புனித சார்லஸ் பொரோமெயோ (1538 – 1584)
இத்தாலியாவில் பிறந்த இவர் இளமையிலேயே குருத்துவ நிலையை நாடினார். நாட்டின் சட்டங்களையும், திருச்சபையின் சட்டங்களையும் கற்று, அறிஞர் என்னும் பட்டத்தைப் பெற்றார். இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் அந்த ஆண்டில் பாப்பு ஆனார். அவர் இவரை கர்தினாலாகவும் மிலான் நகரில் பேராயராகவும் ஆக்கினார். அப்பொழுது இவருக்கு வயது 23. இந்த நியமனம் பெரும் புதிராகத் தோன்றலாம். எனினும், இந்த நியமனத்தால் திருச்சபைக்கு ஏராளமான நலன்கள் விளைந்தன. திருச்சபையை ஆள்வதில் பாப்பானவருக்கு இவர் பேருதவியாய் இருந்தார். உரோமையிலிருந்து கொண்டு திருச்சபைக்காக இரவும் பகலும் உழைத்தார். இவர் தமது வருமானத்தில் செலவு போக மீதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுவார். தந்தையுடன் இருக்கும் போது ஏழைகளுக்கு அதிகமாக உதவி செய்தார். மரணத்தறுவாயில் இருந்த பாப்பானவரை இவர் சாவுக்கு நன்கு தயாரித்தார். புதிய பாப்பானவர் வந்ததும் அவரது அனுமதியுடன் இவர் மிலான் நகருக்குச் சென்றார். அங்கு இவரது சேவைகள் தேவைப்பட்டது.
தமது மறைமாவட்டத்தை இவர் சீர்திருத்த தொடங்கினார். ஊழல்கள் சீக்கிரம் மறைந்து ஒழிந்தன. இவருடைய எதிரிகள் இவருக்கு விரோதமாக சூழ்ச்சிகள் செய்த போதிலும் இவர் செய்த முயற்சிகளால் திருச்சபை செழித்து ஓங்கியது. திருச்சபைக்கு இவர் பல நன்மைகள் செய்தார். திரிதெந்தின் பொதுசங்கம் வெற்றியுடன் முடிய இவர் பேருதவி செய்தார். அந்த சங்கத்தின் தீர்மானங்களை தமது மறைமாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தார். கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே மத்தியஸ்தராய் இருந்து அநேக பாவிகளை கடவுளோடு சமாதானப்படுத்தி வைத்தார். நாட்டில் கொள்ளை நோய் பரவியது. அப்பொழுது இவர் தம் மக்களின் பாவங்களுக்காக கடவுள் மக்களைத் தண்டிக்கிறார் என்று அறிந்து தம்மையே பலிப்பொருளாக கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தார். தவ ஊர்வலத்தின் போது தெருக்களில் வெறும் காலுடன் நடந்தார். தோளில் ஒரு பாரச் சிலுவையை தூக்கிச் சென்றார். கழுத்தில் ஒரு கயிற்றை கட்டிக் கொள்வார். கல்லூரிகளும் குரு மடங்களும் கட்டுவித்து அங்கு குருக்களுக்கு உதவியாக இருக்கும்படி அரிய நூல் நிலையம் ஒன்று தயாரித்தார். ஏழைகளுக்கு தந்தை போல் இருந்து, அடிக்கடி அவர்களைச் சந்திப்பார். கொள்ளை நோய் காலத்தில் நோயாளிகளுடனும் சாகக் கிடந்தவர்களுடனும் தங்கி அவர்களுக்கு பேருதவி செய்யும்படி தமது உடைமைகளையே கொடுத்தார்.
சிந்தனை:
“ஒவ்வொரு நாளையும் புதிய ஆர்வத்துடன் தொடங்கு. 1. நன்மை செய்யும்படி கடவுள் இன்னும் ஒரு நாளைத் தந்திருக்கிறார். நன்மை ஏராளமாகச் செய்வேன் என்னும் உறுதியுடன் தொடங்கு. 2. கடவுளது பிரசன்னத்தில் வாழ பெரும் முயற்சிகள் செய். 3. நீ செய்யும் அனைத்திலும் கடவுளது மகிமையையும் பாவிகளின் ஈடேற்றத்தையும் தேட வேண்டும்” (புனித சார்லஸ் பொரோமெயோ)
செபம்:
ஆண்டவரே, திருச்சபைக்கு ஆர்வம் நிறைந்த ஆயர்களையும் குருக்களையும் பொது நிலையினரையும் தாரும்.