தூய ஆவியார் நவநாள் செபம் 


➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.


தொடக்கப் பாடல்:

ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கிறேன் இறைவா ஆராதனை செய்கிறேன்


என்னை ஒளிரச் செய்து வழி காட்டும் புது வலுவுட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்றுக் காட்டும் அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி பாடிப் பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுள்ளப்படி என்னை நடத்தும்


இறை தந்தையின் முகத்தைக் காட்டும் இயேசு கிறிஸ்துவின் அறிவை ஊட்டும்

இறை வார்த்தையை விளங்க வையும் நற்செய்தியை முழங்கச் செய்யும்

என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி பாடிப் பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுள்ளப்படி என்னை நடத்தும்


தொடக்க செபம்:

முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…

எல்: ஆமென்.


முத: தூய ஆவியே, எங்கள் ஆருயிரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்களில் ஒளியேற்றி எங்களை வழி நடத்தியருளும். எங்களுக்குத் திடம் அளித்து எங்களைத் தேற்றியருளும். நாங்கள் செய்ய வேண்டியவற்றை எங்களுக்கு ஆணையிடும். உமது திட்டத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். எப்படி நாங்கள் நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நாங்கள் அன்புடன் ஏற்று அடிபணிகிறோம்.

எல்: ஆமென்.


தூய ஆவியாரால் நிரப்பப்படச் செபம்:

(தினமும் சொல்ல வேண்டும்)

‘நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெருவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். (திருத்தூதர் பணிகள் 2:38) என்பது புனித பேதுருவின் அறிவுரை. எனவே தூய ஆவியார் நம்மில் நிரம்ப வேண்டுமெனில் நாம்:

1. நம் பாவங்களுக்காக மனத்துயரடைய வேண்டும்.

2. இயேசு கிறிஸ்துவை நம் ஒரே மீட்பராக ஏற்க வேண்டும்.

3. தூய ஆவியார் நம்மை நிரப்ப உருக்கமாகக் கெஞ்சி மன்றாட வேண்டும்


(இந்த செபத்தை தினமும் 20 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் மனப்பற்றுதலுடன் தூய ஆவியாரை நோக்கி செபிக்கவும்)


எல்: என்றும் வாழும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே, எங்கள் அன்பு இயேசுவே, நீர் வாக்களித்த தூய ஆவியாரை எங்கள் மீது அனுப்பியருளும். உம் தூய ஆவியாரின் கனிகளையும், கொடைகளையும், அருங்கொடைகளையும் எங்களுக்கு அருளி எங்களைப் புதிய படைப்பாக மாற்றியருளும். இயேசுவே, உமக்கு நன்றி! இயேசுவே உமக்குப் புகழ்! விண்ணுலகத் தந்தையே, எங்கள் மீது உம் தூய ஆவியாரைப் பொழிந்தருளும். நன்றி தந்தையே, என்றும் புகழ் உமக்கே. ஆமென்.


முத: மூவொரு இறைவா, உம்மைத் ஆராதிக்கிறோம்.

எல்: அனைத்திற்கும் முழு முதல் பொருள் நீரே.


முத: இறைவா, உம்மை விசுவசிக்கிறோம்.

எல்: என்றும் மாறாத நிலையான உண்மை நீரே.


முத: இறைவா, உம்மை நம்புகிறோம்.

எல்: எல்லையற்ற இரக்கமும், நிறை ஆற்றலும் கொண்டவர் நீரே.


முத: இறைவா உம்மை அன்பு செய்கிறோம்.

எல்: அளவற்ற நன்மையும் அன்பும் கொண்டவர் நீரே.


முத: அன்புத் தந்தையே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.

எல்: அவரே எங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவராக.


முத: இனிய இயேசுவே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.

எல்: அனைத்திலும் நாங்கள் இறைவனை மாட்சிப்படுத்துவோமாக.