உங்கள் வசதியை முன்னிட்டு, இறந்தோருக்கான அடக்கச் சடங்குத் திருப்பலி செபங்களும், அதற்குரிய வாசகங்களும் (நான்கு தொகுப்புகள்) மன்றாட்டுகளும் முழுமையாக இங்கு தரப்பட்டுள்ளது.
ஆயினும், இவற்றிலுள்ள எல்லாப் பாடங்களுக்கும், சிறப்பாக மன்றாட்டுகளுக்கும் பதிலாக வேறு பாடங்களை பங்கேற்போரின் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, சில மாற்றங்களோடு, திருப்பலியாற்றும் அருள்பணியாளரின் அனுமதியுடன் நீங்கள் பயன்படுத்தலாம்.
அடக்கம் அல்லது ஆண்டு நிறைவுக்கு ஏற்ற மன்றாட்டுகளை வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தினால், பொருத்தமற்ற சொற்களை அகற்றிவிடுக.
பாஸ்கா காலத்தில் நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் பல்லவிகளின் இறுதியில் உள்ள "அல்லேலூயா"வை தேவைக்கு ஏற்ப விட்டுவிடலாம்.
ஒரு கிறிஸ்தவரின் மரணம், இறப்பிலிருந்து உயிர்ப்புக்குக் கடந்து செல்லும் பாஸ்காப் பயணமாகும். இந்தப் பாஸ்காப் பண்பை நன்கு உணர்த்தும் முறையில், திருநூல் வாசகங்களையும் திருப்பாடல்களையும் கொண்டு இறந்தோர்க்கு இறையருளையும் வாழ்வோருக்கு ஆறுதலையும் நாம் பெற்றுத் தருவோம்.
இந்தத் திருப்பலியில் பங்கேற்பவர்கள் ஏற்கெனவே வேறொரு திருப்பலியில் பங்கேற்று நன்மை வாங்கிருப்பினும், மறுமுறையும் இந்தத் திருப்பலியில் நன்மை உட்கொள்ளலாம்.
ஆலய வாயிலின் முகப்பில், உற்றார் உறவினர்களும் நண்பர்களும் இறந்தவரின் உடலைச் சுமந்தவாறு ஒன்று கூடியிருக்க, அருள்பணியாளர் தன் பணியாளர்களுடன் அங்கு சென்று கீழுள்ளவற்றைக் கூறி அவர்களை வரவேற்கிறார்.
ஆலயத்துக்குள் பவனி:
அப: தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
அப: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அல்லது
அப: இயேசுவை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்த நம் தந்தையாகிய இறைவனின் அருளும் அமைதியும் உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அப: திருமுழுக்கின் நீரினால் நம் சகோதர (சகோதரி) _______________ (இறந்தவரின் பெயர்) கிறிஸ்துவுடன் மரித்து, அவரோடு புதுவாழ்வுக்கு உயிர்த்தெழுந்தார். இப்போது இவர் அவருடன் நிலையான மாட்சியையும் பகிர்ந்து கொள்வாராக.
எல்: ஆமென்.
பின்னர் அருள் பணியாளர், நெருங்கிய உறவினர் ஒருவரிடம் வெண்ணிற ஆடையையும், இன்னொருவரிடம் விவிலியத்தையும், வேறு ஒருவரிடம் பாடுபட்ட இயேசுவின் உருவம் உள்ள திருச்சிலுவையையும் கொடுக்க, இறந்தவரின் உடலை ஆலயத்துக்குள் பவனியாக எடுத்துச் செல்கின்றனர். பவனியின் போது தகுந்ததொரு பாடலைப் பாடலாம். ஆலயப் பீடத்துக்கு முன்பாக இறந்தவரின் முகம் பீடத்தை நோக்கியவாறு வைத்தப் பின், கீழுள்ள சடங்கு செய்யப்படுகிறது:
வெண்ணிற ஆடையை வைத்தல்:
பவனியாகக் கொண்டு வந்த வெண்ணிற ஆடையை நெருங்கிய உறவினர்கள் நான்கு பேர் சவப்பெட்டி மீது, இறந்தவரின் முகத்தை மறைக்காத வண்ணம் போர்த்த, அருள் பணியாளர் கீழுள்ளவாறு செபிக்கிறார்:
அப: திருமுழுக்கினால் _______________ (இறந்தவரின் பெயர்) அவர்களை உரிமை கொண்டாடிய கிறிஸ்து இப்போது இவரைத் தம் அன்பினால் அரவணைத்து நிலைவாழ்வுக்குள் சேர்த்துக்கொள்வாராக.
எல்: ஆமென்.
விவிலியத்தை வைத்தல்:
விவிலியத்தை பவனியாகக் கொண்டு உறவினர் விவிலியத்தை சவப்பெட்டி மீது வைக்க, அருள் பணியாளர் கீழுள்ளவாறு செபிக்கிறார்:
அப: தன் வாழ்வில் ____________ (இறந்தவரின் பெயர்) கிறிஸ்துவின் நற்செய்தியை மிகவும் அன்பு செய்தார். எனவே இப்போது கிறிஸ்துவும் "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவரே; வாரும்!" என நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகளால் இவரை வாழ்த்தி, வரவேற்று தன்னோடு சேர்த்துக் கொள்வாராக.
எல்: ஆமென்.
திருச்சிலுவையை வைத்தல்:
பாடுபட்ட இயேசுவின் உருவம் உள்ள திருச்சிலுவையைப் பவனியாகக் கொண்டு வந்த உறவினர் திருச்சிலுவையை சவப்பெட்டி மீது வைக்க, அருள் பணியாளர் கீழுள்ளவாறு செபிக்கிறார்:
அப: திருமுழுக்கினால் _________________ (இறந்தவரின் பெயர்) திருச்சிலுவையின் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டார். இப்போது இவர், பாவத்தின் மீதும், இறப்பின் மீது கிறிஸ்து கொண்ட வெற்றியிலும் பங்கு பெறுவாராக.
எல்: ஆமென்.
அல்லது இறந்தவர் திருமுழுக்குப் பெறாத சிறுவராக இருந்தால் அருள் பணியாளர் கீழுள்ளவாறு செபிக்கிறார்:
அப: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் பாடுகளின் போது சுமந்து சென்றத் திருச்சிலுவையை இன்று நாம் சுமந்து வந்தோம். _____________ (இறந்தவரின் பெயர்) மீதான நமது எதிர்நோக்கின் அடையாளமாக இந்தத் திருச்சிலுவையை அவரது சவப்பெட்டி மீது நாம் வைப்போம்.
திருச்சிலுவையை சவப்பெட்டி மீது வைத்தப் பின் அருள் பணியாளர் கீழுள்ளவாறு செபிக்கிறார்:
அப: எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இறப்பு வரை நீர் எங்களை அன்பு செய்தீர். இந்தத் திருச்சிலுவை ___________ (இறந்தவரின் பெயர்) மீதும், இன்று இங்கு கூடியிருக்கும் அனைவர் மீதும் நீர் கொண்டிருக்கும் உமது அன்பின் அடையாளமாக இருப்பதாக.
எல்: ஆமென்.
இதன் பின் திருப்பலி வழக்கம் போல் தொடரும்.
வருகைப் பல்லவி:
நிலையான இளைப்பாறுதலை இவருக்கு அளித்தருளும், ஆண்டவரே! முடிவில்லாத ஒளி இவரின் மேல் ஒளிர்வதாக.
பாவத்துயர்ச் செயல்:
அப: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அப: எல்லாம் வல்ல இறைவனிடமும்...
எல்: சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன்; ஏனெனில், என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும், பாவங்கள் பல செய்தேன்.
(மார்பில் தட்டிக் கொண்டு) என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே!
எல்: ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும், நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அப: எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்: ஆமென்.
அப: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அப: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அப: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
திருக்குழும மன்றாட்டு:
அப: மன்றாடுவோமாக!
இறைவா, எல்லாம் வல்ல தந்தையே, உம் திருமகன் இறந்து உயிர்த்தெழுந்தார் என நாங்கள் நம்பி அறிக்கையிடுகின்றோம்; அதனால் அவரில் துயில் கொண்ட உம் அடியார் ______________ (இறந்தவரின் பெயர்) இம்மறைநிகழ்வு வழியாக அவரோடு உயிர்த்தெழும் பேரின்பம் அடைய இரக்கத்துடன் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
அல்லது
அப: மன்றாடுவோமாக!
இறைவா, எப்பொழுதும் இரக்கம் காட்டுவதும், மன்னிப்பு அளிப்பதும் உமக்கு இயல்பாகும்; (இன்று) நீர் உம்மிடம் அழைத்துக் கொண்ட உம் அடியார் ___________ (இறந்தவரின் பெயர்) அவர்களுக்காக உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவர் உம்மை எதிர்நோக்கி நம்பிக்கையோடு வாழ்ந்ததால் இவரைத் தம்முடைய உண்மையான தாயகத்துக்கு அழைத்துச் சென்று என்றென்றும் உள்ள மகிழ்ச்சியைத் துய்த்திடச் செய்தருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
இதனைத் தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு ஆரம்பமாகும். கீழுள்ள நான்கு தொகுப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து வாசிக்கலாம். இறந்தோரின் நெருங்கிய உறவினர்கள் வாசிக்க வாய்ப்பு வழங்கவும்.
முதல் வாசகம்:
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம். (3 : 1 – 9)
நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடும் தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெரும் துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்ட பின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்த பின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார், எரிபலி போல் அவர்களை ஏற்றுக் கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்க வரும் போது அவர்கள் ஒளிவீசுவார்கள், அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள், நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள், மக்கள் மீது ஆட்சி செலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர். அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 23 : 1 – 3, 4, 5, 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன். உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடை சூழ்ந்து வரும். நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
பல்லவி: ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
இரண்டாம் வாசகம்:
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். (6 : 3 – 9)
சகோதரர் சகோதரிகளே,
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனி மேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனி மேல் இறக்க மாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (மத்தேயு 25 : 34)
அல்லேலூயா, அல்லேலூயா! என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். (5 : 24 – 29)
அக்காலத்தில்,
இயேசு யூதர்களுக்கு அளித்த மறுமொழி: "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள். ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்து விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது. ஏன், வந்தேவிட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர், அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். அவர் மானிட மகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம்
வருகிறது. அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர் தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்."
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
முதல் வாசகம்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். (25 : 6 – 9)
அந்நாளில் படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார். பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார். என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார். தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றி விடுவார். ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: "இவரே நம் கடவுள். இவருக்கென்றே நாம் காத்திருந்தோம். இவர் நம்மை விடுவிப்பார். இவரே ஆண்டவர், இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்."
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 130 : 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 (பல்லவி: 1)
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர் மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு. பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!
பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.
இரண்டாம் வாசகம்:
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம். (2 : 8 – 13)
அன்பிற்குரியவர்களே,
தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள்ளுங்கள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால், கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும், அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும், கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: "நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம். அவரோடு நிலைத்து
இருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவர் எனினும், அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது." இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (2 திமொத்தேயு 25 : 11 – 12)
அல்லேலூயா, அல்லேலூயா! நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம். அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். (11 : 32 – 45)
அக்காலத்தில்,
இயேசு இருந்த இடத்திற்கு இலாசரின் சகோதரி மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளம் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள். இலாசர் மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், "பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இயேசு இவரைச் சாகாமல் இருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. "கல்லை அகற்றி விடுங்கள்" என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே!" என்றார். இயேசு அவரிடம், "நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?" என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்" என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
முதல் வாசகம்:
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம். (12 : 1 – 3)
அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராதத் துன்பக் காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப் பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர். வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண் மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 103 : 8, 10, 13 – 14, 15 – 16, 17 – 18 (பல்லவி: 8)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். நீடியப் பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். அவர் நமது உருவத்தை அறிவார். நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது. வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன் மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது. அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர் மீது என்றென்றும் இருக்கும். அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும் இருக்கும். அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து, அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
இரண்டாம் வாசகம்:
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூல். (21 : 1 – 7)
யோவானாகிய நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்து விட்டன. கடலும் இல்லாமல் போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப் போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடிருப்பார். அவரே அவர்களுடையக் கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது. முன்பு இருந்தவை எல்லாம் மறைந்து விட்டன" என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார். "அகரமும் னகரமும் நானே. தொடக்கமும் முடிவும் நானே. தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன். வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப் பேறாகப் பெறுவர். நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள்."
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (யோவான் 6 : 51 – 52)
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
தூய லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். (12 : 35 – 40)
அக்காலத்தில்,
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: 'உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டு இருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும் போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும், மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாய் இருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள் ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்."
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
முதல் வாசகம்:
புலம்பல் நூலிலிருந்து வாசகம். (3 : 17 – 26)
அமைதியை நான் இழக்கச் செய்தீர். நலமென்பதையே நான் மறந்து விட்டேன்! 'என் வலிமையும் ஆண்டவர் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்து போயின!" என்று நான் சொல்லிக் கொண்டேன். என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்! அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது! இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன். எனவே நான் நம்பிக்கை கொள்கிறேன். 'ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!" 'ஆண்டவரே என் பங்கு" என்று என் மனம் சொல்கின்றது! எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 116 : 5 – 6இ 10 – 11இ 15 – 16 (பல்லவி: 9)
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர். நம் கடவுள் இரக்கம் உள்ளவர். எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார். நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
"மிகவும் துன்புறுகிறேன்!" என்று சொன்ன போதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். "எந்த மனிதரையும் நம்பலாகாது" என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன். நான் உம் பணியாள், உம் அடியாளின் மகன். என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர் மீது என்றென்றும் இருக்கும். அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும் இருக்கும். அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து, அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
இரண்டாம் வாசகம்:
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். (4 : 13 – 18)
சகோதரர் சகோதரிகளே,
இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும் வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம். கட்டளைப் பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார். அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு
எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.
ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (திருவெளிப்பாடு 14 : 13)
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர். அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள். ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
தூய மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். (11 : 25 – 30)
அக்காலத்தில்,
இயேசு, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது" என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
எல்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
நற்செய்தி வாசகத்துக்குப் பின் அருள் பணியாளர் சிறு மறையுரை ஆற்றுவார். மறையுரைக்குப் பின் தேவைப்பட்டால், நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு இடம்பெறும்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு:
அப: இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, கல்லறையிலிருந்து மூன்றாம் நாள், மரணத்தை வென்று, வெற்றி வீரராக உயிர்த்த இயேசு கிறிஸ்துவில் நமது நம்பிக்கையை வைத்து, இறந்து போன _______________ (இறந்தவரின் பெயர்) அவர்களுக்காக உருக்கமாக மன்றாடுவோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, உமது வல்லமையால் உமது திருமகன் இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்தீரே. அதே உயிர்ப்பில், இறந்து போன உமது அடியார் _________________ (இறந்தவரின் பெயர்) அவர்களும் பங்கு பெற அனைத்துத் தடைகளையும், பாவங்களையும் நீக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, திருமுழுக்கினால் புதுப்பிறப்பு அடைந்து, திவ்விய நற்கருணையில் உம்மைச் சுவைத்த _______________ (இறந்தவரின் பெயர்) அவர்களை உலகக் கட்டுகளிலிருந்து விடுவித்து, உமது நிலையான பேரின்ப வாழ்வைப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, இவ்வுலக வாழ்வில் ___________ (இறந்தவரின் பெயர்) அவர்களுக்கு நீர் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும், இவர் வழியாக நாங்கள் அடைந்த பயன்களுக்காகவும் நன்றி செலுத்துகிறோம். இவருக்கு மறு உலகிலும் உமது இரக்கம் கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, கெத்சமேனிப் பூங்காவில் இரத்த வியர்வை வியர்த்த உம் திருமகன் இயேசு கிறிஸ்துவை திடப்படுத்திய நீர், இவருடைய இறப்பால் வேதனையுறும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் துணை நின்று அவர்களைத் தேற்றி, ஆறுதல் படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: இறைவா, எரியும் நெருப்பிலிருந்து மூன்று இளைஞர்களைக் நீர் காப்பாற்றியது போல இறந்து போன __________________ (இறந்தவரின் பெயர்) அவர்களை தண்டனைத் தீர்ப்பிலிருந்து காத்து, இறந்த எங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், யாரும் நினையாத ஆன்மாக்கள் அனைவரும் உமது இரக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப: நமது தனிப்பட்டத் தேவைகளுக்காக சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்.
அப: எவரும் விடுபடாமல் எல்லா மக்களையும் அன்பு செய்து அரவணைக்கும் இறைவா! உமது திரு அவையின் மன்றாட்டுகளுக்குக் கனிவாய் செவிசாய்த்து, வாழ்வோரையும் இறந்தோரையும் இரக்கத்துடன் மீட்க அருள் புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
இதனைத் தொடர்ந்து காணிக்கைச் சடங்குகள் நடைபெறும். இந்நேரத்தில், தேவைப்பட்டால் தகுந்ததொரு காணிக்கைப் பாடலைப் பாடலாம்.
காணிக்கை:
அப்பத்தை ஒப்புக்கொடுத்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை ஒப்புக்கொடுத்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அப: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திருஅவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
காணிக்கை மீது மன்றாட்டு:
அப: ஆண்டவரே, உம் அடியார் ____________ (இறந்தவரின் பெயர்) அவர்களின் மீட்புக்காக உம்மைக் கனிவுடன் கெஞ்சி மன்றாடி இக்காணிக்கைகளை உமக்குப் பணிந்து அளிக்கின்றோம்; இவர் உம் திருமகனைத் தம் அன்பான மீட்பராகத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொண்டதால் அவரையே தம் இரக்கமுள்ள நடுவராக எதிர்கொள்ளச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
இறந்தோர் தொடக்கவுரை: நாம் வாழ்வு பெறக் கிறிஸ்து இறந்தார்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அப: ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும். ஏனெனில் நாங்கள் அனைவரும் சாகாமலிருக்கக் கிறிஸ்து ஒருவரே சாவை ஏற்றுக் கொண்டார்; நாங்கள் அனைவரும் என்றும் உமக்காக வாழ்ந்திட அவர் ஒருவரே சாகத் திருவுளமானார். ஆகவே வானதூதர் திரளோடு ஒன்று சேர்ந்து, நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி, மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
நற்கருணை மன்றாட்டு:
அப: ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே, உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப் படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அப: அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அப: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.
அப: ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவு கூர்ந்து, வாழ்வு தரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக் கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவு கூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், எங்கள் ஆயர் _____________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
நீர் (இன்று) இவ்வுலகிலிருந்து உம்மிடம் அழைத்துக் கொண்ட ______________ (இறந்தவரின் பெயர்) என்னும் உம் அடியாரை நினைவு கூர்ந்தருளும். உம் திருமகனோடு அவரது இறப்பில் இணைக்கப்பட்டிருந்த இவர் உயிர்ப்பிலும் அவரைப் போல இருக்கச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும், இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவு கூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகியப் புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலை வாழ்வில் பங்கு கொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அப: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்: ஆமென்.
திருவிருந்துச் சடங்கு:
அப: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அப: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்: ஏனெனில் ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே.
அப: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
அப: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அப: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்.
எல்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும். (இரண்டு முறை)
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அப: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
திருவிருந்துப் பல்லவி:
நிலையான இளைப்பாறுதலை அவர்களுக்கு அளித்தருளும். அண்டவரே, முடிவில்லாத ஒளி இவரின் மேல் ஒளிர்வதாக. என்றும் உம் புனிதரோடு ஒளிர்வதாக. ஏனெனில் நீர் இரக்கம் உள்ளவர்.
இப்போது திருவிருந்து நடைபெறும். திருமுழுக்கு பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டும் இதில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். மற்றவர்கள் தயவு செய்து அமைதியாக அமர்ந்திருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
இந்நேரத்தில் தகுந்ததொரு திருவிருந்துப் பாடலைப் பாடலாம்.
திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு:
அப: மன்றாடுவோமாக!
ஆண்டவரே இறைவா, உம் திருமகன் தமது திரு உடலின் அருளடையாளத்தில் எங்களுக்கு இறுதிப் பயண உணவை விட்டுச் சென்றார்; அதன் பயனாக உம் அடியார் ___________ (இறந்தவரின் பெயர்) அவர்கள், கிறிஸ்து அளிக்கும் அதே விண்ணக விருந்துக்கு வந்து சேரக் கனிவுடன் அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
அல்லது:
அப: மன்றாடுவோமாக!
எல்லாம் வல்ல இறைவா, (இன்று) இவ்வுலகை விட்டுப் பிரிந்த உம் அடியார் ___________ (இறந்தவரின் பெயர்) அவர்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்பலியின் பயனாக இவர் தம் பாவங்களிலிருந்து விடுபட்டு, தூய்மை அடைந்து உயிர்ப்பின் என்றென்றுமுள்ள மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
இப்போது அருள் பணியாளர் பீடத்தை விட்டு இறங்கி இறந்தவரின் உடல் அருகில் சென்று பிரியாவிடைச் சடங்குகளை நிறைவேற்றுவார்.
பிரியாவிடைச் சடங்குகள்:
அப: நம்பிக்கையாளர்களின் வழக்கப்படி, இறந்தோரை நல்லடக்கம் செய்யும் கடமையை நிறைவேற்றக் கூடியிருக்கும் நாம், இறைவனைப் பக்தியுடன் மன்றாடுவோம். அனைத்தும் அவருக்கென்றே, உயிர் வாழ்கின்றன. நம் சகோதரரின் (சகோதரியின்) உடலை நலிவுற்ற நிலையில் நாம் அடக்கம் செய்தாலும், புனிதரின் வரிசையில் இது வல்லமை உள்ளதாக உயிர்த்தெழச் செய்வாராக. இவரது ஆன்ம புனிதரின் கூட்டத்திலே இடம் பெறக் கட்டளை இடுவாராக. தீர்ப்பிடும் போது இறைவன் இவருக்கு இரக்கம் காட்டுவதால் சாவே இவருக்கு மீட்பு அளிப்பதாகி, பாவக்கடன் ஒழிவதாக. தந்தையிடம் இவர் அன்புறவு கொள்ள நல்லாயன் இவரை அழைத்துச் செல்வாராக. இவர் என்றென்றும் வாழும் மன்னரின் பரிவாரத்தில் முடிவற்ற இன்பமும் புனிதரின் தோழமையும் பெற்று மகிழ்வாராக.
எல்: ஆமென்.
பிரியாவிடை அடையாளங்கள்:
திருமுழுக்கில் தொடங்கிய இறை வாழ்க்கையை நினைவூட்டுவதற்காக சவப்பெட்டி மீது மீண்டும் புனித நீர் தெளிக்கப்படுகிறது. இறந்தவரின் உடலின் கண்ணியத்திற்கும், தூய ஆவியாரின் வல்லமையால் இறந்தவர் நிலை வாழ்வுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்ற நமது நம்பிக்கைக்கும் இது ஒரு அடையாளமாக இருக்கிறது.
புனித நீரைத் தெளிக்கும் முன்:
அப: நான் மீண்டும் உயிர் பெறுவோம் என்பதே நமது எதிர்நோக்கு, நமது நம்பிக்கை. நமது நம்பிக்கையின் அடையாளமாக நான் இப்போது, இறந்த நமது சகோதரர் (சகோதரி) ______________ (இறந்தவரின் பெயர்) அவர்களின் உடலை தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் ஆசீர்வதிக்கிறேன்.
எல்: ஆமென்.
தூபம் காட்டும் முன்:
அப: இறந்த நமது சகோதரர் (சகோதரி) _________________ (இறந்தவரின் பெயர்) அவர்களுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக, இத்தூபத்தின் நறுமணப் புகை நமது சகோதரரின் (சகோதரியின்) உடலைச் சூழ்ந்து, நமது செபங்களுடன் இறைவனைச் சென்றடைவதாக.
எல்: ஆமென்.
பிரியாவிடை எதிர் பாடல்: கீழுள்ளவற்றுக்குப் பதிலாகத் தகுந்ததொரு பாடலைப் பாடலாம்.
அப: இறைவனின் புனிதரே, துணை நிற்க வருவீர்! தேவனின் தூதரே, எதிர் கொண்டு வருவீர்!
எல்: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
அப:உம்மைத் தம்மிடம் அழைத்த கிறிஸ்து உம்மை ஏற்றுக் கொள்வாராக. தூதரும் உம்மை ஆபிரகாமின் மடியில் கொண்டு சேர்ப்பாராக!
எல்: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
அப: நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே, இவருக்கு இன்று அளித்திடுவீரே, முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிர்க.
எல்: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
பாடல்:
இறைவனின் புனிதர்களே... துணையாய் நீர் வருவீர்!
தேவனின் தூதர்களே... எதிர்கொண்டு வருவீர்! (2)
இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக்கொடுங்கள் - 2
1.
உம்மை தம்மிடம் அழைத்த இயேசுவே உம்மை ஏற்றுக் கொள்வாரே! - 2
தூதர் உம்மை ஆபிரகாம் மடியில் கொண்டு சேர்ப்பாராக! - 2
இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக்கொடுங்கள் - 2
2.
நித்திய சாந்தியை ஆண்டவரே இன்று இவருக்கு அருள்வீராக! - 2
முடிவில்லாத மீட்பின் ஒளி இவர் மேல் ஒளிர்ந்திடுக! - 2
இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக்கொடுங்கள் - 2
இறுதி ஒப்படைத்தல் செபம்:
அப: ஆண்டவரே, உமது அடியார் _____________ (இறந்தவரின் பெயர்) அவர்களின் ஆன்மாவை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். இந்த உலகின் பார்வையில் இவர் இப்போது இறந்துவிட்டாலும், உமது பார்வையில் என்றென்றும் வாழ்வாராக. மனித பலவீனத்தால் இவர் செய்த எல்லாப் பாவங்களையும் மன்னித்து, உமது நன்மையாலும் இரக்கத்தாலும் இவருக்கு நிலையான அமைதியையும் நிலை வாழ்வையும் அளித்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
அப: இறை அமைதியோடு நம் சகோதரரை (சகோதரியை) அவர் இளைப்பாறும் இடத்திற்கு அழைத்துச் செல்வோமாக. வானதூதர்கள் உம்மை வான் வீட்டினுள் அழைத்துச் செல்வார்களாக; புனிதர்கள் அனைவரும் உம்மை வரவேற்று, புதிய நிலையான எருசலேம் என்ற புனித நகரத்திற்குள் அழைத்துச் செல்வார்களாக.
அல்லது:
அப: இறை அமைதியோடு நம் சகோதரரை (சகோதரியை) அவர் இளைப்பாறும் இடத்திற்கு அழைத்துச் செல்வோமாக. வான தூதர்களின் பாடகர் குழுக்கள் உம்மை வரவேற்று ஆபிரகாமின் மடியில் கொண்டு சேர்ப்பார்களாக. ஏழ்மையில் வாழ்ந்த லாசர் இருக்கும் இடத்தில் இனி நீர் இளைப்பாறுதலைக் காண்பீராக.
கல்லறைத் தோட்டத்திற்குப் பவனி:
பிரியாவிடைச் சடங்கு முடிந்ததும், இறந்தவரின் உடலைப் பவனியாக ஆலயத்துக்கு வெளியே எடுத்துச் சென்று கல்லறையில் அடக்கம் செய்யலாம். இறந்தவரின் உடலைக் கல்லறைத் தோட்டத்திற்குத் தூக்கி செல்கையில் கீழுள்ளப் பாடலையோ வேறு தகுந்தப் பாடலையோ பாடலாம்.
பாடல் 1:
இறைவா இவரது திருப்பயணம் இனிதே அமைந்திட இறைஞ்சுகிறோம் - 2
1.
பாஸ்காப் பயணம் இதுவே தான், கிறிஸ்தவர் செல்லும் வழி இது தான் - 2
இறப்பைக் கடந்து உயிர்ப்பிற்கு, இசைந்து செல்லும் வழி இது தான்.
2.
அடிமைத் தலையை அறுத்தெரிந்து, ஆண்டவன் மக்கள் அன்றொரு நாள் - 2
உரிமை நாடு கடந்து சென்றார், உண்மை இங்கு நடப்பது தான்!
3.
சிலுவை சுமந்த வழியினிலே, சீர்மிகு உயிர்ப்பும் பிறந்ததுவே! - 2
சிலுவை பதித்த சுவடுகளில் சீடர் இருவரும் செல்கின்றார்!
4.
துன்பத்தின் வழியாய் திருச்சபையும், தூரப் பயணம் போவது போல் - 2
பயணத்தின் முடிவில் இவ்வடியார் பரகதி சேர்ந்திட இறைஞ்சிடுவோம்!
5.
விண்ணக விருந்து உண்டிடவே, விரைந்து செல்லும் இவ்வடியார் - 2
திருமகன் வந்து பார்க்கையிலே, திருமண உடையுடன் திகழ்ந்திடவே!
6.
ஆண்டவர் அழைத்த நேரத்திலே, அணையா விளக்குடன் ஆயத்தமாய் - 2
உடனே செல்லும் ஊழியராம், உண்மையில் பேறுபெற்றவரே!
7.
அந்நிய நாட்டின் எல்லைதனை, அடியார் இவரும் கடந்துவிட்டார் - 2
தாயகம் திரும்பும் பயணியிவர், தவறாது தன்வீடு சேர்ந்திடவே!
8.
எனக்கு வாழ்வு கிறிஸ்துவே தான்! என்றும் அவரோ டிருப்பதுதான்! - 2
இழப்பு அனைத்தும் அவரின்றி இறப்பு ஆதலின் ஆதாயம்!
பாடல் 2:
சென்று வா கிறிஸ்தவனே(ளே) - உலகை வென்று விட்டாய் நீ விசுவாசத்தால்
சென்று வா கிறிஸ்தவனே(ளே)
1.
உற்றார் உறவினர் நண்பரெல்லாம் சுற்றி நின்று வழியனுப்ப - 2
உற்ற துன்பத்தில் ஆறுதலாய் உதவும் திருச்சபை அருகிருக்க - 2
2.
இறைவனின் புனிதரே துணை வருவீர் தேவனின் தூதரே வந்தழைப்பீர் - 2
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர் ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர் - 2
3.
படைத்த தந்தை உனை ஏற்பார் மீட்ட திருமகன் உனைக் காப்பார் - 2
அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார் அனைத்துப் புனிதரும் உனைச் சேர்வார் - 2
4.
நித்திய அமைதியில் சேர்ந்திடுவாய் நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய் - 2
ஆண்டவர் எமையும் அழைக்குங் கால் அவரோ டுன்னையும் சந்திப்போம் - 2