கோடி வரங்களை வாரி வழங்கும் புனித சூசையப்பரின் நவநாள் செபம்
➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.
தொடக்க செபம்:
முத: ஓ புனித சூசையப்பரே! உம்முடைய பாதுகாவல் இறைவனின் அரியாசனத்தின் முன் பெரியதும் வலியதும் தீவிரமாய் செயல்படுவதுமாய் இருக்கிறது. எங்களுடைய ஆவல்களையும் ஆர்வங்களையும் உம் திருமுன் வைக்கிறோம். உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக அவரிடமிருந்து எல்லா ஆன்மீக நன்மைகளையும் உமது விண்ணக வல்லமையுள்ள மன்றாட்டினால் எங்களுக்கு பெற்றுத் தருவீராக. உமது விண்ணக வலிமையை இவ்வுலகில் காண்பிப்பதற்காக விண்ணகத் தந்தைக்கு எங்களது நன்றியையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம். புனித சூசையப்பரே! உம்மையும், உமது கரங்களில் அயர்ந்து உறங்குகின்ற குழந்தை இயேசுவையும் தியானிப்பதில் நாங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம். உமது இதயத்தின் அருகில் இயேசு இளைப்பாறுகையில் நாங்கள் உமதருகில் வர துணிய மாட்டோம்.
எல்: எங்கள் பெயரால் அவரை அரவணைத்து அவரது அழகிய தலையில் முத்தமிட்டு நாங்கள் இறுதி மூச்சு விடும் வேளையில் அந்த முத்தத்தை எங்களுக்கு தரும்படி மன்றாடுவீராக. மரணத்தருவாயில் இருக்கும் ஆன்மாக்களுக்கு பாதுகாவலரான புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்: ஆமென்.
முத: நீதிமானாகிய புனித சூசையப்பரே, எங்கள் தகப்பனே, தொழிலாளர்களுக்குப் பாதுகாவலரே, உம்மை நம்பி உமது அடைக்கலம் தேடி வந்துள்ளோம்.
எல்: எங்கள் அன்பின் தகப்பனே, தேவ அன்னைக்கும் உமது வளர்ப்பு மகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கும் / நீர் காட்டிய அன்பையும் / பராமரிப்பையும் வியந்து / உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்மிடமிருந்து நாங்கள் பெற்ற எண்ணற்ற வரங்களுக்காக / உமக்கு அன்போடு நன்றி கூறுகிறோம்.
முத: மிகுந்த வணக்கத்தோடு உம்மை எங்களுக்கு தந்தையாகவும் பாதுகாவலராகவும் தெரிந்து கொள்கிறோம்.
எல்: இறைமகன் இயேசு கிறிஸ்து / தமது திரு இரத்தத்தால் சம்பாதித்த மக்களாகிய எங்களை / தயவாய் கண்ணோக்கி / நீர் திருக்குடும்பத்தை வழி நடத்தியது போல / எங்களையும் வழிநடத்தி / எல்லாப் பாவங்களிலிருந்தும் / தீமைகளிலிருந்தும் / எங்களைப் பாதுகாத்து / வழிநடத்த வேண்டுமென்று / உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றோம்.
முத: தாவீது அரசரின் புகழ்பெற்ற உத்தமரே...
எல்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
விண்ணப்பங்கள்:
முத: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே திருக்குடும்பத்தின் பாதுகாவலரும், தொழிலாளர்களின் மாதிரிகையும், நல்ல படிப்பின் பாதுகாவலரும், நல்ல மரணத்தின் காவலருமாகிய புனித சூசையப்பரை எம் பாதுகாவலராக அளிக்க திருவுளமானீரே! அவர் வழியாக உமது ஆதரவைத் தேடி நாடி வந்துள்ள எங்கள் மீது இரங்கி எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு நாங்கள் கேட்கும் விண்ணப்பங்களைக் கருணையோடு எங்களுக்கு அளித்தருளும்.
முத: இயேசு கிறிஸ்துவைப் பேணி வளர்த்த புனித சூசையப்பரே!
எல்: எங்கள் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரையும் / உம் திருப்பாதத்தில் வைக்கிறோம். அவர்களை கிறிஸ்துவைப் போல் / கடவுளுக்கும் மனிதர்களுக்கும் / உகந்தவர்களாக வளர்க்க / எங்களுக்கு உதவி புரிய வேண்டுமென்று / நல்ல படிப்பின் காவலரே / உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முத: இயேசு கிறிஸ்துவைப் பாசத்தோடு வளர்த்த புனித சூசையப்பரே!
எல்: எங்கள் பங்கில் உள்ள இளைஞர் / இளம் பெண்களை/ உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்களுக்குத் தூய ஆவியாரின் உதவியைப் பெற்றுத் தந்து / அவர்கள் தங்கள் வாழ்விலும் / பணியிலும் உயரிய இடத்தைப் பெற்று / மகிமையோடு வாழப் / புனித சூசையப்பரே / உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முத: திருக்குடும்பத்தின் பாதுகாவலரான புனித சூசையப்பரே!
எல்: குடும்பங்களில் ஒற்றுமையும் / சமாதானமும் / புரிந்து கொள்ளும் மனப்பான்மையும் / தியாக உணர்வும் / விட்டுக் கொடுத்து வாழும் விவேகமும் நிலவி / குடும்பங்கள் நன்மக்களை உருவாக்கி / திருச்சபையை வளர்க்க / உமது மேலான ஞானத்தைக் / குடும்பங்களுக்கு அளித்து / அவர்களைப் பராமரிக்க வேண்டுமென்று / புனித சூசையப்பரே / உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முத: உழைப்போரின் பாதுகாவலரான புனித சூசையப்பரே!
எல்: எங்கள் பங்கில் உள்ள அனைவரையும் / உம் திருக்கரங்களில் வைக்கிறோம். அவர்கள் அனைவரும் / தங்களுக்கு அளிக்கப்பட்ட தொழில்களைச் / செவ்வனே நிறைவேற்றி / நாட்டுக்கும் சமூகத்துக்கும் / பயனுள்ள முறையில் வாழ்ந்து / இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற/ புனித சூசையப்பரே / உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முத: திருச்சபையின் அரணாக இருக்கும் புனித சூசையப்பரே!
எல்: திருச்சபையில் உள்ள அனைத்து வாழ்வு நிலைகளுக்கும் / இறை அன்பு ஒன்றே ஊற்றாய் இருப்பதால் / இல்லறத்தாரும் / துறவறத்தாரும் / இறை அன்பை அடிப்படையாகக் கொண்டு / இறைவனையும் மனிதனையும் அன்பு செய்து வாழவும் / திருச்சபை அன்பின் சமூகமாய் / நிறைவாழ்வை நோக்கி / வீறுநடை போட்டு வாழவும் / புனித சூசையப்பரே / உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முத: மனு உருக்கொண்ட இயேசுவின் கரங்களிலும், மனுக்குலத் தாயாம் மரியாளின் கைகளிலும் பாக்கியமான மரணம் அடைந்த புனித சூசையப்பரே!
எல்: நோயுற்றோர் உடல் நலச் சுகம் பெறவும் / மரண ஆபத்தில் இருப்போர் / உமது பரிந்துரையால் / ஆன்மீக நலன்களையும் / அவசர உதவிகளையும் / நிறைவாய் பெற்று / இறைவனில் அமைதி கொள்ள / நீர் அவர்களுக்கு உதவி புரிய வேண்டுமென்று / புனித சூசையப்பரே / உம் வழியாக மன்றாடுகின்றோம்.
முத: புனித சூசையப்பர் வழியாக நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களை மௌனமாக இறைவனிடம் எடுத்துக் கூறுவோம்.
(நமது சொந்தக் கருத்துகளுக்காக சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்)
நன்றியறிதல்கள்:
முத: எங்களுடைய தேவைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதற்கு முன்பே அவற்றை அறிந்து, வரங்களை மழையெனப் பொழிந்து எம்மை வழிநடத்தும் இறைவா! உமது பிரதிநிதியாய், பூவுலகில் திருக்குடும்பத்தின் தலைவராக எல்லாச் சூழ்நிலைகளிலும் உம் திருமகனையும், அவர்தம் அன்னையையும் பேணிக் காத்த அதே புனித சூசையப்பரைப் பாதுகாவலராகத் தந்து, எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வரும் உமது வல்லமை நிறைந்த நன்மைத்தனத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம்.
முத: கோடி வரங்களை வாரி வழங்கும் புனித சூசையப்பர் வழியாக அவர் மக்களாகிய நாங்கள் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும்...
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முத: கோடி வரங்களை வாரி வழங்கும் புனித சூசையப்பர் வழியாக எம் திருச்சபைக்கு நீர் வழங்கிய அனைத்து அருள் வரங்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும்...
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முத: கோடி வரங்களை வாரி வழங்கும் புனித சூசையப்பர் பெயர் கொண்ட ஆலயங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அனைத்தின் மீதும் நீர் பொழிந்த அருள் வரங்களுக்காகவும்...
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முத: தொழில் புரிவோர் அனைவருக்கும் புனித சூசையப்பர் பெயரால் நீர் அருளிய அனைத்து நன்மைகளுக்காகவும்...
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முத: குடும்பங்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் மன்றாட்டால் அனைத்து குடும்பங்களுக்கும் நீர் கொடுத்த பாதுகாப்பிற்காக...
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முத: கோடி வரங்களை வாரி வழங்கும் புனித சூசையப்பரின் மன்றாட்டால் நோயாளிகள் நலம் பெற்று வாழவும் நல்ல உடல் சுகமும் பெற்றதற்காகவும்...
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முத: புனித சூசையப்பரின் பரிந்துரையால் இளம் பெண்கள் பெற்ற பாதுகாப்பிற்காகவும், வழிகாட்டுதலுக்கும்...
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முத: கோடி வரங்களை வாரி வழங்கும் புனித சூசையப்பர் வழியாக நவநாள் செய்வோர் அடைந்த நன்மைகளுக்காக...
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முத: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள நன்மைகளுக்காக புனித சூசையப்பர் வழியாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
(சிறிது நேரம் மௌனமாக நன்றி செலுத்துவோம்)
நோயாளிகளுக்காக செபம்:
முத: மகிமை நிறைந்த புனித சூசையப்பரை / எங்கள் பாதுகாவலராகத் தெரிந்து கொண்டு / அவரது பரிந்துரைக்காக / எங்களை முழுவதும் கையளித்து விட்டோம். இதன் வழியாக / எங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த / நோய் நீங்கிற்று. இன்னும் பல பெரிய சிக்கல்களிருந்து விடுதலை அடைந்தோம். அவரிடம் இந்நாள் வரை எந்த ஒரு வரமும் கேட்டு / நாங்கள் அதை பெற்றுக் கொள்ளவில்லையென / நினைத்துக் கூடப் பார்க்க முடியாது / என மறைவல்லுநர் புனித அவிலா தெரசம்மாள் கூறியது போல / நாங்களும் சாட்சி பகர விரும்புகிறோம். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (நோயுற்றிருப்போரின் பெயரைச் சொல்லவும்) கண்ணோக்கியருளும். எங்கள் பாவங்களையும் / பலவீனங்களையும் பாராமல் / திருச்சபையோரின் நம்பிக்கையையும் / எங்கள் அனைவரின் நம்பிக்கையையும் /கண்ணோக்கி / எங்களுக்காக இறைவனை மன்றாடும். ஆமென்.
புனித சூசையப்பருக்குக் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம்:
முத: குடும்பங்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரே /திருக்குடும்பத்தின் உத்தம தலைவரே / உம்மில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். புனித முன்மாதிரியால் உயர்ந்த நீர் / மாபரன் இயேசுவின் / வளர்ப்புத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர். உமக்கு வழங்கப்பட்டத் திருக்குடும்பத்தின் கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து, மிகக் கனிவுடனும், கருணையுடனும், பொறுப்புடனும், அன்புடனும் / திருக்குடும்பத்தை வழி நடத்தி வந்தீர்.
அன்புத் தந்தையே / நீர் குடும்பத் தலைவருக்குரிய மாண்பு சிறிதும் குறையாமல் / சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தீர். மிகுந்த அன்புடனும் பிரமாணிக்கத்துடனும் / அன்னை மரியாவின் கற்புக்கு / சிறந்த அரணாக இருந்து பாதுகாத்து வந்தீர். எளிமையும் தாழ்ச்சியும் கொண்ட மணிப்புறாவே / நீர் திருக்குடும்பத்தில் அன்பை மழையாகப் பொழிந்து வந்தீர். அருள் வாழ்வில் திருத்தூதராகத் திகழ்ந்தீர். எளிய வாழ்வுக்கு ஏற்றம் சேர்த்தீர். தச்சுத் தொழில் செய்து, திருக்குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றினீர். பாலன் இயேசுவை பாங்குடன் வளர்த்தீர். குடும்பங்களின் முன்னோடியாகத் திகழ்ந்து, திருக்குடும்பத்தை சிரம் ஏற்று / சிறப்புடன் வழிநடத்தி வரும் ஞான தூதரே / நாங்களும் எங்கள் குடும்பத்தை உமது பாதுகாவலில் ஒப்படைக்கிறோம்.
எங்கள் அன்பு தந்தையே! எங்கள் குடும்பங்களில் நிலவும் சமாதானமின்மை, சுயநலம், போட்டி, பொறாமை, ஒழுக்கமின்மை, சகிப்புத் தன்மையின்மை போன்றக் காரணங்களால், நாங்கள் இயேசுவின் மதிப்பீடுகளை மறந்து /அமைதியற்ற, அன்பற்றக் குடும்பங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம். இதனால், இனிமையானக் கூட்டுக் குடும்ப உறவுகளைச் சிதைத்து, இல்லற வாழ்வின் புனிதத்தைக் கெடுத்து / இறைவன் ஏற்படுத்தியத் திருமண வார்த்தைப்பாட்டைச் சிதைப்பவர்களாகிறோம்.
எல்: இதனால், பாசம் எங்களை விட்டுப் பறந்து சென்று விட்டது. அமைதி எங்கள் இதயங்களை விட்டு அகன்று சென்று விட்டது. நாங்கள் குழப்பமும் துயரமும் நிறைந்தவர்களாக / போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே உன்னத தந்தையே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் அமைதியையும், சமாதானமற்ற எங்கள் மனங்களில் சமாதானத்தையும், நிலவச் செய்தருளும். எங்கள் குடும்பங்களில் இறை ஒளி வீசச் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றுத் தந்தருளும் தந்தையே! ஆமென்.
புனித சூசையப்பருக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்:
முத: மகிமை நிறைந்த முதுபெரும் தந்தையாகிய புனித சூசையப்பரே! இறை அன்னையின் புனிதக் கணவரே! இயேசு கிறிஸ்துவை வளர்த்த தந்தையே! உம்மை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே! நன்மரணத்துக்கு மாதிரிகையே! உம்முடைய அடியவர்களாகிய நாங்கள் எங்களை முழுதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். மூவொரு இறைவனுடைய சமூகத்திலே, உம் திரு மகனாகிய இயேசு, உம் புனித துணைவி, அனைத்து விண்ணுலக வாசிகள் ஆகியோர் முன்னிலையில் மிகுந்த வணக்கத்துடனே உம்மை எங்கள் தந்தையாகவும், அடைக்கலமாகவும் தெரிந்து கொள்கிறோம். உமக்கு எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம். உமது மகிமையைக் கொண்டாடி, உமக்குரிய வணக்கத்தை அறிக்கையிட்டு ஒரு நாளாவது உமக்குத் துதியையும் வேண்டுதலையும் செலுத்தாமல் இருக்கப் போவதில்லை.
எல்: நீரும் இடைவிடாமல் எங்களை நினைத்து, எங்களுடைய இடையூறுகளை விலக்கி, எங்களை அறநெறியிலே வழுவாமல் நடத்தியருளும். இயேசு, இறை அன்னை ஆகியோரின் திருக்கைகளில் இறக்கப் பேறுபெற்ற நீர், நாங்கள் திரு அருளோடு இறந்து, விண்ணுலகப் பேற்றை அடைந்து, உம்முடன் என்றென்றும் வாழச் செய்தருளும். ஆமென்.
புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை:
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முத: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: தூய ஆவியாராகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தூய மரியே, இறைவனின் தாயே...
முத: புனித சூசையப்பரே
முத: அசிசியின் புனித பிரான்சிசே...
முத: அசிசியின் புனித கிளாரம்மாளே...
முத: பதுவையின் புனித அந்தோணியாரே...
முத: புனித தேவசகாயம் அடிகளாரே...
முத: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே...
முத: புனித அருளானந்தர் அடிகளாரே...
முத: புனித கூரியாகோஸ் அடிகளாரே...
முத: திருத்தூதரானப் புனித தோமாவே...
முத: புனித அல்போன்சம்மாளே...
முத: கொல்கொத்தாவின் புனித தெரேசம்மாளே...
முத: முக்தி பேறு பெற்ற கார்லோஸ் அடிகளாரே...
முத: நீதிமானாக புனித சூசையப்பரே...
முத: தூயவராணாப் புனித சூசையப்பரே...
முத: துணிவுள்ள சூசையப்பரே...
முத: தாவீது அரசரின் திருமகனே...
முத: முதுபெரும் தந்தையரின் மாட்சி...
முத: இறை அன்னையின் துணைவரே...
முத: கன்னி மரியாளின் காவலரே...
முத: இறை திருமகனை வளர்த்தவரே...
முத: இயேசு கிறிஸ்துவைக் காத்தவரே...
முத: திருக்குடும்பத்தின் தலைவரே...
முத: உயர் நீதிமானான சூசையப்பரே...
முத: உயர் கற்புள்ள சூசையப்பரே...
முத: விவேகத்தின் ஊற்றே...
முத: உண்மையின் நாயகனே...
முத: நம்பிக்கையின் சான்றே...
முத: பொறுமையின் கண்ணாடியே...
முத: ஆண்டவருடைய அன்பரே...
முத: தொழிலாளர்களின் முன்மாதிரியே...
முத: இல்லற வாழ்வின் ஆபரணமே...
முத: கன்னிகைகளின் காவலரே...
முத: குடும்பங்களின் ஆதரவே...
முத: துன்புறுவோரின் ஆதரவே...
முத: நோயுற்றோரின் நம்பிக்கையே...
முத: இறப்போரின் பாதுகாவலே...
முத: சாத்தானை நாடிநடுங்கச் செய்பவரே...
முத: திருஅவையின் வழிகாட்டியே...
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: ஆண்டவர் அவரை தமது வீட்டின் தலைவராக ஏற்படுத்தினார்...
எல்: அவருடைய உடமைகளை எல்லாம் தப்பிக்கவும் ஏற்படுத்தினார்.
முத: மன்றாடுவோமாக! இறைவா, நீதிமானாகிய புனித சூசையப்பரை கன்னியான தேவ தாய்க்குக் கணவராகத் தந்தருளினீர். அவருடைய பிரமாணிக்கம் உள்ள பாதுகாவலில் தான், மனித மீட்பின் ஊற்றாகிய இயேசு கிறிஸ்துவை ஒப்படைத்தீர். இந்தப் புனிதரின் உதவியினால் நாங்களும் தூய உள்ளத்தோடு அந்த மீட்புப் பணியைத் தொடர உமது அருட்கொடைகளைத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
நிறைவுப் பகுதி:
முத: நமது திருத்தந்தையின் கருத்துகளுக்காகவும், நமது குடும்பங்களில் உள்ள அனைவரின் நலனுக்காகவும், இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மா இளைப்பாற்றிகாகவும், மேலும், இங்குள்ள விண்ணப்பப் பெட்டகத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அனைத்து விண்ணப்பங்களும் இறைவனின் திருவுளப்படி நிறைவேறவும் மன்றாடுவோமாக:
முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
முத: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.