இந்தச் சடங்குமுறையானது ஒரு அருள்பணியாளர் (குருவானவர்) ஒருவரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். குரு அல்லாத தனி நபர் எவரும் நடத்த அனுமதி இல்லை. ஆலயத் திருப்பலிக்காக இறந்தவரின் உடலைக் கொண்டு செல்லும் முன்னர் இது செய்யப்படும்.
தொடக்கப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
அப: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
அப: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை, இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று, அவரைப் போற்றுவோம்.
(தீர்த்தம் தெளித்தபின், 130ம் திருப்பாடலை வாசிக்கவும்)
பதிலுரைப்பாடல்: (திருப்பாடல் 130)
அப: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
முத: ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
முத: ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர், மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பவர்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
முத: ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கிறேன், என் நெஞ்சம் காத்திருக்கின்றது, அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
முத: விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, ஆம்,விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞசம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
முத: இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு. பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலை மீட்பவர் அவரே.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: மன்றாடுவோமாக.
ஆண்டவரே, உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடும் எங்களுக்குச் செவிசாய்த்தருளும். உமது கட்டளைப்படி இவ்வுலகை விட்டுச் சென்ற உம் அடியார் _____________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மாவை உமது அமைதியும் ஒளியும் நிறைந்த இடத்தில் வரவேற்று, உம் புனிதர்களுடையத் தோழமையில் சேர்த்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
இறுதிப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும், ஆண்டவரே...
முடிவில்லாத ஒளி இவர் மேல் ஒளிர்வதாக...