புனித ஜோசபாத் (1580 – 1623)
இவருடைய தாய் மிகுந்த பக்தியுள்ளவள். இவரது உள்ளத்தில் நம் ஆண்டவரது பாடுகள் மேல் அனுதாபத்தை அவள் இளம் வயதிலே ஊற்றினாள். இவர் ஒரு வணிகரிடம் வேலை பார்த்தார். 24-ஆம் வயதில் சந்நியாசியானார். அந்தக் காலத்தில் குருக்களுக்கு போதிய கல்வியறிவு கிடையாது. அநேகர் மறையுரை நிகழ்த்துவதில்லை. மறைக்கல்வி கற்பிப்பதும் இல்லை. நம் புனிதரோ தமது சபைக்குருக்களின் நிலையை உயர்த்தினார். இவர் குருவான பின் மடாதிபதி ஆனார். 38-வது வயதில் பேராயரானார். பிரிந்திருந்த கிறிஸ்தவர்களை திருச்சபையோடு சேர அயராது உழைத்து வந்தார். இவர் மறையுரைகள் நிகழ்த்துவார். கோவில்களிலும், மருத்துவமனைகளிலும், சிறைகளிலும், வயல்வெளிகளிலும் பாவசங்கீர்த்தனம் கேட்பார். “ஆன்மக்களை திருடுகிறவர்” என்று அழைக்கப்பட்ட இவர் பெரிய மனிதர் பலரை மனந்திருப்பினார். மாஸ்கோ நகர் பிதாப்பிதாவையும் கிரேக்க அரசரின் உறவினர் ஒருவரையும் இவர் திருச்சபையில் சேர்த்தார். குருக்களுக்காக அடிக்கடி சங்கங்கள் கூட்டி அவர்கள் வாழ வேண்டிய விதத்தை எழுதிக் கொடுத்தார். இவர் கடுந்தவ வாழ்வு நடத்தினார். மாமிச உணவு அருந்துவதில்லை. தம் உடலை தண்டிப்பார். தரையில் படுத்து உறங்குவார். நெற்றி தரையில் படும்படி கோவிலில் குனிந்து வணங்கி “இயேசு கிறிஸ்துவே, இறைவனின் திருமகனே, நிர்ப்பாக்கிய பாவியான என் மேல் இரக்கமாயிரும்” என்று கூறுவார். கிழக்கத்திய சபையினரை உரோமையுடன் சேர்க்க இவர் செய்த முயற்சிகள் அபார வெற்றியளிப்பதைக் கண்ட பிரிவினைச் சபையினர் இவரைக் கொன்றார்கள்.
சிந்தனை:
நம்மை விட்டுப் பிரிந்திருப்பவர்களுக்காக அடிக்கடி செபிக்க வேண்டும்.
செபம்:
ஆண்டவரே, உமது சபையை விட்டுப் பிரிந்திருப்பவர்கள் மேல் இரங்கி ஒற்றுமையைத் தாரும்.