இவர் 545-ஆம் ஆண்டையொட்டி அயர்லாந்தில் பிறந்தார். இவர் வாலிபராக இருக்கும் பொழுது ஒரு நாள் கற்புக்கு விரோதமாக பலத்த சோதனை வந்ததிலிருந்து தப்பிக்க இவர் நாட்டை விட்டு வெளியேறி ஒரு மடத்திற்குப் போய் தவ வாழ்வு நடத்தினார்.
பின்னர் பெரியவர்களின் அனுமதியுடன் பன்னிரு தோழர்களோடு வேதம் போதிக்கும்படி பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார். இந்த சந்நியாசிகளது பிரசங்கங்களைப் பற்றியும் தூய வாழ்வைப் பற்றியும் கேள்விப்பட்ட பர்கண்டி நாட்டின் மன்னன் அவர்களைத் தன் நாட்டுக்கு அழைத்தான். இவர் எழுதிய சபைச் சட்டத் திட்டங்கள் கண்டிப்பானவை என்று சில ஆயர்கள் இவரை வெறுத்தார்கள். ஒரு சங்கத்தைக் கூட்டி கலந்து கொள்ள அழைத்தார்கள். அங்கு பயனற்ற வாக்குவாதம் ஏற்படுமென்று இவர் போகவில்லை. இவர் பாப்பானவருக்கு இரு கடிதங்கள் அனுப்பினார். அது போய் சேரவில்லை.
இவர் ஓர் அரசனைக் கண்டித்தமையால் தம் நாட்டிற்குத் திரும்பும் படி கட்டளையிட்டார். இவரும் சந்நியாசிகளும் ஏறிய கப்பல் புயலில் அகப்பட்டது. ஆஸ்திரியா நாட்டின் மன்னர்களும் மிலான் நாட்டு அரசனும் இவரையும், சந்நியாசிகளையும் அன்புடன் வரவேற்று தங்கள் நாடுகளில் நன்மையானவை செய்ய வாய்ப்பு அளித்தனர்.
சிந்தனை:
கற்புக்கு விரோதமான சோதனைகளிலிருந்து தப்பிக்க ஓடி ஒளிவது சாலச் சிறந்தது. இப்புனிதரைப்போல நாட்டைவிட்டு ஓட முடியாது. பாவத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய இடங்கள், பொருட்கள், ஆட்களை விட்டு ஓட வேண்டும்.
செபம்:
ஆண்டவரே, பாவத்தையும், பாவ சந்தர்ப்பத்தையும் விலக்குவதற்கான திடமனதை தாரும்.