இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
திரும்பிப் பார்க்கமாட்டேன் - 2
சிலுவையே முன்னால் உலகமே பின்னால் - 2
இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே
அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை அடியேன் உள்ளத்திலே
ஆண்டவர் இயேசு அடைக்கலப் பாறை ஆதலின் குறையில்லை
ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால் - 2
அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே
தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம்
சேயர்கள் நம்மைச் செவ்வழி நடத்தும் தெய்வம் அவரன்றோ
ஆயனே முன்னால் அலகையே பின்னால் - 2
அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே
ஆறுதல் அடைந்தேனே
முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே!
அனைவரும்: ஆமென்.
அளவில்லாத அன்பும், கரை கடந்த கருணையும் கொண்ட இறைவா! உம் ஒரே மகனை எமக்காகப் பலியாக்கினீர். அவர் நடந்து சென்ற கல்வாரிப் பாதையின் காட்சிகளை தியானிக்க இருக்கின்ற எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். அன்றாட வேலைகளின் அவசரத்திலும், களைப்பிலும் உம்மைத் தேடி வந்திருக்கிறோம்.
இயேசு அனுபவித்த ஒவ்வொரு துயரமும், வேதனையும் எனக்காக என்பதை உணரச்செய்யும். அவருடைய பாடுகளோடும் மரணத்தோடும், என் கஷ்ட நஷ்டங்களை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். நானே விரும்பி, முயற்சி எடுத்து உமது சிலுவைப் பயணத்தில் தொடரும் எனக்கு, வலிமையைத் தாரும். தன்னையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு எங்களுக்கு நிகராக வாழ்ந்த இயேசு, எங்களைப் போன்றே துன்புற்றார். அவரது உடல் வேதனைகளும், உள்ள வேதனைகளும், எங்களின் ஈடேற்றத்திற்கே என்பதை நாங்கள் உணர்ந்துக்கொண்டு திருந்தி வாழ அருள்தாரும்.
உமது மகனின் சிலுவை பாதை தரும் நம்பிக்கையும், பலமும் எங்களின் வாழ்க்கை சூழல்களில் எங்களுக்கு உதவுவதாக, மனப்பாரங்களும், கவலைகளும், அச்சுறுத்தல்களும் அவநம்பிக்கையும் நிறைந்த எங்கள் வாழ்க்கையில் அவரின் பாடுகள் திடம் தருவதாக.
நாங்களும் எங்கள் குடும்பமும், எங்களைச் சார்ந்த அனைவரும், உம் திருச்சிலுவை தரும் வெற்றியை அனுபவிக்க, அருள் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக, உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
இயேசு அநியாயத் தீர்வையிடப் படுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்
செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: நான் உண்மையை உலகிற்கு காட்ட வந்தேன். நானே உண்மையும் உயிரும், வழியும் ஒளியும், உண்மைக்கு சாட்சியாக வந்த என்னை, இந்த உலகம் தீர்ப்பிடுகின்றது. இவ்வுலகத்தின் செயல்களுக்கு தீர்ப்புக் கூற வேண்டியவன் நானிருக்க, இவ்வுலகம் எனக்கே தீர்ப்பிடுகின்றது. அதுவும் அநியாயத் தீர்ப்பு.
இங்கு குழுமி இருப்போரே ஒவ்வொரு முறையும் உங்கள் அயலாரையும், அறியாதோரையும், அப்பாவிகளையும், குற்றம் சாட்டும் போதும், குறை கூறித் தூற்றும் போதும், பழிசுமத்தி பரிகசிக்கும் போதும் என்னையே குற்றம் சாட்டுகிறீர்கள், காறி உமிழ்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
செபம்:
அனைவரும்: அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்ட இயேசுவே! நீர் நல்லவர் என்றும், குற்றமற்றவர் என்று தெரிந்தும், பழிவாங்கும் உணர்வோடும், பகைமை மனத்தோடும் செயல்பட்ட நெஞ்சங்களைப் போன்று நானும் செயல்படுகின்றேன்.
நானும் குறையுள்ளவன் என்பதை மறந்தும், மறைத்தும் வாழ்ந்திருக்கின்றேன். பிறரில் நல்லதைக் காணும் நல்ல உள்ளம் எனக்கு தாரும். என் பழிச் சொற்களால் அவமானத்துக்கு ஆளான அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்தி இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
தாளாச் சிலுவை சுமக்க வைத்தார், உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் தோள்மீது பாரச்சிலுவையைச் சுமத்துகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: உண்மையை உலகிற்கு காட்டவும், நீதியை நிலை நாட்டவும், அன்பை விதைக்கவும், நன்மையை நாடச் செய்யவும் வந்த எனக்கு, அன்று நீங்கள் தந்த பரிசு பாரச்சிலுவை. இன்றும் இறையடியார்-களுக்கும், சமூகத் தொண்டர்களுக்கும், நீதிமான்களுக்கும், நற்பணி ஆற்றுவோருக்கும், இடையூறாகவும், அவர்களுக்கு அவப்பெயரை கொணர்பவர்களாகவும் இருக்கின்றீர்களே! பிறரின் துன்பத்தில் இன்பம் காணும் கல் மனம் கொண்டவர்களாய் வாழ்வது ஏன்? எண்ணிப் பாருங்கள்.
செபம்:
அனைவரும்: சிலுவையை தோளில் சுமந்த இயேசுவே! பிறரின் சுமைகளை, மனக் குறைகளை
தாங்கியவர் நீர். ஆனால் உம்மீது பாரச்சிலுவை சுமத்தப்படுகின்றது. பிறரின் துன்பம் தாளாது அழுபவர்நீர்.
கஷ்டப்படுவோரின் கண்ணீரைத் துடைத்தவர் நீர். உன் கண்களிலோ முள் முடியின் காயங்களால் வழியும்
இரத்தம்.
இயேசுவே! பிறரை துன்புறுத்தாமல் பிறரின் துன்பத்தில் பங்கெடுக்கும் நல்ல பிறவியாக என்னை மாற்றும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய
இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
விழுந்தீர் சிலுவை பளுவோடு, மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்
செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: உன் குற்றங்களும், பாவங்களும் எத்தனை கொடூரமும், வேதனையும் என்பதை, நீ என்றாவது சிந்தித்தது உண்டா? இதோ நான் தரையில் சிலுவையின் பாரம் தாங்காமல் ஒரு புழுவைப்போல் விழுந்து கிடக்கின்றேனே, என்னை இந்தக் கோலத்திற்கு உட்படுத்தியது உன் பாவங்கள். நான் எழுந்து நடக்க வேண்டும் என்றால், உன் உதவி எனக்குத் தேவை. உன் பாவங்களை விட்டு எழுந்திரு. அதற்கான உறுதி கொள். நீ உன் பாவங்களைக் குறைத்து, திருந்தி நடந்தால், என் பாரம் குறையும்.
செபம்:
அனைவரும்: முதல் முறை விழுந்த இயேசுவே! சிலுவையின் பாரம் உம்மை கீழே தள்ளியதா? அல்லது
என் பாவங்கள் உம்மை கீழே தள்ளியதா?
என் பாவச் சுமைதான் உம்மைத் தள்ளி இருக்க வேண்டும். நான் பாவங்களை விட்டு விலகினால் உமது பாரம் குறையும்.
என் பலவீனத்தால், ஆசைகளால், அகங்காரத்தால் நான் செய்யும் தவறுகளை உணர்ந்து, திருந்தி வாழ உதவியருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய
இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
தாங்கிட வொண்ணாத் துயருற்றே, உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு தன் தாயைச் சந்திக்கிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்
செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: காணாமல் போன என்னைத் தேடி யெருசலேம் தேவாலயம் வந்த என் தாய், இதோ கல்வாரிப் பாதையிலும் தேடி வந்து, என் துயரில் பங்கு கொள்கிறாள்.
உலகை படைத்து உலகை மீட்க வந்த எனக்கு உலகம் தரும் அவமானங்களை அவள் நேரில் பார்க்கிறாள். என் தாயின் வேதனைகள் உனக்கு புரிகிறதா?
பெற்ற பிள்ளைகளால் அவமானப்-படுத்தப்படும் தாய்மார்கள் நிறைய பேர்.
சோறுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்த தாயின் வயிற்றுக்கு, அவளின் முதிர்ந்த வயதில், உணவுகூட கொடுக்காமல் வேதனையுறச் செய்யும் பிள்ளைகளில் நீயும் ஒருவனா? தாயின் சந்திப்பு எனக்கு வலிமை தருகிறது. உன்னை பெற்றெடுத்த பெற்றோரை எண்ணிப்பார்.
செபம்:
அனைவரும்: அன்புத் தாயை சந்திக்கும் இயேசுவே! உன்னை சந்திக்கும் உன் தாய், உன் வேதனைகளைக் கண்டு கலங்கி நிற்கிறாள். மனித பலவீனங்கள, உனக்கு கொடுக்கும் அவமானங்களைக் கண்டு கதறுகிறாள்.
என் மனிதாபிமானமற்ற செயல்களால் பிறரின் நலத்திற்கு கேடு விளைவித்திருக்கின்றேன். என்னைப் பெற்றெடுத்து ஆளாக்கிய பெற்றோருக்கு எதிராக நடந்தும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்ய மறுத்தும் வாழ்ந்திருக்கிறேன். உன் தாயின் துன்பத்திற்கு நானும் காரணம்.
பிறரின் நலனிலும், என் பெற்றோரின் நலனிலும் ஆர்வம் கொள்ள எனக்கு நல்ல மனதைத் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை
அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மறுத்திட முடியா நிலையாலே, சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
இயேசுவுக்கு சீமோன் உதவுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்
செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: என்னைச் சுற்றி இந்த சிலுவைப் பவனியை வேடிக்கை பார்க்க, பரிதாபப்பட்ட எவ்வளவோ பேர் இருந்தும் என்ன பயன்?
என்னால் குணப்படுத்தப்பட்டவர்கள், என்னால் பசியாற உணவுண்டவர்கள், என்னால் ஆறுதலும் ஆசீரும் பெற்றவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும், ஓர் அந்நியன், என் சிலுவையைச் சுமக்க கட்டாயப் படுத்தப் படுகின்றான்.
உனக்கு மனம் இல்லையா? என்னுடன் உறவாடவும், என்னை உட்கொள்ளவும், என்னில் நீ வாழவும், எவ்வளவோ வழி இருந்தும், என்னை விட்டு அகல்கின்றாய்.
பல சமயங்களில் பிற மதத்தவர் காட்டும் பற்றுதலும் நன்றியும் கூட நீ காட்டுவதில்லையே. உனக்காவே வாழ்ந்த எனக்காக, ஏன் நீ வாழக் கூடாது?
செபம்:
அனைவரும்: இயேசுவே! உமக்கு உதவிச் செய்ய சீமோன் மட்டும் முன் வருகிறார், அதுவும் கட்டாயத்தினால்.
என் அசட்டுத்தனத்தால், கோழைத்தனத்தால், சோம்பலால், நல்ல பல செயல்களைச் செய்ய வாய்ப்பு இருந்தும், தவறி இருக்கிறேன்.
மற்றவர்களுக்கு நீர் காட்டிய கனிவும், இரக்கமும் அளவிட முடியாதது. உமது சீடனாகிய எனக்கும் அதே அன்பைக் கற்றுத் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை
அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நிலையாய் பதிந்தது உம் வதனம், அன்பின்
விலையாய் மாதின் சிறுதுணியில்
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
வெரோணிக்காள் இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறாள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்
செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: வெரோணிக்காவை போன்று, என் முன் அமர்ந்து என் பாடுகளைத் தியானிக்கும் நீயும், என்னால் படைக்கப்பட்ட மனிதப் பிறவி தானே? அவளுக்கு இருந்த மனத்திடமும், ஆழ்ந்த அன்பும், உனக்கு இல்லையே!
வெரோணிக்காவை என்றோ ஓரிரு முறை சந்தித்திருப்பேன். உன்னை நான் தினமும் திருப்பலியில் சந்திக்கிறேன். 24 மணி நேரமும் உனக்காக காத்திருக்கிறேன். இன்னும் உனக்கு என் மீது விசுவாசமும், அன்பும் ஏற்படாதது ஏன்?
எனக்காக நீ செய்யத் துணிந்தவை என்ன? வெளி வேடங்களால் உன் அன்பைக் காட்டாதே. உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழமுயற்சி செய். உதட்டளவில் என்னை போற்றாதே. உன் வாழ்க்கையால் என்னைப் போற்று.
செபம்:
அனைவரும்: ஆண்டவரே! வெரோணிக்காவிடம் இருந்த துணிவு எனக்கும் வேண்டும். அவரது
அன்பாலும், துணிவாலும் அவள் செய்த செயலினை பாராட்டி உம் திருமுகத்தையே அந்த துணியில் பதியச்
செய்தீர். உன் அன்பை அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறேன். உம்மை
வழிபாடுகளிலும், திருப்பலியிலும் சந்திக்கத் தவறி இருக்கிறேன். என் விசுவாசம் உறுதியானதாகவும்,
வாழ்வுக்கு நம்பிக்கையும் துணிவும் தரக்கூடியதாகவும் மாற்றும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய
இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால், அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு இரண்டாம் முறை விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கல்வாரி நெருங்க நெருங்க என் சக்தியெல்லாம் குறைகிறது. நான் வலுவிழந்து இதோ புழுதியில் கிடக்கின்றேன். எனக்கு ஆறுதல் கூறவோ, எனக்கு உதவுவோ யாரும் இல்லை. இவ்வுலகமே என்னுடையதாக இருக்க, இதோ நான் உனக்காக அநாதை போன்று விழுந்து கிடக்கின்றேன். எனக்காக நீ உண்மையில் மனம் இரங்கினால், உன்னிடம் உள்ள தீய பழக்கங்களை விட்டுவிட்டு என்னைப் பின் செல்.
செபம்:
அனைவரும்: இரண்டாம் முறையும் இயேசுவே, நீர் விழுந்துவிட்டீர். பாரச் சிலுவையைவிட உலகினரின் பாவச் சுமை அதிகமாக உம்மை வதைக்கிறது. உம் இறை இயல்பை இழந்து, மனித இயல்புக்கு உம்மை தாழ்த்தினீர். உமது பெருந்தன்மையை உணராத நான் உம் பாடுகளுக்கு காரணமானேன். உமது உடலை புழுதியில் புரட்டிய எனக்கு மன்னிப்பைக் கொடுத்து, எழுந்து நடக்கும் உம்மோடு கூட்டிச் செல்லும். உமது பாதையில் நடக்க எனக்கு வலுவைத் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு, அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
இயேசு தன்னைப் பின் தொடரும் பெண்களுக்கு ஆறுதல் சொல்கிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: உன் பாவங்களுக்காகத் தான் நான் இக்கொடிய துன்பங்களை ஏற்றிருக்கிறேன். நீ யெருசலேம் பெண்களைப் போன்று எனக்காக அழுது பயனில்லை. உன் பாவங்களுக்காகவும், மற்றவர்களின் பாவங்களுக்காகவும் மனம் வருந்தி அழு. அது தான் உன்னைக் காக்கும்.
உன் திருந்திய வாழ்வுதான் எனக்கு தேவை. உன் போலிக் கண்ணீரும் இரக்கமும் எதற்கும் உதவாது. தாழ்மையான மனதுடன், நீ செய்த குற்றங்களை நினைத்து உன்னையே நீ யாரென்று அறிந்து கொண்டு,
அதற்காக அழுது மன்னிப்புக் கேள். இறையருளைப் பெற்றுக் கொள்.
செபம்:
அனைவரும்: யெருசலேம் பெண்களைச் சந்தித்த இயேசுவே! என்னையும் சந்திக்க வாரும். என்னில் உள்ள நன்மைகளையும், தீமைகளையும் உணர்ந்து நல்லதை வளர்க்கும் மனப் பக்குவமும், தீமையை விலக்கும் தைரியமும் எனக்கு வேண்டும்.
‘எனக்காக அழ வேண்டாம், உங்களுக்காக அழுங்கள்’ என்றீரே! என்னையே நான் நியாயப் படுத்துவதைவிட என் உண்மையான நிலையை ஏற்றுக் கொள்வதே எனக்கு நன்மை பயக்கும் என்பதை உணரச் செய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர், கால்
ஊன்றி நடந்திடும் மெய் நொந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு மூன்றாம் முறை விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: மீண்டும் மீண்டும் விழுந்து கிடக்கும் இக்கோரக் காட்சியைக் காணும் உன் கண்கள் இரக்கமற்றவையா? உன் உள்ளம் பாறையாகி விட்டதா? விழுந்த என்னைத் தூக்கி விட உனக்கு மனம் இல்லையா?
நீ ஆயிரம் முறை பாவத்தில் விழுந்தாலும் உன்னை தூக்கிவிட்டு மன்னித்து அனுப்ப, நான் தயாராய் இருக்கிறேன்.
உன் சுமைதாங்கி நான். உன் அயலான் உனக்குச் செய்யும் சிறு குற்றத்தைக் கூட மன்னிக்கவும், மறக்கவும் உனக்கு மனம் இல்லையே, ஏன்?
செபம்:
அனைவரும்: மூன்று முறை விழுந்த இயேசுவே! “நானும் உன்னை தீர்ப்பிடேன், இனி பாவம் செய்யாதே” என்று சொல்லி பாவம் செய்தவளுக்கு, உம் கருணை உள்ளத்தை காட்டிய கருணாகரன் நீர்.
பிறரின் சுமைகளைத் தாங்கி சுகத்தைக் கொடுக்க வேண்டியவன் நான். தவறுகின்றவர்களின் மீது இரக்கம் கொண்டு அவர்களை புரிந்து கொண்டு நல்வழி காட்டவேண்டியவன் நான்.
இப்படி செய்யும் போது மீண்டும் மீண்டும் பாரம் தாங்காமல் கீழே விழும் உம் பாரச் சுமையை இறக்கி வைக்கும் பணியில், உமக்கு உதவுகிறவனாய் நான் மாற முடியும் என்பதை உணரச் செய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர், இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
➕ பத்தாம் நிலை
இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: ஆடைகள் களையப்பட்டு அரைமனிதனாக எலும்புகளை எண்ணக் கூடிய அளவுக்கு, என் உருவம் மாறி நிற்கின்றேன். என்னை இந்தக் கோலத்தில் காணும் நீ என்ன நினைக்கின்றாய்? ஒரு சிறு துன்பம் வந்தாலும் முணு முணுக்கிறாய். எனக்கு எதிராகப் பேசுகிறாய். பொறுமை என்ற அணிகலனை அணிந்து கொள். துன்பத்தில் இன்பம் காண முயற்சி செய். என் உலக வாழ்வையே உனக்காக அளித்தவன் நான். உனக்காகவே நான் இருக்கிறேன் என்பதை மறவாதே அஞ்சாதே. குருவிகள் பலவற்றிலும் மேலானவன் நீ. உன்னை நான் காப்பேன்.
செபம்:
அனைவரும்: ஆடைகளை இழந்த இயேசுவே! எங்கள் மீட்புக்காக உம்மையே இழந்தீர். இன்று சமூக அமைப்புகளில் காணப்படுகின்ற பாரபட்சமான போக்கு, அநீதி, அலட்சியம், அதிகாரம், ஆணவம், சீர் குலைந்த நிர்வாகம், சுய நலமான சுரண்டல்கள், இவை மறைய உம்மையே நீர் இழந்தீர்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் உம்மைப் பின் பற்றி நீதிக்கும் அன்புக்கும் சமத்துவ சமூக அமைப்புக்கும் அடிகோல உதவியருளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பொங்கிய உதிரம் வடிந்திடவே, உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
➕ பதினொன்றாம் நிலை
இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: மூவுலகின் தேவன் என்னை, மூன்று ஆணிகளுக்குள் அடக்கி விடத் துணிந்த இந்த உலகின் பரிதாப நிலையை, நான் எவ்வாறு விவரிப்பேன்? நீ செய்யும் பாவம் என்னும் ஆணிகளால் தினமும் என்னைச் சிலுவையில் அறைகிறாய் என்பதை மறவாதே.
பாவத்தால், நீ சிலுவையில் அறைந்த கைகள் தான், உன்னை அணைக்கத் துடித்த கரங்கள்.
நீ ஆணிகளுக்குள் முடக்கி விட்ட கால்கள் தான் உன்னைத் தேடி அலைந்த கால்கள். இதோ குத்தி திறக்கப்பட்ட இதயம் தான் உன்னை நேசித்த இதயம். உன் புண்ணிய வாழ்வால் இந்த ஆணிகளைப் பிடுங்க முயற்சி செய்.
செபம்:
அனைவரும்: இயேசுவே! உம்மை மூன்று ஆணிகளில் அடக்கி விட்டார்கள். மனிதர்கள் நாங்கள் எங்கள் பாவங்களை அறைவதற்கு பதிலாக புண்ணியன் உம்மை அறைந்து விட்டோம். ஆணி கொண்ட உமது காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்.
உமது காயங்களுக்குள் என்னை மறைத்தருளும். திறந்த உமது இதயத்தில் எனக்கொரு இடம் கொடும். உள்ளக் காயங்களை ஆற்றி அமைதியை எனக்குத் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
இன்னுயிர் அகன்றது உமைவிட்டு, பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு சிலுவையில் மரிக்கிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: எனது 33 வருட கால வாழ்வில் என்னைப் போற்றியவர்களும் உண்டு, தூற்றியவர்களும் உண்டு. இதோ என்னுடைய இந்த இறுதி நேரத்திலும் என்னால் பயனடைந்தவர்களைவிட என்னை வெறுத்தவர்களே அதிகம் கூடி இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நான் மன்னிக்கிறேன்.
எனக்காக என்று, நான் எதையும் வைத்துக் கொள்ளவில்லை. என் உயிரையும் உனக்காக கொடுத்து விட்டேன். நீ மட்டும் உன் அயலானை மன்னிக்கவோ, அவனுக்கு உதவவோ மறுக்கிறாயே. பின்னர் எப்படி எனக்குத் தகுதி உள்ளவனாக முடியும்? என் சாவால் உனக்கு வாழ்வு கிடைத்தது. என் உயிரால் உன் உயிர் புத்துயிர் பெறுகிறது.
செபம்:
அனைவரும்: சிலுவையில் மரித்த இயேசுவே! மரணத் தருவாயில் கூட மன்னிப்பின் அவசியத்தை உணர்த்தினீர். இன்று உலகிலும் குடும்பங்களிலும் அமைதி நிலவ, மன்னிப்பின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளச் செய்யும்.
பகையால், வெறுப்பும் அழிவுமே மிஞ்சுகிறது. உமது மரணம் கொண்டு வந்த மீட்பை முழுமையாக நானும் பெற வேண்டும். நான் வாழ்வு பெற, நீர் உமது வாழ்வை இழந்தீர். நான் இழந்துள்ள அமைதியான வாழ்வை மீண்டும் பெற்றுக் கொள்ள உதவி புரியும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
துயருற்றுத் துடித்தார் உளம்நொந்து அன்னை
உயிரற்ற உடலினை மடிசுமந்து
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
இயேசுவைத் தன் தாயின் மடியில் கிடத்துகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: என் தாயைப் போல் உள்ளம் கொண்டவர்களை, எங்கேனும் நீ கண்டதுண்டா? தன் ஒரே மகனை இழந்தும், இறைவனின் திருவுளம் அது என்று பணிந்து வாழ்கிறாள். அவளின் துயரம் எத்தகையது என்பதை உன்னால் உணர முடிகிறதா?
அப்படியானால் என் அகோர மரணத்திற்கு காரணமான உன் பாவங்களை விட்டு விலகு. என் தாயைப் போல் என் விருப்பத்தை ஏற்று, அதன்படி வாழ முயற்சி எடு.
உன் சுய நலம், பொறாமை, பேராசை, வஞ்சகம் இவற்றை விட்டு விலகு. அன்பு என்ற அணிகலனை அணிந்து கொள்.
செபம்:
அனைவரும்: வியாகுல மாமரியே! துன்பமும் துயரமும் உனது வாழ்வைச் சந்தித்தபோதெல்லாம் இறைவனின் விருப்பம் அதுவெனக் கண்டாய். மனித வாழ்க்கையில் எங்களின் துயரங்களையும் வேதனைகளையும் புரிந்து கொண்டவளாக நீ இருக்கிறாய்.
வேதனை, துன்பம் வந்த போதெல்லாம் அம்மா உன் துணை நாடி வரும் என்னை காத்தருள்வாயாக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு, நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: நான் அடக்கம் பண்ணப்படுவது, வேறொருவரின் கல்லறையில். எனக்கென்று ஒரு கல்லறை கூட இல்லை. நீயோ உன் உதவி தேடி வந்தவர்களிடமும் முகம் சுளிக்கிறாய், ஏசுகிறாய்.
என்னை அடக்கம் பண்ணிவிட்டதாக எண்ணிக் கொண்டார்கள்.
நான் மூன்றாம் நாள் உயிர்த்து எழுவேன். நீயும் என்னோடு உன் பாவத்திலிருந்து உயிர்த்தெழ வேண்டும். நீ உண்மையான கிறிஸ்துவன் என்று காட்ட அது ஒன்றுதான் சாட்சியாக முடியும்.
உன் பாவங்களையும் என்னோடு சேர்த்து கல்லறையில் வைத்து மூடி, புது மனிதனாக, புனிதனாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.
செபம்:
அனைவரும்: கல்லறையில் துயில் கொள்ளும் இயேசுவே! உண்மைக்கும், அன்புக்கும், நீதிக்கும் உயிர் கொடுத்த உம்மை அடக்கி வைக்க பூமிக்கு வலுவில்லை. உண்மை, உயிர் பெறும். அன்பிற்கு அழிவில்லை. நன்மைக்கு முடிவு இல்லை.
இயேசுவே! நீரே எங்களது நம்பிக்கை. துயரமும் தோல்வியும் எங்களைச் சந்தித்தாலும், உமது உதவியால் வெற்றி கொள்ள முடியும் என்று நம்புகிறோம். கவலையும் கஷ்டமும் எங்களை வாட்டினாலும், உமது நம்பிக்கையே எங்கள் பலம். உம்மில் உள்ள நம்பிக்கையை அதிகமாக்கும். எங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு, நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
செபிப்போமாக!
ஆண்டவரே! சிமியோன் தீர்க்கத்தரிசனம் சொன்னபடியே, தேவரீர் பாடுபட்டபொழுது, மகிமைப் பிரதாபமுள்ள கன்னித்தாயின் மகா மதுரமான ஆத்துமம், வியாகுல வாளால் ஊடுருவப்பட்டதே!
அவள் வியாகுலத்தையும் வேதனையையும் வணங்குகிற நாங்கள், சிலுவையை சுமுத்திரையாய் நேசித்து சகல புனிதர்களின் மகிமையுள்ள பேறுகளினாலும், மன்றாட்டுக்களினாலும் உமது திருப்பாடுகளின் பலனை அடையும்படி தயைபுரிந்தருளும், ஆமென்.
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக செபிப்போம்
➕ ஒரு பரலோக மந்திரம்,
➕அருள் நிறைந்த மந்திரம்
➕ திருத்துவ செபம்.
முதல்வர்: இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்- தத்தங்களுக்கு, நாங்கள் பாத்திரமா-யிருக்கத்தக்கதாக, புனித வியாகுல மாதாவே!
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)
பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை
கரங்களை விரித்தே கள்வனைப் போல்
கழுமரத்தினில் கண்டதினால்
கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே
மண்ணவர்க்காகத் தன்னுயிரை
இன்று மாய்த்திடக் கண்டதினால்
➕அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் ➕எங்கள் சர்வேசுவரா!
➕தந்தை, ➕மகன், ➕தூய ஆவியின் பெயராலே ஆமென்.