முதல் வாசகம்:
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம். (3 : 1 – 9)
நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடும் தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெரும் துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்ட பின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்த பின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார், எரிபலி போல் அவர்களை ஏற்றுக் கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்க வரும் போது அவர்கள் ஒளிவீசுவார்கள், அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள், நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள், மக்கள் மீது ஆட்சி செலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர். அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 23 : 1 – 3, 4, 5, 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன். உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடை சூழ்ந்து வரும். நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
இரண்டாம் வாசகம்:
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். (6 : 3 – 9)
சகோதரர் சகோதரிகளே,
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனி மேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனி மேல் இறக்க மாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (மத்தேயு 25 : 34)
அல்லேலூயா, அல்லேலூயா! என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். (5 : 24 – 29)
அக்காலத்தில்,
இயேசு யூதர்களுக்கு அளித்த மறுமொழி: "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள். ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்து விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது. ஏன், வந்தேவிட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர், அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். அவர் மானிட மகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம்
வருகிறது. அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர் தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்."
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
முதல் வாசகம்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். (25 : 6 – 9)
அந்நாளில் படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார். பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார். என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார். தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றி விடுவார். ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: "இவரே நம் கடவுள். இவருக்கென்றே நாம் காத்திருந்தோம். இவர் நம்மை விடுவிப்பார். இவரே ஆண்டவர், இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்."
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 130 : 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 (பல்லவி: 1)
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர் மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு. பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
இரண்டாம் வாசகம்:
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம். (2 : 8 – 13)
அன்பிற்குரியவர்களே,
தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள்ளுங்கள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால், கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும், அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும், கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: "நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம். அவரோடு நிலைத்து
இருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவர் எனினும், அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது." இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (2 திமொத்தேயு 25 : 11 – 12)
அல்லேலூயா, அல்லேலூயா! நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம். அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். (11 : 32 – 45)
அக்காலத்தில்,
இயேசு இருந்த இடத்திற்கு இலாசரின் சகோதரி மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளம் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள். இலாசர் மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், "பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இயேசு இவரைச் சாகாமல் இருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. "கல்லை அகற்றி விடுங்கள்" என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே!" என்றார். இயேசு அவரிடம், "நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?" என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்" என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
முதல் வாசகம்:
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம். (12 : 1 – 3)
அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராதத் துன்பக் காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப் பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர். வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண் மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 103 : 8, 10, 13 – 14, 15 – 16, 17 – 18 (பல்லவி: 8)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். நீடியப் பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை.
நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். அவர் நமது உருவத்தை அறிவார். நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது. வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன் மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது. அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர் மீது என்றென்றும் இருக்கும். அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும் இருக்கும்.
அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து, அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
இரண்டாம் வாசகம்:
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூல். (21 : 1 – 7)
யோவானாகிய நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்து விட்டன. கடலும் இல்லாமல் போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப் போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடிருப்பார். அவரே அவர்களுடையக் கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது. முன்பு இருந்தவை எல்லாம் மறைந்து விட்டன" என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார். "அகரமும் னகரமும் நானே. தொடக்கமும் முடிவும் நானே. தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன். வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப் பேறாகப் பெறுவர். நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள்."
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (யோவான் 6 : 51 – 52)
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
தூய லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். (12 : 35 – 40)
அக்காலத்தில்,
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: 'உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டு இருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும் போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும், மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாய் இருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள் ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்."
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
முதல் வாசகம்:
புலம்பல் நூலிலிருந்து வாசகம். (3 : 17 – 26)
அமைதியை நான் இழக்கச் செய்தீர். நலமென்பதையே நான் மறந்து விட்டேன்! 'என் வலிமையும் ஆண்டவர் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்து போயின!" என்று நான் சொல்லிக் கொண்டேன். என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்! அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது! இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன். எனவே நான் நம்பிக்கை கொள்கிறேன். 'ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!" 'ஆண்டவரே என் பங்கு" என்று என் மனம் சொல்கின்றது! எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 116 : 5 – 6இ 10 – 11இ 15 – 16 (பல்லவி: 9)
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர். நம் கடவுள் இரக்கம் உள்ளவர். எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார். நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
"மிகவும் துன்புறுகிறேன்!" என்று சொன்ன போதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். "எந்த மனிதரையும் நம்பலாகாது" என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன். நான் உம் பணியாள், உம் அடியாளின் மகன். என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர் மீது என்றென்றும் இருக்கும். அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும் இருக்கும். அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து, அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
இரண்டாம் வாசகம்:
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். (4 : 13 – 18)
சகோதரர் சகோதரிகளே,
இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும் வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம். கட்டளைப் பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார். அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு
எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (திருவெளிப்பாடு 14 : 13)
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர். அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள். ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
தூய மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். (11 : 25 – 30)
அக்காலத்தில்,
இயேசு, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது" என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.