புனித ஜோசப் வாஸ் நவநாள் செபம்
புனித ஜோசப் வாஸ் நவநாள் செபம்
ஆரம்பப்பாடல்
அன்பான புரவலரே
திருச்சிலுவை பக்தரே
விவிலிய முனிவரே
யோசேப் வாஸ் அடிகளாரே
1. புகழ்கிறோம் பாடுகிறோம்
வேண்டுகிறோம் நாடுகிறோம்
எங்களை இறைமையில் வளர வையும்
யேசுவில் வாழசெய்யும்
2. இந்தியாவில் பிறந்தவரே
கோவாவில் வளர்ந்தவரே
இலங்கையின் திருத்தூதரே
கனாராவின் கர்த்தர் உருவே- புகழ்
3. மரியாளளின் பக்தரே
மாற்றத்தின் வித்தகரே
தேசங்களின் இறைதூதரே
மனிதரின் இறை காட்டியே-புகழ்
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.
தொடக்க செபம்
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: எல்லாம் வல்ல தந்தையே, புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வாழ்வு மூலமாகவும், அவரது குருத்துவ சேவையின் வழியாகவும், நீர் ஆசியத் திருச்சபையைப் பிரகாசமாக்கினீர். அவர் உண்மையான திருவசனத்தை உயிருள்ளதாக்கி, தூய புதையலாக வலுவூட்டி, உம் மக்களை நோக்கி உம் கண்களை உயர்த்தச் செய்தார். இந்த அடிகளாரின் வேண்டுதலினால் எம் விசுவாசம் அதிகம் வளர்ந்தது. நற்செய்தியின் பயனுள்ள சாட்சிகளாய் எம்மை மாற்றச் செய்தருளும். இதை எல்லாம் உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற, உம் திருமகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வழியாக எமக்குப் பெற்றுத் தந்தருளும். ஆமென்.
நவநாள் செபம்
முதல்வர்: எல்லாம் வல்ல விண்ணகத் தந்தையே! எங்கள் அன்பான இறைவா! அருளாளர் ஜோசப் வாஸை எங்களுக்கு தந்தமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். ஒல்லாந்தரின் கலாபனைக் காலத்திலே அருளாளரைப் பாதுகாத்து அவர் வழியாக எங்களுடைய விசுவாசத்தை வளப்படுத்திய அருளுக்காக எமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக அருளாளரின் பரிந்துரையால் நீர் ஆற்றிய எல்லா புதுமைகளுக்காகவும், அருள் வளங்களுக்காகவும் உம்மைப் புகழுகின்றோம். எமது விசுவாசத்தை ஆழப்படுத்தவும், நம்பிக்கையை பலப்படுத்தவும், அன்பை வளர்க்கவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், மீட்பின் செய்திக்கும் உயிருள்ள விதத்தில் சாட்சிகளாய் உருவாகவும் எமக்கு உதவி செய்யும். எங்களுடைய அன்பான தாய் நாட்டை ஆசீர்வதியும். எங்கள் தாய்நாட்டிற்கும், மக்களுக்கும் நீடிய சமாதானத்தையும், ஒப்புரவையும், ஒற்றுமையையும், ஒளிமயமான வாழ்வையும் அருள வேண்டுமென்றும் எங்கள் ஆண்டவரும் உமது மகனுமாகிய கிறிஸ்து வழியாக வேண்டி நிற்கின்றோம். ஆமென்.
குழுவினருடைய வேண்டுதல் (விண்ணப்பங்கள்)
முதல்வர்: கருணையுள்ள தந்தையே, திருத்தந்தை பிரான்சிஸ் அடிகளார், எம் ஆயர் உள்ளிட்ட எல்லா ஆயர்கள், குருக்கள், துறவிகள் எல்லோரும் தூய வாழ்வு வாழ்வதற்கும், உமது அரசைப் பரவச் செய்வதற்கும் தேவையான எல்லாக் கொடைகளையும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வேண்டுதலால் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: கருணையுள்ள தந்தையே, திருச்சபையின் வழியாக உமது அரசை அறியச் செய்ததினால், உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள உம் திருச்சபைக்கு சுதந்திரத்தையும், சமாதானத்தையும் ஒற்றுமையையும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வேண்டுதலால் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: கருணையின் தந்தையே, நாட்டு மக்களின் நன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு உம் அருள் வரங்களை புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வேண்டுதலால் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: கருணையுள்ள தந்தையே, எம் நாட்டிலும், உலகத்திலும் கிறிஸ்தவரல்லாத மக்கள் உம்மை அறியவும், உம் திருமகன் இயேசுக் கிறிஸ்துவையும், அவரது நீதி நெறியையும் ஏற்று அதன்படி வாழவும் வேண்டிய வரங்களை புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வேண்டுதலால் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் அனைவருக்கும், அவர்களின் நோய்கள் எல்லாவற்றுக்கும் சுகமும், பராமரிப்பும், பூரணகுணமும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வேண்டுதலால் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் தூய ஆவியார் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று, புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக் கூறுவோம்.
முதல்வர்: இறைவா, நாங்கள் உம்மிடம் சமர்ப்பித்த இவ்வேண்டுதல்களுக்குக் கனிவுடன் செவிகொடுத்து, புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வேண்டுதலால் அவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள எமக்கு அருள் தாரும். இதைத் தூய ஆவியுடன், ஒரே இறைவனாக என்றும் வீற்றிருப்பவரும், ஆட்சி புரிபவருமான, உம் திருமகன், எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித ஜோசப் வாஸை நோக்கி உடல், உள்ள சுகம் வேண்டிச் செபம்
முதல்வர்: இயேசுவே, நீர் நற்செய்தியைப் போதிக்கும் வேளையில், நோயாளிகளுக்குச் சுகமும், குருடருக்குப் பார்வையும், செவிடருக்குக் கேட்கும் திறனையும் கொடுத்தருளினீர். மக்கள் உம்முடைய பெருஞ்செயல்களைக் கண்டு, நீர் பிதாவிடமிருந்து வந்தீர் என்பதை அறிந்து கொண்டனர். இறைவாக்கினர் கூறியது போல, நீர் கிறிஸ்துவே என அறிய அவை அடையாளங்களாகின. எம் நாட்டுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்த புனித ஜோசப் வாஸ் அடிகளார், பெரும் இடர்பாடுகளிடையே, கைவிடப்பட்டிருந்த உம்மந்தையைப் பாதுகாத்து வழிநடத்தினார். பயங்கர மிருகங்கள், கொடிய விஷப் பிராணிகளிடமிருந்து பாதுகாப்பும், கொடிய வறட்சியின் போது பரிகாரமாக மழையும், பல்வேறு நோய்களுக்குச் சுகமும், நிம்மதியும் பெற்றுக் கொடுத்துக் காத்த இப்புனிதருடன் நீர் என்றும் இருந்துள்ளீர் என்பது எமக்குத் தெரிகின்றது.
அனைவரும்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே, நீர் கத்தோலிக்க திருச்சபையைப் பாதுகாக்கும் பொருட்டு மட்டுமல்ல உம்மிடம் செப உதவி வேண்டியோருக்கும் கருணையுடன் உதவி செய்தீர். அதுபோல் இப்போது உம் காலடியில் வந்திருக்கும் எம் எல்லோர் மீதும் கருணை கொண்டருளும்.
கொள்ளை நோய்களின் போது பாதுகாப்பு வேண்டிச் செபம்
முதல்வர்: நோயாளிகளைக் குணமாக்கும் ஆண்டவரான இயேசுவே, நீர் ஊர் ஊராக சென்று, குருடர், செவிடர், முடவர், குஷ்டரோகிகளைக் குணமாக்கினீர். அந்தக் குணமளிக்கும் வல்லமையை உம் சீடருக்கும் கொடுத்து, துன்புறும் நோயாளிகள் குணமடைய உதவி புரிந்தீர். இந்தக் கருணைக்காக உமக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். கண்டி இராச்சியம் முழுவதும் பரவிய கொள்ளை நோயின் போது, உம் நம்பிக்கைக்குரிய பணியாளரான, இலங்கையின் திருத்தூதர் புனித ஜோசப் வாஸ் அடிகளார் இனம், சாதி, மத வேறுபாடுகள் பாராது, யாருடைய உதவியுமின்றிக் கைவிடப்பட்டோர், துன்புறும் சாதாரண நோயாளிகளைத் தேடிச் சென்று, தம் கைகளால் காயங்களைக் கழுவி மருந்திட்டு, உணவும் பானமும் தயாரித்தளித்து, அவர்களுக்கு உதவி செய்ததை நாங்கள் அன்புடன் நினைவு கூறுகின்றோம். ஆதலால் புனித ஜோசப் வாஸ் அடிகளாரே, இன்று உலகில் பரவும் தொற்று நோயால் துன்புறும் எளியவரான நோயாளிகளைக் கருணையுடன் நோக்கி, அவர்களைப் பாதுகாத்தருளும். அவர்களைத் திடப்படுத்திக் குணமாக்கியருளும்.
அனைவரும்: அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யும் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து, இரக்கத்தை அதிகரித்தருளும். "நான் நோயுற்றிருந்தேன், நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்கள்" என்ற ஆண்டவரின் வார்த்தையால் ஊக்கம் பெற்று, அவர்கள் புரியும் சேவையை மகிழ்வுடனும், அன்புடனும் செய்ய அவர்களுக்கு வரம் தந்தருளும். புனித ஜோசப் வாஸ் அடிகளாரே, இந்தத் கொள்ளை நோய் இவ்வுலகில் இருந்து நீங்க வேண்டியருளும். ஆமென்.
நன்றியறிதல்
முதல்வர்: நாங்கள் பெற்றுக் கொண்ட உதவிகளுக்காக இப்போது நன்றி கூறுவோம். துன்ப காலத்தில் கத்தோலிக்க திருச்சபையைக் காக்கத் திருத்தூதர் ஒருவரை அனுப்பிய தந்தையாம் இறைவனுக்கு நாங்கள் முழு இருதயத்துடன் நன்றி கூறுகின்றோம். இறைவனின் அழைப்புக்குச் செவிகொடுத்து துன்பங்களைப் பாராது மரணம் வரை பணிபுரிந்து கத்தோலிக்கத் திருச்சபையைப் பாதுகாத்து இன்னும் உறுதியான அஸ்திவாரமிட்டு அதைக் கட்டியெழுப்பிய புனித ஜோசப் வாஸ் அடிகளாரே உமக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். பக்தர்களின் வேண்டுகோளுக்கு அன்று செவிகொடுத்தது போல இன்றும் எம் வேண்டுதல்களுக்குச் செவிகொடுத்து நீர் எமக்குப் பெற்றுத் தந்த உதவிகளுக்கு எம் முழு இருதயத்துடன் நன்றி கூறுகின்றோம்.
அனைவரும்: நாங்கள் கேட்கும் உதவிகள் நாங்கள் எதிர்பார்க்கும் வகையில் எங்களுக்கு கிடைக்காவிட்டாலும், இறை சித்தத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிய எங்களைத் தைரியப்படுத்தியருளும். எங்களைப் படைத்துக் காக்கும் தந்தையாம் இறைவனுக்கு என்றென்றும் நன்றியுண்டாகட்டும். ஆமென்.
நோயாளிகளை ஆசீர்வதித்தல்
முதல்வர்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் பல தடவைகள் நோயாளர் மீது இரக்கம் காட்டி, அவர்களைக் குணப்படுத்தினீர். நோயாளிகளைக் குணமாக்கும் வல்லமையை உம் சீடருக்குக் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தீர். புனித ஜோசப் வாஸ் அடிகளாரும் உம் வரம் பெற்று நோயாளிகளைக் குணமாக்கினார். தம் கருணைமிக்க சேவையால் அவர்களுக்கு ஆரோக்கியம் பெற்றுக் கொடுத்தார். கருணை மிகுந்த இயேசுவே, நோயாளிகளைக் கண்ணோக்கியருளும். புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வேண்டுதலால் அவர்களுக்குச் சுகம் கொடுத்தருளும். அவர்களின் நோய்களில் உம் பங்கிருக்குமாயின் அவர்களுக்குப் பொறுமையையும், ஆறுதலையும் அமைதியையும் பெற்றுத் தந்தருளும்.
முதல்வர்: செபிப்போமாக.
அனைவரும்: எம் மீட்பரே, பரிசுத்த ஆவியின் வரங்களால் எங்களது நோய்கள், இயலாமையைப் போக்கியருளும். எங்களது காயங்களைக் குணமாக்கியருளும். எங்களது பாவங்களை மன்னித்தருளும். உடலிலும், மனதிலுமுள்ள எல்லா வேதனைகளையும் போக்கியருளும். ஆன்ம, உடல் சுகத்தை முழுமையாகத் தந்தருளக் கருணை கூர்ந்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற நீரே இதனைத் தந்தருள்வீராக. ஆமென்.
மன்றாட்டு மாலை
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அந்தோணியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தோமா அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கோவாவின் பெனவ்லிம் எனும் ஊரில் பிறந்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கிறிஸ்டோபர் வாஸ் மரியா மிராண்டா ஆகிய பெற்றோரிடம் ஞான வாழ்க்கையைப் பழகிப் பயிற்சி பெற்ற புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சிறுவனாயிருந்த காலம் முதல் “சின்னப் புனிதர்” என அன்புப் பெயரால் அழைக்கப்பட்ட புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இலங்கையின் கத்தோலிக்க விளக்கு அணையாது காக்கத் தேவ விருப்பத்தின்படி குருவாக அழைக்கப்பட்ட புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கர்நாடக பிரதேசம் முழுவதும் மறை மணம் பரவச் செய்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இலங்கையின் கத்தோலிக்கர் வேத கலாபனையில் கைவிடப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த துயரத்துக்குள்ளான புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கோவைக்குச் சென்று ஓரட்டோறியன் சபையை மீண்டும் உயிர் பெறச் செய்து, உயரிய தலைவராக மதிக்கப்பட வரம்பெற்ற புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: துன்புறும் இலங்கைத் திருச்சபைக்கு உதவ வேறு குருக்கள் யாரும் முன்வராத போதும், அப்பணியை நிறைவேற்ற உறுதியுடன் முன்வந்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அடிமைபோல் பணிபுரிய மாசற்ற தேவதாயின் முன் தம்மைத் தாமே அர்பணித்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: வாணிபக் கூலியாள் போல மாறுவேடத்தில் படகேறித் துன்புறும் கத்தோலிக்கரைத் தேடி மன்னார் கரையை வந்தடைந்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஒல்லாந்தர் ஆட்சியில் துன்ப துயரங்களைப் பாராமல் சில்லாலைக் கிராமத்தினை மையமாகக் கொண்டு மறை மணம் பரப்ப ஆரம்பித்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உளவாளியென இரண்டாம் விமலதர்ம சூரிய மன்னனின் கட்டளைப்படி வாவுட கிராமத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மலைநாடு முழுவதும் ஏற்பட்ட பெருவறட்சியின் போது, அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி, உறுதியான விசுவாசத்துடன், செப வல்லமையால் மழை பெய்வித்துப் புதுமை புரிந்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இருண்ட கானகங்களின் ஊடாக கால்நடையாகச் செல்கையில் எதிர்ப்பட்ட கொடிய விஷப் பாம்புகளையும், பயங்கர மிருகங்களையும், சிலுவையின் பலத்தால் விலகி ஓடச் செய்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கல்கமுவை, வாகக்கோட்டை ஆகிய பிரதேசங்களுக்குச் சிதறிச் சென்ற கத்தோலிக்க மக்களைத் தேடிச் சென்று, அவர்களை இறை விசுவாசத்தில் உறுதிபெறச் செய்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தினமும் செபமாலை சொல்வதனால் தேவதாயின் மட்டில் மிகுந்த பக்தியுள்ளவராக எமக்கு வழிகாட்டும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: துக்க, வேதனைகள், துயரங்களைத் தயவுள்ள தந்தை போல் செவிகொடுத்து, அவர்களை ஆறுதல்படுத்திய புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இறையன்பை அனுபவித்துத் தம் எளிமையான வாழ்வின் வழிகாட்டல் மூலமாக எல்லோரையும் கிறிஸ்துவில் ஒன்று சேர்த்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பிள்ளைப் பேறற்ற துயரத்தால் மனவேதனைக்கு உள்ளான தம்பதியினருக்காக இறைவனிடம் வேண்டி, அவர்களுக்கு உதவி பெற்றுக் கொடுத்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கண்டியை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் நடந்து, மக்களுக்குப் பெரும் சேவை செய்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அப்போஸ்தலிக்க சேவையினில் ஈடுபடும் இல்லற வாசிகளுக்கு முன்மாதிரியாயிருந்து, இல்லற வாழ்வு மூலமும் திருச்சபையை வளமூட்டிய புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கஷ்டமான பிரயாணங்களில் ஈடுபடும் யாராவது உம் பாதுகாப்பை வேண்டிய போது, பயணம் முடியும் வரை சகல அபாயாங்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்ற வரம் பெற்ற புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: வாழ்வின்போது செய்ய முடியாதவைகளை, மரணத்தின் பின் செய்ய முடியாதென்பதைத் தம்மைப் பின் தொடர்ந்தவர்களுக்குத் தம் மரணப் படுக்கையில் வெளிப்படுத்திய புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கோவாவில் பிறந்து இலங்கையில் திருத்தூதராகாப் பேறுபெற்ற புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சகோதர அன்பிலும், தேவ தயவிலும் காலத்தைச் செலவிட்டு, இறை சமூகத்தில் வீற்றிருந்து எம் எல்லோருக்கும் மோட்ச உரிமை கிடைக்க வழியாயிருக்கும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குகளுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக.
அனைவரும்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: செபிப்போமாக:
மிகவும் இரக்கம் நிறைந்த தந்தையே, புனித ஜோசப் வாஸ் அடிகளாரை எமக்குத் தந்தமைக்காக உம்மைப் போற்றி நன்றி கூறுகின்றோம். எம் முன்னோரின் விசுவாசத்துக்கு மாபெரும் இடர் வந்தபோது, அவர்களைக் காத்துத் தைரியமூட்டிய அவருடைய வேண்டுதலால், இன்று எம் விசுவாசத்துக்கு வரும் எல்லாவித இடர்களிலும், இருளிலுமிருந்து எம்மைப் பாதுகாத்தருள மன்றாடுகின்றோம். இதை எம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் வழியாக எமக்குப் பெற்றுத் தந்தருளும். ஆமென்.
இறுதி செபம்
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை செபம் என்றும் நமக்கு கிடைக்கும்படியாக,
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
அனைவரும்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
அனைவரும்: தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
அனைவரும்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
இறுதிப்பாடல்
அன்பான புரவலரே
திருச்சிலுவை பக்தரே
விவிலிய முனிவரே
யோசேப் வாஸ் அடிகளாரே
4. ஏழைகளின் போதகரே
நோயாளியின் மருத்துவரே
கஷ்டபடுவோரின் காவலரே
கல்விகண் திறந்தவரே-புகழ்
5. புதுமைகளின் நாயகரே
புரட்சிகளின் தலைவரே
வீழ்ச்சியின் எழுச்சியே
மலர்ச்சியின் மகிமையே-புகழ்
6. அணுகினோர் அடைக்கலமே
இறைவனின் கருணையே
தேடுபவர் பொக்கிஷமே
வாடுபவர் மகிழ்ச்சியே-புகழ்
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.