பெரிய வியாழன்: நற்கருணை ஆராதனை
நித்திய ஸ்துதிக்குரிய... பரிசுத்த நற்கருணைக்கு...
பக்தியாய் ஆராதனை... எத்திசையும் புரிவோம். (மூன்று முறை)
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
முன்னுரை:
நற்கருணை, கடவுள் நம் அனைவருக்கும் அளிக்கும் வாழ்வு தரும் உணவு. எந்நாளும் நம்மோடு குடிகொள்ள ஆவல் கொண்ட இயேசு நிறுவிய அன்பின் அருட்சாதனம். நம்மிடையே அன்புறவையம், தோழமையையும் வளர்க்கும் திரு உணவு. ஆம்! நற்கருணை நமது கிறிஸ்துவ வாழ்வின் மையம். இந்த ஆராதனையில் பங்கேற்கும் நாம், இந்த மாபெரும் உண்மைகளை ஆழமாக உணர்ந்து, நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்வோம். இதன் வழியாக நமது நம்பிக்கையை உலகிற்குப் பறைசாற்றுவோம்.
பாடல்:
அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்
அன்பின் தேவ நற்கருணையிலே
1.
அற்புதமாக எமைப் படைத்தீர். தற்பரன் நீரே எமை மீட்டீர்.
பொற்புடன் அப்ப இரச குணத்தில் எப்பொழுதும் வாழ் இறைவனானீர்.
எத்தனை வழிகளில் உமதன்பை எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்.
2.
கல்வாரி மலையின் சிகரமதில் கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்.
நற்கருணை விசுவாசமதில் நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்.
இளமையின் பொலிவால் வளர் திருச்சபையும் யாவரும் வாழத் தயை புரிவீர்.
3.
ஞானம் மிகுந்த எம் பாத்திரத்தில் நல்லொளி பாய்ச்சும் இறைவனே நீர்.
ஞாலமெல்லாம் இருள் நீங்கிடவே நாடுகள் வீடுகள் எங்கணுமே,
நலம் பல பொழிவீர் நல் தேவா நற்கருணை வாழ் நாயகனே.
உங்கள் பதில்: உம்மைப் போற்றுகின்றோம்.
வானினின்று இறங்கிய உணவே...
திவ்விய நற்கருணை நாதரே...
அன்பினால் வருவான திருவுடலே...
தியாகத்தின் திருவடிவே...
கல்வாரியின் நினைவகமே...
பாவங்களுக்கு பலியான பலிப்பொருளே...
சிறந்தத் திருவருட்சாதனமே...
திருப்பலியின் மகிமையே...
ஜீவனுள்ள அப்பமே...
தெய்வீகத் திருவிருந்தே...
நாவினிற்கினிய வானமுதே...
ஆன்மாவின் அருமருந்தே...
எம்மிதயப் பேழையில் வாழ்பவரே...
புலன்களால் காணா தெய்வமே...
அவஸ்தையில் குணமளிக்கும் மருத்துவரே...
வானோரின் திவ்விய சற்பிரசாதமே...
எமக்காகக் காத்திருக்கும் என்னவரே...
பாடல்:
பாடிடுவேன் போற்றிடுவேன் இயேசு பிரான் உம்மையே
தாயும் நீரே தந்தையும் நீரே நாளும் என் துணை நீரே
1.
எனக்காக உலகில் வருவீர், என் நிலை கண்டு வாழ்வு தருவீர்
உமக்காக என்றும் வாழ்வேன், உமதன்பைச் சொல்லி மகிழ்வேன்
2.
மலை போல துன்பம் வரட்டும், அதைப் பனி போல நீரே அகற்றும்
எனக்கென்று ஏதும் இல்லை, நான் என்றென்றும் உமது பிள்ளை
நற்செய்தி:
தூய மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (26:26-28).
அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த பொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள். இது எனது உடல்” என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்!” என்றார்.
இது கிறிஸ்து நமக்கு வழங்கிய மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
பாடல்:
ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன், அதைப் பாமாலையாக நான் சூட்டுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நான் ஆகுவேன், உந்தன் புகழ் பாடி புகழ் பாடி நான் வாழுவேன்
1.
மன வீணை தனை இன்று நீ மீட்டினாய் அதில் மலர் பாக்கள் பல கோடி உருவாக்கினாய் - 2
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே... ஆ...
அதில் எழும் இராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே
ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே
2.
இளம் காலைப் பொழுதுந்தன் புகழ் பாடுதே அங்கு விரிகின்ற மலர் உந்தன் புகழ் பாடுதே - 2
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம்... ஆ...
வந்து கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம்
ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே
செபம்:
அளவற்ற அன்புக்குரிய இயேசுவே! நீர் வெளிப்படுத்தியதும், திருச்சபை போதிப்பதும், மறைபொருளுமான திவ்விய நற்கருணையில் நீர் மெய்யாகவே எழுந்தருளியிருக்கின்றீர் என்று உறுதியாக விசுவாசித்து உம்மை ஆழ்ந்த வணக்கத்துடனே ஆராதிக்கின்றோம். திருச்சபைக்கு எதிராக சொல்லப்படும், செய்யப்படும் குற்றங்களுக்குப் பரிகாரமாகவும், தேவ அழைத்தலுக்கு விரோதமான பாவங்களுக்குப் பரிகாரமாகவும், நாங்கள் காண்கின்ற திருப்பலிகளை மிகவும் பக்தியுடன் கண்டு உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம் சுவாமி…
மண்ணக மக்களுக்குச் சத்தியத்தைத் தெரிவிக்கின்ற என்றும் வாழும் ஞானமாகிய இயேசுவே! அளவற்ற தாழ்ச்சி வணக்கத்துடனே உம்மை ஆராதிக்கின்றோம். உலகின் சமாதானத்திற்கும், நீதி, நேர்மை, உண்மை ஆகிய புண்ணியங்களுக்கு எதிராக செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாக நாங்கள் நீதி, நேர்மையும் நடந்து, எங்கள் அன்றாட ஜெபத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம் சுவாமி…
தூய்மை அனைத்திற்கும் ஊற்றாகிய இயேசுவே! இளைஞர்களும், இளம் பெண்களும் புரிகின்ற கற்புக்கு எதிரான பாவங்களும், போதைப் பொருளுக்கு அடிமையாகி செய்யப்படுகின்ற பாவங்களுக்குப் பரிகாரமாகவும், நாங்கள் எங்கள் குழற்தைகளை கிறிஸ்துவ நெறியில் உமக்கு உகந்தவர்களாக வளர்க்க வாக்களிக்கின்றோம் சுவாமி…
தூய அன்பின் திருவருட்சாதனமாகிய நற்கருணையில் வீற்றிருக்கும் திவ்விய இயேசுவே! நாங்கள் முழு மன அன்புடனே உம்மை ஆராதித்து, நட்புக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களுக்கும், திருமணம் என்னும் அருட்சாதனத்திற்கு எதிராக நடக்கும் பாவங்களுக்கும் பரிகாரமாக, நாங்கள் பிறருடன் உண்மையான நட்பு கொண்டு பழகியும், கணவன் மனைவியிடையே நிலையான அன்புறவு கொண்டு வாழ்ந்து உமக்கு ஆறுதல் அளிக்கின்றோம் சுவாமி…
குறையாத கருணைக்கடலாகிய திவ்விய இயேசுவே! அத்தியந்த பக்தியுடனே உம்மை ஆராதித்து, பரம திருவருட்சாதனமாகிய நற்கருணையை நீர் உணடாக்கின நாள் முதல் இன்றைய நாடகளிலும், இனி வரும் நாட்களிலும் நற்கருணைக்குச் செய்திட்ட அவமரியாதைக்கு பரிகாரமாக, நற்கருணையை மிகுந்த பக்தி வணக்கத்துடனே உட்கொண்டு உம்மை மகிமைப்படுத்துகின்றோம் சுவாமி…
நித்திய மகிமைக்கு இருப்பிடமான கன்னித்தாயின் திருக்குமாரனாகிய இயேசுவே! அன்னை மரியாளுக்கு எதிராக செய்த அனைத்துக் குற்றங்களுக்குப் பரிகாரமாக எமது குடும்ப ஜெபத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம் சுவாமி…
பாடல்:
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் - 2
1.
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
2.
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
3.
ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
4.
தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
இறைவன் நமக்கு செய்த நன்மைகளுக்கு நன்றி கூறி இப்பாடலை அனைவரும் இணைந்து பாடுவோம்.
பாடல்:
நன்றியால் துதிபாடு நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர்
1.
எரிகோ மதிலும் முன்னே வந்தாலும் இயேசு உந்தன் முன்னே செல்கிறார் - 2
கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்து விடும் - 2
2.
செங்கடல் நம்மை சுழ்ந்து கொண்டாலும் சிலுவையின் நிழல் உண்டு - 2
பாடிடுவோம் துதித்திடுவோம் பாதைகள் கிடைத்துவிடும் - 2
நித்திய ஸ்துதிக்குரிய... பரிசுத்த நற்கருணைக்கு...
பக்தியாய் ஆராதனை... எத்திசையும் புரிவோம். (மூன்று முறை)
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.