விண்ணையும் மண்ணையும் படைத்தார்
உன்னையும் என்னையும் படத்தார்
விண்ணக அன்பை மண்ணகம் காண
ஓர் அன்னையை கொடுத்தார்
யாரிவள் யாரிவள் யாரோ
இறைவனின் மகளோ //
வெள்ளையாடை இரு நீல வரிகள்
எழ்மையின் சிகரம் கருணையின் உருவம்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா //
1. கடல் கடந்தாய் பாரதம் வந்தாய் எம் மண்ணிலே கலந்தாய்
கரம் விரித்தாய் எழைகளை நீ அன்புடனே அணைத்தாய் //
தனிமையில் வாடும் மனிதரிலே நீ இயேசுவையே கண்டாய்
நோயில் துடிக்கும் குஷ்டத்தில் இருக்கும் மனிதரில் இறை கண்டாய்
தனிமையில் வாடும் - நோயில் துடிக்கும்
மனிதரில் இறை கண்டாய்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா
யாரிவள் யாரிவள் யாரோ
இறைவனின் கொடையோ
2. உள்ளவனிடம் உன் உள்ளங்கை விரித்து ஏழைக்காய் நீ கேட்டாய்
அவனோ உமிழ்ந்தான், ஏளனம் செய்தான், உனக்காய் நீ பெற்றாய் //
சிரித்தாய், துடைத்தாய், மீண்டும் இரந்தாய், நொந்தான் மனம் வெந்தான்,
இயேசுவை கண்டான், உந்தன் உருவில், அனைத்தையும் உமக்களித்தான்.
மகிழ்வை சுவைத்தான் - இயேசுவை அணைத்தான்
உன்னில் இறை கண்டான்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா
யாரிவள் யாரிவள் யாரோ
இறைவனின் மகளோ
வெள்ளையாடை இரு நீல வரிகள்
எழ்மையின் சிகரம் கருணையின் உருவம்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா
அவளே அவளே எம் அன்னை
இறைவனின் மகளே!
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாவே,
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாவே,
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாவே,
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொடக்க செபம்
முதல்வர்: ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
முதல்வர்: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அளவில்லாத இரக்கத்தாலும் நன்மைத்தனத்தாலும், நீர் கொல்கத்தாவின் புனித அன்னை தெரேசா வழியாக இவ்வுலகில் கிறிஸ்தவ அன்பின் உறுதியான அடையாளமாக, தொண்டாற்றும் மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளீர். அவரது முன்மாதிரியை நாங்கள் பின்பற்றி உம் மீது நிபந்தனையற்ற அன்பில் வளரவும், எங்கள் சகோதர சகோதரிகளுக்கு இடைவிடாது தொண்டாற்றவும் உமது அருளைத் தாரும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திரு மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆமென்.
நவநாள் செபம்
முதல்வர்: புனித அன்னை தெரேசாவே! இறைவன் மீதுள்ள ஆழ்ந்த அன்பினால், நீர் வறுமையில் கிறிஸ்துவைப் பின்பற்றி, தொண்டாற்றும் வாழ்வு வாழ்ந்து, அனைவருக்கும், குறிப்பாக ஏழை எளியோருக்கு ஒரு நல்ல சமாரியனாக மாறினீர். உமது இரக்கமுள்ள பார்வையும், அன்பான கைகளும் தாழ்நிலையிலிருந்த இறைவனின் மக்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தழுவி, அவர்களுக்குச் சிறந்தப் பராமரிப்பையும், தரமான வாழ்வையும் வழங்கியது. பல்வேறு பிரச்சனைகளால் துன்புறும் அனைவர் மீதும் உமது இரக்கமுள்ள பார்வை பட்டு, உமது பரிந்துரையால் எங்களுக்கு இறைவனின் ஆறுதலையும் பாதுகாப்பையும் பெற்றுத் தந்தருளும்.
எல்லோரும்: நாங்கள் இறைவனை முழு இதயத்தோடும்/ ஆன்மாவோடும் அன்பு செய்யவும்,/ எங்கள் சகோதர சகோதரிகள் வழியாக/ அவருக்குத் தொண்டாற்றி,/ அவருக்கு உகந்தக் காணிக்கையாக மாற/ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்/. ஆமென்.
குழுவினருடைய வேண்டுதல் (விண்ணப்பங்கள்)
முதல்வர்: விண்ணகத் தந்தையே, கொல்கத்தாவின் புனித அன்னை தெரேசா தனது வாழ்க்கைத் துணையான இயேசுவிடம் நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் வாழ்ந்து, அவரைத் தனது வாழ்வின் மையமாகக் கொண்டிருந்தார். அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பொருளியல் ஆதாயங்களிலும் உலகத் தரங்களிலிருந்தும் விலகி, பல்வேறு சாத்தியக்கூறுகளுக்கு நடுவில், இயேசுவுக்கான தனது அர்ப்பணிப்பில் உறுதியாக இருந்தார். எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு நாங்கள் கேட்கும் விண்ணப்பங்களைக் கருணையோடு எங்களுக்கு அளித்தருளும்.
முதல்வர்: இயேசுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்ந்த புனித அன்னை தெரேசம்மாவே!
எல்லோரும்: எங்கள் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரையும் / உம் திருப்பாதத்தில் வைக்கிறோம்./ அவர்களை கிறிஸ்துவைப் போல்/கடவுளுக்கும் மனிதர்களுக்கும்/ உகந்தவர்களாக வளர்க்க/ எங்களுக்கு உதவி புரிய வேண்டுமென்று/ உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முதல்வர்: தூய்மை, தொண்டாற்றல், கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் அன்னை தெரேசம்மாவே
எல்லோரும்: எங்கள் பங்கில் உள்ள இளைஞர்/ இளம் பெண்களை/ உமது பாதுகாவலில் வைக்கிறோம். / அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் உதவியைப் பெற்றுத் தந்து /அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும்/ வேலை வாய்ப்புக்களிலும் உயரிய இடத்தைப் பெற்று/ மகிமையோடு வாழப்/ புனித அன்னை தெரேசம்மாவே / உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முதல்வர்: செபத்தால் வழிநடத்தப்படும் வாழ்வு வாழ்ந்த புனித அன்னை தெரேசம்மாவே
எல்லோரும்: குடும்பங்களில் ஒற்றுமையும் /சமாதானமும்/ புரிந்து கொள்ளும் மனப்பான்மையும்/ தியாக உணர்வும்/ விட்டுக் கொடுத்து வாழும் விவேகம் நிலவி/ குடும்பங்கள் நன்மக்களை உருவாக்கி/ திருச்சபையை வளர்க்க/புனித அன்னை தெரேசம்மாவே, உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முதல்வர்: ஏழைகளின் ஆதரவான புனித அன்னை தெரேசம்மாவே!
எல்லோரும்: எங்கள் பங்கில் உள்ள அனைவரையும்/ உம் திருக்கரங்களில் வைக்கிறோம்./ அவர்கள் அனைவரும்/ தங்களுக்கு அளிக்கப்பட்ட தொழில்களைச்/ செவ்வனே நிறைவேற்றிச் சமுதாயத்திற்கும்/ நாட்டிற்கும் பயனுள்ள முறையில் வாழ்ந்து/ இறைச் சித்தத்தை நிறைவேற்றப்/ புனித அன்னையே! உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முதல்வர்: துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் வாழ்வு வாழ்ந்த புனித அன்னை தெரேசம்மாவே!
எல்லோரும்: நோயுற்றவர் நலம் பெறவும்/ மரண ஆபத்தில் இருப்பவர்கள்/உமது பரிந்துரையால்/ ஆன்மீக நலன்களையும்/ அவசர உதவிகளையும்/நிறைவாய் பெற்று/இறைவனில் அமைதி கொள்ள/ நீர் அவர்களுக்கு உதவி புரிய வேண்டுமென்று/ புனித அன்னை தெரேசம்மாவே/ உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாவின் வழியாக நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களை மௌனமாக இறைவனிடம் எடுத்துக் கூறுவோம்
(சிறிது நேரம் அமைதியாக செபித்தல்)
நன்றியறிதல்
முதல்வர்: விண்ணகத் தந்தையே, கொல்கத்தாவின் புனித அன்னை தெரேசம்மாவை சமாதானத்தின் குரலாக கொடுத்ததிற்கு நன்றி கூறுகிறோம். அன்பின் செயல்கள் அனைத்தும் சமாதானத்திற்கான செயல்கள் என்று உறுதியாக நம்பிய அவர், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் அவதிப்படும் மக்களுக்கும் தனது அன்பானப் பராமரிப்பால் சேவை செய்தார். புனித அன்னை தெரேசம்மாவை சமாதானத்தின் பாதுகாவலராகத் தந்து எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வரும் உமது வல்லமை நிறைந்த நன்மைத் தனத்திற்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
முதல்வர்: நோயாளிகளின் ஆதரவான புனித அன்னை தெரேசம்மாவின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும்
எல்லோரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: மனத்தாழ்ச்சியின் பிம்பமான புனித அன்னை தெரேசம்மாவின் வழியாக திருச்சபைக்கு நீர் வழங்கிய அனைத்து அருள் வரங்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும்
எல்லோரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: குடும்பங்களில் அன்பை வளர்க்கும் புனித அன்னை தெரேசம்மாவின் மன்றாட்டால் அனைத்து குடும்பங்களுக்கும் நீர் கொடுத்த பாதுகாப்பிற்காக
எல்லோரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்
முதல்வர்: துன்பங்களினால் துவண்டுவிடாத புனித அன்னை தெரேசம்மாவின் மன்றாட்டால் நோயாளிகள் பெற்ற நலத்திற்காக
எல்லோரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்
முதல்வர்: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள நன்மைகளுக்காக புனித அன்னை தெரேசம்மாவின் வழியாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்
(மௌனமாக நன்றி சொல்லவும்)
நோயாளிகளை ஆசீர்வதித்தல்
முதல்வர்: ஆண்டவருடைய பெயராலே/ நமக்கு உதவி உண்டு./
எல்லோரும்: அவரே/ பரலோகத்தையும் பூலோகத்கையும் படைத்தார்./
முதல்வர்: செபிப்போமாக
எல்லோரும்: ஆண்டவரே/ உடல் நோயால் வருந்தும்/ உமது ஊழியரைப் பாரும்./ நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு/ ஆறுதல் தாரும்./ நாங்கள் துன்பங்களினால் தூய்மை அடைந்து,/ உமது இரக்கத்தினால் விரைவில் குணம் அடையும்படி/ அருள் புரிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்/- ஆமென்./
முதல்வர்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து/ நம்மை பாதுகாக்க நம் நடுவிலும்,/ நம்மைக் காப்பாற்ற,/ நமக்குள்ளும்/ நமக்கு வழிகாட்ட நம் முன்னும்,/ நமக்கு காவலாயிருக்க நம் பின்னும்,/ நம்மை ஆசீர்வதிக்க நம் மேலும் இருப்பாராக./ எல்லாம் வல்ல இறைவன்/ பிதா, சுதன், பரிசுத்த ஆவி/ நம்மை ஆசீர்வதித்து பாதுகாத்து/ நம்மை வழிநடத்துவாராக./
எல்லோரும்: ஆமென்
மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா.
எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா.
எங்கள் மேல் இரக்கமாயிரும்!
தூய ஆவியாராகிய இறைவா.
எங்கள் மேல் இரக்கமாயிரும்!
மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா.
எங்கள் மேல் இரக்கமாயிரும்!
தூய மரியே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அசிசியின் புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அசிசியின் புனித கிளாரம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித அந்தோணியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித தேவசகாயம் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித ஜோசப் வாஸ் அடிகளாரே- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித அருளானந்தர் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித கூரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித தோமா அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித அன்னை தெரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முக்தி பேறு பெற்ற கார்லோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
இறைவனின் கையிலுள்ள எழுதுகோலாகியப் புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
ஏழைகளுக்கு இறைவனின் முன்னுரிமையான அன்பின் அடையாளமான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
இறைவனின் அருளுக்கு அடையாளமான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
சேரிவாழ் மக்களின் துறவியான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
இரக்கத்தின் தேவதையான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
நல்ல சமாரியனுக்கு அடையாளமான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
தொண்டாற்றலுக்கு உருவகமான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
ஏழை எளியோரின் நண்பராகிய புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
தனிமையுற்றோருக்கும் ஆதரவற்றோருக்கும் புகழிடமான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
வீடற்றவர்களுக்குப் புகழிடமான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
வறுமையை விரும்புபவரான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
நோயுற்றவர்களின் பராமரிப்பாளரான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
குரலற்றவர்களுக்குக் குரலாக விளங்கும் புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
மனிதாபிமானச் செயல்களின் முழுமுயற்சியானப் புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
சமாதானத்தின் வெற்றி வாகையான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருக்கலைப்புக்கும் கருணைக்கொலைக்கும் எதிராக குரலெழுப்பிய புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
திருத்தந்தையின் கீழ்ப்படிதலுள்ள மகளான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
மனத்தாழ்ச்சியின் அமைதிப் போதகரான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
பெருந்தன்மைக்கு முன்மாதிரியாகத் திகழும் புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
இறைவனின் தாராள மனப்பான்மை மேல் பெரும் நம்பிக்கை கொண்ட புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
எதிர்நோக்கின் ஒளியும், கலங்கரை விளக்கமுமாகத் திகழும் புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
சிந்தனைக்கும் செயலுக்கும் முன்மாதிரியாகத் திகழும் புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கிறிஸ்தவ தாய்மார்களின் கண்ணாடியான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
இறை மகிழ்ச்சியின் பிரகாசமாக விளங்கும் புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
எங்கள் இனிமையானத் தாயான புனித அன்னை தெரேசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: செபிப்போமாக:
அன்பு தந்தையாகிய இறைவா, புனித அன்னை தெரேசாள் இவ்வுலகில் உமது இறைப்பற்றையும், தொண்டாற்றலையும் தமது முன் மாதிரிகையான வாழ்வால் நமக்கு வாழ்ந்து காட்டீனாரே. உம்மீது அவர் கொண்டுள்ள நிறைவான நம்பிக்கையின் மூலம் நாமும் ஒரு நாள் விண்ணுலக வாழ்வின் கிரீடத்தை அவரோடு பகிர்ந்து கொள்ள வரம் தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்
இறுதி செபம்
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை செபம் என்றும் நமக்கு கிடைக்கும்படியாக,
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
அனைவரும்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
அனைவரும்: தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
அனைவரும்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
விண்ணையும் மண்ணையும் படைத்தார்
உன்னையும் என்னையும் படத்தார்
விண்ணக அன்பை மண்ணகம் காண
ஓர் அன்னையை கொடுத்தார்
யாரிவள் யாரிவள் யாரோ
இறைவனின் மகளோ //
வெள்ளையாடை இரு நீல வரிகள்
எழ்மையின் சிகரம் கருணையின் உருவம்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா //
1. கடல் கடந்தாய் பாரதம் வந்தாய் எம் மண்ணிலே கலந்தாய்
கரம் விரித்தாய் எழைகளை நீ அன்புடனே அணைத்தாய் //
தனிமையில் வாடும் மனிதரிலே நீ இயேசுவையே கண்டாய்
நோயில் துடிக்கும் குஷ்டத்தில் இருக்கும் மனிதரில் இறை கண்டாய்
தனிமையில் வாடும் - நோயில் துடிக்கும்
மனிதரில் இறை கண்டாய்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா
யாரிவள் யாரிவள் யாரோ
இறைவனின் கொடையோ
2. உள்ளவனிடம் உன் உள்ளங்கை விரித்து ஏழைக்காய் நீ கேட்டாய்
அவனோ உமிழ்ந்தான், ஏளனம் செய்தான், உனக்காய் நீ பெற்றாய் //
சிரித்தாய், துடைத்தாய், மீண்டும் இரந்தாய், நொந்தான் மனம் வெந்தான்,
இயேசுவை கண்டான், உந்தன் உருவில், அனைத்தையும் உமக்களித்தான்.
மகிழ்வை சுவைத்தான் - இயேசுவை அணைத்தான்
உன்னில் இறை கண்டான்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா
யாரிவள் யாரிவள் யாரோ
இறைவனின் மகளோ
வெள்ளையாடை இரு நீல வரிகள்
எழ்மையின் சிகரம் கருணையின் உருவம்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா
அவளே அவளே எம் அன்னை
இறைவனின் மகளே!
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.