தொடக்கப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
தொடக்கச் செபம்:
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
முத: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும், கடவுளுமானவர் போற்றப் பெறுவாராக. அவர் இரக்கம் நிறைந்தத் தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றானக் கடவுள். அவரே நமக்கு எல்லா வகையான துன்பத்திலும், துயரத்திலும், வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு, நாம் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆறுதலால் எத்தகைய வேதனையில் இருப்போருக்கும் நாமும் ஆறுதல் அளிக்க முடியும்.
எல்: ஆண்டவர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக!
முத: அன்புமிக்க சகோதர சகோதரிகளே, விண்ணகத் தந்தையின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தப் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் விசுவாசத்தில் ஒன்றுபட்ட மனம் உள்ளவர்களாக இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். நம்மை விட்டுப் பிரிந்து, இன்று நம் விண்ணகத் தந்தையிடம் சென்றிருக்கின்ற ___________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்கும் இதே விசுவாசம் இருந்தது என்பதாலும், இவருக்கு இந்நேரத்தில் கடவுளின் பரிவும் இரக்கமும் தேவை என்பதாலும், இவருக்காகச் செபிக்க நாம் ஒன்று கூடியிருக்கிறோம். "ஆண்டவர் கொல்கின்றார், உயிரும் தருகின்றார். நம்மைப் பாதாளத்தில் தள்ளுகின்றார், உயர்த்துகின்றார்" (1 சாமுவேல் 2:6) என்று செபிக்கின்ற அன்னாளைப் போல நாமும் செபிப்போம். இறந்து போன இவரை இவ்வுலகிற்குக் கொடுத்ததும் அவரே, இவ்வுலகில் இவரை வாழ வைத்ததும் அவரே, இன்று இவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டதும் அவரே. இவருடையப் பாவங்களை மன்னித்து, இவரை நரக நெருப்பிலிருந்து மீட்டு, உத்தரிக்கும் தலத்திலிருக்கும் தண்டனையைக் குறைத்து, நிலையான நிறைவாழ்வை அருளுமாறு உருக்கமாக மன்றாடுவோம். "நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு வந்தேன். அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்தேன்" (யோவான் 10:10) என்று கூறிய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பாடுகள் பட்டு, இரத்தம் சிந்தி, சிலுவையிலே மரித்தது, இவரும் வாழ்வை மிகுதியாய் பெற வேண்டும் என்பதற்காகவே. இவர் இயேசுவில் கொண்டிருந்த விசுவாசம் இவருக்கு நிலையான நிறைவாழ்வைப் பெற்றுத் தருவதாக. "எனவே, அஞ்சாதிருங்கள்" (மத்தேயு 10:31) என்று நமக்குச் சொல்லும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இதோ, இவரை இழந்து துயறுற்றுத் தவிக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலாக இருந்து, இவர்களின் கண்ணீரைத் துடைக்கிறார் என்ற நம்பிக்கையோடு மன்றாடுவோம். இவர் உயிரோடிருந்தக் காலத்தில், இவரால் பல நன்மைகளைப் பெற்றுக் கொண்ட நாம் அனைவரும், இந்த நேரத்தில் இவருக்காக நன்றியோடு மன்றாடுவோம். இரக்கம் நிறைந்த இறைவன் தமது அன்பாலும், அருளாலும், வல்லமையாலும் "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என நான் உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" (லூக்கா 10:31) என்று இவருக்கு கட்டளை இடுவாராக.
எல்: ஆமென்.
(இப்போது செபமாலை அல்லது இறை இரக்க செபம், அதனைத் தொடர்ந்து (நேரம் இருந்தால்) இறந்தோருக்கான மன்றாட்டு மாலையையும் செபிக்கவும்)
முத: மன்றாடுவோமாக! இரக்கம் நிறைந்த இறைவா, மன்னிப்பு அருள்பவர் நீரே. ஊதாரியான மகனை மன்னித்தத் தந்தையின் அன்பு உம்முடைய அன்பு. காணமல் போன ஆட்டினைத் தேடிக் கண்டடைந்தப் பாசம் உம்முடையப் பாசம். இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற உமது அடியார் _______________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் தகுதியின்மையையும், எங்களின் தகுதியின்மையையும் பாராமல், நாங்கள் நம்பிக்கையோடு உமக்குக் காட்டும் விசுவாசத்தை மட்டும் கண்ணோக்கி, இப்போது இவருக்கு இரக்கம் காட்டுவீராக. இவ்வுலக வாழ்வில் உம்மையே நம்பி வாழ்ந்த இவரைக் கைவிடாதேயும். உமது இரக்க மிகுதியால் இவரை மீட்டருளும். உயிர்ப்பும் உயிரும் நீரே என்பதை நாங்கள் முழுமையாக விசுவசிக்கிறோம். இவருக்குப் புனிதர்களின் தோழமையில் பங்களித்து மகிமைப்படுத்துவீராக. உம்மால் இவருக்குக் கிடைக்கும் மகிமையால் இவரைப் பிரிந்து துயருறும் இவருடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஆறுதல் அடைவார்களாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
இறைவார்த்தை:
முதல் வாசகம்: இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம். (12 : 1 – 3)
அக்காலத்தில், உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராதத் துன்பக் காலம் வரும். அக்காலத்தில், உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார்யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ. அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகின்ற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர், வேறு சிலரோ வெட்கத்திற்கும், முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
நற்செய்தி வாசகம்:
யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். (12 : 23 – 26)
அக்காலத்தில், இயேசு மக்களைப் பார்த்து, "மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்றார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு:
முத: இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28) என்று சொன்ன நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக நம் மன்றாட்டுக்களை நம் விண்ணகத் தந்தையிடம் நம்பிக்கையுடன் சமர்ப்பிப்போம்.
பதில்: கருணையின் தேவனே, தயவாய் அருள் புரிந்தருளும்.
முத: இறைவா, உயிரும் உயிர்ப்புமான உம் திருமகனின் பெயரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்ட உமது அடியார் ____________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்கு மறுஉலகிலும் இடமளித்திட வேண்டுமென்று மன்றாடும் எங்களுக்கு...
எல்: இரக்கத்தின் இறைவனே! தயவாய் அருள் புரிந்தருளும்.
முத: இறைவா, இறந்த இலாசரை உயிர்பெற்று எழச் செய்த உம் திருமகனின் உடலை உண்டு, இவரில் இணைந்து வாழ்ந்த இவருக்கு, அவரது உயிர்ப்பிலும் பங்களிக்க வேண்டுமென்று மன்றாடும் எங்களுக்கு...
எல்: இரக்கத்தின் இறைவனே! தயவாய் அருள் புரிந்தருளும்.
முத: இறைவா, பாவத்தை வெல்லச் சிலுவையில் தன் உயிரைக் கொடுத்த இயேசு கிறிஸ்துவில் இவர் கொண்டிருந்த விசுவாசம், இவருக்கு உமது மீட்பைப் பெற்றுத் தர வேண்டுமென்று மன்றாடும் எங்களுக்கு...
எல்: இரக்கத்தின் இறைவனே! தயவாய் அருள் புரிந்தருளும்.
முத: இறைவா, ஏழை விதவையின் கண்ணீரைத் துடைத்த உம் திருமகனின் ஆறுதலும், ஆதரவும், அரவணைப்பும், பாதுகாப்பும், உதவியும், இவரை
இழந்து வருந்தும் உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று மன்றாடும் எங்களுக்கு...
எல்: இரக்கத்தின் இறைவனே! தயவாய் அருள் புரிந்தருளும்.
முத: இறைவா, எங்களது குடும்பத்தில் மரித்த அனைத்து ஆன்மாக்களும், யாரும் நினையாத ஆன்மாக்களும், மற்ற அனைத்து ஆன்மாக்களும், உம் புனிதர்களோடும், வானகத் தூதர்களோடும் விண்ணக மகிமையில் பங்கு பெற வேண்டுமென்று மன்றாடும் எங்களுக்கு...
எல்: இரக்கத்தின் இறைவனே! தயவாய் அருள் புரிந்தருளும்.
முத: இறைவா, இறந்து போன உமது அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்காகச் செபிக்கக் கூடியிருக்கும் எங்கள் அனைவரின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தி, உமது திரு மகனின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கச் செய்ய எங்களுக்கு வலிமை அளித்திட வேண்டுமென்று மன்றாடும் எங்களுக்கு...
எல்: இரக்கத்தின் இறைவனே! தயவாய் அருள் புரிந்தருளும்.
முத: இறைவா, எங்கள் நாட்டில் நடந்த பல கலவரங்களிலும், விபத்துக்களிலும், இயற்கைப் பேரிடர்களிலும் மரணத்தைத் தழுவிய அனைவருக்கும் உமது இரக்கத்தைக் காட்ட வேண்டுமென்று மன்றாடும் எங்களுக்கு...
எல்: இரக்கத்தின் இறைவனே! தயவாய் அருள் புரிந்தருளும்.
முத: நாம் அனைவரும் இறந்து போன _______________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியை அடைய, நம் இயேசு கிறிஸ்து கற்பித்தபடி மன்றாடுவோம். தொடர்ந்து நம் அன்னை மரியாவின் பரிந்துரையையும் நாடுவோம்.
(1 கர்த்தர் கற்பித்த செபம், 3 அருள், 1 மூவொரு இறை புகழ் சொல்லவும்)
இறுதிச் செபம்:
முத: மன்றாடுவோமாக! ஆறுதல் அளிக்கும் இறைவா, கருணையும் அன்பும் கொண்ட நீர், மனுக்குலம் மீட்புப் பெற உமது ஒரே திருமகன் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினீர். அவர் எங்களுக்காகத் தன்னையே இழந்து, மனித இயல்பை ஏற்று, பாடுகள் பல பட்டு, சிலுவையில் தமது விலை மதிப்பில்லாத இரத்தத்தைச் சிந்தி, மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர் சாவை வென்று எங்களுக்குப் பெற்றுக் கொடுத்தப் புதுவாழ்வை, எங்களை விட்டுப் பிரிந்து சென்ற உம் அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களும் உமது தயவால் பெற்றுக் கொள்வாராக. அமைதியும் ஒளியும் நிறைந்த இடம் இவருக்குக் கிடைக்க, இவருடையப் பாவங்கள் அனைத்தையும் நீர் மன்னித்தருளும். உமது மீட்புத் துணை பொங்கி வழியட்டும். "நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன்" (கலாத்தியர் 6:14) என்ற புனித பவுலின் வார்த்தைகளைப் போல, இயேசு கிறிஸ்துவின் சிலுவை இவருக்கு வெற்றியின் பெருமையை அளிப்பதாக. எங்களது அன்றாடச் சிலுவைகளைச் சுமந்து கொண்டு உம்மை நோக்கி வரும் எங்கள் அனைவரையும் இரக்கத்துடன் கண்ணோக்கியருளும். குறிப்பாக, இவருடைய மரணத்தால் ஏற்பட்டுள்ள பேரிழப்புகளைத் தாங்கும் சக்தியை இவருடைய குடும்பத்தாருக்குத் தந்தருளும். உம்மை நம்பி வந்தவர்களைக் என்றும் கைவிடாதவர் நீர். உமது நிலைவாழ்வை நோக்கியப் பயணத்தைத் தொடங்கி உள்ள உம் அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்கு முடிவில்லாதப் பேரின்ப வாழ்வை அளித்தருளும். அதே தகுதியை எங்களுக்கும், உம்மை விசுவசித்து உம் வழியில் வாழும் அனைவருக்கும் தந்தரும். உம்மோடு, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய், என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
முத: நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும், ஆண்டவரே!
எல்:முடிவில்லாத ஒளி இவர் மேல் ஒளிர்வதாக!
முத: இறந்து போன ______________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மாவும், இறந்த அனைத்து விசுவாசிகளின் ஆன்மாக்களும் இறைவனின் இரக்கத்தால் நித்திய இளைப்பாற்றி அடைவார்களாக.
எல்: ஆமென்.
இறுதிப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும், ஆண்டவரே...
முடிவில்லாத ஒளி இவர் மேல் ஒளிர்வதாக...