வருட இறுதி நன்றி ஆராதனை
நித்திய ஸ்துதிக்குரிய... பரிசுத்த நற்கருணைக்கு...
பக்தியாய் ஆராதனை... எத்திசையும் புரிவோம். (மூன்று முறை)
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
பாடல்:
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவையே ஆராதிப்பேன் (2)
1.
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன் (2)
2.
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன் (2)
3.
ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் (2)
4.
தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திரத்தோடு ஆராதிப்பேன் (2)
5.
காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன் (2)
6.
வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் (2)
முன்னுரை:
நேரம் - அது பொன்னானது!
உழைப்பதற்கு ஒரு நேரம், ஓய்வு எடுப்பதற்கு ஒருநேரம்.
பகிர்வதற்கு ஒரு நேரம், பாசத்திற்கு ஒரு நேரம்.
இப்படி, தனிப்பட்டத் தருணங்களில், இது ஒரு பொன்னான நேரம் ஆம்! படைத்தாளும் பரமனின், எல்லையில்லா அன்பையும், விந்தைமிகு ஞானத்தையும் போற்றிப் புகழே வேண்டிய நேரம்.
உன்னை உடையாகப் படைக்க நினைத்தேன், காலத்தில் கந்தலாகிவிடுவாய் என நினைத்து உன்னை உடையாகப் படைக்க மறுத்துவிட்டேன். உன்னை வெறும் உடலாக மட்டும் படைக்க நினைத்தால் இறப்பினால் மக்கிபோவாய் என என் உள் மனம் கூற உன்னை உடலாகப் படைக்க மறுத்துவிட்டேன். எனவே என்னை விட்டு நீங்காத, அழியாத, பிரியாத, உயர்வான செல்வமாக, உயிராகப் படைப்புகளில் பண்பட்ட மனிதனாய் உன்னைப் படைத்தேன். நீ என்னோடு வாழ்வதற்கு...
(2 நிமிடங்கள் அமைதியாக சிந்திப்போம்)
மன்னிப்பு வழிபாடு:
வீசும் தென்றல் விரைவாய் கடந்து விடுவது போல, வாழும் காலமும் சற்றென கடந்து விடுகிறது. இந்த அவசரமான உலகத்திலே நுகர்வு கலச்சாரம், வேலைப்பளு, தொலைக்காட்சி, சொந்த விருப்பு வெறுப்புகள் எனப் படைத்தப் பரமனைப் பார்ப்பதற்கும் கூட, கண் இமையைப் போல காத்து வரும் இறைவனை வழிபட, வாழ்த்தி போற்ற... ஏனோ தெரியவில்லை வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது!
வாழ்வின் பாதையில் சோதனைகள் ஆயிரம், வேதனைகள் பல்லாயிரம்! பரமனே! நீர் எங்கள் முன் செல்கிறீர் என்பதை நாங்கள் மறந்து பாவக் குழியில் பல சமயம் தவறி விழுந்து விடுகிறோம். தூய லூக்கா எழுதிய நற்செய்தி வழியாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறும் ஊதாரி மைந்தன் உவமையை வாசிக்கக் கேட்போம்:
தூய லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (15:11-24)
அக்காலத்தில், இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். அப்போது அவர் கூறிய உவமை:
ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே, அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால், அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனி மேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.
உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில், என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
சிந்தனை நேரம்:
ஊதாரித்தனமாக நமக்கு அன்பை அள்ளித் தருகிறார்.
நமக்கு எல்லாவித சுதந்திரங்களையும் கொடுத்திருக்கிறார்.
ஆனால், நாமோ அதனைத் தவறாகப் பயன்படுத்திவருகிறோம்.
நாம் செய்த பாவங்களுக்கு மனம் வருந்தி, அவரிடம் திரும்பி வரும் போது, நாம் மனம் மாற நினைக்கும் அந்த நொடிப் பொழுதே நம்மை முழுமையாக மன்னிக்கிறார். நம்மை அரவணைத்துக் கொள்கிறார்.
மன்னிப்பின் அடையாளமாக நம் மதிப்பினை அதிகரிக்கச் செய்கிறார். நமக்கு நிறை மகிழ்ச்சி அளிக்கிறார்.
எனவே கடந்த ஆண்டு முழுவதும் நம்முடைய சிறு சிறு தவறுகள் முதல் பெரிய பாவங்கள் என அனைத்தையும் நினைத்து மனம் வருந்தி, அவருடைய மன்னிப்பை நாடுவோம்.
(2 நிமிடங்கள் அமைதியாக மன்றாடுவோம்)
திருப்பாடல் 51 : 1-12
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்;
எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய் ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.
மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக! என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
மன்றாட்டுக்கள்:
கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என மொழிந்த அன்பர் இயேசு, நம் தேவைகளை நாம் கேட்பதற்கு முன்னரே அறிந்து வைத்திருக்கிறார். நம்மை உள்ளங்கையில் பொறித்து காத்து வருகிறார். அன்பர் இயேசுவிடம் நம் மன்றாட்டுக்களை சமர்பிப்போம்.
(5 நிமிடங்கள் அமைதியாக மன்றாடுவோம்)
பாடல்:
விண்ணப்பத்தைக் கேட்பவரே என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா (2)
உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் - 2
ஐயா ஒரு வார்த்தை சொன்னால் போதும்
மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே - 2
ஐயா அதிசயம் செய்பவரே
சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் - 2
ஐயா என்று சொல்லி சுகமாக்கினீர்
என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா - 2
ஐயா சுமந்து தீர்த்தீரைய்யா
உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரமே - 2
ஐயா ஒரு கோடி ஸ்தோத்திரமே
நன்றியறிதல்:
இன்று ஆண்டின் இறுதிநாள், ஆண்டின் கடைசி மணித்துளிகள். உனக்கு உருகொடுத்து, உயிர்கொடுத்து, காத்துக் கொண்டிருக்கும் உன்னத தேவனின், உண்மையுள்ள பிரசன்னத்தில் அமர்ந்திருக்கிறோம். அமைதியில் ஆண்டவரோடு உரையாடுவோம். கடந்த ஆண்டு முழுவதும் அவர் நமக்கு செய்தவற்றை, அவர் வழியாக நம் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்ப்போம். நன்றி கூறுவோம்.
(5 நிமிடங்கள் அமைதியாக சிந்திப்போம்)
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக காத்து வருகின்ற கடவுளின் கிருபையை நினைத்து பார்ப்போம்.
உங்கள் பதில்: உம்மைப் போற்றுகின்றோம், உம்மை புகழுகின்றோம், நன்றி கூறுகின்றோம்.
அன்பின் இறைவா! எனக்கு நல்ல பெற்றோரையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் கொடுத்து குடும்பத்தில் சமாதானம், ஒற்றுமை, மகிழ்ச்சி என கொடுத்துக் காத்து வரும் கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
அன்பின் இறைவா! எனக்கு நல்ல கணவரை, பண்புள்ள மனைவியை, பாசமுள்ள பிள்ளைகளை கொடுத்து, நல்ல வருமானமும் கொடுத்துக் காத்து வரும் கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
கடந்த ஆண்டு முழுவதும் நல்ல மழையினைக் கொடுத்து, விளைச்சலைப் பெருக்கிக் கொடுத்தமைக்காகவும், பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் என ஆபத்துகளினின்று காத்தக் கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆன்மீக வழி நடத்த நல்ல அருட்தந்தையையும், அருட்சகோதரிகளையும் கொடுத்ததோடு அல்லாமல் எல்லாவற்றிற்கும் மேலாக உம் அன்பின் மிகுதியால் அன்றாடத் திருப்பலியில் உடலாகவும், இரத்தமாகவும் எழுந்து, திருவிருந்தளிக்கும் கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
நாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறியதோடு, பலவித நன்மைகளால் அபரிவிதமாக நிரப்பும் இறைவனின் எல்லையில்லா கருணையை நினைத்து, நாங்கள் எப்பொழுதுமே அவரது மக்களாக இருக்கும் கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
(சிறிது நேரம் அமைதியாக உங்களது நன்றியறிதல்களை ஆண்டவர் முன் சமர்பிப்போம்)
நிறைவு செபம்:
இயேசுவின் துன்பகரமான அடிச்சுவடுதனில் ஒரு சில மணித்துளிகள் பயணித்த நாம், இதனை நம் வாழ்க்கையின் பாடங்களாக்கி, நம் வாழ்க்கை அடிச்சுவடுதனில் பின்பற்றி, நம் இயேசுவிற்கு உண்மையான சாட்சிகளாக வாழ்ந்து, அவரில் மரித்து, அவரால் உயிர்ப்பித்து, வான் வீடு சேருவோம். ஆமென்.
நற்கருணை ஆசீர்:
மாண்புயர் இவ்வருள் அடையாளத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்.
பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக.
புதிய நியம முறைகள் வருக. புலன்களாலே மனிதன் இதனை,
அறிய இயலாக் குறைகள் நீக்க நம்பிக்கையின் உதவி பெறுக.
தந்தை அவர்க்கும் மகன் இவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மாட்சிமையோடு வலிமை வாழ்த்து யாவுமாக.
இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக. ஆமென்!
அப: வானின்று அவர்களுக்கு அப்பம் அளித்தீரே!
எல்: இனிமை எல்லாம் தன்னகத்தே கொண்ட அப்பம் இதுவே!
அப: இறைவா, இந்த வியப்புக்குரிய அருள் அடையாளத்திலே, உம்முடையத் திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர்; உம் திரு உடல், திரு இரத்தம் ஆகியவற்றின் தூய மறைபொருளை வணங்கும் நாங்கள், உமது மீட்பின் பயனை இடைவிடாமல் துய்த்து உணர்ந்து மகிழ அருள்வீராக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே!
எல்: ஆமென்!
நற்கருணை ஆசீர்:
அருள் திரு தேவ தேவன் போற்றி!
அவர் தம் திரு நாமம் போற்றி!
அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி!
அவர் தம் திரு அன்பே போற்றி!
அருள் நிறை தூய ஆவி போற்றி!
அவர் தம் திரு ஞானம் போற்றி!
அருள் நிறை அன்னை மரியாள் போற்றி!
அவர் தம் திரு தூய்மை போற்றி!
அருள் நிறை சூசை முனியும் போற்றி!
அவர் தம் திரு வாய்மை போற்றி!
அருள் நிறை தூதர் அமரர் போற்றி!
அவர் தம் திரு சேவை போற்றி!
அருள் திரு தேவ தேவன் போற்றி!
அவர் தம் திரு நாமம் போற்றி!
நித்திய ஸ்துதிக்குரிய... பரிசுத்த நற்கருணைக்கு...
பக்தியாய் ஆராதனை... எத்திசையும் புரிவோம். (மூன்று முறை)
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.