தொடக்க வழிபாடு
அன்பே கடவுள் என்றால்
அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால்
அன்புக்கு விலையேது சொல்
மண்ணோர்கள் மொழி பேசினும்
அன்புக்கு ஈடாகுமா -2
விண்ணோர்கள் மொழி பேசினும்
அன்புக்கு ஈடாகுமா
இறைவாக்குச் சொல்வரமும்
அன்புக்கு ஈடாகுமா -2
மறைபொருள் உணர்பொருளும்
அன்புக்கு ஈடாகுமா
குரு: இந்த வீட்டிற்கும் இங்கு வாழ்வோர் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக. தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்: ஆமென்.
குரு: விண்ணகத் தந்தையின் பரிவும், அவரது திரு மகனின் அன்பும், தூய ஆவியாரின் அருளும் உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
குரு: அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இந்தச் சடங்கிலே நாம் அனைவரும் தகுந்த முறையில் பங்குபெற்று இறை அருளைப் பெற, நம் பாவங்களை நினைத்து மனம் வருந்துவோம்.
குரு: அனைத்தையும் படைத்த ஆண்டவரே, இரக்கமாயிரும்...
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
குரு: பாவிகளைத் தேடி மீட்க வந்தக் கிறிஸ்துவே, இரக்கமாயிரும்...
எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
குரு: ஆறுதல் தரும் ஆண்டவரே, இரக்கமாயிரும்...
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்: ஆமென்.
குரு: மன்றாடுவோமாக...
எல்லாம் வல்ல விண்ணகத் தந்தையே, இந்த வீடு, இதில் வாழ்வோர், இங்குள்ள பொருள்களுக்காக உம்மை மன்றாடுகிறோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் இல்லங்களை நீர் ஆசீர்வதிக்கத் திருவுளம் கொண்டது போல, இந்த வீட்டையும் இங்குள்ள அனைவரையும் இங்குள்ள பொருள்களையும் நீர் ஆசீர்வதித்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
முதலாம் வாசகம்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள் வாக்கு
எல்: இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப்பாடல்
ஒருவர்: நீதிமான்களே, ஆண்டவரில் களி கூருங்கள். நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழ் இசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
எல்: ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
ஒருவர்: ஆண்டவரின் வாக்கு நேர்மையானது. அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார். அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
எல்: ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
ஒருவர்: நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமுமாவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களி கூரும். ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
எல்: ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
நற்செய்தி வாசகம்
குரு: யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.
எல்: ஆண்டவரே மாட்சி உமக்கே.
குரு: அக்காலத்தில் இயேசு கூறியதாவது: 'என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்து இருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை."
குரு: இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
மன்றாட்டுக்கள்
குரு: இயேசுவில் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, உலகெங்கும், சிறப்பாக இந்த வீட்டில் உண்மையான அன்பு என்றும் தொடர்ந்து வளர மன்றாடுவோமாக.
ஒருவர்: உலகிலும் திரு அவையிலும் அமைதி நிலவவும், திரு அவையின் ஒற்றுமை மேன்மேலும் வளரவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: இக்குடும்பத்திலுள்ள அனைவரும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் அன்போடும் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட இவர்கள் அனைவரும் உமது திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாக விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசீர்வதித்து, அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து, சமுதாயத்தில் செழித்தோங்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: எங்கள் குடும்பத்தில் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் நிலைவாழ்வைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு: நமது சொந்தக் கருத்துகளுக்காக சற்று மௌனமாக மன்றாடுவோம்.
குரு: அனைத்துக் குடும்பங்களையும் காத்துப் பராமரித்து ஆட்சி செய்யும் இறைவா, இக்குடும்பத்தினர் உம் திருமுன் சமர்ப்பித்த இம்மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்து, உம் திருவுளப்படி இவர்களது இதயத்தின் ஆவல்களை நிறைவேற்றுவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
இயேசுவின் திரு இருதயத்திற்க்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம்
இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவரேனும் உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தப்பியருக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, உமது விசாரணையில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், அவர்களுடைய திரு இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க உம்மை மன்றாடுகிறோம் .
திவ்விய இயேசுவே! முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். ஆமென்
முதல்வர்: இயேசுவின் திரு இருதயமே
பதில்: என் நம்பிக்கையெல்லாம் உமது பேரில் வைக்கிறேன்
முதல்வர்: இயேசுவின் திரு இருதயமே
பதில்: என் நம்பிக்கையெல்லாம் உமது பேரில் வைக்கிறேன்
முதல்வர்: இயேசுவின் திரு இருதயமே
பதில்: என் நம்பிக்கையெல்லாம் உமது பேரில் வைக்கிறேன்
ஆசி நீர் தெளித்தல்
குரு: மன்றாடுவோமாக...
எல்லாம் வல்ல விண்ணகத் தந்தையே, இந்த வீட்டையும், இங்கு வாழும் அனைவரையும், இங்குள்ள பொருள்களையும் நீர் ஆசீர்வதித்தருளும். எல்லாத் தீமைகளிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றியருளும். உமது அமைதியை இவர்கள் மீது பொழிந்து, என்றும் உம் தூய ஆவியை இவர்கள் மீது தங்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: நாம் பெற்றத் திருமுழுக்கை இந்தப் புனித நீர் நினைவுபடுத்துவதாக. தமது பாடுகளாலும் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் இது நமக்கு நினைவுபடுத்துவதாக.
எல்: ஆமென்.
குரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்பித்தவாறே, நாம் நம் விண்ணகத் தந்தையை நோக்கி நம்பிக்கையுடன் மன்றாடுவோம்.
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே,
தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
இறுதி ஆசீர்
குரு: விண்ணகத் தந்தை உங்கள் மீது அன்பு கூர்ந்து உங்களுடன் வாழ்வாராக...
எல்: ஆமென்.
குரு: இறை மகன் உங்களோடு தங்கி, உங்களுக்கு தம் அமைதியை அருள்வாராக...
எல்: ஆமென்.
குரு: தூய ஆவியார் உங்கள் மீதிறங்கி உங்களுக்கு அனைத்தையும் கற்பிப்பாராக.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து என்றென்றும் காப்பாராக...
எல்: ஆமென்.
நிறைவுப் பாடல்
மாதாவே ! துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்.
வானோர் தம் அரசே ! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.
ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்.
இயேசுவின் மதுரமான இருதயமே
எங்கள் மேல் இரக்கமாயிரும்
மரியாளின் மாசற்ற இருதயமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித சூசையப்பரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித பிரான்சிஸ் அசிசியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித கிளாரம்மாளே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோணியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அருளானந்தரே
எக்காக வேண்டிக்கொள்ளும்
புனித தேவசகாயம் அடிகளாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அன்னை தெரேசம்மாளே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித குரியாகோஸ் அடிகளாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அல்போன்சம்மாளே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித தோமையாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே,
➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து ,
➕ எங்களை இரட்சித்தருளும்,
எங்கள் சர்வேசுரா!
➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே. ஆமென்.