அனைவரையும் வரவேற்று, அரவணைக்கும் இயேசுவே!
உம்மிடம் வந்த அனைவரையும் நீர் அன்புடன் வரவேற்றீர். அதே அன்புணர்வை விருந்தோம்பல் பணியின் மூலம் நாம் பிரதிபலிக்கிறோம். இந்த நாளில் உமது ஒளி எமது இதயத்தில் பிரகாசிக்கட்டும். உமது உடனிருப்பை வெளிப்படுத்தும் பாதையில் உமது ஊழியர்களாகிய நாம் நடக்கவும், மற்றவர்களை வழி நடத்தவும் எமக்கு வரம் தாரும்.
உம்மை வணங்கவும் போற்றவும் மக்கள் இந்த ஆலயத்திற்குள் நுழையும்போது, அவர்கள் எம் வார்த்தைகளில் உமது குரலைக் கேட்கட்டும், எமது செயல்களில் உமது அன்பைக் காணட்டும்.
எமது வரவேற்பு அவர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியை கூட்டுவதாகவும், எமது வாழ்த்துக்கள் அவர்கள் மீண்டும், மீண்டும் ஆலயத்தை நாடி வர அவர்களை ஊக்குவிப்பதாகவும் இருப்பதாக.
மக்களுக்கு சேவை செய்ய எமக்கு நீர் வழங்கிய வாய்ப்பிற்காக நன்றி செலுத்தும் அதே வேளையில், எமது அனைத்து முயற்சிகளையும், பணியையும் ஆசீர்வதித்து வழி நடத்துமாறு உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். இந்த மன்றாட்டுகளை எமது ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எமக்கு தந்தருளும்.
ஆமென்
எல்லாம் வல்ல, அன்புத்தந்தையாகிய இறைவா,
உமது மகன் கிறிஸ்து இயேசு திருச்சபையின் மேல் வைத்திருக்கும் அன்பை, கணவன் மனைவியின் பிரிக்க முடியாத பிணைப்புடன் ஒப்பிடுவதன் மூலம், திருமண பந்தத்தை நீர் மேன்மைபடுத்தியுள்ளீர். இத் தம்பதிகளை இறையன்பின் அருட்சாதன அடையாளமாக மாற்றியுள்ளீர்.
திருமண பந்தத்தில் நீர் இணைத்த இத்தம்பதிகளை கண்கொண்டு பாரும்.
இன்பம், துன்பம் இரண்டிலும் இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில் வளர்வார்களாக; சமாதானப் பிணைப்பில் ஒரே மனத்துடன் உமதன்பில் மகிழ்ச்சியடைவார்களாக.
அன்பு தந்தையே,
இவர்களின் போராட்டங்களில் நீர் இவர்களுக்கு உதவ அருகில் இருப்பதை அவர்கள் உணர்வார்களாக; அவர்களின் தேவைகளில் நீர் அவர்களைக் காப்பாற்ற உடன் இருக்கின்றீர் என்ற உணர்வு அவர்களுக்கு நம்பிக்கை அளிப்தாக. இவ்வாறு, ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் மூலமும் நிறைவும் நீரே என்பதை அவர்கள் விசுவசிப்பார்களாக.
திருமணத்தில் அவர்களை இணைத்த நீர், அவர்களை மென்மேலும் ஆசீர்வதித்து பாதுகாப்பீராக.
தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே, ஆமென்.
_________ எனும் நான், __________ எனும் உங்களை, இறைவன் எனக்கு மனைவியாக தந்தமைக்காக நன்றி செலுத்துகின்றேன்.
கடந்த 25 வருடங்களாக இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உங்களுக்கு பிரமாணிக்கமாகவும், துணையாகவும் இருக்க இறைவன் தந்த வரத்திற்காக இறைவனை நன்றி செலுத்துகின்றேன்.
இனி வரும் காலங்களிலும், என் வாழ் நாள் முழுவதும் உங்களை அன்பு செய்யவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
_________ எனும் நான், __________ எனும் உங்களை, இறைவன் எனக்கு கணவனாக தந்தமைக்காக நன்றி செலுத்துகின்றேன்.
கடந்த 25 வருடங்களாக இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உங்களுக்கு பிரமாணிக்கமாகவும், துணையாகவும் இருக்க இறைவன் தந்த வரத்திற்காக இறைவனை நன்றி செலுத்துகின்றேன்.
இனி வரும் காலங்களிலும், என் வாழ் நாள் முழுவதும் உங்களை அன்பு செய்யவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்.
புனித பிரான்சிஸ் அசிசி அடிகளாரே,
எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, இறப்பினை சகோதரியாய் எண்ணி, சமாதானத்தின் மனிதராக அதனை எதிர்கொள்ளச் சென்ற நீர், இறைவனிடம் எமக்காக மன்றாடுமாறு உம்மை வேண்டுகின்றோம். உண்மை சமாதானத்தை புனித தாமியானோ சிலுவை மூலம் உணர்ந்த நீர், இறை இயேசுவிடம், பிரிவினை சுவர்களை தகர்க்கும் ஊற்றாகிய, ஒப்புறவிற்காக செபிக்க எமக்கு கற்றுத்தந்தருளும்.
ஆயுதமின்றி, போரின் எல்லைகளையும், தப்பறையான புரிதல்களையும் தாண்டிச் சென்ற நீர், உலகம் எழுப்பும் தடைகளை தகர்த்து, இணைப்புப் பாலங்களை அமைக்கும் துணிவை எங்களுக்கு தந்தருளும்.
மோதலும் பிளவும் நிறைந்த இந்த இக்கட்டான காலத்தில், நாங்கள் சமாதானத்தின் கருவிகளாக மாறவும், ஆயுதங்களின்றி, ஆயுதங்களைக் களைந்து, கிறிஸ்துவிடமிருந்து மட்டும் வரும் சமாதானத்தின் சாட்சிகளாக எங்களை மிளிரச் செய்தருளும். ஆமேன்.
திருத்தந்தை 14ஆம் சிங்கராயர்
செபிப்போமாக:
எல்லா ஒளிக்கும் ஊற்றும் தொடக்கமுமான இறைவா, புறவினத்தார்க்கு ஒளியாக உம் திருமகன் இயேசுவை நேர்மையான சிமியோனுக்கு, அன்னாளுக்கும் (இன்று) வெளிப்படுத்தினீரே. உம் மக்களின் மன்றாட்டுகளுக்கு செவிசாய்த்து, உமது பெயரைப் போற்றுவதற்காக நாங்கள் ஏந்தி நிற்கும் இந்த மெழுகுவர்த்திகளை + ஆசீர்வதித்துத் தூய்மைப்படுத்த கனிவுடன் திருவுள்ளம் கொள்ள உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
நாங்கள் நற்பண்புகள் நிறைந்த பாதையில் நடந்து, ஒருபோதும் அணையாத அந்த நிலைவாழ்வின் ஒளியைச் சென்றடையவும், உலகின் ஒளியாகிய உம்மை பின்பற்றி, நாமும் உலகை எமது அன்பாலும் பண்பாலும் ஒளியேற்ற எமக்கு வரம் அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
உமது வார்த்தையை மனுவுருவாக்கி, எம்மத்தியில் வாழ வழி வகுத்த இறைவா!
நம்முடைய மூதாதையர்களின் விசுவாச வாழ்வின் மூலம், உம்முடைய உடனிருப்பையும் அன்பையும் நீர் வெளிப்படுத்தியுள்ளீர். ஆபிரகாம், சாரா, மோயீசன், தாவீது, மரியாள், யோசேப்பு, பேதுரு, பவுல் வரை, நீர் உம்முடைய வார்த்தை மூலம், உம்முடைய மக்களை முழுமையான வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறீர்.
காலம் வந்த போது, அதே வார்த்தையை எம்மத்தியில் மனிதனாக்கினீர். இந்த இறைவார்த்தையில் உம்முடைய உடனிருப்பை நாங்கள் உணர்கின்றோம், மதிக்கின்றோம். மேலும் இந்த விவிலிய புத்தகத்தின் வார்த்தைகள், எங்களுக்கு இன்னும் ஆழமாக, இறைவனின் உயிருள்ள வார்த்தையாக மாறி, எங்கள் எண்ணங்கள், ஆசைகள் மற்றும் செயல்களை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் செபிக்கின்றோம்.
இந்த திரு விவிலியங்களயும் அதை வாசித்து, வாழ்வோரையும், ➕ தந்தை, ➕ மகன் ➕ தூய ஆவி, நிறைவாக ஆசீர்வதித்து பாதுகாப்பாராக. ஆமென்.
எல்லாம் வல்ல இறைவா,
உம் திருமகன் இயேசு, நாசரேத்தின் தொழுகைக் கூடத்திற்குச் சென்று, எழுந்து நின்று வாசித்த போது, அவர் மீட்பின் நற்செய்தியை அறிவித்தார், அந்த நற்செய்தியாகவே வாழ்ந்து, நற்செய்திக்காக தனது உயிரையும் கொடுத்தார். எங்கள் வாசகர்களை ஆசீர்வதியும். உமது வாழ்வை உறுதியோடும் தைரியத்தோடும் அறிவிக்கும் இவர்களது விசுவாசத்தைப் பலப்படுத்தும். இவர்கள் உமது வாழ்வை வார்த்தைகளால் அறிவிக்கும் போது, இவர்கள் வாசிப்பதை விசுவசிக்கவும், விசுவசிப்பதை வாழவும், வாழ்வதைப் பறைசாற்றவும் அருள் புரியும்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
மூன்று ஞானிகள் பெருவிழாவின் போது
குரு: செபிப்போம்
அன்பான இறைவா, நீர் படைத்த இந்தச் சுண்ணாக்கட்டியை ஆசிர்வதியும். இது உமது மக்களுக்கு எழுதுவற்கு உதவியாக இருப்பதாக;
உமது பரிசுத்த பெயரின் உச்சரிப்பதன் மூலம், அதை விசுவாசத்தில் பயன்படுத்தும் நாங்கள், காஸ்பர், மெல்கியோர் மற்றும் பால்தாசர், ஆகிய ஞானிகளின் பெயர்களை எங்கள் வீட்டின் வாசலில் எழுதுவதன் மூலம், எங்கள் வீட்டில் வசிக்கும் அல்லது வருகை தரும் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தையும், ஆன்ம பாதுகாப்பையும்
பெற்றுக்கொள்வோமாக.
தந்தை மகன் தூய ஆவி, இச்சுண்ணக்கட்டிகளை ஆசீர்வதிப்பாரக, எம்மை பாதுகாப்பாராக.
மக்கள்: ஆமேன்.
எங்கள் அன்பான தந்தையே! அனைத்துக் குடும்பங்களையும் ஆசீர்வதியும். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதன் மூலம், திருக்குடும்பத்தைப் போல ஒன்றிணைந்த மனதுடன் வாழச் செய்தருளும். எமது குடும்பங்களில் அன்பும், அமைதியும், ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் நாள்தோறும் வளர்வதாக!
ஆண்டவரே! எமது குடும்பங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருக்குடும்பத்தைப் போல, அனைத்துக் குடும்பங்களையும் பரிசுத்தமாக்கும்.
தந்தையே! எமது குடும்ப வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களையும் உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும், பிறரில் குறைகாண்பதை விடுத்து அவர்களது நிறைகளை கண்டுணரவும், பிறரை தூற்றுவதை விடுத்து அவர்களில் பரிவு கொள்ளவும், பிறரிடமிருந்து பெற்றுக்கொள்வதை விடுத்து பிறருக்கு கொடுக்கவும் வரமருளும். இதன்மூலம் எமது குடும்பம், உமது அன்பும் அமைதியும் ஊற்றெடுக்கும் இடமாக மாற்றப்படட்டும்.
இவையனைத்தையும் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். ஆமென்!
அன்பான இறைவா, உமது பீடத்தில்
சேவை செய்ய எம்மை அழைத்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
உமது சேவையில் இளம் வயதிலிருந்தே தம்மை அர்ப்பணித்த
புனித ஜோன் பெர்க்மான்ஸின் அப்பழுக்கற்ற, விசுவாசமான முன்மாதிரியைப் பின்பற்ற எமக்கு அருள்தாரும்.
இறைவனின் பாதங்களில்
சேவை செய்யும் எங்களை ஆசீர்வதியும்.
விண்ணக பணிகளுக்கு
எங்களை தயாராக்கவும்,
நல் ஒழுக்கத்துடன் மிளிரவும்,
உறுதியான அர்ப்பணிப்புடன் வாழவும் எங்களுக்கு வரம் தாரும்.
ஆமென் .
எனக்கு காவலாயிருக்கிற இறைவனின் வானத்தூதரே,
இறைவனின் கருணையால் உம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான ஒளியைத்தந்து, என்னை எல்லாத்தீமைகளிலிருந்தும் காத்து நடத்தி ஆண்டருளும் - ஆமென்
"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்! என்று கூறிய அன்பான இயேசுவே! அனைத்துக் குழந்தைகளையும் ஆசீர்வதியும். குடும்பத்திலுள்ள
ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதன் மூலம், திருக்குடும்பத்தைப் போல ஒன்றிணைந்த மனதுடன் வாழச் செய்தருளும். எமது குடும்பங்களில் அன்பும், அமைதியும், ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் நாள்தோறும் வளர்வதாக!
அன்பான தந்தையே! எமது குழந்தைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். திருக்குடும்பத்தில் இயேசுவைப் போல, அனைத்துக் குழந்தைகளையும் பரிசுத்தமாக்கும்.
தந்தையே! எமது குடும்ப வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களையும் உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும், எமது பிள்ளைகளின் குறைகளைக் காண்பதை விடுத்து அவர்களது நிறைகளை கண்டுணரவும், அவர்களை தூற்றுவதை விடுத்து அவர்களில் பரிவு கொள்ளவும் வரமருளும். இதன்மூலம் எமது குடும்பம், உமது அன்பும் அமைதியும் ஊற்றெடுக்கும் இடமாக மாற்றப்படட்டும்.
இவையனைத்தையும் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
ஆமென்!
என்னோடு தங்கும் ஆண்டவரே, உம்மை நான் மறவாதிருக்க, நீர் என்னோடு தங்கும்.
நீர் என்னோடு பிரசன்னமாயிருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக நான் உம்மை கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன் அடிக்கடி தவறி விழாதிருக்க, உமது பலம் தேவை. என்னோடு தங்கும் ஆண்டவரே. எனக்கு வாழ்வே நீர் தான். நீர் இல்லை என்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை. ஆண்டவரே நீரே எனது ஒளி என்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் நிற்கிறேன். என்னோடு தங்கும் ஆண்டவரே. உமது சித்தம் எதுவென எனக்கு காட்டும்.என்னோடு தங்கும் உன் குரல் கேட்டு உம்மைப்பின் செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே. என்னோடு தங்கும் ஆண்டவரே.
இறுதி வேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும், உமது அன்பு,அருள் வழியாக என்னோடு தங்கும். உமது தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங்கொடையை எனக்கு தந்தருளும். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனென்றால் உம்மையே தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் தேடுகிறேன். என்னோடு தங்கும் ஆண்டவரே.
ஆமென்
ஞானத்தின் ஊற்றே இறைவா!
எனது இந்த இளம் வயதில் பல நன்மைகளை எனக்குப் பொழிந்து வழி நடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறேன். எனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நான், இந்த இறுதி நாட்களில் எனது பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல், உள்ள வலிமையையும் எனக்குக் கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். இதன் மூலம் எனது பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் பிள்ளையாக வளர என்னை வழி நடத்தியருளும். ஞானத்தின் இருப்பிடமாகிய இயேசுவே என் மேல் இரக்கமாயிரும்.
ஆமென்.
ஆண்டவராகிய இயேசுவே!
குழந்தையின் உள்ளத்தை உருவாக்கும் உன்னத பணியை நீர் எமக்கு அளித்திருக்கிறீர். அதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எமது சொல்லும் செயலும் ஒரு குழந்தையின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிகின்றன, என்றென்றும் வாழ ஏதுவான பண்புகளை அவர்களிடம் வளர்க்கின்றன என்பதை நாம் அறிந்துள்ளோம். எனவே, அவர்களது வாழ்க்கைப் பயணத்திலும், அறிவுத்தேடலிலும் எமது குழந்தைகளை சரியான பாதையில் வழி நடத்த எமக்கு உதவியருளும்.
அவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதில் கண்டிப்புக் காட்டும் அதே நேரத்தில், அவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கச் செய்தருளும். அவர்களின் சிந்தனைத் திறனைச் சீராக வளர்த்திட நாம் உதவுவோமாக. அவர்களிடம் உம்மையே கண்டு, உம் சாயலை அவர்களிடம் உருவாக்கும் அரிய பணியில் அயர்ந்து விடாமல் உழைக்க, நீர் என்றும் எம்மோடு இருந்தருளும். விசேஷமாக, இந்த தேர்வு நாட்களில், பொறுமையோடும், புரிந்துணர்வோடும், அன்போடும் எமது குழந்தைகளைப் பேணி, வழி நடத்தும் வரத்தை எமக்குத் தந்தருளும்.
ஆமென்.
அன்பு ஆசானாகிய இறைவா! எம்மை ஆசிரியர்களாக அழைத்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆசிரியர்களாகிய எங்களுக்கு வேண்டிய வலிமை, பொறுமை, ஞானவொளி, மற்றும் நல்லாலோசனைகளை கொடுக்கிறவரே, நீரே எங்கள் பராமரிப்பில் ஒப்படைத்த குழந்தைகளின் இதயங்களைத் தொடுகின்றீர். எங்களை ஒரு கணமேனும் கைவிடாமல் பாதுகாத்தருளும்.
எங்களுக்கு நல்வழிகாட்டியாக இருந்தருளும். மேலும் எமது மாணவர்களுக்கு நல்வழிகாட்ட, எங்களுக்கு ஞானம், புரிதல், ஆலோசனை, தைரியம், அறிவு, நற்குணம், இறை சித்ததிற்கு பயந்து நடத்தல் மற்றும் உமது மாட்சியை அடைவதற்கான ஆர்வம் ஆகிய வரங்களைத் தந்தருளும்.
அன்பின் இயேசுவே, எங்களுடைய முயற்சிகளை உம்முடைய சித்ததிற்கு ஒப்படைத்து, எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில், எங்களை காக்கும்படி எங்கள் காவல் சம்மனசுகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாவலரான புனித ஜோன் பப்டிஸ்ட் டி லா சாலின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்
என் அன்பின் குழந்தை இயேசுவே! எனது சின்ன ராஜாவே!
நீரே அறிவின் ஊற்றாக இருக்கின்றீர். அன்று நீர் தேவ ஆலயத்தில் அறிஞர்களுக்கு போதித்த போது உமது ஆற்றலை கண்டு அவர்கள் மலைத்து போனார்கள். இன்று நான் உமது திருப்பாதத்தில் பெரும் நம்பிக்கையோடு முழங்காலில் படியிட்டு மன்றாடுகிறேன்.
உமது தூய ஆவியானவரை அனுப்பி எனக்கு ஒளி தரவும், நம்பிக்கையூட்டவும் என்னோடு இருந்து இப்பரீட்சையை திறம்பட செய்யவும் அருள் தாரும் குழந்தை இயேசுவே!
இப்பரீட்சை வேளையில் என்னை வழிநடத்தி கேள்விகளை புரிந்து அவற்றிக்கு பயமின்றி முறையான பதிலை அளிக்க என்னோடு இருந்தருளும். ஆமென்
இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே ! அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே ! இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள இளைஞரை உம்மைப் பின்பற்றுபவர்களா கவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும். அனைத்துலக மக்களின் மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச் செய்தருளும். இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில் திருப்பலியை நீர் புதுப்பித்து வருகின்றீர்.இயேசுவே ! எங்கள் ஆண்டவரே ! எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர். உண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக ஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும்.
இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும் விளங்கவும் அருள் செய்யும். ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும். நன்னெறியில் வளர அவர்கள் கற்றுக் கொள்வார்க ளாக. அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும், ஆண்டவரே.
ஆமென்.
புனித மரியே, மாசில்லா கன்னிகையே ! யேசுவின் தாயாக மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவளே! துன்ப படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையே! உமது தெய்வீக திருமகனின் அளவற்ற வல்லமையை நம்பி, உமது வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டு, இந்த நவநாளின் போது நான் கேட்கும் மன்றாட்டுக்கள் தெய்வ திருவுளத்திற்கு ஏற்றவையானால் உம் திருமகன் யேசுவிடம் பரிந்து பேசி என் மன்றாட்டுகளை எனக்கு நிறைவேற்றி தாரும்.
இறைவனின் மாட்சி பெற்ற அன்னையே "அருள் நிறைந்தவள்" என்று அன்று அதி தூதர் கபிரியேல் சொல்லும் போது அவர் கொண்டிருந்த அதே பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துக்களை
கூறுகிறேன்; அன்புடன் ஏற்றுகொள்ளும்.
மங்கள வார்த்தை செபம் ///
வருந்துவோருக்கு ஆறுதலே! நான் இப்போது கேட்ட மன்றாட்டுக்கள் நிறைவேறுமாறு எனது நற்செயல்களையும் நான் ஏற்கும் துன்பங்களையும் ஒறுத்தல் முயற்சிகளையும் உமக்கு ஒப்பு கொடுக்கிறேன். உமது திருமகனிடம் உம் அடியான் எனக்காக பரிந்து பேசி என் மன்றாட்டுகளை அடைந்து தந்தருளும் வேளாங்கண்ணி மாதாவே. ஆமென்
புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அன்பான தாயும், பொறுமையுள்ள மனைவியுமான புனித மொனிக்கம்மாளே!
உமது வாழ்நாளில் பல துன்ப துயரங்கள் உமது இதயத்தைத் துளைத்ததெனினும், நீர் விரக்தியடையாமல், விசுவாசம் இழக்காமல், மிகுந்த எதிர்பார்ப்போடும் விடாமுயற்சியோடும் ஆழ்ந்த நம்பிக்கையோடும், உமது கணவருக்காகவும் பாசமிக்க மகனுக்காகவும் தினமும் செபித்தீரே! உமது செபத்திற்கான பலனையும், மகனாகிய புனித அகுஸ்தீனின் மனமாற்றத்தையும் கண்டுணர்ந்தீரே.
அதே துணிவையும், பொறுமையையும், இறைவன் மீதுள்ள விசுவாசத்தையும் எனக்கும் வழங்கியருளும்.
புனித மொனிக்கம்மாளே, என் குடும்பத்திற்கான என் விண்ணப்பங்களுக்கு இறைவன் சாதகமாக பதிலளிக்கவும், எல்லாவற்றிலும் அவரது விருப்பத்தை நான் ஏற்றுக் கொள்ளவும் எனக்காகப் பரிந்து பேசியருளும். இந்த மன்றாட்டுக்களை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக எனக்குப் பெற்றுத்தந்தருளும், ஆமென்.
புனித அகுஸ்தீனாரே
எங்களுக்காக வேண்டிகொள்ளும்
புனித மொனிக்கம்மாளே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தாயும் தந்தையுமான இறைவா!
எனது தாயை உமது அன்பின், கருணையின், வல்லமையின் சாயலாகப் படைத்து, என்னை எல்லாவற்றிலும் எனது அன்னைக்குக் கீழ்படியவும் அவரை நேசிக்கவும், மதிக்கவும் கட்டளையிட்டீரே. உமது அருளால், நான் எப்போதும் எனது தாயை நேசிக்கவும்,
மதிக்கவும்; அவருடைய அன்பிற்கும் பராமரிப்பிற்கும் மகிழ்வுடன் கீழ்ப்படிந்து, எப்பொழுதும் அவருடைய விருப்பத்திற்கு இணங்கி நடக்கவும், எப்பொழுதும் அவருடைய நலனை கருத்தில் கொள்ளவும் எனக்கு வரமளித்தருளும். அவர் என்னைக் கண்டித்து திருத்தும் போது அதைத் தாழ்சியோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்தருளும்! அன்புள்ள இறைவா! அகங்காரத்திலும், வைராக்கியத்திலும், பிடிவாதத்திலும், சோம்பலிலும் அசட்டைத் தனத்திலுமிருந்து என்னை விடுவித்தருளும். நான் படிக்கும் போது ஆர்வம் உடையவனாகவும், எனது அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பு உள்ளவனாகவும், எனது சோதனை வேளைகளில் பொறுமை காப்பவனாகவும் இருக்கச் செய்தருளும். நான் என் வாழ்நாள் முழுவதிலும் எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, உமது பிள்ளை என்கிற பெயருக்குத் தகுதியள்ளவனாகவும், எனது அன்னையை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்தும் குழந்தையாகவும் வாழச்செய்தருளும்.
ஆமென்.
பரலோக மந்திரம் / அருள் நிறை மரியே / திருத்துவ ஸ்தோத்திரம்.
இயேசுவின திரு இருதயமே,
எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
மரியாயின் மாசற்ற இருதயமே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சூசையப்பரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள் என்று மொழிந்த அன்பு இயேசுவே!
பெற்றோராகிய எங்களுக்கு நீர் கொடுத்த பொக்கிஷங்களாகிய எங்கள் பிள்ளைகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நல்ல கிறிஸ்தவ தாயாக, தந்தையாக நாங்கள், அன்புடனும், ஞானத்துடனும், பரிவுடனும், மன்னிக்கும் மனதுடனும், எமது பிள்ளைகளை வழிநடத்த எமக்கு உரிய வரங்களை தயவாய்த் தந்தருளும்.
இயேசுவின் அன்னையே, நாசரேத்தூரில் இயேசுவை நீர் எவ்வாறு அன்போடு பாதுகாத்தீரோ, அதே போல், எனது குழந்தைகளை ஒரு அன்னையாக பாதுகாக்கவும் வழிநடத்தவும் என்னை பலப்படுத்தியருளும். எனது பக்தியின் மூலம் எனது பிள்ளைகளை உமது திருமகனுக்கு உகந்தவர்களாக வளர்க்க எனக்கு தூய ஆவியின் அருள்வளங்களைத் தந்தருளும்.
இயேசுவே, மரியே, சூசையே!
எமது குடும்பமும், திருக்குடும்பத்தைப் போல், அன்புடனும் சமாதானத்துடனும் இறைப் பக்தியில் ஊன்றிய கிறிஸ்வர்களாக வாழ அருள் தாரும். ஆமென்,
பரலோக மந்திரம் / அருள் நிறை மரியே / திருத்துவ ஸ்தோத்திரம்.
இயேசுவின திரு இருதயமே,
எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
மரியாயின் மாசற்ற இருதயமே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சூசையப்பரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எங்களை அன்பு செய்யும் ஆண்டவரே, எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவரையும் நாங்கள் உமது பாதுகாப்பில் ஒப்படைக்கிறோம். அவர்களுக்கு மன தைரியத்தையும், உடல் பலத்தையும், உள்ள வலிமையையும் அளித்தருளும். எந்தத் தீங்கும் அவர்களை அணுகாமல் பாதுகாத்தருளும். பல்வேறு நோய்களினாலும், கிருமிகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய உதவும் அவர்களின் மகத்தான சேவைக்கான எங்களது நன்றியுணர்வை அவர்கள் அறிந்து கொள்வார்களாக.
ஆறுதலின் இறைவனே, அவர்கள் உமது பாதுகாப்பையும் அமைதியையும் அறிந்து கொள்வார்களாக. இந்தச் சவால் மிக்க நாள்களில் அவர்களையும், அவர்களது குடுபங்களையும் ஆசீர்வதித்தருளும்.
ஆமென்.
ஆறுதலின் தெய்வமே!
இறந்தோர் அனைவரையும் நினைவு கூறுகின்றோம். அமைதியாகக் கடந்து சென்ற அனைவரும் உமது பரந்த இதயத்தில் மகிழ்ச்சியுடன் இளைப்பாற வழி அமைத்தருளும். பெரும் வேதனையுடன் அவதியுற்ற அனைவரும் உமது இரக்கம் மிகுந்த அரவணைப்பில் ஆறுதலும் இளைப்பாறுதலும் பெறுவார்களாக. எதிர்பாராத விதமாக, திடீரென்று, வெகுவிரைவில் இறந்தோர் அனைவரும் உமது அன்புப் பராமரிப்பில் சமாதானத்துடன் சரணடைவார்களாக.
நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே!
முடிவில்லாத ஒளி அவர்கள் பிராகாசிக்கக்கடவது!
அவர்கள் சமாதானத்தில் இளைப்பாருவார்களாக!
ஆமென்.
இறந்த விசுவாசிகள் அனைவரும் உமது இரக்கத்தினால் நிலைவாழ்வையும் பேரின்ப ஒளியையும் பெறுவார்களாக.
ஆமென்.
எளிய வாழ்வாலும் தாழ்ச்சி நிறைப் பண்பாலும் கிறிஸ்துவைப் போல் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அசிசியாரே! ஐந்து காய வரம் பெற்ற அண்ணலே! குறையாத மகிழ்ச்சி, குன்றாத மன சுதந்திரம், மெய்யான மன நிறைவு என்ற பண்புகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தீரே! கிறிஸ்துவின் மீது உயிருக்குயிரான அன்பும், ஆழமான உறவும் கொண்டு விளங்கினீரே!
உம் வீட்டையும் உரிமைச் சொத்தையும் துறந்து ஏழ்மையை அணிந்து கொண்டீரே! வறுமையை உம் கோமகளாகத் தேர்ந்து கொண்டீரே! நற்செய்தி வாழ்க்கை முறையும், இயேசுவின் சாயலும் உம்மிடம் துலங்கி ஒளி வீசியதைப் போல, வேறு எவரிடமும் எக்காலத்திலும் விளங்கியது இல்லை என்ற உம் தனிப்பெருமையை எண்ணி வியக்கிறோம். மாமன்னருக்குக் கட்டியம் கூறுபவர் என்றும், மறு கிறிஸ்து என்றும் உம்மை மகிழ்ச்சியுடன் போற்றுகிறோம். இறைவனே உம்மைத் தம்மவராக்கிக் கொண்டதால், நீர் இறைவனின் திருமுன் வலிமைமிக்க புனிதராய்த் துலங்குகின்றீர்.
பக்திசுவாலகத் தந்தையே! உம்மைப் போல, கிறிஸ்துவின் மறைபொருளை எங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்ந்திட கற்றுத் தாரும். உம்மிடம் விளங்கிய இறையன்பு, நற்செய்தியைப் போதிக்கும் ஆர்வம், இயற்கையோடு இணைந்த வாழ்வு, எம்மிடமும் வளரச் செய்தருளும். இதனால் நிறை மகிழ்ச்சியோடு நாங்களும் அனைவரின் மீட்புக்காக உழைக்க எங்களுக்காக மன்றாடும். ஆமென்!
இறைவா, உமது சமாதானத்தின் கருவியாக என்னை ஆக்கியருளும்.
எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்;
எங்கு மனவருத்தம் உள்ளதோ, அங்கு மன்னிப்பையும்;
எங்கு சந்தேகம் உள்ளதோ, அங்கு நம்பிக்கையையும்;
எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்;
எங்கு துன்பம் உள்ளதோ, அங்கு இன்பத்தையும்
நான் பரப்ப அருள்தாரும்.
நான் என் ஆறுதலுக்காக அலைவதை விட்டு, ஆறுதலைக் கொடுக்கவும்,
என்னை மற்றோர் புரிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு, மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும்,
என்னை மற்றவர்கள் நேசிக்க வேண்டும் என்று தவிப்பதை விட்டு, மற்றவர்களை நேசிக்கவும் முற்படுவேனாக.
ஏனெனில் கொடுப்பதன் மூலம் தான் பெற்றுக்கொள்ளமுடியும்.
மன்னிப்பதன் மூலம் தான் மன்னிப்படைய முடியும்.
இறப்பதின் மூலம் தான் முடிவில்லாத வாழ்விற்குப் பிறக்க முடியும் ஆமென்.
கொல்கத்தாவின் புகழ்பெற்ற புனித அன்னை தெரேசாவே!
இறைவன் மீதுள்ள ஆழ்ந்த அன்பினால், நீர் வறுமையில் கிறிஸ்துவைப் பின்பற்றி, தொண்டாற்றும் வாழ்வு வாழ்ந்து, அனைவருக்கும், குறிப்பாக ஏழை எளியோருக்கு ஒரு நல்ல சமாரியனாக மாறினீர். உமது இரக்கமுள்ள பார்வையும், அன்பான கைகளும் தாழ்நிலையிலிருந்த இறைவனின் மக்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தழுவி, அவர்களுக்குச் சிறந்த பராமரிப்பையும், தரமான வாழ்வையும் வழங்கியது. அசாதாரண அன்பால் நிரப்பப்பட்ட உமது சாதாரண தொடுதல் கோடிக் கணக்கான இதயங்களை மாற்றியது. பல்வேறு பிரச்சனைகளால் துன்புறும் அனைவர் மீதும் உமது இரக்கமுள்ள பார்வை பட்டு, உமது பரிந்துரையால் எங்களுக்கு இறைவனின் ஆறுதலையும் பாதுகாப்பையும் பெற்றுத் தந்தருளும். நாங்கள் அவரை முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் அன்பு செய்யவும், எங்கள் சகோதர சகோதரிகள் வழியாக அவருக்குத் தொண்டாற்றி, அவருக்கு உகந்தக் காணிக்கையாக மாறச் செய்தருளும் இதோ, இப்போது நாங்கள் கேட்கும் விண்ணப்பங்களை இறைவனின் இரக்கத்தால் பெற்றுத் தாரும்.
(சிறிது நேரம் மௌனமாக நம் தேவைகளுக்காக மன்றாடுவோம்)
இவ்வுலகில் உமது இறைப்பற்றையும், தொண்டாற்றலையும், இறைவன் மீது நீர் கொண்டுள்ள நிறைவான நம்பிக்கையையும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து, உம்மோடு விண்ணுலக வாழ்வின் கிரீடத்தைப் பகிர்ந்து கொள்ள எங்களுக்காக இறைவனை மன்றாடும். ஆமென்.
புதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோனியாரே!
எங்கள் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும். குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற புனித அந்தோணியாரே, துன்பப்படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே, ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம். நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி, எம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வேண்டிய வரங்களைப் பெற்றுத்தாரும். இறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோனியாரே, நாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் வந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும். எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, மகிமையில் விளங்கிடும் புனித லீலியே, துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே, அழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும். எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும். நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால் எங்களிடமிருந்து நீக்கியருளும். ஆமென்.
இயேசுவின் திரு இருதயமே,
எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
மரியாயின் மாசற்ற இருதயமே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சூசையப்பரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,
புனித அந்தோனியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவின் திரு இருதயமே!
கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவரேனும் உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தப்பியருக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே!
சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, உமது விசாரணையில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், அவர்களுடைய திரு இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க உம்மை மன்றாடுகிறோம் .
திவ்விய இயேசுவே!
முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். ஆமென்
முதல்வர்: இயேசுவின் திரு இருதயமே
பதில்: என் நம்பிக்கையெல்லாம் உமது பேரில் வைக்கிறேன்
முதல்வர்: இயேசுவின் திரு இருதயமே
பதில்: என் நம்பிக்கையெல்லாம் உமது பேரில் வைக்கிறேன்
முதல்வர்: இயேசுவின் திரு இருதயமே
பதில்: என் நம்பிக்கையெல்லாம் உமது பேரில் வைக்கிறேன்