பெரிய வியாழன்: இயேசுவுடன் சில மணித்துளிகள்
நித்திய ஸ்துதிக்குரிய... பரிசுத்த நற்கருணைக்கு...
பக்தியாய் ஆராதனை... எத்திசையும் புரிவோம். (மூன்று முறை)
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
முன்னுரை:
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எம்பிரான் இயேசுவுக்கு எருசலேம் மாநகரில், பெரிய வியாழன் அன்று இரவு நடந்த கொடூரமான நிகழ்வுதனை, உண்மைக்கு எதிராக பொய் போர் புரிந்த, நீதிக்கு எதிராக அநீதி ஆர்ப்பரித்துக் கடவுளையே சாவுக்கு அர்ப்பணிக்கின்ற துக்க நிகழ்வுதனை, நாம் இப்போது தியானிக்க இருக்கின்றோம். நம் ஆண்டவராகிய இயேசு அனுபவித்தப் பாடுகளை நம் மனக் கண் முன் கொண்டு வருவோம். சில மணித்துளிகள் நாம் பக்தியுடன் தியானித்து, நம் பாவங்களுக்காக மனம் வருந்தி, நம் தந்தையாம் இறைவனுடன் ஒப்புரவாகுவோம்.
கெத்சமேணித் தோட்டம்:
இயேசு கிறிஸ்து தம் பாடுகளின் வேதனையை மனித உடலில் உணர்கின்றார். உமக்காக உயிரையே கொடுப்போம் என்ற சீடர்கள் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்துள்ளனர். தனக்கு யாருமே இல்லை என்ற தனிமையில் தந்தையாம் இறைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றார். தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னை விட்டு நீங்கட்டும் என்று செபிக்கின்றார். ஆனால் தந்தையோ வானதூதர் வழியாக, “இத்துன்பக்கலத்தை ஏற்று, இவ்வுலகை மீட்கவே நீ விண்ணகத்திலிருந்து மண்ணுலகிற்கு மனிதனாக அவதரித்தாய்” என்று பதிலளிக்கிறார். வேதனைகள் பன்மடங்காகிறது. அது இரத்தத் துளிகளாய் உடலெங்கும் வியர்வையாக வெளியேறுகிறது. துக்கம் தொண்டையை அடைக்க, சோகத்தில் கண்கள் மங்க, காதுகள் மந்தமடைய, துன்பத்தில் துடிக்கின்றார் இயேசு.
செபம்:
இயேசுவே, நாங்கள் அனைவரும் வாழ்வு பெறவே நீர் இவற்றை எல்லாம் மனமுவந்து ஏற்றுக் கொண்டீர். உமதன்புக்கு ஈடில்லை ஐயா. என்னை மன்னியும். உம்மை நினைத்தால் என் உள்ளம் உருகுதையா. இயேசுவே நன்றி. என்னை மீட்ட தெய்வமே, உமக்குக் கோடான கோடி நன்றி.
பாடல்:
தேவகுமாரா கேட்கிறதா? என் தியான கீதம் கேட்கிறதா?
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா?
1.
உம்மைக் காண விழி கொடுத்தாய். உம்மைப் பாட மொழி கொடுத்தாய்.
பயணம் போக வழி கொடுத்தாய். பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்.
உம்மை நினைத்து உருகி விட்டேன். என்னை உமக்கே கொடுத்து விட்டேன் - 2
உமக்கே என்னைக் கொடுத்து விட்டேன்.
2.
கண்ணீர் வெள்ளம் வருகிறது. உந்தன் பாதம் தொடுகிறது.
என்னைப் போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது.
உம்மை நினைத்து உருகி விட்டேன். என்னை உமக்கே கொடுத்து விட்டேன் - 2
உமக்கே என்னைக் கொடுத்து விட்டேன்.
பிலாத்துவின் அரண்மனை:
சில நாட்களுக்கு முன் “வாழ்க வாழ்க” என வாழ்த்திய மக்கள் கூட்டம் இன்று “ஒழிக ஒழிக” எனக் கோஷமிடுகின்றது. வயிறார உண்ட மக்கள், புதுமைகள் பல கண்ட மனிதக்குலம் இப்போது, “இவன் சாக வேண்டும், இவன் சாக வேண்டும்” என உரக்கக் கத்துகின்றது. நாம் செய்த தவறுகள் அனைத்தும் கயிறுகளாக உருவெடுத்து இயேசுவைக் கல்தூணில் கட்டுகிறது. நாம் புரிந்த பிழைகள் இரும்புச் சாட்டைகளாக மாறி இயேசுவின் உடலைப் பதம் பார்க்கிறது. நம் தீய நினைவுகள் முள்முடியாகி இயேசுவின் தலையை ஊடுருவுகிறது. அடிமேல் அடி விழ, உடலின் தசைகள் கிழிய, இரத்தம் ஆறாய் பீரிட்டு வருகிறது. இறைவா, இதற்கு நாங்கள் என்ன பரிகாரம் செய்யப் போகிறோம்?
நாம் பிறரை மன்னிப்பதன் மூலம் நாமும் இறைவனின் மன்னிப்பைப் பெற மன்றாடுவோம்.
பாடல்:
என் பிழை எல்லாம் பொறுத்தளுரும்.
செந்நீர் வேர்வை சொரிந்தவரே...
புண்படக் கசையால் துடித்தவரே...
முள்முடி சூடிய மன்னவரே...
துன்பச் சிலுவை சுமந்தவரே...
இன்னுயிர் தியாகம் புரிந்தவரே...
மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தவரே...
நற்கருணை வாழ் நல்லவரே...
நீதி இருக்கையில் பிலாத்து:
இறைவன்தான் மனிதருக்கு நியாயத் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், இங்கோ அந்நிலைத் தலைகீழாக மாறி, மனிதன் ஆண்டவருக்கேத் தீர்ப்பிடும் கொடுமை. நாம் அனைவரும் நலம் பெற இந்த அநியாயத் தீர்ப்பை ஏற்கின்றார் இயேசு. செந்நிறப் போர்வை அணிந்தவராய், உடல் முழுவதும் கசையடிக் காயங்களிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட, சிரசில் முள்முடி தாங்கியதால் தலையிலிருந்து இரத்தம் முகம் வழியாக ஆறாய் ஓட, உடல் முழுவதும் இரத்தத்தால் நனைகின்றது. ஆண்டவரே, வழிந்தோடும் உம் திரு இரத்தம் எங்கள் தலை மீது சொரியப்பட்டு, இதற்குக் காரணமான எங்கள் பாவங்களைக் கழுவியருளும்.
பாடல்:
என் தலை மீது உம் திருஇரத்தம் சொரிந்து
என் பாவங்களைக் கழுவும் என் இயேசுவே
1.
இறை உன்னை மறந்து பாவம் செய்தேன் - 2
உம் இதயத்திற்கெதிராய் பாவம் செய்தேன்
2.
பிற தெய்வம் தொழுது பாவம் செய்தேன் - 2
உம் நிறை அன்புக்கு எதிராய் பாவம் செய்தேன்
3.
அயலானைப் பகைத்து பாவம் செய்தேன் - 2
உம் அன்புக்கு எதிராய் பாவம் செய்தேன்
நிறைவு செபம்:
இயேசுவின் துன்பகரமான அடிச்சுவடுதனில் ஒரு சில மணித்துளிகள் பயணித்த நாம், இதனை நம் வாழ்க்கையின் பாடங்களாக்கி, நம் வாழ்க்கை அடிச்சுவடுதனில் பின்பற்றி, நம் இயேசுவிற்கு உண்மையான சாட்சிகளாக வாழ்ந்து, அவரில் மரித்து, அவரால் உயிர்ப்பித்து, வான் வீடு சேருவோம். ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய... பரிசுத்த நற்கருணைக்கு...
பக்தியாய் ஆராதனை... எத்திசையும் புரிவோம். (மூன்று முறை)
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.