டிசெம்பர் 22
டிசெம்பர் 22
புனித பிரான்சிஸ் சேவியர் கப்ரீனி
இவள் லொம்பார்தியில் பிறந்தாள். இவளுடைய பெற்றோர் குடியானவர்கள். வசதிகளுடன் வாழ்ந்து வந்தார்கள். இவள் 13-வது குழந்தை. உயர்ந்த கல்விப் பயிற்சி பெற்று இவள் ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்து வந்தாள். இவளுக்கு இருபத்து நான்கு வயது ஆன பொழுது ஓர் அகதிகளின் இல்லத்தை நடத்தும்படி பங்குத் தந்தை இவளை அழைத்ததிலிருந்து ஒரு புதிய சபை தொடங்கப்பட்டது. இவள் அமைப்பதிலும், ஆள்வதிலும், அபூர்வ திறமை பெற்றவள். விவேகம் உள்ளவள். மக்களை எளிதில் அறியும் திறமை வாய்ந்தவள். எனவே சபை செழித்தோங்கியது. அகதிகளுக்காகவும், வசதியற்ற குழந்தைகளுக்காகவும், வயது வந்த பெண்களுக்காகவும் பல இடங்களில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினாள். தன் கன்னியரை சீனாவுக்கு அனுப்ப விரும்பினாள். பாப்பு 13-ஆம் சிங்கராயரின் விருப்பப்படி அமெரிக்காவுக்குப் போய் ஏழை இத்தாலியா சிறுவருக்கு இவள் சிறந்த சேவை செய்தாள். அவர்களது வேத விசுவாசத்தைக் காத்து அகதிகளுக்கென விடுதிகள் திறந்தாள். இவளுக்கு எதிர்ப்பு ஏராளமாக இருந்தது என்றாலும் கடவுள் இவளுடன் இருந்தார். இவள் தனது சொந்த பலத்தில் நம்பிக்கை வைக்கவில்லை. கடவுள் மீதே நம்பிக்கை வைத்து தன்னால் ஆனதையெல்லாம் செய்தாள். தன் சகோதரிகளைப் பார்த்து, “செபியுங்கள். எப்பொழுதும் செபியுங்கள். செபவாழ்வு நடத்த கடவுளின் உதவியை இடைவிடாது கேளுங்கள். கடவுள் விரும்புவதையே விரும்புங்கள்” என்று அடிக்கடி சொல்வாள்.
இவள் நிறுவிய ஸ்தாபனங்கள் கடவுள் மீது வைத்த எல்லையற்ற நம்பிக்கையின் சிறந்த குறிகளாகும். அவள் அநேக சமயங்களில் பணமும், உணவுப் பொருட்களும் புதுமையாக அதிகரிக்கச் செய்திருக்கிறாள். இவள் மூன்று புதிய மொழிகளைக் கற்க வேண்டியிருந்தது. முப்பது முறை இவள் சமுத்திரத்தைக் கடந்திருக்கிறாள். இவள் உயிருடன் இருக்கும் பொழுதே பள்ளிக்கூடங்களும் அகதிகளின் விடுதிகளும், மருத்துவமனைகளுமாக மொத்தம் அறுபத்தேழு நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. கன்னியர் நாலாயிரம் பேர் இருந்தனர்.
சிந்தனை:
“முட்கள் மீது நடந்து போ, யாரும் அதை கவனிக்க வேண்டும் என்று விரும்பாதே. தாழ்த்தப்பட ஆசிப்பாய்”. (புனித கப்ரீனி)
செபம்:
ஆண்டவரே, ஆர்வமும் ஆற்றலும் மிகுந்த போதகர்களை திருச்சபைக்குத் தாரும்.