தொடக்கப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
தொடக்கச் செபம்:
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
முத: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும், கடவுளுமானவர் போற்றப் பெறுவாராக. அவர் இரக்கம் நிறைந்தத் தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றானக் கடவுள். அவரே நமக்கு எல்லா வகையான துன்பத்திலும், துயரத்திலும், வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு, நாம் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆறுதலால் எத்தகைய வேதனையில் இருப்போருக்கும் நாமும் ஆறுதல் அளிக்க முடியும்.
எல்: ஆண்டவர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக!
முத: அன்புமிக்க சகோதர சகோதரிகளே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்தக் கடவுள், அதில் நம்மையும் நம் அன்புக்குரிய _______________யும் (இறந்தவரின் பெயரைச் சொல்லி) படைத்தார். இன்று, __________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்கள் நம்முடன் இல்லை. இறைவன் இவரை தம்மிடம் அழைத்துக் கொண்டார். இவரின் இறப்பு நமக்கும், இவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் பெரிய இழப்பாக இருந்தாலும், "இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்" என்று திருவெளிப்பாடு நூலில் (14:13) வாசிப்பது போல, இவரும் ஆண்டவரோடு இணையும் தகுதியைப் பெறுவதற்காக செபிப்பது மட்டுமே நம் முதன்மையான கடமையாகும். இவர் வாழ்ந்தக் காலத்தில் ஆண்டவரோடு இணைந்து, அவரது விசுவாசத்தில் வாழ்ந்தார். ஆண்டவரை நோக்கியத் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கும் இவருக்கு அவரே உதவியாயிருந்து, தனது இரக்கத்தையும் மன்னிப்பையும் அளிப்பாராக. "இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவது இல்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்" என்று பவுல் (1 கொரிந்தியர் 15:16) கொரிந்து நகர மக்களுக்குக் கூறுவது ஏனென்றால் இயேசுவின் உயிர்ப்பு எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அவரை விசுவசித்தோரும் உயிர்த்தெழுவர் என்பதைக் காட்டவே. எனவே, இறப்பினால் உருவாகும் துயரத்தையும் வேதனையையும் விட்டுத் திடமுடன் இருப்போம். நம்பிக்கையோடு ஆண்டவரிடம் செபிப்போம். இக்குடும்பத்தாருக்கு அவர் ஆறுதல் தர வேண்டும் எனச் செபிப்போம். அவர் நம்மைத் தேற்றுவார், தாங்குவார், என்றும் நமக்குத் துணையாக இருப்பார்.
எல்: ஆமென்.
(இப்போது செபமாலை அல்லது இறை இரக்க செபம், அதனைத் தொடர்ந்து (நேரம் இருந்தால்) இறந்தோருக்கான மன்றாட்டு மாலையையும் செபிக்கவும்)
முத: மன்றாடுவோமாக! ஆண்டவரே, வேதனைகளும் துயரங்களும் எங்களை அழுத்தினாலும், நாங்கள் நம்பிக்கையுடன் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். உமது வல்லமையையும் இரக்கத்தையும் நம்பிச் செபிக்கிறோம். "அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும்" (1 கொரிந்தியர் 15:54) பெறச் செய்யும் உமது வல்லமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். வலுவிழந்து நிற்கும் எங்களுக்குத் துணையாக வந்தருளும். குறிப்பாக, "நாம் யாவரும் சாகமாட்டோம். ஆனால், அனைவரும் மாற்றுரு பெறுவோம்" (1 கொரிந்தியர் 15:54) என்று புனித பவுலின் வழியாக நீர் கற்பித்த வார்த்தைகளை நம்பி வாழ்ந்த உமது அடியார் ______________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி)அவர்களின் ஆன்மா உம்மோடு அமைதியில் இளைப்பாறுவதாக. உமது இரக்கம் இவருக்குக் கிடைப்பதாக. உமது சாயலாகப் படைக்கப்பட்ட இவருக்கு உமது இறையரசிலும் இடம் கிடைப்பதாக. அதனால், இவருடைய உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் கிடைப்பதாக. எங்கள் துன்பங்களும் துயரங்களும் வேதனைகளும் உம் மீதுள்ள நம்பிக்கையால் விரைவில் நீங்குவதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
இறைவார்த்தை:
முதல் வாசகம்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். (25 : 6 – 9)
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார். அதில் சுவைமிக்கப் பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்தியத் திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார். பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார். என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரை துடைத்து விடுவார். தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றி விடுவார். ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள், "இவரே நம் கடவுள். இவருக்கென்றே நாம் காத்திருந்தோம். இவர் நம்மை விடுவிப்பார். இவரே ஆண்டவர். இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். (11 : 25 – 30)
அக்காலத்தில் இயேசு, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது" என்றார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு:
முத: இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, கல்லறையிலிருந்து மூன்றாம் நாள், மரணத்தை வென்று, வெற்றி வீரராக உயிர்த்த இயேசு கிறிஸ்துவில் நமது நம்பிக்கையை வைத்து, இறந்து போன ___________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்காக உருக்கமாக மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, உமது வல்லமையால் உமது திருமகன் இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்தீரே. அதே உயிர்ப்பில், இறந்து போன உமது அடியார்
____________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி)அவர்களும் பங்கு பெற அனைத்துத் தடைகளையும், பாவங்களையும் நீக்கிட வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, திருமுழுக்கினால் புதுப்பிறப்பு அடைந்து, திவ்விய நற்கருணையில் உம்மைச் சுவைத்த ___________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்கள், உலகக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, நிலையான பேரின்ப வாழ்வைப் பெற அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, இவ்வுலக வாழ்வில் நீர் _______________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும், இவர் வழியாக நாங்கள் அடைந்த பயன்களுக்காகவும் நன்றி செலுத்துகிறோம். இவருக்கு மறு உலகிலும் உமது இரக்கம் கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, கெத்சமேனிப் பூங்காவில் இரத்த வியர்வை வியர்த்த உம் திருமகன் இயேசு கிறிஸ்துவை திடப்படுத்திய நீர், இவருடைய இறப்பால் வேதனையுறும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் துணை நின்று அவர்களைத் தேற்றி ஆறுதல் படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, எரியும் நெருப்பிலிருந்து மூன்று இளைஞர்களைக் நீர் காப்பாற்றியது போல இறந்து போன _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களை தண்டனைத் தீர்ப்பிலிருந்து காத்து, இறந்த எங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாரும் நினையாத ஆன்மாக்கள் அனைவரும் உமது இரக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, எங்கள் நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவரையும், விபத்துகளாலும், இயற்கைப் பேரிடர்களாலும் எதிர்பாராத மரணத்தைச் சந்தித்தவர்களையும், கைவிடப்பட்டு, ஏமாற்றம், விரக்தியினால் மரித்தவர்களையும் உமது நிலைவாழ்வுக்குத் தகுதி உடையவர்களாக மாற்ற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: நாம் அனைவரும் இறந்து போன _______________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியை அடைய, நம் இயேசு கிறிஸ்து கற்பித்தபடி மன்றாடுவோம். தொடர்ந்து நம் அன்னை மரியாவின் பரிந்துரையையும் நாடுவோம்.
(1 கர்த்தர் கற்பித்த செபம், 3 அருள், 1 மூவொரு இறை புகழ் சொல்லவும்)
இறுதிச் செபம்:
முத: மன்றாடுவோமாக! இரக்கம் மிகுந்த தந்தையாகிய இறைவா, எங்கள் விசுவாசமும் நம்பிக்கையும், உயிர்த்த உம் திருமகனில் என்றும் உள்ளது என்பதை நீர் அறிவீர். உம்மிடம் வந்துள்ள உம் அடியார் _______________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களுக்கு உம் திருமகன் தரும் மகிமையில் பங்கு கொடுப்பீராக. சுமை சுமந்து, சோர்வுற்று வாழும் வாழ்வால் இவருக்கு ஏற்பட்டத் தடைகளை அகற்றி, இவருக்கு இனிமையும், மகிழ்ச்சியும் நிறைந்த விண்ணக வாழ்வைப் பரிசாக அளிப்பீராக. உம்மோடும், அன்னை மரியாவோடும், வானக தூதரணிகளோடும், புனிதர்களின் பெருந்திரளோடும் இவரும் சேர்ந்து, தூயவரான உம்மைப் புகழ்ந்திட அருள் புரிவீராக. இவ்வுலகில் இவருக்கு நீர் காட்டிய அன்பும், ஆதரவும், இரக்கமும் தொடர்ந்து கிடைப்பதாக. உமது இரக்கத்திற்கு ஏற்ப இவரின் குற்றங்களையும், பாவங்களையும் மன்னிப்பீராக. இறந்தோருக்கு ஆதரவும், பாவிகளுக்கு அடைக்கலமும், விண்ணக மண்ணக அரசியுமான கன்னி மரியாவின் பரிந்துரையால் இவர் உமது தயவைப் பெற்றுக் கொள்வாராக. "இறைவனின் ஆசி பெற்றோர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்" (திருப்பாடல் 37:22) என்ற வார்த்தைகள் தரும் நம்பிக்கையால் உம்மை நோக்கிக் கூவியழைக்கும் எங்கள் அனைவரின் குரலுக்குச் செவிசாய்த்து, உமது மீட்பால் வரும் மகிழ்ச்சியை இவருக்கு அளித்தருளும். அதே மகிழ்ச்சியில், இவரை இழந்து தவிக்கும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தங்களைத் தேற்றிக் கொள்வதோடு, உமது ஆறுதலும் துணையும் இவர்களுக்கு என்றும் உள்ளது என்ற நிம்மதியில் இவர்கள் வாழ்வார்களாக. உம்மோடு, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய், என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
முத: நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும், ஆண்டவரே!
எல்: முடிவில்லாத ஒளி இவர் மேல் ஒளிர்வதாக!
முத: இறந்து போன ______________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மாவும், இறந்த அனைத்து விசுவாசிகளின் ஆன்மாக்களும் இறைவனின் இரக்கத்தால் நித்திய இளைப்பாற்றி அடைவார்களாக.
எல்: ஆமென்.
இறுதிப் பாடல்: (தகுந்த இறந்தோர் பாடல் ஒன்றைப் பாடவும்)
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும், ஆண்டவரே...
முடிவில்லாத ஒளி இவர் மேல் ஒளிர்வதாக...