லாத்தரன் பேராலய அபிசேகம்
நீரோ மன்னன் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் அவனுக்கு விரோதமாக ஒரு சதி நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யாரென்று நிச்சயமாக யாருக்கும் தெரியாது. மன்னன் பிளவுத்துஸ்லாத்தரானுஸ் என்பவரை சந்தேகிக்கலானான். அவரை சாவுக்குத் தீர்ப்பிட்டான். அவரது சொத்தைப் பறித்துக் கொண்டான். 312-ஆம் ஆண்டில் கொன்ஸ்தாந்தின் என்னும் பேரரசர் அந்த சொத்தை உரோமை ஆயருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். புனித சில்வெஸ்தர் என்னும் பாப்பு அந்த இடத்தில் ஓர் ஆயலம் அமைத்தார். நம் இரட்சகருக்கு அதை அர்ப்பணம் செய்தார். (904 – 911) திருச்சபையை ஆண்டு வந்த 3-ஆம் செர்ஜியுஸ் என்னும் பாப்பானவர் அந்தக் கோயிலைத் திரும்பக்கட்டி இரட்சகருடைய பெயருடன் புனித ஸ்நாபக அருளப்பர், நற்செய்தியாளரான புனித அருளப்பர் இவர்களது பெயர்களையும் சேர்த்துக் கொண்டார். உரோமையிலுள்ள கோயில்கள் அனைத்துக்கும் இது தாய்க்கோவிலாகும்.
இறைவனது ஆலயத்தை நாம் வந்திப்பது தகுதியே. ஏனெனில் அது மோட்சத்தின் வாசல் கடவுளின் உண்மையான வீடு, செபத்தின் இடம், கடவுள் அதில் வசிக்கிறார். வசித்து நமது கண்ணீரைத் துடைக்கிறார். துன்பம், வேதனை சாவினின்று நம்மைக் காக்கிறார். கோவிலானது கிறிஸ்தவனது ஆன்மா.
நம் ஆண்டவர் சக்கேயு என்பவரது இல்லத்துக்குச் சென்று அங்கு தங்கி இரட்சணியத்தை அவ்வீட்டாருக்கு அளித்தது போல் தமது வீடாகிய கோவிலில் சகல வரங்களையும் நமக்கு அளிக்கிறார்.
சிந்தனை:
இது கடவுளின் வீடு, மோட்சத்தின் வாசல் என்பதை நாம் கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் நினைவில் வைத்திருப்போம்.
செபம்:
திருப்பேழையில் இருக்கும் இயேசுவே நாங்கள் கோவிலுக்கு வரும் போதெல்லாம் உயிர் உள்ள ஓர் ஆளிடம் போகிறோம் என்பதை நினைவில் வைத்திருக்கும் வரம் தாரும்.