டிசெம்பர் 21
டிசெம்பர் 21
புனித கனிசியுஸ் இராயப்பர் (1521 – 1597)
இவர் ஹாலந்து நாட்டில் 08.05.1521ல் பிறந்த வேளையில் லுத்தர் திருச்சபைக்கு விரோதமாகக் குழப்பம் செய்து கொண்டிருந்தார்; அதே நேரத்தில் இயேசு சபைக்கு இஞ்ஞாசியார் அஸ்திவாரம் இட்டுக் கொண்டிருந்தார். அவர் இயேசு சபையில் சேர்ந்து கல்வி கற்பிப்பதிலும், மறையுரைகள் நிகழ்த்துவதிலும், சிறந்த நூல்கள் எழுதுவதிலும், நல்ல ஆலோசனைகள் கூறுவதிலும் புகழ் பெற்று விளங்கினார். எனவே இவரை ஜெர்மனி நாட்டின் இரண்டாம் அப்போஸ்தலர் என்று அழைக்கிறார்கள். “நான் குழந்தையாக இருக்கும் போது என் அன்னை கண்ணீர் வடித்துக் கொண்டே என்னை கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பார்கள். நான் பல முறை பெற்றோரிடம் மரியாதையின்றி நடந்து கொண்டேன். அதற்கு எனக்குத் தண்டனை கிடைத்து. உயர்நிலைப் பள்ளிக்குக் கல்வி பயிலச் சென்ற போது என் அன்னை எனக்கு பல அரிய புத்திமதிகள் சொன்னார்கள். அவற்றின் பயனாக நான் கெட்ட நண்பர்களை விலக்கி நடந்தேன்” என இவர் எழுதுகிறார்.
ஜெர்மனி நாடெங்கும் ஒரே குழப்பமாக இருந்தது. இவர் மக்களுக்கு சிறந்த கல்விப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து, தீமை எங்கும் பரவாதபடி தடுத்தார். இவர் கல்வி ஸ்தாபனத்தில் நுழைந்ததும் சில மாதங்களில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார். “ஜெர்மனி எங்கும் தப்பறையான கொள்கைகள் பரவி இருக்கின்ற இந்த நிர்ப்பாக்கிய நாட்டைக் காப்பாற்றுவது எங்ஙனம்?” என்று பாப்பானவர் இவரிடம் கேட்டார். “குருத்துவ கல்வி நிலையங்களை ஏற்படுத்துங்கள்” என்று இவர் ஆலோசனை கூறினார். இவரது பெருமுயற்சியால் பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. இவருக்கு குழந்தைகள் மேல் அதிக பக்தி உண்டு. அவர்கள் இவரைச் சூழ்ந்து கொள்வர்; அவர்களுக்கு மறைக்கல்வியைப் புகட்டுவதும் அவர்களோடு தெருக்களில் செபித்துக் கொண்டு செல்வார்.
சிந்தனை:
“நாட்டை சீர்திருத்த சிறந்த வழி உத்தம குருக்களை ஏராளமாக உருவாக்குவதே” (புனித கனிசியுஸ் இராயப்பர்)
செபம்:
ஆண்டவரே, திருச்சபைக்கு உத்தம குருக்களை நிரம்பத் தாரும்.