நவம்பர் 15
புனித பெரிய ஆல்பெர்ட் (1206 – 1280)
இவர் இளம் வயதிலிருந்தே தேவதாய் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவர் புனித சுவாமிநாதரது சபையில் சேர்ந்து சந்நியாசியாகி, கல்வி பயின்று பேராசிரியரானார். இவர் அபூர்வ கல்வியறிவு படைத்தவர்; அரிய நூல் ஒன்று எழுதினார்; இதனால் இவரது புகழ் எங்கும் பரவியது. அறிஞரான புனித தோமஸ் அக்குயினாஸ் இவரிடம் கல்வி பயின்றார். தோமாஸைப் பற்றி ஆல்பர்ட் முன்னுரைத்தது பின்னர் நிறைவேறிற்று. தோமஸ் அதிகமாக பேசமாட்டார். அவரை மாணவர்கள் “ஊமை மாடு” என்பார்கள். “இந்த ஊமை மாடு பேசும் சத்தம் உலகமெங்கும் கேட்கும்” என அவர் முன்னுரைத்தது பின்னர் நிறைவேறியது. இவரை ஒரு நகரின் ஆயராக்கினார்கள். பாப்புமார்களும் அரசர்களும் இவரைக் கலந்து ஆலோசிக்க வருவார்கள். அக்காலத்தில் பரவியிருந்த தவறான கொள்கைகளை இவர் எதிர்த்துப் போராடி திருச்சபைக்கு மிகுந்த நன்மை செய்தார். சண்டையிட்டவர்களை சமாதானப்படுத்தி நீதியும், அன்பும் நிரந்தர சமாதானத்தின் அடிப்படை என்பார்.
சிந்தனை:
நீதியும் அன்புமே நிரந்தர சமாதானத்தின் அடிப்படை. இந்த இரண்டுமின்றி நீடிக்கும் சமாதானம் ஒரு போதும் நீடிக்காது. உலக சமாதானத்திற்காக தேவதாய் காட்டும் வழிகளை நாம் கையாளுவோமாக.
செபம்:
ஆண்டவரே, நீடிக்கும் சமாதானத்தை உலகுக்குத் தாரும்.