நற்கருணை ஆராதனை
நித்திய ஸ்துதிக்குரிய... பரிசுத்த நற்கருணைக்கு...
பக்தியாய் ஆராதனை... எத்திசையும் புரிவோம். (மூன்று முறை)
இந்த நற்கருணை ஆராதனையில், நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நம் பெற்றோர், உற்றார், உறவினர்கள் அனைவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், உத்தரிக்கும் தலத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், உலகெங்கும் தற்போது இறப்பின் வேதனைக்குள் இருக்கும் ஆன்மாக்களின் நல்ல இறப்புக்காகவும் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
தொடக்கச் செபம்:
அவருடைய துன்பம் நிறைந்த பாடுகளை நினைத்து, அவருடைய நினைவுகளோடு அவருடன் நாமும் நடந்து செல்வோம். பீடத்தில் இருக்கும் நற்கருணை ஆண்டவர் முன் நம் இதயங்களைத் தாழ்த்திப் பணிந்து, அப்பத்தின் சாயலுள் மறைந்தே இருக்கும் ஒப்பற்ற தேவா உன்னடி பணிவோம் என்ற பாடலைப் பாடி, இயேசுவிடம் நம்மை அர்ப்பணித்து, தந்தையாம் இறைவனிடம் பணிந்து மன்றாடுவோம்.
அப்பத்தின் சாயலுள் மறைந்தே இருக்கும்
ஒப்பற்ற தேவா உன்னடி பணிவோம்
அத்தனே உன்னை யான் சிந்திக்கச் சிந்திக்க
எத்துணை என் உள்ளம் கனிந்திளகுதே
இயேசு அமிர்த மன்னாவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
தாசர் எமது விசுவாசம் தழைத்தோங்கச் செய்வாயே
1.
அப்பத்தின் வருணம் உருசி ஸ்பரிசம்
இப்போது தோன்றினும் இஃதப்பமில்லையே
அப்பம் உன் மேனியாய் முற்றிலும் மாறிற்றே
தப்பிலா சத்திய நின் வாக்கு இஃதன்றோ
2.
மறைந்தே போயதே குருசில் தேவத்வம்
மறைந்ததிங்கோ நின் மனிதத் தன்மையும்
விசுவாசித்திரு சத்தியந்தனையும்
விமலா கேட்கின்றேன் நற்கள்வன் கேட்டதை
3.
உந்தனின் காயங்கள் காண்கிலேன் தோமை போல்
என்கிலும் உன்னை என் ஆண்டவர் என்கின்றேன்
எந்தையே உன்னை யான் அதிகம் அதிகம்
என்றுமே நம்பியே நேசிக்கச் செய்யுமே
4.
எம்பிரான் மரண ஞாபகச் சின்னமே
இம்மை வாழ் மக்களின் ஜீவிய விருந்தே
வரந்தா உனை யான் நினைந்தே எப்போதும்
பரம ஆனந்தம் கொண்டு மகிழவே
5.
அன்புள்ள பெலிக்கான் ஆன என் ஆண்டவா
என் பாவ கறையை நீக்கும் உன் இரத்தத்தால்
உந்தனின் ஓர் துளி உதிரம் போதுமே
உன்னதா பூலோக மாசெல்லாம் போக்கவே
6.
இயேசுவே மறைவாய் இங்குமைக் காண்கின்றேன்
நேசரே ஆசையாய் ஒன்றுமைக் கேட்கின்றேன்
நின்னெழில் வதனம் நேரில் ஓர் தினமே
கண்டுளம் பூரித்தே ஆனந்தம் கொள்ளவே
எங்கள் அன்பான தந்தையே இறைவா! உமது சாயலாகவும் பாவனையாகவும் படைக்கப்பட்ட மனிதர்கள் மீது அளவு கடந்த பட்சத்தினால் அலகையின் பிடியில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பொருட்டு உமது அன்புத் திரு மகனை மானிடனாகப் பிறக்கத் திருவுளம் கொண்டவரே! அவருடைய மாசற்ற திரு இரத்தத்தை பூமியில் சிந்த வைத்து, மானிட ஈடேற்றத்துக்காகப் பலியாக்கத் திருவுளம் கொண்டவரே! உமது திருவுளத்தை நிறைவு செய்ய எண்ணிறந்த, எண்ண முடியாத வேதனைகளையும் ஏற்றுக் கொண்டு வாய் மூடி நின்றாரே உம் அன்புத் திரு மகன் இயேசு. மனிதரோடு என்றும் வாழ்வதே எனது விருப்பம் எனக் கூறித் தன்னையே பலியாகத் தனது உயிரை உம் கைகளில் ஒப்படைத்து இறந்த இயேசுவைப் பார்த்து, அவர் வழியாக உம்மிடம் மன்றாடுகின்றோம். ஆமென்.
செபிப்போமாக:
இயேசுவே இறைவனின் மகனே! உம் முன் கூடியுள்ள உம் மக்களைக் கண்நோக்கியருளும். இதோ! நான் உலகம் முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் எனக் கூறி உமது திரு உடலையும், திரு இரத்தத்தையும் ஆன்ம உணவான திவ்விய நற்கருணை வழியாக எங்களுக்குத் தந்தீரே! நாங்கள் உம்மைத் தெண்டனிட்டு வணங்கி ஆராதிக்கின்றோம்.
உலகெங்கும் எத்தனையோ கோடி மக்களிலிருந்தும், அவர்களிடையே இருந்தும் எங்களைத் தெரிந்து எடுத்து, நீரினாலும் தூய ஆவியாராலும் எங்களைக் கழுவி உம் பிரிய மக்களாய் தெரிவு செய்தீர். எங்களது விசுவாசத்தை அறிக்கையிட்டு உம்மிடம், ஆண்டவரே! நீர் என்னிடம் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். எங்கள் ஆன்மா நலமடையும் எனக் கூறும் நாங்கள் பல தடவை உமக்கெதிரான குற்றங்களைச் செய்து வருகிறோம். எங்கள் மனித பலவீனத்தைப் பாராமல் எங்களை மன்னித்து இரக்கம் வையும். எங்களது அகக்கண்களைத் திறந்து வாழ்வின் மரமாய் உள்ள உம்மிடம் வந்து சேர தயை புரியும். இயேசுவே! நீரே அந்த வாழ்வின் மரம் என்பதை நாங்கள் அறிவோம். உம்மிடம் மட்டுமே நாங்கள் ஆறுதலைப் பெற முடியும். எங்கள் மடமையினாலும், நாங்கள் செய்யும் காரியங்களினாலும் உலக மாயக் கவர்ச்சிகளால் தாக்குண்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் எங்களைக் கண்கொண்டு பாரும். எங்களுக்காக அலகை விரித்து வைத்திருக்கும் சதி வலையில் நாங்கள் சிக்காமல், நீர் சிந்திய இரத்தத்தின் ஒரு துளி இரத்தத்தை எங்கள் மீது தெளித்தருளும். அலகையின் வேதனையில் எங்களை விழ விடாதேயும். தீயோனிடமிருந்து எங்களைக் காத்தருளும். ஆமென்.
மனஸ்தாப மன்றாட்டு:
அன்பான தந்தையே! தேவரீர் அளவில்லாத நன்மையும் பரிவும் நிறைந்தவர் என்பதை நாங்கள் முழு மனத்தோடு நம்புகிறோம். எங்களைப் பாதுகாத்து நேசித்து வரும் உமக்கு விரோதமாய் பலமுறை தவறு செய்துள்ளோம். ஆண்டவரே, நாங்கள் அனைவரும் பலவீனர்கள் என்பதை நீர் அறிவீர். தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்தக் குற்றங்களை மன்னித்து, எங்களுக்கு அறிவையும் விவேகத்தையும் தரும்படி உம்மிடம் வேண்டுகின்றோம். ஆண்டவரே! உம் திருக்குமாரன் பட்டக் கொடியப் பாடுகளையும், அவர் எங்கள் மீட்புக்காகச் சிந்திய இரத்தத்தையும் பார்த்து, எங்கள் குற்றங்களை எல்லாம் பொறுத்து எங்களுக்கு உம்முடையப் பரிபூரண அருளையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என முழு மனதோடு நம்பியிருக்கிறோம். திருச்சபை விசுவசித்து படிப்பிக்கும் சத்தியங்கள், செபங்கள் அனைத்தையும் நீர் தாமே அறிவித்துள்ளீர் என்பதை நாங்களும் அறியும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமது சித்தப்படி வாழ்ந்து முடிவில்லாத வாழ்வை எமக்கு அளித்தருளும்படி உம்மிடம் வேண்டுகின்றோம். ஆமென்.
தியானம்:
ஆண்டவரால் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட மனிதன் கடவுளின் மகன் என அழைக்கப்படுகிறார். இவர் தனியாய் இருப்பது நல்லதல்ல. ஆதலால், என் மகனுக்குத் தகுந்த துணையை உண்டாக்குவேன் எனக் கூறிய ஆண்டவர் மனிதனுடைய விலா எலும்பிலிருந்தே மனிதனுக்குத் துணையை உருவாக்கினார். அவர் உருவாக்கியப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்து ஒப்படைத்து அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள், அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள் எனக் கூறி அவர்களை இணைத்து வைத்தார். அவர்கள் வாழ்வதற்காக, ஆண்டவரே ஒரு தோட்டத்தைம் நிர்மாணித்துக் கொடுத்தார். இறைவனும் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். உலகத்தைப் படைப்பதற்கு முன், ஆண்டவருடைய பெரும் வானக சேனைகளின் தலைவனாய் இருந்த லூசிபர், இறைவனின் சீற்றத்துக்கு ஆளானான். 'என்னால் என் சாயலில் படைக்கப்படும் மக்கள் என்னை விட்டு விலகிச் செல்வார்கள். உலகிற்கு மீட்பர் தேவை. மீட்பது என் மைந்தன். அவரை நீங்கள் ஆராதிக்க வேண்டும்' என்றார் கடவுள். விடிவெள்ளி என அழைக்கப்பட்ட லூசிபர் ஆண்டவரை எதிர்த்து, நான் அதிதூதராய் இருக்கும் போது மனுவுரு எடுக்கும் உம் மைந்தனை ஆராதிக்க மாட்டேன். பணியவும் மாட்டேன், பணிவிடை செய்யவும் மாட்டேன் என ஆணவத்தோடு இறைவனை எதிர்தெழுந்து, இறைவனுடைய சாபத்துக்கு ஆளானான். அவனும் அவனுடைய தூதர்களும் விண்ணகத்தில் அவர்களுக்கு இடமில்லாமல் வெளியே தள்ளப்பட்டார்கள். விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவர் தனது சாயலாகத் தான் படைக்கப் போகும் மனித இனத்துக்காக உலகை எத்தனை அழகாகப் படைத்துள்ளார். அவனுக்காக ஆண்டவரே ஒரு தோட்டத்தை அமைத்து மனிதனையும் அவன் துணைவியையும் அங்கு குடி அமர்த்தினார். ஆண்டவர் படைப்பின் மேலானப் படைப்பாகிய மனிதன் இறைவனுடையக் கட்டளைக்குப் பணியவில்லை. ஆதாமுக்கு ஆண்டவர் துணையாகக் கொடுத்த ஆதித் தாய் ஏவாளின் ஆசையினாலும் ஆங்காரத்தினாலும் விண்ணக வாழ்வை அவர்கள் இழந்தார்கள். மனித இனம் முழுவதும் அலகைக்கு அடிமையானது.
ஆண்டவர் பாம்பான அலகைக்கு இட்ட தீர்ப்பு:
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகைமை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிக்காலைக் காயப்படுத்துவாய். அலகையும் ஆண்டவர் கூறியப் பெண்ணையும், அவள் வித்தையும் நான்கு ஆயிரம் ஆண்டுகளாகத் தேடித் திரிந்து கொண்டேயிருந்தது. 'வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார்' என எழுதியிருப்பதை பார்க்கிறோம். அவருடைய மக்களாகிய யூதர்களே இன்று வரையும் அவரை முழுமையாக, அவரே எமது மீட்பர் என ஏற்றுக் கொள்ளவில்லை. பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மைத் தேடி வந்த இயேசுவே! உமது வார்த்தைகளை இன்று நாங்கள் கேட்கவும், உம்மை நற்கருணை வழியாக ஆன்ம உணவாகப் பெற்றுக் கொள்ளும் மேலான பேற்றை எங்கள் எல்லோருக்கும் தந்தீர். உமது திருத்தாயை எங்களுக்கெல்லம் தாயாகத் தந்தீர். ஒரு பெண்ணினால் உலகம் சாவை சுமந்தது. இன்னொரு பெண்ணினால் உலகிற்கு விமோசம் கிடைக்கும் எனக் கூறிய இறைவா! உமது திரு மைந்தன் வழியாகவே உலகம் விமோசனமடைய திருவுளம் கொண்டீரே! இறைவாக்கினர் வழியாக, அவர் அனுபவிக்கப் போகிற துன்ப வேதனைகளை வெளிப்படுத்திய ஆண்டவரே, மனதால் உம்மைத் தெண்டனிட்டு ஆராதிக்கிறோம். வார்த்தையானவரான இறைவன் கூறியது: 'அடிப்போருக்கு என் முதுகையும், தாடையைப் பிடுங்குவோருக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். காறி உமிழ்வோருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை' (எசாயா 50:6). ஆண்டவர் கூறிய இவ்வார்த்தையை நாம் மனதில் வைத்து சிந்திப்போம். இறைவன் மானிடரானார். தன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களின் ஆன்ம விமோசனத்துக்காக அவரின் மக்களாலேயே கொலை செய்யப்பட்டார். அவர் மக்களின் மீட்புக்காகச் சிந்திய இரத்தம், அவர் பட்டப் பாடுகள் இன்று மனிதர்களிடமிருந்து காணாமல் போய் கொண்டிருக்கின்றது. இயேசுவின் பாடுகளைப் பற்றி அதிகம் நேசித்த புனித பவுஸ்தீனாவுக்கு இயேசு கூறியது. 'வேதனை நிறைந்த எனது பாடுகளின் போது என் உடலும் இதயமுமான திருச்சபையிலிருந்து பலர் வெளியேறுவார்கள். இவர்கள் என் இதயத்தில் கிழிசல்களை உண்டாக்கினார்கள். இன்னும் பலர் உண்டாக்குவார்கள்' எனக் கூறியுள்ளார். அவர்கள் மனம் மாற வேண்டும். உண்மையான ஆயனிடம் வர வேண்டிய வரத்தை கொடுக்குமாறு தந்தையாம் இறைவனிடம் பணிந்து மன்றாடுவோம்.
இயேசு தனது சீடர்களில் ஒருவனால் பாவிகளிடம் காட்டிக் கொடுக்கும் நேரம் நெருங்கி வந்த போது, தனது மற்றைய சீடர்களிடம் 'மனுமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார்' எனக் கூறிய அதே நேரம் யூதாஸ், படைப்பிரிவினர் யூதர் புடை சூழ வந்தான். இதைக் கண்டவுடன் அவருடைய சீடர்கள் அனைவரும் அவரைத் தனியே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இயேசு அவ்விடத்தில் தனி மரமாக நிற்கிறார். இயேசுவே ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்.
முதலாம் கால் மணி
எல்: இயேசுவே! உமக்காகவே வாழ்கின்றேன். இயேசுவே! உமக்காகவே இறக்கின்றேன். இயேசுவே! என் வாழ்விலும் இறப்பிலும் நான் உம்முடையவனாகவே/உம்முடையவனாகவே இருக்கின்றேன்.
தனது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றக் கத்தாத செம்மறி போல் கைது செய்யப்பட்டவர்களோடு செல்கிறார். இதன் பின் அவர்கள் இயேசுவுக்கு செய்த சித்தரவதைகள் எத்தனை கொடூரமானவை என்பதை எவரும் இன்று வரை அறியமுடியவில்லை. கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்த இறைவன், எப்படி மனிதர் முன் கொண்டுவரப்பட்டார்? மனித சாயலை இழந்தார், காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலைக்கு அவரை ஆளாக்கினார்கள். கொடியவர் முன் கத்தாத செம்மறி போல் வாய் மூடுகின்றார். அவர் யார்? அவரே எம்மைப் பார்த்து கேட்கிறார், இப்பாடல் வழியாக இறைவன் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்குச் செவிகொடுப்போம்:
எனது ஜனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்?
எதிலே உனக்கு துயர் தந்தேன்? எனக்குப் பதில் நீ கூறிடுவாய்.
1.
எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே!
அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தந்தாய்?
2.
நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைநிலத்தில் வழிநடத்தி
உனக்கு மன்னா உணவூட்டி, வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்!
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்?
3.
நான் உனக்காக எகிப்தியரை அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை வதைத்து ஒழித்தேன்!
நீயோ என்னைக் கசையால் வதைத்துக் கையளித்தாய்?
4.
பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்!
நீயோ என்னைத் தலைமையாம் குருக்களிடத்தில் கையளித்தாய்?
5.
நானே உனக்கு முன்பாக கடலைத் திறந்து வழி செய்தேன்!
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே திறந்தாயே?
6. மேகத்தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே நான் சென்றேன்!
நீயோ பிலாத்தின் நீதிமன்றம் என்னை இழுத்துச் சென்றாயே?
7.
பாலைவனத்தில் மன்னாவால் நானே உன்னை உண்பித்தேன்!
நீயோ என்னைக் கன்னத்தில் அடித்துக் கசையால் வதைத்தாயே?
8.
இனிய நீரைப் பாறையினின்று உனக்கு குடிக்கத் தந்தேனே!
நீயோ கசக்கும் காடியை எனக்கு குடிக்கத் தந்தாயே?
9.
கானான் அரசரை உனக்காக நானே அடித்து நொறுக்கினேன்!
நீயோ நாணல் தடி கொண்டு எந்தன் சிரசில் அடித்தாயே?
10.
அரசர்க்குரிய செங்கோலை உனக்குத் தந்தது நானன்றோ!
நீயோ எந்தன் சிரசிற்கு முள்ளின் முடியைத் தந்தாயே?
11.
உன்னை மிகுந்த வன்மையுடன் சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்!
நீயோ என்னை சிலுவை எனும் தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்?
மந்தைகளை மேய்த்துக் கொண்;டிருந்த மோசேயை சீனாய் மலையில் எரியும் முட்செடியின் நடுவில் நின்று பெயர் சொல்லி அழைத்தார் இறைவன். மோசே அவரை நோக்கி ஆண்டவரே நீர் யார் எனக் கேட்டபோது 'இருக்கின்றவராக இருக்கிறவர் நானே' என்றவர் இம்மண்ணுலகில் மனிதனாய் ஒரு கன்னியின் வயித்தினின்று பிறந்தார். இயேசு என்ற பெயரோடு வாழ்ந்து இறை அரசின் மேன்மையை உலகினர் அறிய வைத்தார். தாம் யார் என்பதை மனித மொழியில் மும்முறை அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கும் சீடர்களுக்கும் வெளிப்படுத்தினார். 'இருக்கிறவர் நானே' என்றார். (யோவான் 8:24, 27, 13:19)
நோவாவையும் அவர் குடும்பத்தினரையும் வெள்ளப்பெருக்கில் காப்பாற்றிய இறைவன் அவரிடம் 'மனிதரின் இதய சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது' என்று கூறிய இறைவனே மனித அவதாரம் எடுத்தார். மனித அவதாரத்தில் தான் படப் போகிற அனைத்துத் துன்பப் பாடுகளையும், மரணத்தையும் உலகறிய வைத்தார். மானிடனாகப் பிறந்த அவர் 'திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம், அதை அழிப்பதற்கல்ல நிறைவேற்றவே வந்தேன்' எனக் கூறிய இயேசுவைக் கொலை செய்யத் தேடியவர்கள், அவருக்கெதிராய் சதி செய்தவர்கள் பிற இனத்தவர்களா? இறைவனை அறியாதவர்களா? அவரை அறிந்து அவரால் கொடுக்கப்பட்ட சட்டங்களையும், கட்டளைகளையும் அறிந்த லேவியரான ஆரோனின் சந்ததியரே. இன்றும் அவருக்கு எதிராய் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் வேறு எவருமில்லை நாம் தான்.
இதற்கு ஈடாக திருமுழுக்கினால் கழுவப்பட்டு உறுதிப்பூசுதல் வழியாக தூய ஆவியாரின் கொடைகளையும் இறை தந்தையின் 'என் அன்பார்ந்த மகன் (மகள்) நீயே' என்ற வாழ்த்தையும் பெற்ற நாம் இன்று எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? அன்று இயேசுவினுடைய உறவினர் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் தளர்ச்சியடைந்தார்கள். நற்கருணைப் பேழையில் தனது உரிமையின் மக்களாகிய நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இயேசுவை, தனது இரு கரங்களையும் விரித்து நம்மை அரவணைத்து ஆறுதல் தரக் காத்துக் கொண்டிருக்கும் அவரை உதாசீனம் செய்துவிட்டு மனிதர் ஆறுதலைப் பெற முடியும் என அவர்களை நாடித் தேடிக்கொண்டிருக்கிறோம். அன்று சீனாய் மலையில் எரியும் முட்செடியிலிருந்து மோசேயை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர். 'உன் பாதங்களின் மிதியடிகளை அகற்றிவிடு. நீ நின்றுகொண்டிருக்கு இடம் புனிதானது' எனக்கூறிய ஆண்டவரிடம் இம்மக்களை நடத்திச் செல் எனக் கூறினீர். இம்மக்கள் உம்முடையவர்கள் என்பதையும் எனக்குக் காட்டும் எனக் கூறிய போது ஆண்டவர் மோசேயிடம் நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய். பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும் எனக் கூறிய போது மோசே ஆண்டவரிடம் உம் மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகின்றேன் என்ற போது, 'என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. என்னைப் பார்த்த எவரும் உயிரோடு இருக்க முடியாது. யார் யாருக்கு நான் பரிவு காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்குப் பரிவு காட்டுவேன். யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்' எனக் கூறிய ஆண்டவர் இன்று நற்கருணையில் பிரசன்னமாகி நம் முன் வீற்றிருக்கிறார். தனது பரிவையும், இரக்கத்தையும் அளவுக்கதிகமாக தருவதற்கு நம்மை அவர் அழைத்துள்ளார்.
ஆண்டவரே! உமது பரிவையும், இரக்கத்தையும், மாட்சியையும் எமக்குக் காட்டினீர். எங்களில் சிலர் மரியாதையற்ற உடைகளினாலும், உம் முன் முறைகேடான நடத்தைகளினாலும், பெயரளவில் கத்தோலிக்கர்களாய் வாழ்ந்து கொண்டும், உள்ளத்தால் உம்மை மறுதலித்துப் பெரும் பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைவிட யூதாஸ் என்ற துரோகிக்கு இணையாய், சில நெறி கெட்ட குருக்கள் கனமானப் பாவ தோஷமுள்ள ஆன்மாவோடு உம்மைப் பலியிட்டுத் திவ்விய நற்கருணை வழியாக உம்மை உட்கொள்ளும் அக்கிரம துரோகங்களுக்கு பரிகாரமாக உம்மிடம் இரந்து மன்றாடுகின்றோம். ஆண்டவரே! இவர்கள் மேல் இரக்கமாயிரும்.
ஆண்டவரே! மோசே உம் முன் மண்டியிட்டு இம்மக்கள் உம் முன் பெரும் பாவம் செய்துவிட்டார்கள். அவர்கள் செய்தப் பாவத்தை மன்னித்துவிடும். இல்லையேல் நீர் எழுதியுள்ள உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும் என விண்ணப்பித்த போது 'எவன் எனக்கெதிராய் பாவம் செய்தானோ அவனையே என் நூலிலிருந்து நீக்கிவிடுவேன். ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்' என்று கூறிய ஆண்டவரின் வார்த்தையை நினைக்க வேண்டியது இறை மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாகும். இறைவனை அறியாத இன்னும் பல கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆண்டவரின் கட்டளைகளை அறிய மாட்டார்கள். ஆனாலும் திருச்சட்டம் கற்பிக்கும் நெறி தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களின் மனச்சான்றே இதற்கு சாட்சி (உரோ. 2:15). இயேசுவைப் பற்றி அறியாதவர்கள் நீதியின் வழியில் நடந்து, நேர்மையைக் கடைப்பிடித்து, ஆன்மாவின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்வோரும், இறைவனின் மக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் தமக்கு ஏற்படும் துன்பம், சோதனை, நோய்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, இறைவனை நிந்தை செய்யாமல் அவற்றைத் தாங்கும் போதும் இயேசுவினுடைய பாடுகளில் தம்மை அறியாமலே பங்கு பெறுகிறார்கள்.
இயேசுவின் போதனையைக் கேட்கவும், அவரைப் பின்தொடர்ந்து வந்தப் பெருந்திரளான மக்களை நோக்கி அவர் கூறியது (அவரைத் தேடி வந்த மக்கள் கலிலேயா, தெக்கப்பொலி. ஜெருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள்) கூறிய எட்டு மலைப்பொழிவுகள் அதில்:
தூய்மையான உள்ளத்தோர்,
அமைதியை ஏற்படுத்துவோர்,
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்,
ஏழையர் உள்ளத்தோர், பற்றி எடுத்துக் கூறினார்.
இயேசுவைத் தேடிப் பின்தொடர்ந்து வந்த பெருந்திரளான மக்களையும் அவர் நேசிக்கிறார். எல்லோரையும் அவர் அன்பு செய்கிறார். இவர்களின் மத்தியில் பிற மதத்தினரில் இருந்து எம்மைத் தேடி வந்து, அருள் வாழ்வையும் ஈந்து, உம் மக்கள் என எம்மை அழைத்த ஆண்டவரே, உம்மை அன்பு செய்வதில் அசட்டையாகி, உலகிலும் அதன் மாயக் கவர்ச்சிகளிலும் அதிகமானப் பற்று வைத்து, உலகின் பெருமைகளை நாடித் தேடி வாழ்ந்துக் கொண்டிருக்கும் எங்கள் மீது இரக்கம் வையும். எங்கள் தவறை நாங்கள் உணர்ந்து, எங்களுக்காக உம் மாசற்ற உயிரை, மக்களாகிய எமக்காக உம்மையே பலியாக இறை தந்தைக்கு ஒப்புவித்தீர். உம்மையே நேசித்து, உமக்குரிய மக்களாக நாம் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே! எம்மீது இரங்கி எம்மன்றாட்டைக் கேட்டருளும்.
ஏழ்மையில் பிறந்து வளர்ந்து, இறைத் தந்தையின் கட்டளைக்கும் பணிந்து, உலக மக்கள் அனைவரும் இறைவனுக்கு உரியவர்களாய் மாற வேண்டுமென்ற மேலான எண்ணத்தோடு உம்மையே மனமுவந்து ஏற்றுக் கொண்ட இயேசுவே, இவ்வுலகில் நாங்கள் வாழும் காலங்களில் எங்கள் உறவுகளாலும், அயலார்களாலும், உடன்பிறப்புகளாலும் எமக்கு ஏற்படும் பழிப்புரைகள், புறக்கணிப்புகள், அவமானங்கள் யாவற்றையும் நல்ல மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய மனவலிமையைத் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே! எம்மீது இரங்கி எம்மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழ்வும் வழியும் நானே, என்னை அன்றி வேறு வழியாக இறை அரசில் நுழைய முடியாது எனக் கூறி, என்னைப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது. என்னோடு இணைந்திராதவர் கொடியைப் போல் தறிந்து எறியப்படுவார்கள். உலர்ந்து போன அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும் என்பதை எடுத்துக் கூறிய இயேசுவே, இவ்வார்த்தை வழியாக உம் மக்களாகிய எமக்கு உண்மையை எடுத்துக் கூறி, எம் ஆன்மாவை வழிநடத்திச் செல்ல வேண்டிய அறிவுரைகள் கூறிய இயேசுவே அதில் நீர் எமக்குக் கூறிய அறிவுரையைக் கேட்டு உணர்ந்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே! எம்மீது இரங்கி எம்மன்றாட்டைக் கேட்டருளும்.
என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என அழைப்போர் எல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி நடப்பவரே அதைச் சொந்தமாக்கிக் கொள்வார்கள் எனக் கூறிய இயேசுவே, இறைத் தந்தையின் திருவுளத்துக்கு ஏற்றவர்களாய் நாங்கள் நடக்கவும், இறைவனின் திருவுளத்தை ஏற்று பணிந்து வாழவும் வேண்டிய வரத்தைப் பெற்றுத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே! எம்மீது இரங்கி எம்மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும், அவர் தம் ஆன்ம வாழ்வை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தன் ஆன்ம வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார் எனக் கேட்ட இயேசுவே, அதை நன்கு உணரவும், எங்களுக்காக இறைவன் தயாரித்து வைத்திருக்கும் உறைவிடத்துக்குச் சென்று, சதாகாலமும் விண்ணகத்தில் வீற்றிருக்கும் புனிதர்களோடு சேர்ந்து உம்மை துதிக்கும் வரத்தையும் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே! எம்மீது இரங்கி எம்மன்றாட்டைக் கேட்டருளும்.
என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடும், தூய வான தூதர்களோடும் வரும்போது வெட்கப்படுவார் என எச்சரித்த இயேசுவே, மீண்டும் எங்களை நோக்கி உறுதியான விசுவாசத்தில் நிலைத்து நில்லுங்கள் என அனுதினமும் எங்கள் உள்ளத்தில் கூறிக் கொண்டிருக்கும் இயேசுவே, இறைத் தந்தை உம் வழியாக அறிவித்திருந்த அனைத்தையும் நாங்களும் கடைப்பிடித்து வாழ வேண்டிய அருளை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே! எம்மீது இரங்கி எம்மன்றாட்டைக் கேட்டருளும்.
செபிப்போமாக:
உமது பாடுகளினாலும், இறப்பினாலும் உமது தூய இரத்தத்தைச் சிந்த நிறைவாழ்வை எங்களுக்குத் தந்த இயேசுவே, உம்மைப் பணிந்து ஆராதிக்கிறோம். விண்ணுலகில் மாட்சியோடு இருப்பது போல மண்ணுலகிலும் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் மாட்சி பொருந்திய நற்கருணைப் பேழையில் இருக்கும் உம்மை வானவ தூதர்கள் புடைசூழ்ந்து இடைவிடாமல் ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து மானிடரான நாங்களும் உம்மை ஆராதிக்கவும், உமது பிரசன்னத்தை நற்கருணை வழியாக வெளிப்படுத்திய இயேசுவே, நற்கருணை கதிர்பாத்திரத்தில் அப்ப வடிவில் உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். நற்கருணையில் மறைந்த தன்மையாய் இருக்கும் உம்மை மண்ணகத்திலும் உமது அன்பு மக்கள் மண்டியிட்டு உம்மைப் பணிந்து ஆராதிக்கின்றனர். 'நற்கருணையிலிருக்கும் என் திரு மகனை ஆராதிக்கும் மக்கள் யாவரும் விண்ணகப் பேரின்ப வாழ்வுக்கு உரியவர்கள்' எனும் இறை அன்னையின் வார்த்தையை நாங்கள் நம்புகிறோம். இயேசுவே, உமது உறைவிடம் எங்கள் நடுவிலே உள்ளது. நற்கருணையில் இருக்கும் ஆண்டவர் எங்கள் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுகிறார். உம் மக்களுக்கு இனி மேல் சாவு இல்லை. துயரம், துன்பம் இராது. திருமுழுக்கு வழியாக சாவினின்று நாங்கள் மீட்கப்பட்டோம். சதாகாலமும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக. ஆமென்.
எல்: பொறுத்தருளும் கர்த்தாவே! எமது பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றும் எங்கள் மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
இரண்டாம் கால் மணி
யூதாசினால் முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு, தலைமைச் சங்கத்தின் முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும் தம் வாயைத் திறவாது தீர்ப்புக்காகக் காத்து நிற்கிறார்.
தந்தை எனக்குத் தந்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனா? இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவை யாவும் நிகழ்கின்றன. மறைநூல் வாக்குகள் யாவும் என்னில் நிறைவேற வேண்டும், மானிட மகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், எனக் கூறிய இயேசு கொடியவர்கள் முன் மனித சாயலும் மானிட உருவமும் சிதைக்கப்பட்ட மனிதராய், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் நின்றார். இறைவாக்கினர் எசாயா வழியாக வார்த்தையான அவர் கூறியவை அனைத்தும் குறைவின்றி நிறைவேற வேண்டும் அல்லவா?
தலைமைக்குரு கயாபா முன் இயேசு குற்றவாளியாக கட்டியக் கட்டுகளோடு நிற்கிறார். அவரிடம் தலைமைக்கு 'நீ கடவுளின் மகன் மெசியாவா?' எனக் கேட்ட போது இயேசு கூறிய பதில் அவர்களை அதிர வைத்தது. அவர்களைக் கோப வெறி கொள்ள வைத்தது. 'நீரே சொல்லுகிறீர், மானிட மகன் வல்லவராய் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும், வான மேகங்களின் மீது வருவதையும் இது முதல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார். மாற்கு தனது நற்செய்தியில் இவ்வாறு எழுதுகிறார்: தலைமைக்குரு இயேசுவிடம் 'போற்றுவதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீ தானோ?' எனக் கேட்ட போது இயேசு எவ்வித தயக்கமுமின்றி 'நானே அவர், மேலும் மானிட மகன் வல்லவராய் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள் சூழவருவதையும் காண்பீர்கள்' எனக் கூறிய போது அலகையும் இயேசு யார் என்பதை நன்கு அறிந்து கொண்டான். அவனும் இவர்களுக்குள் புகுந்துகொண்டு இறைவாக்குகள் அனைத்தையும் சிறுதுளிவடு பிசகாமல் நிறைவு செய்தான்.
இன்று இறைவாக்கினர் எசாயா வழியாக தமக்கு மனிதர் செய்யப் போகும் கொடுமைகள் அனைத்தையும் இறைவன் வெளிப்படுத்தினார். இயேசுவின் திருப்பாடுகள் நம்மோடு பின்னிப்பிணைந்தவை. இன்று பெயரளவில் கத்தோலிக்கர்களாய வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். இயேசுவின் பாடுகளை சிந்திப்பதில் தயக்கம் கொண்டு, அதைப் பற்றி சிந்தித்தால் தமக்குத் துன்பம் வரும். அவருடைய பாடுகளை மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே சிந்திக்கிறார்கள். எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. இவர்களைப் பற்றி நினைப்பதாலும் கதைப்பதாலும் நமக்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் திருப்பலிக்குப் போவோம், நற்கருணை வாங்குவோம் எனக் கூறும் கத்தோலிக்க மக்களிடையே நாமும் ஒருவராய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆண்டவரே, நீர் எங்களுக்காகப் பட்ட கொடிய பாடுகளை நினைவு கூர்ந்து, அதன் வழியாக நாம் அடையப்போகும் நிலைவாழ்வை எமக்கு விளக்கி அதை கண்டடையச் செய்த இயேசுவே இவ்வுலகில் நாங்கள் வாழும் காலம் வரை உமக்குப் பிரமாணிக்கமாய் இருந்து வாழ அருள் புரியும். 'இயேசுவின் பாடுகளை நினைப்பவன் பாவம் செய்யமாட்டான்' எனப் புனிதர் ஒருவர் எழுதி வைத்தார். புனித ஜெர்த்ருத்தம்மாள் இயேசுவின் பாடுகள் மீது பரிவு கொண்டவர். இயேசு அவருக்குக் காட்சியளித்து 'யாதொருவன் என் திருச்சிலுவையை பக்தியோடு பார்ப்பானோ, அவனை நானும் பட்சத்தோடு பார்ப்பேன். என் அருளை அவன் மீது பொழிந்தருள்வேன்' எனக் கூறினார். இதன்படி நம் தாய்த் திருச்சபை, 'இயேசுவின் பாடுபட்ட திருச்சிலுவையை வீட்டில் வைத்திருங்கள், திருச்சிலுவையே மீட்பின் சின்னம்' எனக் கூறியுள்ளது.
இறை மக்களாகிய நாம் அவரால் தெரிவு செய்யப்பட்டவர்கள், அவருடையப் பாடுகளையும், இறப்பையும், உயிர்ப்பையும் நாம் சிந்தித்து, அவருடைய பாடுகளில் பங்குக் கொள்ள உரிமையுள்ள மக்களாய் இருக்கிறோம். நம்மைத் தேடி வந்து ஆண்டவர் அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ள பலராலும் முடியவில்லை. அவருடையப் பாடுகளையும், இறப்பையும் அறியவும், அவர் பட்டத் துன்ப வேதனைகளில் பங்கு கொள்ளவும் பலரை அழைத்துள்ளார். 'என் இதயத்துக்கு ஆறுதல் தர ஓர் உயிர்ப்பலியை நான் தேடினேன். உன்னை நான் தெரிந்துகொண்டேன்' என உமது நேச மார்கரீத் மரியாளுக்கு நீர் கூறியது போல் எங்களுக்கும் கூறி, எங்களை உம்முடைய திரு இரதயத்துக்குள் ஏற்றுக்கொள்ளும்.
அவரைப் பற்றி எழுதப்பட்ட இறைவாக்குகள்: இவை அனைத்தையும் இறைவாக்கினர் வழியாக உலகினருக்கு கடவுள் வெளிப்படுத்தினார். தனது உருவமும் சாயலுமாய், அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் தனக்குச் செய்யப் போகும் கொடுமைகளையும், சித்திரவதைகளையும், கொடிய இறப்பையும் எடுத்துக் கூறுகிறார் ஆண்டவர்.
திருப்பாடல் 22: 6 - நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
திருப்பாடல் 22:7, 8 - என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, ‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த அவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.
திருப்பாடல் 22:14 - நான் கொட்டப்பட்ட நீர் போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.
திருப்பாடல் 22:15 - என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டு விட்டீர்.
திருப்பாடல் 22:16 - தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
திருப்பாடல் 22:17, 18 - என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
'அடிப்போருக்கு என் முதுகையும் தாடியைப் பிடுங்குவோருக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தை செய்வோருக்கும், காறி உமிழ்வோருக்கும் என் முகத்தை மறக்கவில்லை' (எசாயா 50:6) எனக் கூறியவர் நம்மைத் தனது சாயலாக உருவாக்கிய ஆண்டவர். இயேசுவே உமது வேதனை நிறைந்த பாடுகளை நினைக்கவும், அதில் ஆழ்ந்த பற்றுதியை வைக்கவும் எங்களை நீர் தெரிவு செய்தீர்.
ஆண்டவரே, இக்காலத்தில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனுமக்களின் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்களின் காரணமாய் எத்தனையோ ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தம் குழந்தைகளை இழந்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எவ்விதக் குற்றங்களும் செய்யாத அப்பாவி மக்கள் குண்டுத் தாக்குதல்களுக்கும், செல் வீச்சுக்களுக்கும், துப்பாக்கிச் சன்னங்களுக்கும் ஆளாகி உயிர் பிரியும் வேளை ஆண்டவரே உம்மை நோக்கி அபயமிட்டே இறந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சிந்திய இரத்தம் உம்மை நோக்கி கதறி அழுகிறதே. இவர்களுக்கும் மீட்பைக் கொடுத்தருளும். ஆண்டவராகிய இயேசுவே, இவ்வுலகில் உமது வார்த்தைகளில் மேலான வார்த்தைகள் மலைப்பொழிவில் சொல்லப்பட்ட வார்த்தைகளாகும். உம்முடைய வார்த்தைகளில் மேன்மையானது, 'எளிய மனத்தோர்; நீதிக்காகத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றவர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது'. நீதிக்காகக் குரல் கொடுத்து போராடும் சமுதாயத்தினர் இவ்வுலகத் தலைவர்களினால் கைது செய்யப்பட்டு ஈவு, இரக்கமின்றி வதை முகாம்களில் அடைக்கப்பட்டு மனிதர்கள் இதயத்தின் எண்ண முடியாத தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவலமான மரணத்தை அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் போதே அவர்களின் கண்கள் இரண்டும் பிடுங்கப்படுகின்றன. உயிரோடு இருக்கும் போதே உள் உறுப்புகள் அகற்றப்படுகின்றன. உடல்கள் சல்லடையாக்கப்பட்ட வேளையிலும், வேதனையுற்ற அவர்களின் அவலக்குரல் ஆபேலைப் போல் குற்றமற்ற இவர்கள் அனைவரும் விண்ணரசில் உம்மோடு இருக்கிறார்கள். தவறிழைக்கும் மனிதர்கள் அனைவரையும் நோக்கி ஆண்டவர் கூறிய வார்த்தை உண்மையாயிற்று. ஆண்டவர் கூறியது: 'தவறிழைக்கும் மனிதனில் என் ஆவி என்றென்றும் தங்கப் போவதில்லை, அவன் வெறும் சதையே' இன்று உம்மைத் தேடாமலும், நினையாமலும் தம் மனம் போனபடி வாழ்ந்துக் கொண்டு, 'கடவுள் என்பவர் இருக்கிறார் என்பது உண்மையில்லை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அதை நான் நம்புவதில்லை. என்னையே நான் நம்புகிறேன்' என மார்தட்டி பெருமை பேசிக் கொண்டிருக்கும் மனிதர் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு உறுதியான விசுவாசத்தையும் நம்பிக்கையையும் தந்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு நாங்கள் யாரிடம் போவோம்.
ஆண்டவரே! உமது அன்னை வழியாக உலகிற்கு விடுத்த செய்தி: (மஜகோரி அன்னையின் செய்தி) 'என் மக்களே, யுத்தமானது யாருக்கும் நன்மை தரப்போவதில்லை. யுத்தங்கள் ஏற்படுவதற்கு சாத்தானே முன் நிற்கிறான். அவனே தலைமை வகிக்கிறான். அவனுடைய சூழ்ச்சிகளுக்கு அடிமையான மனிதர் எவ்விதத் தீச்செயல்களைச் செய்வதற்கும் அஞ்சமாட்டார்கள். உலகெங்கும் அவனால் ஆரம்பிக்கப்படும் யுத்தங்களினால் ஏற்படும் அழிவுகள், மனித குழப்பங்கள் வழியாக மனிதர் அனைவரையும் இறைவனுக்கு எதிராய் மாற்றி விடுகிறான். இறைவனை அன்பு செய்யும் மக்களுக்கு சொல்லொண்ணாத சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்து அவர்களின் மனங்களைக கலங்கடித்துக்கொண்டு வருவான். 'அஞ்சாதீர்கள்! நான் என்றும் உங்களோடு இருப்பேன்'. இச்செய்தியை உலகிற்கு வெளிப்படுத்திய அன்னையிடம் மன்றாடுவோம்.
இயேசுவின் தாயும், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மிகுதியான துன்பங்களை அனுபவித்தவர். வியாகுல அன்னையாக வாழ்ந்த அவரை நோக்கிச் செபிப்போம்
வியாகுல மாதாவே! எங்கள் அன்புத் தாயே! உமது திரு மகன் உம்மிடம் வந்து, 'எனது தாயே இறைத் தந்தையின் விருப்பத்தை நான் நிறைவு செய்யும் நேரம் வந்துவிட்டது. மானிடர் அனைவரும் மீட்படைய வேண்டி எனது தந்தைக்கு எனது உயிரைப் பாவ நிவாரணப் பலியாக ஒப்புக்கொடுக்கவும், இறைத் தந்தையால் எதற்காக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டேனோ அதையும் செய்தேன். இறைவாக்குகள் யாவும் என்னிடம் நிறைவேற வேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது. அதை நிறைவு செய்ய எனக்கு விடை தரவேண்டும்' எனக் கேட்ட போது தாயே நீர் அடைந்த வியாகுலம் எவ்வளவு என்பதை உலகினரால் என்றும் உணர முடியாது. உமது திரு மகன் அடையப் போகிறக் கொடுமையான சித்திரவதைகளால் அவருடைய உடல் சர்வாங்கமும், அடிகளாலும் காயங்களாலும், அசுத்த உமிழ் நீரினாலும், இரத்தத்தினாலும் மூடப்பட்டு, மனித சாயலே இல்லாமல் ஆக்கப்படுவார் என்பதையும் நீர் அறிவீர். எல்லோரையும் தேடிச் சென்று அரவணைத்து ஆறுதல் அளித்த இரு கைகள் ஆணிகளால் துளைக்கப்படும். மக்களை மூன்று வருடங்களால் தேடித்தேடி அலைந்தக் கால்களின் பாதம் இரண்டும் கூரிய இரும்பாணிகளால் ஊடுருவப்படும் என்பதை அறிந்தும் அவர் சிந்தப் போகிற இரத்தம் மானிடரை அந்தகாரத்திலும், அலகையின் பிடியினின்றும் காக்க வல்லது என்பதை அறிந்து ஆறுதல் அடைந்த தாயே. உமது திரு மகன் எமக்காகப் பட்ட கொடிய ப்பாடுகளை நாங்களும் நினைத்து எங்கள் கண்களை சிறிது நேரம் மூடி தனது அன்னையிடம் இயேசு அனுமதி கேட்டு நின்ற போது, மனித ஈடேற்றத்துக்காய் அவருக்கு எவ்விதக் குற்றமும் செய்யாத தனது மகன் இரு கள்வர் நடுவில் பெரும் கள்வனைப் போல் உடைகள் உரியப்பட்டு சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு அவருடைய மாசற்ற திரு முகமும், திரு உடலும் சிதைக்கப்படும் என்பதையும் அவ்வேளை அவர் சிந்திய இரத்தம் மானிடரை சாவு என்ற நரகத்துக்குப் போகவிடாமல் காக்க வல்லது என்பதை நினைத்து மனஆறுதல் அடைந்தார். சிலுவை அடியில் நின்றத் தாயே, உமது அடைக்கலத்தில் எங்களை ஒப்படைக்கிறோம். இறைவனின் திருவுளத்துக்கு பணிந்திருந்து, எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக் கொண்டீர். இறைவனின் திருவுளத்தை ஏற்று வாழ வேண்டிய வரத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். ஆமென்.
செபிப்போமாக:
நித்தியத் தந்தையே! எங்கள் பாவங்களுக்காகவும், உலகினரின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், உமது அன்புத் திரு மகன் இயேசு கிறிஸ்து பட்டப் பாடுகளையும், எண்ண முடியாத காயங்களால் மூடப்பட்ட அவருடைய உடலையும், ஆன்மாவையும், தெய்வீகத்தையும், உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.
எங்களுக்காக, எம் மீட்பிற்காக, உம் மக்கள் மீது நீர் வைத்திருந்த அன்பின் நிமித்தம் இழந்து போன விண்ணகப் பேரின்ப வாழ்வை அளிப்பதற்காகப் பாவப்பட்ட இவ்வுலகில் மானிடனாகப் பிறந்தீரே. மீட்பின் அடையாளமாகத் தோன்றிய சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு இழந்து போன விண்ணக வாழ்வை மனித இனம் அடைய உமது திரு இரத்தத்தை சிந்திய இயேசுவே, நீசப்பாவிகளான எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
கெத்சமெனித் தோட்டத்தில் ஆறாத் துயரத்தோடு 'தந்தையே, இத்துன்பக்கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உமது விருப்பப்படியே ஆகட்டும்' என இறைத் தந்தையிடம் வேண்டிக் கொண்ட இயேசுவே, உமது திருப்பாடுகளை, திருப்பலியின் மேன்மையை உணராமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
உமது சீடர்களால் கைவிடப்பட்டு, மூன்று வருட காலம் உம்மோடு இருந்து, உமது வாழ்வு தரும் வார்த்தைகளைக் கேட்டிருந்த போதும் பண ஆசையினால் துரோகியாக மாறிய பாவிகளான கொடிய யூதரினால் 'குருவே வாழ்க' என முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசுவே, யூதர்களைவிடப் பெரும் பாவிகளான எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
இறை அரசைப் பற்றி எடுத்துக் கூறிய உம்மைக் கொலை செய்துவிட வேண்டுமென்று வெறி கொண்ட ஓநாய்களைப் போலும், கொலை வெறியோடு மமதையில் ஒன்று கூடியிருந்த சாத்தானின் ஊழியர்களான தலைமைச் சங்கத்தின் முன் சங்கிலிகளாலும், கயிறுகளாலும் கட்டப்பட்டு அன்னா, கையபா என்னும் தலைமைக்குருக்களால் மரண தீர்வைக்கு தீர்ப்பிடப்பட்ட இயேசுவே, பாவிகளான மனிதர்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
கொடியப் படை வீரனால் கன்னத்தில் அறையப்பட்டு, திரு விழி மறைக்கப்பட்டு, திரு முகம் துணியால் கட்டப்பட்டு, 'உன்னை அடித்தவன் யார்' எனக் கேட்டுப் பலமுறை தரையில் குட்டப்பட்டு அவமானத்துக்கும் பரிகாசத்துக்கும் ஆளான இயேசுவே, எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
துரோகியாக மாறிவிட்ட உமது சீடர் ஒருவனால் முப்பது வெள்ளிக் காசுக்கு அடிமையாக விற்கப்பட்ட இயேசுவே, எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
பரபாஸ் என்றக் கொலைகாரனைப் பிலாத்து விடுவிக்கும்படி அவர் முன்னிலையில் கூச்சலிட்டு உமக்கு விரோதமாய் எழும்பிய மக்களைக் கண்டும் எவ்விதப் பதிலும் கூறாமல் வாய்மூடி நின்ற போது பரபாஸ் என்றக் கொலைகாரனைப் பிலாத்து விடுதலை செய்து உம்மைக் கசையால் அடிக்கும்படி தனது படை வீரரிடம் ஒப்படைத்ததைக் கண்டும் இறைத் தந்தைக்குப் பணிந்து அவர்களோடு நடந்து சென்ற இயேசுவே, பரிசேயர்களாலும், மறைநூலறிஞர்களாலும் அலகையினாலும் தூண்டப்பட்ட படையினர் கசைவார்களினால் உமது முதுகுச் சதை பிய்ந்து தொங்கும்படி அடித்த போதும் மனிதர் இறைவனுக்கு எதிரான பாவங்களுக்குப் பரிகாரமாக அவற்றை ஏற்றுக் கொண்ட இயேசுவே, எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
கொடியப் படை வீரரால் பின்னப்பட்ட முள்முடி கிரீடத்தை ஏற்றுக் கொண்ட இயேசுவே, அவர்கள் அதை உமது தலையில் சூடி அதைத் அடித்து இறக்கிய போது முட்கள் உமது கபாலத்தைக் கிழித்துக் கொண்டு இறங்கிய போது நீர் துடித்தத் துடிப்பை யார் அறிவார்கள். தலையிலிருந்து பாதம் வரை உயிரோடு தோலுரிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிப் போல் தோன்றிய உம்மை 'இதோ மனிதன்' என காட்டிய போது உம் மக்களான யூதர் இரக்கமில்லாதவர்களாய் 'இவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்' எனக் கூக்குரலிட்டபோது. பிலாத்துவினால் பிற இனத்தாரிடம் சிலுவையில் அறைந்து கொல்லும்படி ஒப்புவிக்கப்பட்ட இயேசுவே, எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
பாரச் சிலுவையோடு உலகினர் செய்யும் பாவங்களையும், உலக முடிவு வரை மனிதர் செய்யும் பாவச் செயல்களும் பாரச் சிலுவையோடு சேர்ந்து உம்மை அழுத்தின போது அதன் கனாகனத்தைத் தாங்க முடியாமல் அநேக தடவை சிலுவையோடு தரையில் விழுந்த இயேசுவே, எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
இரு கள்வர் நடுவில் பெரும் கள்வனைப் போல் தெரு வீதிகளில் சிலுவை சுமந்த வண்ணம் படையினராலும் நூற்றுவர் தலைவர்களாலும் அழைத்துச் செல்லப்பட்ட இயேசுவே, மிகுந்த துன்பத்தோடும், வியாகுலத்தோடும், கண்களிலிருந்து பெருகிய இரத்தக் கண்ணீரோடும் ஓடி வந்த உமது அன்னையைக் கண்டு பொறுக்க முடியாத வேதனையையும் துக்கத்தையும் அடைந்த இயேசுவே, எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
உருக்குலைந்து மனித சாயலற்று சிலுவையை தோளில் சுமந்து வந்த உம்மைக் கண்ட வெரோணிக்கா என்ற சிறுமி மிகத் துணிவோடு தனது துகிலால் உமது திரு முகத்தை துடைத்த வேளை உலகினருக்கும் சாட்சியாய் இருக்கும் வண்ணம் அத்துகிலிலே உமது திரு முகத்தை பதியப் செய்த இயேசுவே, எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி.
எல்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் பாவங்களின் கனத்தையும், சிலுவையோடு சுமந்து சென்ற போது உம்மைப் பார்த்து பிரலாபித்து அழுது கொண்டு உம்மைப் பின்தொடர்ந்து வந்த எருசலேம் மகளிருக்கு அவர்களை நோக்கிப் பின்திரும்பி 'எருசலேம் மகளீரே, எனக்காக நீங்கள் அழ வேண்டாம். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்' எனக் கூறிய இயேசுவே, நீர் கூறியுள்ள இவ்வார்த்தைகளின் அர்த்ததத்தைப் புரிந்து வாழ எமக்கு அருள் தாரும் என உம்மிடம் மன்றாடுகின்றோம்...
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மண்டையோடு எனப் பொருள்படும் கொல்கொதா என்று அழைக்கப்பட்ட மலைக்கு வந்த போது சிலுவையில் அறைவதற்கு ஆயத்தமாய் உமது ஆடைகளை உரித்த போது ஆடையோடு ஒட்டியிருந்த காயங்கள் பிளவுபட்ட வேளை அகோர வேதனை அடைந்தீரே. படையினரால் சிலுவையில் கிடத்தப்பட்ட போது உமது இரு கைகளையும் நீட்டி கொடியவர்களிடம் ஆணிகளை அறையும்படி உமது திருக்கரங்களை ஒப்புவித்த இறை மகனே உம்மைத் தெண்டனிட்டு வணங்குகிறோம். உமது இரு கால்களையும் நீட்டி அவர்கள் ஆணியை அறைவதற்கு உமது இரு பாதங்களையும் அவர்களிடம் ஒப்புவித்த இயேசுவே பாவிகளான எங்கள் மேலும் உலகினர் மேலும் இரக்கமாயிரும்படி உம்மிடம் மன்றாடுகின்றோம்...
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இரு கள்வர் நடுவில் சிலுவையோடு உயர்த்தப்பட்டிருந்த வேளை மனம் வருந்தி உம்மைப் பார்த்து 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும் போது என்னையும் நினைவில் கொள்ளும்' என வேண்டிய போது 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்' எனக் கூறிய ஆண்டவரே நீர் கூறிய இவ்வார்த்தைக்கு நாங்களும் உரிமை உள்ளவர்களாக மாற எங்களுக்கு வரம் அளிக்க உம்மிடம் மன்றாடுகின்றோம்...
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மனம் வருந்தி உம்மிடம் மன்றாடிய கள்வனுக்கு நீர் வாக்களித்தது போல எம் விண்ணப்பங்களுக்கம் செவிசாய்த்து உம்முடைய அரசில் எம்மையும் சேர்த்துக் கொள்ளும். இயேசுவே துன்ப வேதனைகளை நீர் அனுபவித்த போதும் உம்மை வாதித்த உம் மக்களுக்காக, 'தந்தையே, இவர்களை மன்னியும். தாம் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' என இறைத் தந்தையிடம் மன்றாடி, 'தந்தையே எனது ஆன்மாவை உம் திருக் கரங்களில் ஒப்படைக்கிறேன்' எனக்கூறி 'எல்லாம் நிறைவேறிற்று' என்று தனது உயிரை இறைனிடம் கையளித்த இயேசுவே, உமக்கு எதிராய் நாம் செய்த குற்றங்களை மன்னிக்கும்படி ஆண்டவரே உம்மிடம் மன்றாடுகின்றோம்...
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
செபிப்போமாக:
இயேசுவின் மதுரமான இதயமே! உம்முடையத் துன்பம் நிறைந்தப் பாடுகளாலும், சிலுவை இறப்பினாலும் இழந்து போன விண்ணக வாழ்வை மானிடருக்குப் பெற்றுக் கொடுத்தீர். அலகைக்கு அடிமைகள் ஆக்கப்பட்ட மனுக்குலத்தை மீட்க உமது மாசற்ற இரத்தத்தை பூமியில் சிந்தி 'உலகிற்கு மீட்பர் தேவை. மீட்பது என் மகன்' என உலகம் தோன்றும் முன்பே இறைவன் கூறிய வார்த்தையை நிறைவு செய்த இயேசுவே. சாவு என்ற நரக ஆக்கினையினின்றும். நிர்ப்பாக்கிய மரணத்தினின்றும் எம் ஆன்மாவை அழியவிடாமல் இரட்சித்த ஆண்டவரே. இவ்வுலகில் நாங்கள் வாழும் காலம் வரை எங்களை உம்முடைய திரு இதயத்தில் வைத்துக் காப்பாற்றியருளும். இப்பூமியில் படைக்கப்பட்ட அனைத்தும் இறக்க வேண்டும் என ஆண்டவரின் கட்டளைக்கு ஏற்ப மானிடர்களான நாங்களும் இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்து உமது தீர்வைக்கு முன் நிற்க வேண்டும். எங்கள் ஆன்மா எங்களை விட்டுப்பிரியும் வேளை எங்கள் ஆன்மாவை உமது கரங்களில் ஒப்படைக்கிறோம் எனக் கூறி இறந்து விண்ணகத்தில் உமக்குரியவர்களாக இவ்வுலகில் வாழ்ந்து பாக்கியமான இறப்பை அடைந்த எங்கள் உறவுகளோடும் சேர்ந்து போற்றிப் புகழும் பாக்கியத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருளும். உமது குரலைக் கேட்டு உம்மை என்றென்றும் பின்தொடர்ந்து வரும் ஒரே மந்தையின் ஆடுகளான எங்களை ஆசீர்வதித்தருளும். ஆமென்.
ஆணி கொண்ட உன் காயங்களை, அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2
1.
வலது கரத்தின் காயமே - 2
அழகு நிறைந்த ரத்தினமே, அன்புடன் முத்தி செய்கின்றேன்
2.
இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே, அன்புடன் முத்தி செய்கின்றேன்
3.
வலது பாதக் காயமே - 2
பலன் மிகத் தரும் நற்கனியே, அன்புடன் முத்தி செய்கின்றேன்
4.
இடது பாதக் காயமே - 2
திடன் மிகத் தரும் தேனமுதே, அன்புடன் முத்தி செய்கின்றேன்
5.
திரு விலாவின் காயமே - 2
அருள் சொரிந்திடும் ஆலயமே, அன்புடன் முத்தி செய்கின்றேன்
மூன்றாம் கால் மணி
ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர் மேல் சுமத்தினார் (எசாயா 53:6).
அவரை நொறுக்கவும், நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;(எசாயா 53:10).
இறைவாக்கினர் எசாயா தனது நூலில் இவ்வாறு எழுதிவைத்தார்.
இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு கி.பி. 30ம் வருடம் சித்திரை மாதம் 7ம் நாள் அன்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். 30ம் வருடம் சித்திரை மாதம் 9ம் நாள் விடியற்காலை தனது சீடர்களிடம் கூறியவாறு உயிர்த்தெழுந்தார். இயேசுவைப் பரிவட்டத் துணியால் போர்த்தி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இறந்த மூன்றாம் நாள் மாட்சிமையோடு உயிர்த்தெழுந்தார். அவர் உயிர்தெழுந்த போது அவரைச் சுற்றி இருந்தத் துணியை பரிவட்டத் துணி என அழைக்கிறோம். அத்துணி, இயேசு அனுபவித்தக் கொடிய பாடுகளுக்கு அடையாளமாய் இருந்தது. அவருடைய சிதைவுற்ற உடல் அப்படியே பதிந்திருந்தது. இறைவாக்கினர் எசாயா வழியாக நீர் அறிவித்திருந்த உமது பாடுகள் அத்தனையும் இத்துணியில் பதிய வைத்து உலகினருக்கு அறிய வைத்த ஆண்டவரே, மனிதரின் பாவத்தின் சீர்கேடுகள் எத்துனை மோசமானவை என்பதை எடுத்துக் கூறி ஆண்டவரின் நாள் வரும், எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. தாம் தேர்ந்துக்கொண்டவர்களின் பொருட்டக் கடவுள் தண்டனை வழங்கும் நாள்களைக் குறைப்பார். இன்று உலகமெங்கும் தொடர் சங்கிலிப் போல் நடைபெற்று வரும் திருப்பலிகளின் பொருட்டே இறைவன் தண்டனைக் காலத்தைக் குறைத்து வருகிறார். குருவின் வடிவில் நீரே இருந்து அனுதினமும உம்மையே பலியாக ஒப்புக்கொடுத்து 'தந்தையே, மானிடரான இவர்களை மன்னியும்' என இறைவனிடம் பரிந்துரைத்து வருகின்றார்.
ஆண்டவரே, உம்முடையப் பாடுகளையும், இறப்பையும் நினைக்கும் பேற்றைப் பெற்றுக் கொள்ளத் தகுதியுள்ளவர்களாக எங்களைத் தெரிவு செய்துள்ளீர். திருமுழுக்கின் வழியாக நீங்கள் மறுபடியும் கடவுளுக்குள் பிறந்தவர்களே. வாக்களிக்கப்பட்ட நாடாகிய விண்ணக நாட்டை உரிமையாகப் பெறுவீர்கள் என்று வாக்களித்தீர். அன்று எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் அழைத்துச் சென்ற ஆண்டவரே நாற்பது வருடகாலம் மன்னா என்ற உணவினால் போஷித்து, அவர்களின் தாகத்துக்கு மலையினின்று நீரைச் சுரக்கச் செய்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றும் பொருட்டு நீரே பல தடவை அவர்களுக்காகப் போரிட்டு, வாக்களித்த நாட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்று குடியேற வைத்தீர். உமக்கு எதிராகச் சேர்ந்தவர்களையும், மோசே ஆரோனுக்கு எதிராய் கலகம் செய்த அனைவரையும் தண்டித்தீர். உம்மை எதிர்த்து எழுந்து வந்தவர்களுக்கு நீர் கூறிய வார்த்தைகள் ஆண்டவரே, இன்று எங்களுக்கும் சொல்லப்பட்ட வாக்காகவே இருக்கின்றன. ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது 'உன்மையாகவே உன் உயிர் மேல் ஆணை. பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவர் மேல் ஆணை. இம்மனிதர் என்னை பத்துத் தடவை சோதித்து என் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. இவர்களில் ஒருவன் கூட நான் வாக்களித்திருந்த நாட்டினைக் காணமாட்டான். என்னை இழிவுபடுத்திய எவனும் அதைப் பார்க்க மாட்டான். இப்பொல்லாத இவர்கள் (கூட்டமைப்பினர்) எது வரை எனக்கெதிராக முறுமுறுப்பீர்கள். எனக்கெதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன். எனக்கெதிராய் முறுமுறுத்தவர்கள் எவரும் அங்கு செல்லமாட்டார்கள்'. அவர்களை மன்னிக்கும்படி மோசே கேட்டபோது ஆண்டவர் கூறிய வார்த்தை 'எவன் எனக்கெதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிந்து நீக்கிவிடுவேன், ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்களின் பாவத்தை அவர்கள் மேலே சுமத்துவேன்' என ஆண்டவராகிய கடவுள் கூறிய வார்த்தைகள் நமக்கும் உரியவையே.
திருமுழுக்கின் வழியாக எங்களையும் உமது அரசில் சேர்த்துக் கொண்ட இயேசுவே. நற்செய்தியில் எழுதப்பட்டுள்ள அத்தனை செய்திகளும் உமது மறை உடலாக இருக்கும் எங்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பரிபூரணமாகவே நம்புகிறோம். இன்று இறைவனின் மக்கள் என அழைக்கப்படுகிறோம். நம்மைப் பார்த்தே இயேசு கூறும் இவ்வார்த்தை 'நான் வந்து உங்களிடம் பேசியிராவிட்டால் உங்களுக்குப் பாவம் இராது. இப்போது நீங்கள் உங்கள் பாவத்துக்குச் சாக்குப்போக்குச் சொல்ல வழியில்லை.' இவ்வார்த்தைகள் நம்மை எச்சரிக்கும் வார்த்தைகளாய் இருக்கின்றன.
இக்காலத்தில் கத்தோலிக்க மக்களிடையே தோன்றியுள்ள விசித்திரமான எண்ணம், தங்கத்தினாலே சிலுவைச் செய்து நாம் அணிய வேண்டும். அதில் சிலுவையில் அறையுண்ட இயேசுவின் திரு உருவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அறையுண்ட இயேசு இருக்கும் சிலுவையை சங்கிலியில் போட்டு அணிவோமானால் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாவோம். அதனால் வெறும் சிலுவையை மட்டும் அணிகிறோம் என்கிறார்கள். பலரின் கழுத்தில் தொங்கும் மாலைகளில் இயேசு இல்லாத சிலுவை தொங்கிக் கொண்டிருக்கிறது. மீட்பின் சின்னமாய் இத்தனை காலம் இருந்த சிலுவை இன்று வெறும் சின்னமாகத் தோன்றுகிறது. 'மானிட மகன் வரும் போது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ!' எனக் கூறிய இயேசுவின் வார்த்தை உண்மையானது.
அப்பத்தின் சாயலுள் மறைந்தே இருக்கும் ஒப்பற்ற தேவா உன்னடி பணிவோம்
அத்தனே உன்னையான் சிந்திக்க சிந்திக்க எத்துணை என்னுள்ளம் கனிந்திளகுதே
இயேசு அமிர்த மன்னாவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
தாசர் எமது விசுவாசம் தழைத்தோங்கச் செய்வாயே
1.
அப்பத்தின் வருணம் உருசி ஸ்பரிசம் இப்போது தோன்றினும் இஃதப்பமில்லையே
அப்பம் உன் மேனியாய் முற்றிலும் மாறிற்றே தப்பிலா சத்திய நின்வாக்கு இஃதன்றோ
2.
மறைந்தே போயதே குருசில் தேவத்வம் மறைந்ததிங்கோ நின் மனிதத்தன்மையும்
விசுவாசித்திரு சத்தியம் தனையும் விமலா கேட்கின்றேன் நற்கள்வன் கேட்டதை
3.
உந்தனின் காயங்கள் காண்கிலேன் தோமை போல் என்கிலும் உன்னை என் ஆண்டவர் என்கின்றேன்
எந்தையே உன்னை யான் அதிகம் அதிகம் என்றுமே நம்பியே நேசிக்கச் செய்யுமே
4.
எம் பிரான் மரண ஞாபகச் சின்னமே இம்மை வாழ் மக்களின் ஜீவிய விருந்தே
வரம் தா உனை யான் நினைந்தே எப்போதும் பரம ஆனந்தம் கொண்டு மகிழவே
5.
அன்புள்ள பெலிக்கான் ஆன என் ஆண்டவா என் பாவக் கறையை நீக்கும் உன் இரத்தத்தால்
உந்தனின் ஓர் துளி உதிரம் போதுமே உன்னதா பூலோக மாசெல்லாம் போக்கவே
6.
இயேசுவே மறைவாய் இங்குமைக் காண்கின்றேன் நேசரே ஆசையாய் ஒன்றுமைக் கேட்கின்றேன்
நின்னெழில் வதனம் நேரில் ஓர் தினமே கண்டுள்ளம் பூரித்தே ஆனந்தம் கொள்ளவே
நல்ல மரணத்தை தரும்படி மரண அவஸ்தைப்பட்ட இயேசுவிடம் மன்றாடுவோம்:
பிறக்கும் போதும் தாயின் கருவறையினின்று தனியாகவேப் பிறக்கிறோம். இறக்கும் போது தனியாக எவரும் செல்வதில்லை. நாம் உலகில் இருக்கும் போது செய்தப் பாவ, புண்ணி மூட்டைகளைச் சுமந்துக் கொண்டே இறைவன் முன் தனியாகவே நிற்கிறோம். எம்மோடு துணைக்கு எவரும் வரமாட்டார்கள். இயேசுவே, இவ்வுலகில் உயிரோடு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் மட்டுமே உம்மை அறிய முடியும். இதுவே உமது இரக்கத்தின் காலம் என்பதை உணர முடியாதவர்களாய், உலகின் கவர்ச்சிகளுக்கும், மாயைகளுக்கும் அடிமைப்பட்டு, உமது அன்பு அழைத்தலைக் கேட்காமல் உம்மை நாங்கள் புறக்கணிக்கலாம். உம்மை மறுதலிக்கலாம். உம்முடைய மேலான அழைப்பை மறுதலித்து உம்மைவிட்டுப் பிரிந்தும் செல்லலாம். ஆனால், நாங்கள் சாவது நிச்சயம். நாங்கள் நினையாத நேரத்தில் மின்னலைப் போல் மரணம் எங்களிடம் வரும். இதன்பின் உமது தீர்வைக்காக உம் முன் நடுநடுங்கி நிற்கும் வேளை எங்களுக்கு நடுவராய் இராமல் எங்கள் இரட்சகராய் இரும்.
எங்கள் மரண நேரத்தையும் இடத்தையும் மறைக்கத் தேவரீர் சித்தம் கொண்டீர் என்பதை நாங்கள் அறிவோம். இரக்கமுள்ள தேவனே, நிர்ப்பாக்கியமான சடுதி மரணத்தினின்று எங்களைக் காப்பாற்றும். நல்ல இயேசுவே, எங்களுடைய மரண நேரத்தில் எங்களோடு இருந்து எங்களுக்கு ஆறுதல் கொடுத்தருளும். நற்கருணை வழியாக உம்மை எங்களுடைய இதயத்துக்குள் வந்த ஆண்டவரே! எங்களது ஆன்மாவை உமது திருக் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன் எனக் கூறி, என் ஆன்மாவை உம் கைகளில் ஒப்புக்கொடுக்கச் செய்தருளும். என்னுடைய ஆன்மா என் உடலை விட்டுப் பிரியும் போது, என் இயேசுவே உம்மை நான் அன்பு செய்கிறேன் எனக் கூறி, உம்முடைய திரு இதயத்தோடு ஒன்றித்து நான் சாக எனக்குக் கிருபை செய்தருளும். வியாகுல மாதாவே, என் அன்புத் தாயே! என் மரண நேரத்தில் பிசாசையும், அதன் போதனைகளையும் ஜெயித்து, சமாதானமாய் மரித்து, மோட்சப் பேரின்ப பாக்கியத்தை நான் அடைய உதவி புரிந்தருளும் தாயே! ஆமென்.
நான்காம் கால் மணி
எனக்கு ஆறுதல் அளிக்க உன்னை நான் தெரிந்து கொண்டேன்!
இயேசுவின் திருப்பாடுகளில் நாள்தோறும் பங்குகொள்ளும் மேலானக் கொடையை நாம் பெற்றுள்ளோம். உலகமெங்கும் நிமிடத்துக்கு நிமிடம் கத்தோலிக்கத் தேவாலயங்களில் அருட்தந்தையர்களால் நடத்தப்படும் திருப்பலிகளும், நடந்து முடிந்த திருப்பலிகளும் கல்வாரிப் பலிகளே. திருப்பலியில் பங்குகொள்ளும் நாம் எல்லோரும் இறை மகன் இயேசுவின் பாடுகளில் பங்குக்கொண்டு, அவருக்கு ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எனினும் இயேசு தனது நேச மக்களாகிய நம்மைப் பார்த்து கூறும் இவ்வார்த்தைக்கும் செவிகொடுப்போம்:
'என்னுடையப் பாடுகளில் நான் பட்ட உடல் வேதனைகளைப் பார்க்கிலும் பூங்காவனத்தில் என்னுடைய இதயத்தில் நான் அதிகம் பாடுபட்டேன். மனிதருடையப் பாவங்களை எல்லாம் என் மேல் சுமந்து கொண்டு, இறைவனுடைய அதிபரிசுத்தத்தனத்தின் முன் நின்றேன். அவரும் என் மாசில்லாத தனத்தை அறிந்த போதிலும் தனது நீதியின்படி பாவங்களுக்காகக் கசப்புள்ளக் காடி நிறைந்த பாத்திரத்தைக் குடிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார். நான் அவ்வேளை பட்டத் துன்ப வேதனைகளை எந்த மனிதனாலும் அறிந்து கொள்ள முடியாது' எனக் கூறிய இயேசுவே, உம்முடைய இந்தத் துக்க வேதனையில் உம்மோடு பங்குகொண்டு ஆறுதலைத் தர ஆசையாய் இருக்கிறோம். இன்று நாங்கள் செய்யும் எங்கள் மன்றாட்டுக்கள், விண்ணப்பங்கள் உமக்கு ஆறுதலைத் தரும் என்ற நம்பிக்கையோடு உம்மிடம் வந்து நிற்கிறோம்.
இயேசுவே, எங்கள் பேரிலும், உம்மை விசுவசித்து அன்பு செய்யாத அனைவர் பேரிலும், உமது இரக்கத்தைப் பொழிந்து, அவர்களும் உம்மிடம் விசுவாசம் கொள்ளச் செய்வீராக. உம்மில் நம்பிக்கை வைத்து, உம் மீது விசுவாசம் கொண்டுள்ள மக்களான எங்களின் மன்றாட்டுக்கள் உமது காயமுற்ற திரு இதயத்துக்குள் ஆறுதல் தருவதாக. எளியோராகிய எங்கள் மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே. ஆமென்.
எல்: நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
முத: மனிதருடைய மறதிக்கும் நன்றிகெட்டத்தனத்துக்கும் பரிகாரமாக...
முத: நற்கருணைப் பேழையில் இருக்கும் உம்மைப் புறக்கணித்து வாழ்ந்ததற்குப் பரிகாரமாக...
முத: பாவிகளின் அக்கிரமங்களுக்குப் பரிகாரமாக...
முத: துஷ்டர்கள் உம் மீது கொண்டுள்ளப் பகை விரோதத்துக்குப் பரிகாரமாக...
முத: தேவரீர் பேரில் சொல்லப்பட்டு வரும் தேவ தூஷணங்களுக்குப் பரிகாரமாக...
முத: உம்முடைய தெய்வீகத்துக்குச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக...
முத: உம்முடைய அன்பின் தேவ நற்கருணையை அவசங்கைப்படுத்தும் துரோகத்துக்குப் பரிகாரமாக...
முத: உம்முயை பரிசுத்த ஆலயத்தில் உமது சந்நிதியின் முன் செய்யப்படும் அவமரியாதை அநாச்சாரங்களுக்குப் பரிகாரமாக...
முத: ஆராதனைக்குரிய உயிர்ப் பலியாகிய உமக்கு மனிதராகிய நாங்கள் செய்துவரும் அவமரியாதை பழிப்புரைகளுக்குப் பரிகாரமாக...
முத: உமக்கு நாங்கள் காட்டிக் கொண்டுவரும் நன்றிகெட்டத்தனம், அசட்டைத்தனத்துக்குப் பரிகாரமாக...
முத: உமது நேச அழைத்தலைப் புறக்கணித்துத் தள்ளியதற்குப் பரிகாரமாக...
முத: உமது அன்பர் எனச் சொல்லிக் கொள்வோரின் அவிசுவாசத்திற்குப் பரிகாரமாக...
முத: தேவரீர் கொடுக்கவிருக்கும் அருள்வரங்களைப் பெறாமல் அலகையின் குரலுக்குச் செவிகொடுத்து, அவ்வரங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ளியதற்குப் பரிகாரமாக...
முத: எங்களின் சொந்த அவிசுவாசத்திற்குப் பரிகாரமாக...
முத: புத்திக்கு ஒவ்வாத எங்களின் மூடக்கல் நெஞ்சத்துக்குப் பரிகாரமாக...
முத: உம்மை நாங்கள் அன்பு செய்ய நெடுங்காலம் தாமதம் செய்ததற்குப் பரிகாரமாக...
முத: எங்களின் ஆன்மாக்கள் சேதமடைவதைக் கண்டு நீர் அடையும் கடும் துயரத்துக்குப் பரிகாரமாக...
முத: ஆண்டவரே உம்மை எங்கள் இதய வாசலுக்கு அருகில் வெகுகாலமாய் காக்க வைத்திருந்ததற்குப் பரிகாரமாக...
முத: உம்மை நாங்கள் மன நோகச் செய்யும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக...
முத: எங்கள் மீது தேவரீர் வைத்திருந்த அன்பின் நிமித்தம் தேவரீர் சொரிந்த கண்ணீருக்குப் பரிகாரமாக...
முத: உமது அன்பின் மிகுதியால் எங்கள் மத்தியில் நற்கருணைப் பேழையில் தேவரீர் சிறைப்பட்டிருப்பதற்குப் பரிகாரமாக...
முத: மனுமக்கள் நீர் வைத்திருந்த சிநேகப் பெருக்கத்தினால் தேவரீர் அடைந்த கொடிய பாடுகள் மரணத்துக்குப் பரிகாரமாக...
முத: திருஅவையின் மக்களாயிருந்த பலர் உம்மையும், உமது திருவுடலாகியத் திருச்சபையை பலர் நிந்தித்து, உம்மை விட்டுப் பிரிந்து சென்ற போது நீர் அடைந்துள்ள அவமானங்களுக்குப் பரிகாரமாக...
முத: எங்களுக்குத் திருப்பலி தேவையில்லை, நற்கருணை அவசியமில்லை, அது வெறும் சடங்கு மட்டுமே, இயேசுவின் பிரசன்னம் நற்கருணையில் இல்லை, இதுவும் ஒரு விக்கிரக ஆராதனை, சிலைவழிபாடு எனக் கூறிப் பிரிந்து சென்றவர்கள் செய்து வரும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக...
முத: நீர் ஏற்றுக் கொண்ட கொடிய பாடுகளுக்குப் பரிகாரமாக...
செபிப்போமாக:
இயேசுவே, தெய்வீக இரட்சகரே! நாங்கள் உம்மைத் தேடாதிருந்த போதும் நீரே எங்களைத் தேடி வந்து என் மக்கள் என்ற உரிமையோடு எங்களை வாழ வைத்து எங்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறீர் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்த போதும் பல தடவை எங்கள் ஆன்மா உம்மில் நம்பிக்கை வைக்கத் தயங்கி நிற்கின்றது. ஆனாலும் நீர் எங்களைப் புறக்கணிப்பதில்லை. இயேசுவே, நீர் எங்களுக்காக உமது இரக்கத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருந்தேன் என புனித பவுஸ்தீனாவுக்குக் கூறியுள்ளீர். 'நலம் கெட்ட மனிதர்கள் என்னிடம் திரும்பி வரும் வரை அமைதியைக் காணமாட்டார்கள். அவர்களால் அமைதியைக் காணவே முடியாது. நான் நீதிபதியாக வருவதற்கு முன், என் இதயத்தின் இரக்கக் கதவுகளைத் அகலத் திறந்து வைத்திருக்கிறேன். இதன்வழியே செல்ல விரும்பாதவன் என் நீதியின் வழி சென்று தான் ஆகவேண்டும்' எனக்கூறிய ஆண்டவரே, 'என் அடைக்கலத்தில் வாழ்பவன் பேறுபெற்றவன். ஏனெனில், என் தந்தையின் நீதிக் கரம் அவனை ஒருபோதும் தீண்டாது' என ஆறுதல் கூறினீரே. உம்மைத் தெண்டனிட்டு வணங்கி உமது பாதத்தில் எம் கண்ணீரைச் சமர்ப்பிக்கின்றோம்.
ஆண்டவரே! நாங்கள் என்றும் உமக்குப் பிரமாணிக்கமாக நடக்கவும், எவ்வித இடர்கள், சோதனைகள் வந்த போதும் உம்மை விட்டுப் பிரியாதிருக்கும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். துன்பங்களும் இருள் சூழ்ந்திருக்கும் இவ்வுலக வாழ்விலிருந்து எங்கள் உயிர் எங்கள் உடலைவிட்டுப் பிரியும் வேளை எங்களுக்குத் துணையாக வாரும். உம்முடைய இறப்பின் வேளையில் உம்மை மூடியிருந்தத் துணியில் பதிந்திருந்த இரத்தக் கறைகளால் மூடப்பட்டிருந்த திருத் துகிலில் நின்று உமது திரு முகத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென முழுமூச்சுடன் ஆயிரக்கணக்கான அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அரும்பாடுபட்டுத் தேடிக் கண்டுபிடிக்க முயன்று வருகிறார்கள். எப்படி ஆண்டவரே அவர்கள் உம் திரு முகத்தைக் காண முடியும்? நீர் இரக்கம் வைக்கும் போது மட்டுமே அவர்களால் காண முடியும் என்பதை அவர்கள் உணர்வார்களாக. ஆண்டவரே, உம் மீது நம்பிக்கையும் விசுவாசமும் வைத்துள்ள நாங்கள் நற்கருணை வழியாக உமது பிரசன்னத்தை என்றென்றும் உணர்கிறோம். ஆமென்.
அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்
அன்பின் தேவ நற்கருணையிலே
1.
அற்புதமாக எமைப் படைத்தீர். தற்பரன் நீரே எமை மீட்டீர்.
பொற்புடன் அப்ப இரச குணத்தில் எப்பொழுதும் வாழ் இறைவனானீர்.
எத்தனை வழிகளில் உமதன்பை எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்.
2.
கல்வாரி மலையின் சிகரமதில் கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்.
நற்கருணை விசுவாசமதில் நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்.
இளமையின் பொலிவால் வளர் திருச்சபையும் யாவரும் வாழத் தயை புரிவீர்.
3.
ஞானம் மிகுந்த எம் பாத்திரத்தில் நல்லொளி பாய்ச்சும் இறைவனே நீர்.
ஞாலமெல்லாம் இருள் நீங்கிடவே நாடுகள் வீடுகள் எங்கணுமே,
நலம் பல பொழிவீர் நல் தேவா நற்கருணை வாழ் நாயகனே.
முடிவில், மூன்று செபங்களை இறை இரக்கத்தின் ஆண்டவருக்குச் சொல்லி இயேசுவின் திரு இதயத்துக்கு நம்மை அர்ப்பணிப்போம்.
மூன்று செபங்கள்:
1. இயேசுவின் திரு இதயத்துக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஒப்புக்கொடுக்கும் செபம்.
2. இயேசுவின் திரு இதயத்துக்கு மனுக்குலம் முழுவதையும் ஒப்புக்கொடுக்கும் செபம்.
3. இயேசுவின் திரு இதயத்துக்கு நமது குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம்.
இவ்வேளையில் இயேசுவின் இரக்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொள்வோம். 'நீங்கள் என்னை அழைக்கவில்லை. நானே உங்களைத் தேடி வந்து உங்களை அழைத்தேன். நீங்கள் கனி தரவும் நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் வேண்டி உங்களைத் தெரிவு செய்தேன்' எனக் கூறிய இயேசு 'என் தந்தை நடாத எல்லா நாற்றுக்களும் வேரோடு பிடுங்கப்படும்' என்ற இவ்வார்த்தையின் பொருளை உணர்ந்துக் கொண்டு, இவ்வுலகில் நமது வாழ்நாளை முடித்துக் கொண்டு இறைவன் தங்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருக்கும் வீட்டுக்குச் செல்லவும், விண்ணுலகில் நம் ஆண்டவரை முகமுகமாய் கண்டு, அங்கு வீற்றிருக்கும் புனிதர்கள் வரிசையில் நிற்கும் பேற்றையும் தருமாறு மன்றாடுவோம்.
இறைவனின் அன்னை இறை மக்களான நமக்கு விடுத்த செய்தி:
திருச்சபையின் பாதுகாவலியாக இறைவனால் தெரிவு செய்யப்பட்டு, இறைவனுக்குத் தாயாக இருப்பவர் அன்னை மரியா. அவர் இயேசுவுக்கு மட்டும் தாய் அல்ல . நமக்கும் தாய்.
உங்கள் இதயங்கள் உங்கள் ஆன்மாவின் சன்னல்களாய் இருக்கின்றது. உங்கள் ஆன்மா கடவுளைப் பிரதிபலிக்கும்படி அவரால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்ணாடியில் அழுக்குப் படிந்துவிட்டால் இறைவனின் குரலையோ அவரின் மாட்சியையோ நாம் காண முடியாது. ஆன்மாவுக்குத் தெளிவு ஏற்பட நீங்கள் செபிக்க வேண்டும். செபத்தின் வழியாகத்தான் மனதில் படிந்துள்ள கறைகளை வெளியேற்ற முடியும். நமது வாழ்வில் ஒரு நேரத்தை இறைவனோடு செபத்தில் இணைந்துக் கொள்ள வேண்டுமென இறைவனின் அன்னை நம்மிடம் கேட்கிறார். 'செபிப்பதால் மட்டுமே விண்ண மறைபொருளை அறியும் கொடையை தூய ஆவியார் கொடையாக உங்களுக்குத் தருவார்' என்றாள்.
மேலும், திருச்செபமாலையை செபித்து வருவோர் மீட்புப் பெறுவார்கள். செபமாலை செபிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரோடும் இறைவனின் தாயும் நமது ஒவ்வொருவருடையக் காவல் தூதர்களும் இணைந்து செபித்து வருகிறார்கள் என்பதை நம் தாய் திருச்சபை எடுத்துக் கூறுகிறது. (தி.வெளி. 7:9) இல் வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருக்கிறார்கள். ஆட்டுக்குட்டிக்கு முன் நின்றிருந்த பெரும் திரளான மக்கள். இவர்கள் தமது கையில் பிடித்திருந்த குருத்தோலைகள் திருச்செபமாலைகள் ஆகும். செபமாலை மட்டுமே நம்மோடு கூடவரும்.
இத்தனை காலமும் எம்மைப் பாதுகாத்து வரும் இறைவனுக்கு நன்றி கூறி எம் நன்றிகளைக் கூறுவோம். ஆமென்.
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.