முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே!
அனைவரும்: ஆமென்.
தொடக்கச் செபம்
சிலுவைப்பாதை என்பது துன்பத்தின் பாதை, கரடுமுரடான பாதை, கண்ணீரின் பாதை மட்டுமல்ல. இது இயேசுவின் அன்பையும் தியாகத்தையும் எண்பிக்கும் பாதை.
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.” (மாற்கு 8:34) என்ற இயேசுவின் குரல்கேட்டு, அவரின் மதிப்பீடுகளின் வழி நடந்து, நம்மை சுமை தாங்கிகளாக அவரைத் தொடர அழைக்கும் பாதை. தவக்காலத்தில் மட்டும் நாம் நடத்தும் பாதையல்ல. தினமும் நாம் நடக்க வேண்டியப் பாதை.
இயேசுவின் பாடுகளை தியானித்து, கல்வாரி மலையில் உச்சம் தொட்ட அவரது அன்பினைச் சுவைக்க திறந்த உள்ளத்தோடு இச்சிலுவைப் பாதையில் இயேசுவைப் பின்செல்வோம்.
பழிகளை சுமத்தி பரிகசித்தார்
உயிர் பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
பழிகளை சுமத்தி பரிகசித்தார்!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கள்வனை பிடிப்பது போல, இயேசுவைப் பிடித்து வந்து தீர்ப்பிடுகின்றார்கள். பரிசேயரும் சதுசேயரும் பொறாமையினால் வெறிபிடித்த வேங்கைகளாக சூழ்ந்து நிற்க, யூத தலைமைச் சங்கத்தார் மற்றும் பிலாத்துவின் முன்னிலையில் கத்தாத செம்மறிபோல் இயேசு தனியாளாய் நிற்கிறார்.
பிலாத்துவிற்கு உண்மைநிலை தொ¢ந்திருந்தும், தனது மனைவியால் எச்சரிக்கப்பட்டும், நயவஞ்சகர்களுக்கு பயந்து பதவி ஆசையில் இயேசுவுக்கு சிலுவை மரணத் தீர்ப்பளித்து, முதுகெலும்பில்லாத கோழையாக கைகழுவுகின்றார். உரோமையின் ஆட்சியைவிட இறையாட்சி உயர்ந்தது என்பதை ஒருவரும் உணரவில்லை. பரபா என்ற கொலையாளியை விடுதலை செய்துவிட்டு, பாவமறியா பரிசுத்தரான இயேசுவைக் கொலைகளத்திற்கு அனுப்பும் அளவிற்கு இவர் செய்த குற்றம்தான் என்ன?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! நீதிக்கு உறுதுணையாக நிற்காமலும் நன்மை தீமை தெரிந்திருந்தும், முழு அறிவோடு தீமையைத் தேர்ந்து கொண்டதாலும் நாங்கள் கட்டிக் கொண்ட பாவங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
தாளாச் சிலுவை சுமக்க வைத்தார்
உம்மை மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
தாளாச் சிலுவை சுமக்க வைத்தார்!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: காண்போர் கண்டு வியக்கும் அளவுக்குக் கனமான சிலுவையை இயேசுவின் தோள்மீது சுமத்துகிறார்கள். உலகினரின் பாவமனைத்தும் ஒருசேர அவரின் தோள்மீது அமருகிறது. வேதனையின் மறு பெயர்தான் சிலுவை. விசாரணை என்ற பெயரில் அவர் அடைந்த அவமானமும், வினோதப் பிரியர்களின் வினாக்கள் தந்த வேதனையும், எல்லாவற்றிக்கும் மேலாக, குற்றமொன்றும் இல்லாதிருந்தும் அவருக்குக் கிடைத்த கொலைத் தண்டனையும் ஏற்கனவே உள்ளத்தை அழுத்திக் கொண்டிருக்க, இப்போது அவமானத்தின் சின்னமாகிய சிலுவை உடலையும் பதம்பார்க்கிறது.
ஆனாலும் பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதுபோல பாவப்பட்டச் சிலுவை, மகிமையின் சின்னமாக சிகரத்தைத் தொடுகிறது. காரணம் அப்பழுக்கில்லாத உண்மை அன்பினால் அது சுமக்கப்பட்டதால் புனிதமடைகிறது. நாம் சிலுவையைச் சுமத்துபவர்களா? சுமப்பவர்களா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! எம் சுயநலத்தின் சிலுவைகளை பிறர்மீது சுமத்தி, நான் மட்டும் மகிழ்ந்திருந்த நேரத்திற்காகவும், எம் குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஒருவர் மற்றவருடைய சுமைகளைப் புரிந்து கொண்டு, தோள்கொடுத்து உதவாமல் இருந்ததற்காகவும் எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
விழுந்தீர் சிலுவை பளுவோடு
மீண்டும் எழுந்தீர் துயர்களின் நினைவோடு
விழுந்தீர் சிலுவை பளுவோடு!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கால்கள் தடுமாறுகின்றன. கைகள் நடுங்குகின்றன. கண்கள் இருண்டுபோயின. தளர்ந்து போன நிலையில் முதன்முறை தரையில் சரிகிறார். அவர் தாகம் கொண்டவர். நம் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டு, கல்வாரி பலியால் நம்மை மீட்க வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் இலட்சியத்தாகம் அது. அதை நிறைவேற்றும் வேகம் கொண்டு எழுந்து நடக்கிறார். விண்ணிலிருந்து வந்தவரை மண்ணில் தள்ளி மிதிக்கும் நம் பாவநிலை மாறுமா? இதை நம் வீழ்ச்சி என்று உணர்ந்திடும் விவேகமும், மீண்டு எழுந்திடும் வேகமும் நம்மிடம் உண்டா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! வாழ்வின் துன்பங்களாலும், சோதனைகளாலும், நம்பிக்கையில் நடைதளர்ந்து வீழந்த நாங்கள், விதி என்று சொல்லி சோம்பேறிகளாய் கிடந்ததற்காக எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
தாங்கிட வொண்ணாத் துயருற்றே
உம்மைத் தாங்கிய அன்னை துயருற்றாள்.
தாங்கிட வொண்ணாத் துயருற்றே!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: ஒரு தாய் தன் சேயைக் காணக்கூடாத கோலத்தில் அன்னைமரியாள் இயேசுவைச் சந்திக்கிறார். குற்றவாளிபோல் தன்மகன் தெருவில் கழுமரம் தூக்கிச் செல்வதைக் கண்டு தொண்டையை அடைக்கும் துக்கம், இதயமே வெடித்துவிடும் வேதனை அவருக்கு. ஆசையாய் நட்டுவளர்த்த இளநாற்று அவசரமாய் அறுவடைக்கு தயாராகிவிட்டதே! என்று மரியாள் உள்ளம் குமுறுகிறார். கர்ப்பத்திலே காத்துக்கிடந்த கற்பனைகள் கண்முன்னே கருகுகிறது. ஆனாலும் இருவரின் சந்திப்பில் இறைவனின் திட்டம் இன்னும் திடப்படுகிறது. மீட்பிற்கான சிலுவையை இரு இதயங்களும் இணைந்தே சுமந்தன. துன்புறும் மகனுக்கு வெறும் ஆறுதல் கூற அன்னை வரவில்லை. அவரை உற்சாகப்படுத்தி உண்மையின் பாதையில் தொடர்ந்து செல்ல ஊக்கப்படுத்தவே அவர் வந்தார். அவர் கண்களில் கண்ணீர் தெறிக்கலாம், உள்ளத்தில் தெளிவான நிலை.
இந்த உறுதி இன்று எத்தனை தாய்மாருக்கு உண்டு?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! பெற்றத்தாய்க்கு பெருமையைத் தேடித்தருவதை விடுத்து அவமானம், அவமரியாதை தந்ததற்காகவும், உண்மை வழியில் நடக்க பிள்ளைகளை ஊக்கமூட்டாததற்-காகவும் எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மறுத்திட முடியா நிலையாலே
சீமோன் வருத்தினார் தன்னை உம்மோடு
மறுத்திட முடியா நிலையாலே!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: ‘வாருங்கள் அவரோடு போவோம், அவரோடு மடிவோம்’ என்றவர்களை கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவில்லை. அன்பின் வெளிப்பாடான முத்தத்தை நயவஞ்சகத்தின் வெளிபாடாக்கி காட்டிக் கொடுத்தான் ஒருவன்.
‘எல்லோரும் உம்மைவிட்டுப் போய்விட்டாலும், நான் உம்மைவிட்டு விலகமாட்டேன்’ என்றவர் மும்முறை மறுதலித்துவிட்டார். எனவே இயேசு துன்பம் குறைக்கும் துணையேதுமின்றி, தனியாளாய் சிலுவை சுமக்கிறார். இரும்பையும் இளகச் செய்யும் அவரின் பரிதாப நிலையைக் கண்டு கல்நெஞ்சம் கொண்ட கயவர்கள் பயப்படுகிறார்கள். எனவே அவர் வழியிலேயே இறந்திடாதிருக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோனை, சிலுவை சுமக்க கட்டாயப்படுத்தினர். தெய்வீகத்திற்கே மனிதனின் உதவி தேவையாகிறது. சீமோனின் உதவிடும் கரங்கள் இயேசுவோடு இணைய சிலுவைப் பயணம் தொடர்கிறது.
நமது கரங்கள் உதவிடும் கரங்களா? உபத்திரவத்தின் கரங்களா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! பிறருக்கு உதவி செய்வதில் பிறருக்காக கண்ணீர் சிந்துவதில் செயற்கைத் தனத்தோடு செயல்பட்டதற்-காகவும் பிறருக்கு உதவியாக இல்லாமல் தொல்லையாக செயல்பட்டதற்-காகவும் மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நிலையாய் பதிந்தது உம் வதனம்
அன்பின் விலையாய் மாதின் சிறுதுணியில்
நிலையாய் பதிந்தது உம் வதனம்!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இரத்த வியர்வையோடு புழுதியும் சேர்ந்து காய்ந்து போனதில் கோரமாக காட்சியளிக்கிறது இயேசுவின் முகம். கடுமையான களைப்பினால் கண்களும் மங்கிப்போயின. புனிதமுகம் காயங்களால் களையிழந்து காணப்படுவதைப் பொறுக்க முடியாமல், நிலவின் கலங்கம் துடைக்க வரும் வெண்மேகம் போல், தடைகளைத் தாண்டி குருதிபடிந்த இயேசுவின் முகத்தைத் துடைக்கிறாள் வெரோணிக்காள்.
அவர் கொண்டிருந்த அன்பு இத்தகைய துணிச்சலை அவருக்கு அளித்தது. தனக்கு என்ன நடக்கும்? என்பது பற்றிக் கவலையில்லாமல் என்னால் இயேசுவுக்கு எவ்வித உதவி செய்யமுடியம்? என்று மட்டுமே சிந்தித்து செயல்படுகிறார். தங்களில் பலமிருந்தும் பயத்தினால் பலவீனமாகி ஒதுங்கிச் செல்பவர்களுக்கும், பாதை மாறுகிறவர்களுக்கும் இவா¢ன் வீரச்செயல் ஒரு பாடம். பிறா¢ன் துயர் துடைக்கும் துணிவும், தூயநல் அன்பும் நம்மிடம் உண்டா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! அனைவா¢லும் இறைச்சாயலைக் கண்டு அன்பு செய்வதை விடுத்து அவதூறாய் பேசி, பிறரின் நற்பெயருக்கு கறை உண்டாக்கிய எம் செயல்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால்
அந்தோ சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால்!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கல்வாரி பாதையின் கற்கள் இயேசுவின் கால்களை இடருகின்றன. வசை பாடும் சொற்கள் அவரை வலுவிழக்கச் செய்கின்றன. வலியில் நாடி நரம்புகள் எல்லாம் ஆடி நடுங்குகிறது. உள்ளுக்குள் உயிர் ஒடுங்குகிறது. சிலுவை நடுங்கும் கரங்களிலிருந்து நழுவ, இரண்டாம் முறை தடுமாறி விழுகிறார். உடலின் வலுவின்மை உண்மைப் பாதையைத் தொடர தடைவிதிக்க முடியவில்லை. எனவே எடுத்த காரியம் முடிக்க, மறுபடியும் எழுந்து வீரத்தோடு நடக்கிறார்.
சோதனைகளுக்கும், தீமைகளுக்கும் எதிராக நாம் இலட்சியத்தில் நிலைத்து நின்றால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நமக்குப் பாடம் புகட்டுகிறார். வாழ்வின் சறுக்கல்களில் சறுக்கி விழுந்தாலும், உள்ளம் சோர்ந்து போகாமல் எழுந்து, இலட்சியங்களை நோக்கி நடைபயில நாம் தயாராக இருக்கின்றோமா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! நாங்கள் வீழ்ந்து கிடப்பதை உணராமலும், வீழ்ச்சியை ஏற்று மாற்றம் தேடாமலும், அதை மறைக்க விளக்கங்கள் கூறி வீணில் வாழ்ந்ததற்காக எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு
அன்பு மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: ஒரு வாரத்துக்கு முன்பு ‘ஓசன்னா’ என்று பாடி வரவேற்றவரை ஒரு கொலையாளியைப் போல கொடுமையாக இழுத்துச் செல்வதைக்கண்டு எருசலேம் நகரப் பெண்கள் உளம் நொந்து அழுகின்றனர். இம்மகளிரின் அழுகை இயேசுவின் வலியைக் குறைத்திருக்கலாம். ஆனால் மீட்பைப் பெற்றுக் கொள்ள நேரம் வரும்போது அழுகையா? ஏனென்றால் இச்சிலுவைப் பாடுகள். அவநம்பிக்கையிலும், பயத்திலும் சாவை நோக்கிச் செல்லும் சவ ஊர்வலம் அல்ல. மாறாக தமது ஆடுகள் வாழ்வு பெற, அதையும் நிறைவாய் பெற துன்பத்தை தாங்கி, துணிச்சலோடு இயேசு மேற்கொள்ளும் ஒரு புனிதப்பயணம்.
எனவே இவர்களின் கண்ணீரில் கலந்திருக்கும் மனிதாபிமானத்திற்கு இயேசு அங்கீகாரம் வழங்கி ஆறுதல் கூறினாலும், அவருக்காக அழவேண்டாம் என்கிறார். இயேசுவின் பாடுகளை தியானிக்கும் போதும், துன்புறும் மனிதரைக் காணும்போதும் நம்மில் வெளிப்படும் கண்ணீர் மனமாற்றத்தின் அடையாளமா? அல்லது ஏமாற்றுத்தனத்தின் வெளிவேடமா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! அழுவோரோடு அழாமல், பிறரின் துயர் கண்டு சந்தோஷப்பட்டும், சற்றும் பொறுத்தமில்லாத விமர்சனங்களை வழங்கியும், வாழ்ந்த நேரத்திற்காக எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர்
கால் ஊன்றி நடந்திடும் மெய் நொந்தீர்
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர்!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கல்வாரியை நெருங்கும் வேளையில் சிலுவையின் பளுவால் தோள்கள் துவண்டிட, களைப்பினால் கால்கள் நடக்க மறுத்து புரட்சி செய்ய, தாகத்தினால் நா வறண்டு இழுக்க இயேசு மூன்றாம் முறையாய், சிறகொடிந்த பறவையாய் கீழே விழுகிறார். மனிதர்கள் தவறிவிட்ட மாணிக்கத்தை, பூமித்தாய் பூரிப்போடு தாங்கிப்பிடித்து, கட்டியணைத்துக் கல்வாரிப்பலி நிறைவேற்ற வாழ்த்தி வழியனுப்புகிறாள். உண்மைக்குச் சான்றாகும் வரை ஊக்கம் குறைவதில்லை என்று, தொடர்ந்து கல்வாரி நோக்கி பயணிக்க, உறுதியோடு இயேசு எழுகிறார்.
இறைவார்த்தையாம் உண்மையைப் பற்றிக் கொண்டு வாழ்வதில், அதன்படி நடப்பதில் தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் நாளாக நாளாக நம்மில் குறைகிறது. உண்மைக்காக வாழ்க்கையில் வரும் துன்பங்களும், இடர்பாடுகளும் நமது மனவுறுதியை சிதைக்கின்றன. அப்போதெல்லாம் நாம் முதுகெலும்பற்ற மனிதராய் முடங்கி, அடங்கி போகிறோமா? அல்லது முயன்று எழுகிறோமா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! இறையரசு பயணத்தில் இன்னல்கள் இடர்பாடுகளைச் சந்திக்கும் போது, சாட்சிய வாழ்விலிருந்து பின்வாங்கி, நம்பிக்கை இழந்து வாழந்த நிலைக்காக எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர்
இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர்!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இயேசுவின் ஆடை, விலைமதிப்பில்லாத அவரது இரத்தத்தில் நனைந்து, காயங்களோடு ஒட்டிக் காய்ந்து போனது.. கயவர்களின் வெறிச்செயலால், அவரின் சதையும் நார்நாராய்க் கிழிகிறது. ஒரு ஆடு வெட்டப்பட்ட பின்புதான் தோலுரிக்கப்படும். அஃறிணைக்கு காட்டப்படும் அன்புகூட ஆண்டவனுக்கு காட்டப்படவில்லை. அரக்கத்தனத்தின் உச்சக்கட்டம் இந்த அவமானச் செயல்! பன்னிரண்டு ஆண்டுகள் இரத்தப்போக்கால் துன்புற்ற பெண்ணின் இரத்தப்போக்கை நிறுத்திய ஆடை, இயேசுவின் இரத்தமடைகளைத் திறக்கிறது.
இன்று உலகில் நடக்கும் அனைத்து உரிமை பறிப்புச் செயல்களும், ஆண்டவாரின் ஆடைகளைக் களையும் அவமானச் செயல்களே. நம்மில் புறணி மற்றும் அவதூறு பேசும் ஒவ்வொருவரும் அடுத்தவரை நிர்வாணமாக்கி இழிவுபடுத்துகின்றோம். நமது வாழ்க்கைச் சூழலில் அநீதியைக் கொண்டு நீதியை உரிக்கும் போது, துணிச்சலோடு நின்று ஆயனுக்குச் சான்று பகர்கின்றோமா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! பிறரை நிந்தித்து அவமானப்படுத்தி, அவர்களின் சுதந்திர ஆடையைக் களைந்து அடிமையாக்கி, தன்மானத்தை இழக்கச்செய்த எம் செயல்களுக்காக எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பொங்கிய உதிரம் வடிந்திடவே
உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
பொங்கிய உதிரம் வடிந்திடவே
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இரக்கமற்ற அரக்கர்கள் இயேசுவை சிலுவையில் கிடத்தி, கைகளிலும் கால்களிலும் ஆணி அடிக்கிறார்கள். ஓங்கி அடிக்கும் ஒவ்வொரு முறையும் அவா¢ன் நாடி நரம்பெல்லாம் அறுந்து போகிறது. கொப்பளித்து வெளியேறும் குருதியில் உயிர் தத்தளித்துத் துடிக்கிறது. மீட்பின் கீதம் நாம் கேட்க இந்த மூங்கில் தன்னையே துளையிடத் தருகிறது.
முடக்குவாதமுற்றவனை நடக்க வைத்தவர், ‘இரையாதே’ என்று புயலையும் அடக்கியவர், ஆணிகளுக்கு நடுவே சிக்குண்டு அடக்கமாய் கிடக்கிறார். இந்த அமைதியின் அரசருக்கு சிலுவைதான் சிம்மாசனம். முள்முடிதான் மணிமுடி. ஆணிகள் தான் செங்கோல். உண்மையின் அரசை சேர்ந்த அனைவருக்கும் அவைகளே அளவுகோல். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழிவாங்கும் கலாச்சாரத்தைக் கடைபிடிக்கும் நமக்கு அமைதியை, மன்னிப்பை சிலுவையிலிருந்து போதிக்கின்றார். இன்றும் மனிதர் தம் சுயநலத்தால், பொறாமையினால், அதிகார ஆசையால் மனசாட்சி இன்றி மற்றவர்களை ஆணிகளுக்கு இரையாக்கும் போது தட்டிக் கேட்கும் துணிவு நம்மிடம் உண்டா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! பணபலம், படைபலம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உண்மையை கொணர்வோரை அலட்சியப்படுத்தி பலியாக்கிய தருணங்களுக்காக எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
இன்னுயிர் அகன்றது உமைவிட்டு
பூமி இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
இன்னுயிர் அகன்றது உமைவிட்டு!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கல் தூணில் கட்டி அடித்து, முள்முடிச் சூட்டி பளுவான சிலுவையைச் சுமத்தி, ஆணிகளால் அறைந்து இயேசுவுக்கு அவர்கள் தந்த ஆறுமணிநேர வேதனை முடிவு பெறுகிறது. அன்று சிலுவையில் அறைவதில் இரு வழக்கங்கள் இருந்தன. நகருக்குள், “எங்கள் சமூகத்தவர்கள்“ என்றும், நகருக்கு வெளியே “எங்கள் சமூகத்தவன் அல்ல” என்றும் அறைவார்கள். இதில் இயேசுவை இரண்டாம் வகை மனிதனாகவே நினைத்து செயல்பட்டனர். தரணியோர் அனைவரையும் தாங்கிட வந்தவர் இயேசு. ஆனால், தாங்கும் தண்ணீரை தாங்காத தாமரையாக அவரை உதறிவிட்டு, கிழித்து நகருக்கு வெளியே தூக்கியெறிந்து விட்டனர். களிமண் குயவனைக் கூறுபோட்டு விட்டது. சிலைகள் சேர்ந்து சிற்பியைச் சிதைத்து விட்டன.
உயிர்பிரியும் நேரத்திலும், தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்து அன்பையும், மன்னிப்பையும் போதிக்கிறார். தனது தாயை நமது தாயாக அளித்து தனது வள்ளல் தன்மையை வெளிப்படுத்துகின்றார். ‘எல்லாம் நிறைவேறிற்று’ என்று தந்தையிடம் தன்னை ஒப்படைத்து கீழப்படிதலைக் கற்றுத்தருகிறார். கற்றுக் கொள்ள நாம் தயாரா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! மனம் பொருந்திய அலட்சியத்தால் உம்மை உதாசினப் படுத்தியதற்காகவும், அன்பு, மன்னிப்பு, பரிவு, கீழப்படிதல் போன்ற உமது சிலுவையின் படிப்பினைகளை மறந்ததற்காகவும் எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
துயருற்றுத் துடித்தார் உளம்நொந்து
அன்னை உயிரற்ற உடலினை மடிசுமந்து
துயருற்றுத் துடித்தார் உளம்நொந்து
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: நாடியடங்கிய நாதன் இயேசு, சிலுவை அடியில், தாயின் மடியில் கிடத்தப்படுகிறார். மனித சாயலே இல்லாதவாறு சிதைக்கப்பட்ட தன் மகனை எலும்பும் தோலுமாக வாரி அணைக்கிறார், அன்னை மரியாள். தாய்மை இங்கே தவியாய்த் தவிக்கிறது. கல்லறைக்குச் செல்லும்முன் அவரின் சடலம் தாயின் கண்ணீரால் கழுவப்படுகிறது ‘கருவறை முதல் கல்லறை வரை’ தன் மகனை நிழலாய்த் தொடர்ந்து வார்த்தையைக் கேட்டு வாழ்வாக்கியவர். இந்த அன்னை கானாவூர் திருமணத்தில் கடவுளின் திருவுளம் வெளிப்பட காரணமாயிருந்தவர், கல்வாரியிலும் கடவுளின் மாட்சி வெளிப்படும் நாளை எண்ணிக் காத்திருக்கிறார்.
ஆதியிலே ஏவாள் அலகையின் வார்த்தையைக் கருத்தரித்து கீழ்படியாமையையும் சாவையும் பெற்றெடுத்தாள். அன்னை மரியாவோ, ஆண்டவாரின் வார்த்தையை கருத்தரித்து கீழப்படிதலையும் வாழ்வையும் பெற்றெடுத்தவர். இயேசு இறப்பைத் தழுவினாலும், ஆண்டவர் வாக்களித்ததை நிறைவேறும் என்று இப்போது இன்னும் அதிகமாக நம்புகிறார். இறைவிருப்பத்திற்கு கீழ்ப்படிவதில் இந்த நம்பிக்கை நம்மிடம் உள்ளதா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாமலும், இறை விருப்பத்திற்கு கீழ்ப்படியாமலும் நம்பிக்கையின் நாயகியாகிய அன்னை மரியாளை அலட்சியப்படுத்தியும் நாங்கள் கட்டிக்கொண்ட பாவங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு
நீர் அடங்கிய கல்லறை உமதன்று
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு!
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இயேசுவின் சீடருள் ஒருவரான அ¡¢மத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு, பிலாத்துவிடம் அனுமதிப் பெற்று இயேசுவின் உடலை எடுத்து யூத முறைப்படி நறுமண பொருட்களுடன் துணிகளால் சுற்றி புதிய கல்லறையில் அடக்கம் செய்தார். ‘மனுமகனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை’ என்ற கூற்று இங்கு உண்மையாகிறது. முதலும் முடிவும் இல்லாத, அதாவது சாகாத்தன்மை கொண்ட இறைவன், மனித நிலைக்கு இறங்கி சாவை ஏற்றுக் கொண்டார் என்றால், இது நமக்காக அவர் ஏற்றக் கொண்ட சாவு. நாம் அழியாமல் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள ஆயனின் உயிர்த்தியாகம் இது.
சாவுக்கு சமாதிக்கட்ட, சமாதிக்குள் முடங்கி, மூன்றாம் நாளில் முடிசூடப்போகும், இயேசுவின் மௌனத்தை இக்கல்லறை பிரதிபலிக்கிறது. உயிர்ப்பிலே நம்பிக்கை வைத்து நம் வாழ்வை நெறிப்படுத்த நாம் தயாரா?
செபம்:
அனைவரும்: அன்பு இயேசுவே! எங்களில் நீதியானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ அவற்றைப் புதைத்து, போலியாய் வாழ்ந்த நேரங்களுக்காக எங்களை மன்னித்தருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
முதல்வர்: சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலையிலும் இயேசு நமக்குத் தரும் படிப்பினையையும், நாம் தவறவிட்ட வாழ்க்கை முறையையும் சிந்தித்தோம். அளவில்லா அன்பினால் நமக்காக சிலுவையை அரவணைத்த இயேசு, நம் குற்றங்குறைகளை மன்னிக்கின்றார். அவரின் திரு இரத்ததினால் கழுவப்பட்ட மக்களாக, தூய வாழ்வில் தடம் பதிப்போம். தொடரும் வாழ்க்கை பயணத்தில் கல்வரியைத் துணிவோடு மேற்கொள்வோம்.
செபிப்போமாக!
எங்கள் தந்தையாகிய இறைவா! உயிருள்ள நிலைவாழ்வில் உம்மோடு ஒன்றித்திருக்க, உமது இறப்பிலும் நாங்கள் ஒன்றித்திருக்கிறோம். ஆண்டவரே, பாவ வழிகளிலிருந்து விலகி, உமது பரிசுத்த வழிகளில் வளர எங்களுக்குக் கற்றுத் தாரும். ஆமென்.
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக மன்றாடுவோம்!
➕ ஒரு பரலோக மந்திரம்
➕ அருள் நிறைந்த மந்திரம்
➕ திருத்துவ செபம்.
முதல்வர்: இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்- தத்தங்களுக்கு, நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, புனித வியாகுல மாதாவே!
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.