற தூயவராய் வாழ்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: சிலுவை துயரையும் அவமானத்தையும் உலக செல்வத்துக்கு மேலாகத் தேர்ந்து கொண்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: ஊனியல்புக்கு இறந்தவராய், ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: துன்புறும் தொழுநோயாளிகளை கட்டியணைத்த புனித பிரான்சீசே…
முதல்வர்: உறவு துறப்பதும் துறவு ஏற்பதும் விண்ணகத் திறவுகோல் என கண்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: தனிமைச் செபத்திலும், தியானத்திலும், தவத்திலும் இறைவனின் திருவுளத்தைத் தேடி நின்ற புனித பிரான்சீசே…
முதல்வர்: இடிந்துவிழும் என் இல்லத்தைப் பழுது பார்’! என்ற குரல் கேட்டு, புனித தமியான் ஆலயத்தைப் புதுப்பித்தவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: அமைதியையும் அன்பையும் போதித்து, அவற்றையே ஆசியாக வழங்கிய புனித பிரான்சீசே…
முதல்வர்: 27 வயதிலே வறுமையை உம் கோமகனாகத் தேர்ந்துகொண்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: பையிலோ கையிலோ காசின்றி, இரந்துண்டு இறைவாக்கை அறிவிக்கத் துணிந்தவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: போதிப்பதற்காகவே திருத்தொண்டர் திருநிலையை ஏற்ற புனித பிரான்சீசே…
முதல்வர்: மறுகிறிஸ்து என்று சரியாகப் புகழப்பட்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: குருத்துவத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த மதிப்பை முன்னிட்டு, குருவாக விரும்பாமல் திருத்தொண்டராகவே வாழ்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: போர்சியுங்குலா சிற்றாலயத்தை இதயம் கவர்ந்த இல்லமாக்கிக் கொண்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: மண்ணுலகிலேயே விண்ணுலகைச் சுவைத்த புனித பிரான்சீசே…
முதல்வர்: தனிமையாக ஒதுங்கித் தவமும் தியானமுமாகப் பல நாள்களைக் கழித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: படைப்புப் பொருள்களில் எல்லாம் கடவுளின் இறைமையைக் கண்டுணர்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: அனைத்தையும் உடன் பிறப்பாகக் கண்ட அரிய மனிதரான புனித பிரான்சீசே…
முதல்வர்: புனித கிளாராமாவுக்கும் அவர் தோழியருக்கும் ஏழை கிளாராம்மாள் சபை என்ற பிரான்சிஸ்கன் இரண்டாம் சபையை ஏற்படுத்திய புனித பிரான்சீசே…
முதல்வர்: தவ வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பிய பொதுநிலையினருக்கும் ஒழுங்குமுறையை வகுத்துத் தந்து பொதுநிலை பிரான்சிஸ்கன் சபையை நிறுவிய புனித பிரான்சீசே…
முதல்வர்: குபியோ சிற்றூரைக் கலங்கடித்த ஓநாய்க்குப் போதித்து, அதைச் சாந்தப்படுத்திய புனித பிரான்சீசே…
முதல்வர்: எகிப்துக்குப் பயணமாகி அங்கே சுல்தானுக்கு நற்செய்தி அறிவித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: புனித நாட்டுக்குத் திருப்பயணமாகி, திருத்தலங்களிலே கிறிஸ்துவின் பேரன்பை எண்ணி உருகிய புனித பிரான்சீசே…
முதல்வர்: சிலுவைப்பாதை பக்தி முயற்சியை பரவச் செய்ய முன்னணியில் நின்ற புனித பிரான்சீசே…
முதல்வர்: ‘நீர் இச்சபையின் ஒளியாய்த் துலங்குவீர்!’ என்று புனித அந்தோனியாரை ஆசீர்வதித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: உயிரோடு இருக்கும் போது உம் சபையில் 5000 துறவிகளை காணப் பேறுபெற்றவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் மகத்தான ஆன்மீகப் புரட்சியை விளைவித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: முள் தரையிலும் கடும் பனியிலும் விரும்பி உறங்கினவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: ஏழ்மை தான் விண்ணுக்கு வழி, தாழ்ச்சிக்குச் செவிலி, நிறைவுக்கு வேர் என்று போதித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: அல்வேர்னோ மலைமுகட்டில் ஐந்து காய வரம் பெற்ற புனித பிரான்சீசே…
முதல்வர்: போர்சயுங்குலா சிற்றாலயத்தில், குளிர்ந்த தரையில் படுத்து தன் நாற்பத்து நான்காம் வயதில் ஆண்டவரில் கண்ணயர்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: இறந்த இரண்டே ஆண்டுகளில் புனிதர் என அறிவிக்கப்பட்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: சுற்றுப்புறச் சூழலைப் பேணுவதில் பாதுகாவலரான புனித பிரான்சீசே…
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: செபிப்போமாக: அன்புமிக்க இறைவா, புனித பிரான்சிஸ் அசிசியார் ஏழ்மையாலும் தாழ்ச்சியாலும் கிறிஸ்துவின் சாயலைத் தாங்கச் செய்தருளினீரே; இப்புனிதரின் வழியில் நடந்து, உம் திருமகனைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் அன்பு வாழ்க்கை நடத்தவும், உம்மோடு ஒன்றித்திருக்கவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இறுதி செபம்
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை செபம் என்றும் நமக்கு கிடைக்கும்படியாக,
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
இறுதி பாடல்
முதல்வர்: அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும், எங்கள் சர்வேசுரா! தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
அனைவரும்: ஆமென்.