புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா (1550 – 1568)
இவரது தந்தை நாட்டில் உயர்ந்த பதவி வகித்தார். இவரும இவருடைய அண்ணன் பவுலும், கல்வி கற்கும்படி வியன்னா நகருக்கு அனுப்பப்பட்டார்கள். பவுலும் இவரது ஆசிரியரும் இரவு நேரத்தைத் தகாத நேரப்போக்குகளில் செலவழிப்பார்கள். இவரோ பக்தி முயற்சிகளில் இரவை செலவழிப்பார். லூத்தர் சபையைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் சிறிது காலமாக இவர்கள் வசித்து வந்தார்கள். தன் தம்பியை பவுல் மிகத் துன்புறுத்தியதால் தம்பி கடும்; நோய்வாய்ப்பட்டார். குருவானவர் வந்து திரு அருட்சாதனங்கள் வழங்க வீட்டின் சொந்தக்காரன் அனுமதியளிக்கவில்லை. ஒரு நாள் புனித பார்பரம்மாள் இவருக்குத் திவ்விய நன்மை கொண்டு வந்து கொடுத்தாள். தேவதாய் இவருக்குக் காட்சியளித்து இவரைச் சுகப்படுத்தி இவரை இயேசு சபையில் சேரும்படி சொல்லி மறைந்தாள்.
இவர் இயேசு சபையில் சேர்வதை தந்தை கடுமையாக எதிர்த்தார். எனவே வியன்னா நகர் குருக்கள் இவரை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஒரு நாள் அதிகாலையில் ஸ்தனிஸ்லாஸ் வீட்டை விட்டு நழுவி அருகில் இருந்த காட்டிற்குச் சென்று தன் அழகிய உடைகளை களைந்து விட்டு ஒரு குடியானவனது உடைகளை அணிந்து கொண்டு 450 மைல் தொலைவில் உள்ள ஆக்ஸ்பர்க் நகருக்கு நடந்து சென்றார். அங்கிருந்து சிபாரிசுக் கடிதத்துடன் உரோமைக்கு புறப்பட்டு 800 மைல் தூரம் கால்நடையாகச் சென்றார். சபையின் தலைவரான புனித பிரான்சிஸ் போர்ஜியா இவரை சந்நியாசியாக ஏற்றுக் கொண்டார். தமது மகிழ்ச்சியாலும், தூய வாழ்வாலும் சம்மனசுக்குரிய மாசற்றதனத்தினாலும் எல்லோரையும் கவர்ந்தார். இவர் பலம் வாய்ந்தவர் அல்ல என்றாலும் தவமுயற்சிகள் செய்வார். கடவுள் இவருக்கு பல அரியவரங்களைக் கொடுத்தார். மாதா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விழா அன்று நவசந்நியாசத்தைத் தொடங்கி பத்து மாதத்திற்குப் பின் இவர் இறந்தார். இதய நோயாளிகளுக்கும் திவ்விய நன்மையின்றி இறக்க இருக்கிறவர்களும் இவரது உதவியைத் தேடுகிறார்கள்.
சிந்தனை:
“நான் இவ்வுலகிற்காக உண்டாக்கப்படவில்லை. நித்தியத்திற்காக உண்டாக்கப்பட்டிருக்கிறேன்”. (புனித ஸ்தனிஸ்லாஸ்).
செபம்:
ஆண்டவரே, நாங்கள் மோட்சத்தை அடிக்கடி நினைக்கும் வரம் தாரும்.