தொடக்கப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
தொடக்கச் செபம்:
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
முத: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும், கடவுளுமானவர் போற்றப் பெறுவாராக. அவர் இரக்கம் நிறைந்தத் தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றானக் கடவுள். அவரே நமக்கு எல்லா வகையான துன்பத்திலும், துயரத்திலும், வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு, நாம் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆறுதலால் எத்தகைய வேதனையில் இருப்போருக்கும் நாமும் ஆறுதல் அளிக்க முடியும்.
எல்: ஆண்டவர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக!
முத: அன்புமிக்க சகோதர சகோதரிகளே, இறந்து போன _____________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் உற்றார் உறவினர்களே, நண்பர்களே, நம்மை விட்டுப் பிரிந்து, தன்னைப் படைத்தக் கடவுளிடம் திருப்பயணம் மேற்கொண்டிருக்கும் நம் ___________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்காக செபிக்க நாம் கூடியிருக்கிறோம். தனது உலக வாழ்வில் அவர் கொண்டிருந்த விசுவாசம், அவருக்குப் புனிதரின் கூட்டத்திலும் இடமளிக்கத் துணை புரிவதாக. "ஆண்டவரிடம் பற்றுறுதி கொள். அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து. அவரிடம் நம்பிக்கை கொள்" என்று சீராக் (2:6) நூல் கூறுவது போல, நமது நம்பிக்கையும் செபமும் இவருடைய பாவங்களுக்கு மன்னிப்பையும், இறைவனின் இரக்கத்தையும் பெற்றுத் தரவும், நாமும் நேரிய உள்ளத்தோடு வாழ்ந்து, விண்ணக வாழ்வைப் பெற்றுக் கொள்ளவும், நாம் ஒருவர் ஒருவருக்காக செபிப்போம். "நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன்" என்று யோவான் (12:32) நற்செய்தி வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறியது போலவே, அவர் இறந்த மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். அதுபோலவே இவரும் உயிர்த்தெழ, இவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு இறைவனிடம் ஈர்த்துக் கொள்ளப்படவும் நாம் செபிப்போம். "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11:21) என்று கண்ணீரோடும் துயரத்தோடும் கூறிய மரியாவைப் போல, இவரது பிரிவால் வேதனையோடு இங்கு கூடியிருக்கின்ற இக்குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இறைவன் தனது அளவற்ற அன்பாலும், மிகுதியான இரக்கத்தாலும் ஆறுதல் தரும்படி இந்நேரத்தில் சிறப்பாக மன்றாடுவோம்.
எல்: ஆமென்.
(இப்போது செபமாலை அல்லது இறை இரக்க செபம், அதனைத் தொடர்ந்து (நேரம் இருந்தால்) இறந்தோருக்கான மன்றாட்டு மாலையையும் செபிக்கவும்)
முத: மன்றாடுவோமாக! ஆண்டவரே, அளவில்லாத வேதனையில் உம்மைக் கூவி அழைக்கிறோம். உமது திருவுளப்படி இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற உமது அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மாவை ஒளியும் அமைதியும் நிறைந்த இடத்திற்கு வரவேற்றருளும். புனிதர்களின் தோழமையில் இவருக்கு இடமளித்தருளும். "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவான் 11:25) என்று சொன்ன நீர், இவருடையக் குற்றங்களை மன்னித்து, இவருக்கு உமது உயிர்ப்பிலும் பங்கு அளித்தருளும். இவரது பிரிவு எங்களுக்குத் துயர் மிக்கதாக இருந்தாலும், இவருக்கு நீர் தரப்போகும் மகிமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீரே அனைவரையும் மீட்க மனுவுரு எடுத்தீர். உமது மனுவுருவும், பாடுகளும், இறப்பும், இவருக்கு உமது உயிர்ப்பிலும் இடமளிப்பதாக. இவரது குடும்பத்தாரும், நீர் இவருக்குத் தரவிருக்கும் நிலைவாழ்வில் ஆறுதல் பெற்று உமது அன்பையும் ஆதரவையும் என்றும் பெற்றுக் கொள்வார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
இறைவார்த்தை:
முதல் வாசகம்: சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம். (3 : 1 – 6, 9)
நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடும் தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெரும் துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்த பின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார். எரிபலி போல் அவர்களை ஏற்றுக் கொண்டார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்து கொள்வர். அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
நற்செய்தி வாசகம்:
லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். (7 : 11 – 15)
அக்காலத்தில், இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெரும் திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்த போது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன். அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெரும் திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர் மீது பரிவு கொண்டு, "அழாதீர்" என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு:
முத: இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, உயிர்த்த இயேசு தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்து, நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவரில் நம்பிக்கை கொண்டிருக்கும் நம் அனைவரின் குரலையும் கேட்கும் தயவுள்ளவர் நம் விண்ணகத் தந்தை. இப்போது நாம் நம் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிப்போம்.
பதில் : எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, இறந்து போன உமது அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்கள், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவின் ஒளியைப் பெற்று, அவருடையத் திருவிருந்திலும் பங்கு கொண்டார். இருளை அகற்றி அவருக்கு ஒளி கொடுக்கும் விண்ணக மகிமைக்கு இவரை அழைத்துச் செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, சிலுவையைச் சுமந்து, இரத்தம் சிந்தி, மனித மீட்புக்குக் காரணமாக இருந்த உமது திருமகனின் இறப்பினால், இவர் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, எங்களை விட்டுப் பரிந்து சென்ற எங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் உமது நிலைவாழ்வை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, போரினாலும், இயற்கைப் பேரிடர்களாலும், தொற்றுநோய்களாலும், வன்முறைப் போராட்டங்களினாலும் இறந்து போன அனைவருக்கும் உமது விண்ணக வாழ்வையும் அமைதியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, இறந்து போன உமது அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இவருடைய இறப்பால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு ஈடாக உமது அன்பையும் ஆறுதலையும் அளித்து, இவர்கள் அனைவரும் இத்துயரிலிருந்து விரைவில் மீளத் துணை புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, இறந்து போன உமது அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்காகச் செபிக்கக் கூடியிருக்கும் எங்கள்
அனைவரின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தி, உமது திரு மகனின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கச் செய்ய எங்களுக்கு வலிமை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, இறந்து போன அனைத்து ஆன்மாக்களும், குறிப்பாக, யாரும் நினையாத ஆன்மாக்களும், உத்தரிக்கும் தலத்திலிருக்கும் ஆன்மாக்களும், உமது இரக்கத்தால் நித்திய இளைப்பாற்றியை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: நாம் அனைவரும் இறந்து போன _______________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியை அடைய, நம் இயேசு கிறிஸ்து கற்பித்தபடி மன்றாடுவோம். தொடர்ந்து நம் அன்னை மரியாவின் பரிந்துரையையும் நாடுவோம்.
(1 கர்த்தர் கற்பித்த செபம், 3 அருள், 1 மூவொரு இறை புகழ் சொல்லவும்)
இறுதிச் செபம்:
முத: மன்றாடுவோமாக! இரக்கம் மிகுந்தத் தந்தையே, ஆறுதலின் தெய்வமே, உமது திருமகன் வழியாக நீரே எங்களை மீட்டுக் கொண்டீர். எங்களை விட்டுப் பிரிந்து சென்ற உம் அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மாவை உம்மிடம் ஒப்படைக்கிறோம். நீரே இவரைத் திருமுழுக்கு வழியாக உமது பிள்ளையாக்கிக் கொண்டீர். உமது திருமகனின் உடலாலும் இரத்தத்தாலும் இவருக்கு அருள் வளம் ஈந்தீர். இதோ, இவரின் இறுதி வேளையிலும் நீரே உடனிருந்து, உமது விண்ணக வீட்டிலும் இவருக்கு இடமளித்தருளும். அதற்குத் தடையாக இருக்கும் இவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும். இவர் வாழ்ந்த வாழ்வையும், இவர் செய்த சாதனைகளையும், இவருடைய விசுவாசத்தையும், இவர் அனுபவித்த நன்மை தீமைகளையும் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இவ்வேளையிலே, உமது இரக்கம் நிறைந்த அன்புப் பார்வை இவருக்குக் கிடைத்து, உமது திருமுக ஒளியைப் பெற்றுக் கொள்வாராக. இவரைப் பிரிந்து துன்பத்தில் வாழும் அனைவரையும் தேற்றியருளும். உமது திருமகன், எங்கள் இறப்பை தமது இறப்பால் அழித்து, தமது உயிர்ப்பினால் மீண்டும் எங்களுக்கு நிலையான வாழ்வைப் பெற்றுத் தந்தார். ஆதலால், எங்கள் கண்ணீர் எல்லாம் துடைக்கப்பட்டு, உலக முடிவில் நாங்களும் உம்மிடம் வந்து சேர அருள் தாரும். உம்மோடு, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய், என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
முத: நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும், ஆண்டவரே!
எல்: முடிவில்லாத ஒளி இவர் மேல் ஒளிர்வதாக!
முத: இறந்து போன ______________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மாவும், இறந்த அனைத்து விசுவாசிகளின் ஆன்மாக்களும் இறைவனின் இரக்கத்தால் நித்திய இளைப்பாற்றி அடைவார்களாக.
எல்: ஆமென்.
இறுதிப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும், ஆண்டவரே...
முடிவில்லாத ஒளி இவர் மேல் ஒளிர்வதாக...