முதல்வர்: ➕அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்: ஆமென்.
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே!
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே!
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே!
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தொடக்கச் செபம்
முதல்வர்: செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும் செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களை கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும்.
இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ, எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும்.
முதல்வர்: மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும். மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறை நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத்தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும்.
ஆமென்.
குழுவினருடைய வேண்டுதல் (விண்ணப்பங்கள்)
முதல்வர்: ஓ! வீரம் மிகுந்த புனிதரே! எங்கள் அருளானந்தர் அடிகளாரே, உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் குருக்களுக்கும், திருத்தொண்டர், துறவியர், வேதியர் ஆகிய அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருள வேண்டுமென்று எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடியருளும்.
எல்: புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால், இவற்றை பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
முதல்வர்: இயேசு சபையின் ஒப்பற்ற மறைசாட்சியே! எங்கள் அருளானந்தர் அடிகளாரே, கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இவ்வுலகில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடியருளும்.
எல்: புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால், இவற்றை பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
முதல்வர்: எண்ணற்ற புதுமைகளைச் செய்யும் வள்ளலான எங்கள் அருளானந்தர் அடிகளாரே, துன்பத்தாலும், நோயாலும், வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்களைக் கண்ணோகியருளும். அவர்களுக்கு அன்பும், சமாதானமும், நிறைவான ஆசிரும் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடியருளும்.
எல்: புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால், இவற்றை பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
முதல்வர்: துன்பங்களைத் துணிவோடு எதிர்கொள்ளும் எங்கள் அருளானந்தர் அடிகளாரே, இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் அனைவருக்கும், அவர்களின் நோய்கள் எல்லாவற்றுக்கும் சுகமும், பராமரிப்பும், பூரணகுணமும் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடியருளும்.
எல்: புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால், இவற்றை பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
முதல்வர்: தர்மத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான எங்கள் அருளானந்தர் அடிகளாரே, இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் தூய ஆவியார் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று, கருணை கடலாகிய எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடியருளும்.
எல்: புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால், இவற்றை பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக் கூறுவோம்.
முதல்வர்: இறைவா, உம்மிடம் நாங்கள் சமர்ப்பித்த இவ்வேண்டுதல்களுக்கு கனிவுடன் செவிகொடுத்து, புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால் அவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள் தாரும். இதைத் தூய ஆவியுடன், ஒரே இறைவனாக என்றும் வீற்றிருப்பவரும், ஆட்சி புரிபவருமான, உம் திருமகன், எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித அருளானந்தரை நோக்கிச் செபம்
முதல்வர்: கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ் நாட்டின் மக்களாகிய எங்கள்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்.
எல்: புனித சவோரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லோருக்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துகளை எதிர்கொள்ளவும் சோதனைகளையும் சாவையும் உறுதியுடன் ஏற்றுக்கொண்டீர். உம்மை பின்பற்றி நாங்களும் புனிதராய் வாழ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
நன்றியறிதல்
முதல்வர்: விண்ணகத் தந்தையே, தமது தாழ்மையாலும், கீழ்ப்படிதலாலும் உமது அன்பைப் பெற்ற புனித அருளானந்தர் அடிகளாரை எமக்கு தந்தமைக்காக நன்றி கூறுகிறோம். தமது தவமிகு வாழ்வு, மிகுதியான ஆர்வம், மறைப்பணியில் தீவிரம் இவற்றின் விளைவாய் ஆயிரக்கணக்கானோரை, திருமறை தழுவ செய்த புனித அருளானந்தர் அடிகளாரே, உமக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். தமது செப வாழ்வால் மக்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்த அவரை எங்கள் பாதுகாவலராகத் தந்து ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வரும் உமது வல்லமை நிறைந்த நன்மைத் தனத்திற்காக தந்தையே உமக்கு நன்றி கூறுகிறோம்.
முதல்வர்: நோயாளிகளின் ஆதரவான புனித அருளானந்தர் அடிகளாரின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும்,
எல்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: மனத்தாழ்ச்சியின் பிம்பமான புனித அருளானந்தர் அடிகளார் வழியாக திருச்சபைக்கு நீர் வழங்கிய அனைத்து அருள் வரங்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும்,
எல்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், அவதிப்படும் மக்களுக்கும் தமது வாழ்வை அர்ப்பணித்த புனித அருளானந்தர் அடிகளாரின் மன்றாட்டால், அனைத்து மக்களுக்கும் நீர் கொடுத்த பாதுகாப்பிற்காக,
எல்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: துன்பங்களினால் துவண்டுவிடாத புனித அருளானந்தர் அடிகளாரின் மன்றாட்டால் நோயாளிகள் பெற்ற நலத்திற்காக,
எல்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள நன்மைகளுக்காக புனித அருளானந்தர் அடிகளாரின் வழியாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
நோயாளிகளை ஆசீர்வதித்தல்
முதல்வர்: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: அவரே பரலோகத்தையும் பூலோகத்கையும் படைத்தார்.
முதல்வர்: செபிப்போமாக.
எல்: ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும்; நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும்; நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து, உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
முதல்வர்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பாதுகாக்க நம் நடுவிலும், நம்மைக் காப்பாற்ற நமக்குள்ளும், நமக்கு வழிகாட்ட நம் முன்னும், நமக்கு காவலாயிருக்க நம் பின்னும், நம்மை ஆசீர்வதிக்க நம் மேலும் இருப்பாராக.
எல்: ஆமென்.
மன்றாட்டு மாலை
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாககேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அந்தோணியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தோமா அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: முக்தி பேறு பெற்ற கார்லோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மறைசாட்சியான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: போர்த்துகல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே, 1647-ல் உதித்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அரச சபையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையில்லாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும், 'வானதூதர்' என்றும், 'மறைசாட்சி' என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலினாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும் அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோ பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: 1673-ல்; பாய்மரக் கப்பலில் பயணமாகி, பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும், புன்முறுவல் மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: 14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து பகுதிகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும் துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்:: குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு, துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணி ஆற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பகைவர் உம்மைக் கொல்ல பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மறைசாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில், பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உயர் பொறுப்பிற்காக 1686-ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்கு திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயனமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690-ல் வந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புகழ்பெற்ற தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஓரியூரிலே 1693, பெப்ருவரி 4-ஆம் தேதி, புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான்-டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஆன்மப் பிணிகளையும், உடல்நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: இயேசு கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக,
எல்: புனித அருளானந்தர் அடிகளாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: செபிப்போமாக:
மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறைவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியை சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடுஅறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.
இறுதி செபம்
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும் படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை செபம் என்றும் நமக்கு கிடைக்கும்படியாகவும்...
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும், எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
இறுதி பாடல்
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே - 2
ஓரியூரின் ஒளிவிளக்கே தன்னுதின்னல் காவலரே - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே - 2
1.
இறைவன் அரசு பரவிடவே தன்னை முழுதாய் துறந்தவரே - 2
நீதியின் ஆட்சி மலர்ந்திடவே இன்னுயிர் தியாகம் புரிந்தவரே -2
இறை இயேசுவை உம்மை போல் ஏற்று தொடர்ந்திட அருள்புரிவாய் - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே – 2
2.
எளிய வாழ்வில் பனி புரிந்து மறவ நாட்டில் கலந்தவரே - 2
செந்நிற பூமியில் நற்செய்திக்காய் தன்னையே இழந்து ஒளிர்ந்தவா - 2
இனி உம் வழியில் யாம் நடந்திட நீரே காவலாய் தயை புரிவாய் - 2
வாழ்க வாழ்கவே உன் நாமம் வாழ்கவே - 2
வேதத்தின் சாட்சியாய் ஆனவரே, புனிதரே அருளானந்தரே - 2
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்: ஆமென்.