இன்று மனுக்குலம் முழுவதையும், சிறப்பாகப் பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டி வந்து, என் இரக்கக் கடலில் முழ்க வை. இதன் வழியாக ஆன்மாக்களின் இழப்பினால் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு நீ ஆறுதலளிப்பாய்.
மனுக்குலம் முழுவதும் குப்பாகப் பாவிகள் இறைவனின் இரக்கத்தை அடைய வேண்டுமென்று மன்றாடுவோமாக.
இரக்கம் நிறைந்த இயேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே! எங்கள் பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதயத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரையும் அதிலிருந்து பிரிந்து போக விடாதேயும். தந்தையோடும் தூய ஆவியாரோடும் மூவொரு இறைவனாய் உம்மை ஒன்றிக்கும் உமது அன்பின் பெயரால் உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம். ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! உமது அன்புத் திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்தப் பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். நாங்கள் எல்லாம் வல்ல உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. ஆமென்.
இன்று குருக்கள், கன்னியர், துறவியர் அனைவரின் ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து, ஆழம் காண முடியாத எனது இரக்கத்தில் முழ்க விடு. எனது கசப்பானப் பாடுகளை நான் சகித்துக் கொள்ள எனக்கு வல்லமை அளித்தவர்கள் இவர்கள். வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக எனது இரக்கம் மனுக்குலத்தின் மேல் பாய்கிறது.
இறைவனின் இரக்கம் மனுக்குலத்தின் மீது பெருகுவதற்கு வழியாக இருக்கும் குருக்கள், கன்னியர், துறவியர் அனைவருக்காவும் மன்றாடுவோமாக.
இரக்கம் மிகுந்த இயேசுவே! உம்மிடமிருந்தே எல்லா நன்மையும் வருகின்றன. குருக்கள், கன்னியர், துறவியர் அனைவரின் ஆன்மாக்களில் உமது அருள்கொடைகள் பெருகச் செய்யும். அதனால், அவர்கள் தமது பணிகளை தக்க விதத்தில், பயன் தரக்கூடிய விதத்தில் நிறைவேற்றித் தமது சொல்லாலும் செயலாலும் அனைவரையும் இறை இரக்கத்தில் இறைப்பற்று கொள்ளச் செய்வார்களாக. ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! உமது திராட்சைத் தோட்டத்திற்கென நீர் தெரிந்தெடுத்துள்ள உமது குருக்கள், கன்னியர், துறவியர் அனைவரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது அன்புத் திரு மகனின் சிறப்பான அன்புக்குப் பாத்திரமான இவர்களை உமது ஆசீரால் உறுதிப்படுத்திப் பிறரை மீட்பின் பாதையில் வழிநடத்தும் ஞானத்தையும், உமது இரக்கத்தை நோக்கி அவர்களை ஈர்க்கின்ற வல்லமையையும் இவர்களுக்கு அளித்தருளும். ஆமென்.
இன்று உம் மீது இறைப்பற்று கொண்டுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்து வந்து, என் இரக்கக் கடலில் முழ்க வை. என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தார்கள். கசப்பானத் துயரக் கடலின் நடுவில் எனக்குக் கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்களே!
இறைப்பற்று கொண்டுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்காகவும் மன்றாடுவோமாக.
இரக்கம் மிகுந்த இயேசுவே! உமது இரக்கக் கருவூலத்திலிருந்து எல்லாருக்கும் உமது அருளை ஏராளமாகப் பொழிகின்றீர். இரக்கத்தின் இருப்பிடமாகிய உமது இதயத்தினுள் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஏற்றருளும். அங்கிருந்து அவர்களுள் ஒருவரும் பிரிந்து போகவிடாதேயும். தந்தையோடும் தூய ஆவியாரோடும் உம்மை ஒன்றிக்கும் உமது அன்பின் பெயரால் உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம். ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! உமது அன்புத் திரு மகனின் வாரிசுகளாகிய விசுவாசிகள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம் நிறைந்த அவரது திருப்பாடுகளின் பெயரால் இவர்களுக்கு உமது ஆசிரை வழங்கி, உமது இடைவிடாதப் பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக் கொள்ளும். இதனால் அவர்கள் உம் மீது கொண்ட அன்பையும், தமது விசுவாசத்தையும் ஒருபோதும் இழக்காமல் வானதூதர், புனிதர் அனைவருடன் உமது எல்லையில்லா இரக்கத்தை என்றென்றும் மாட்சிப்படுத்துவார்களாக. ஆமென்.
இன்று என்னை விசுவசியாதவர்களையும், இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் அழைத்து வா. எனது கசப்பான பாடுகளின் போது இவர்களையும் நினைத்துக் கொண்டேன். என்னை அறிய வேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தது. என் இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர்களை முழ்க விடு.
இறைவனின் இரக்கத்தை இன்னும் அறியாத மக்கள் அனைவருக்காகவும் மன்றாடுவோமாக.
இரக்கம் மிகுந்த இயேசுவே! நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத மக்களை, இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது அருள்கதிர்கள் இவர்களுக்கு ஒளியூட்ட இவர்களும் எம்மோடு இணைந்து என்றென்றும் உமது அற்புதமான இரக்கத்தைப் போற்றுவார்களாக. ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! உமது அன்புத் திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்தை விசுவசியாதவர்கள் மீதும், இன்னும் அறியாத மக்கள் மீதும் கருணைக் கண்நோக்கியருளும். இவர்களை நற்செய்தியின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை அன்பு செய்வது எத்துணை இன்பம் என்பதை இவர்கள் உணர்ந்து, இவர்களும் உமது இரக்கத்தை ஊழி ஊழி காலமும் போற்ற வரமருளும். ஆமென்.
இன்று பிரிந்து போன சகோதர சகோதரிகளின் ஆன்மாக்களைக் கொண்டு வந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. என் கசப்பான பாடுகளின் போது எனது உடலையும், உள்ளத்தையும் இவர்கள் கிழித்தவர்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக என் பாடுகளின் அகோரத்தை இவர்கள் தணிப்பார்கள்.
விசுவாசத்தில் தவறும் அனைவருக்காகவும் மன்றாடுவோமாக.
இரக்கம் மிகுந்த இயேசுவே! நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத் தேடும் எவரையும் நீர் மறந்ததில்லை. பிரிந்து போன எம் சகோதர சகோதரிகளை இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். திருச்சபையின் ஒன்றிப்பில் இவர்கள் இணைய, உமது ஒளியை இவர்களுக்கு அளித்தருளும். அவர்களும் எம்மோடு சேர்ந்து என்றென்றும் உமது இரக்கக் கொடைகளை வணங்குவார்களாக. ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! பிரிந்து போன எமது சகோதர சகோதரிகளின் ஆன்மாக்கள் மீது சிறப்பாக உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். அவர்களது குறைகளைப் பாராமல் "அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக" என்று தமது இறப்புக்கு முந்திய நாள் உம்மை உருக்கமாக வேண்டிய உமது அன்புத் திரு மகனின் அன்பையும், அவர் அனுபவித்த கசப்பானப் பாடுகளையும் கண்நோக்கியருளும். இவர்கள் மீண்டும் அந்த ஒன்றிப்பில் இணைந்து என்றென்றும் உமது இரக்கத்தைப் போற்றுவார்களாக. ஆமென்.
இன்று சாந்தமும் தாச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்து வா. என் இரக்கத்தில் மூழ்க வை. இவர்கள் என் இதயக் கசப்பான வேதனையின் போது எனக்கு வல்லமை அளித்தவர்கள். எனது பீடங்களின் அடியில் கண்விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக நான் இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மேல் என் அருளைப் பொழிகின்றேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே எனது அருளைப் பெற முடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்.
சிறு குழந்தைகளுக்காகவும், அவர்களைப் போல் உள்ளவர்களுக்காகவும் மன்றாடுவோமாக.
இரக்கம் நிறைந்த இயேசுவே "நான் சாந்தமும் இதயத் தாழ்ச்சியும் உள்ளவன். என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்று நீர் தாமே சொல்லியிருக்கிறீர். சாந்தமும் இதயத் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உம் இதய வீட்டில் ஏற்றருளும். இவர்கள் வானுலகைப் பரவசத்தில் ஆழ்த்தி, உமது விண்ணகத் தந்தையின் அரியாணையின் முன் மணம் வீசும் மலர்களாக விளங்குவார்களாக. உமது திரு இதயத்தில் நிலையான இடம் கொண்டு இறைவனின் இரக்கத்தை இடையறாது போற்றுவார்களாக. ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! சாந்தமும் இதயத் தாழ்ச்சியும் உள்ள உம் அடியார்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் உமது அன்புத் திரு மகனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களின் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகிறது. இரக்கத்தின் தந்தையே! இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும், இவர்களில் உமக்குள்ள மகிழ்ச்சியையும் குறித்து, எம்மையும் உலகம் முழுவதையும் ஆசீர்வதித்தருளும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. ஆமென்.
இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப்படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இதய இரக்கத்தில் மூழ்கச் செய். இவர்கள் என் பாடுகளை எண்ணி வருந்தி, என் ஆன்மாவோடு ஆழ்ந்து ஒன்றித்திருக்கிறார்கள். எனது இரக்கமுள்ள இதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்களே! இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் சிறப்பான ஒளியோடு துலங்குவார்கள். ஒருவரும் நரக நெருப்பிற்கு ஆளாக மாட்டார்கள். இறப்பின் வேளையில் இவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பேன்.
இறை இரக்கத்தில் பக்தி கொண்டு, அதனை பரப்புவதன் மூலம் இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்தின் உயிருள்ள சாயலாக விளங்குவோருக்காக மன்றாடுவோமாக.
அன்பையே இதயமாகக் கொண்ட இரக்கம் மிகுந்த இயேசுவே! இறை இரக்கத்தின் மேன்மையை சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்துள் ஏற்றுக் கொள்ளும். இவர்கள் இறைவனிடமிருந்தே தமது வல்லமையைப் பெறுகின்றனர். துன்ப துயரங்களின் நடுவே நீர் மனுக்குலத்தற்காகப் பட்டப் பாடுகளில் பங்கு கொள்ள விழைகின்றார்கள். மென்மேலும் பெருகும் இரக்கத்தால் அவர்களை அரவணைத்து விடாமுயற்சி, திடம், பொறுமை ஆகியப் புண்ணியங்களை அவர்களுக்கு அளித்தருளும். ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! உமது ஆழம் காண முடியாத இரக்கத்தை உருக்கமாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் சொல்லாலும் செயலாலும் உம்மை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வான்மாக்கள் நற்செய்தின்படி வாழ்பவர்கள். உமது இரக்கத்தைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் உம் மீதும், உமது வாக்குறுதிகள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கைக்கேற்ப இவர்களுக்கு மேலான இரக்கத்தை காட்டுமாறு உம்மை வேண்டுகிறோம். உமது சொந்த மாட்சியைப் போன்று இவர்களது வாழ்விலும், குறிப்பாக இறுதி வேளையிலும் இவர்களைப் பாதுகாத்தருளும். ஆமென்.
இன்று உத்தரிக்கும் நிலையில் சிறைப்பட்டுள்ள ஆன்மாக்களை கொண்டு வந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் உதிரப்பெருக்கு இவர்களைச் சுட்டெரிக்கும் தீயை குளிரச் செய்யட்டும். இவ்வான்மாக்கள் என்னால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர்கள். என் நீதிக்குப் பரிகாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. என் திருச்சபை அளிக்கும் எல்லாப் பலன்களையும் எடுத்து இவர்களுக்கு ஒப்புக்கொடு. இவர்கள் செலுத்த வேண்டியக் கடனைத் தீர்ப்பாய்.
இறை நீதிப்படி உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக மன்றாடுவோமாக. இரக்கமுள்ள இயேசுவின் திரு இரத்தம் அவர்களின் வேதனையைத் தணிப்பதாக.
இரக்கம் நிறைந்த இயேசுவே! "என் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்" என்று மொழிந்தீரே. இறைவனுடைய நீதிக்குப் பரிகாரம் செய்ய வேண்டியவர்களை இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது இதயத்திலிருந்து பீறிட்டு வரும் இரத்தமும் தண்ணீருமாகிய அருவிகள் இவர்களைச் சுற்றி இருக்கும் அனல் பிழம்புகளை அணைப்பதாக. இதனால் எங்கும் உமது இரக்கத்தின் வல்லமை போற்றப்படுவதாக. ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! உத்தரிக்கும் நிலையில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது அன்புத் திரு மகன் இயேசுவின் வேதனை நிறைந்தப் பாடுகளின் பெயரிலும், அவரது திரு இதயத்தில் நிறைந்துள்ள துயரத்தின் பெயரிலும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பினால் வேதனைப்படும் இவ்வான்மாக்களுக்காக உமது இரக்கத்தைக் காட்டியருளும். உமது அன்புத் திரு மகன் இயேசுவின் இரக்கம், அவரது நீதியைவிட மேலோங்கி நிற்பதால் அவரது திருக்காயங்களின் வழியாக இவர்களை நோக்கியருளுமாறு உம்மை வேண்டுகிறோம். ஆமென்.
இன்று வெதுவெதுப்பான ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து எனது இரக்கத்தில் மூழ்க விடு. இவ்வான்மாக்கள் என் உள்ளத்தை மிகவும் வேதனைப்படுத்துகிறார்கள். இந்த ஆன்மாக்களாலே நான் கெத்சமனித் தோட்டத்தில் பயங்கர வேதனைகள் அனுபவித்தேன். "தந்தையே உமக்குத் திருவுளமானால் இக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும்" என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்களே. என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவதுதான் இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை.
ஒலிவத் தோப்பில் கிறிஸ்துவுக்குப் பயங்கர வேதனை ஏற்படக் காரணமாக இருந்த வெதுவெதுப்பான ஆன்மாக்களுக்காக மன்றாடுவோமாக.
இரக்கம் மிகுந்த இயேசுவே! நீர் நன்மையே உருவானவர். ஒலிவத் தோப்பில் உமக்கு மிகுந்த வேதனையும் அருவருப்பும் உண்டாக்கிய நடைப்பிணங்களைப் போன்ற வெதுவெதுப்பான இந்த ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் ஏற்றருளும். உமது தூய அன்பின் நெருப்பினுள் இவர்களை மூழ்கச் செய்யும். இதனால் இவர்கள் உமது எல்லையற்றக் கருணையை என்றென்றும் புகழ்வார்களாக. ஆமென்.
(இயேசு கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், தந்தைக்கும் மகனுக்கும்...)
நித்திய தந்தையே! வெதுவெதுப்புள்ள இந்த ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது அன்புத் திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் கசப்பானப் பாடுகளின் பெயராலும், சிலுவையில் மூன்று மணி நேரமாக அவர் அனுபவித்த வேதனைகளின் பெயராலும் இந்த ஆன்மாக்களுக்கு, உமது மாட்சியின் மீது ஒரு புதிய ஆர்வத்தை ஊட்டுமாறு உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம். அவர்கள் உள்ளத்தில் அன்பு பெருகச் செய்தருளும். இதனால் உயிரூட்டப் பெற்ற இவர்கள், உலகில் இரக்கச் செயல்களைப் புரிந்து, என்றென்றும் உமது இரக்கத்தைப் போற்றி புகழ்வார்களாக. ஆமென்.