நவம்பர் 14
புனித ரோஸ் (1235 – 1252)
இவளுடைய பெற்றோர் ஏழைகள். பக்தியுள்ளவர்கள். ஏழு வயதிலேயே ரோஸ் தவ முயற்சிகள் செய்துத் தேவதாயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து 10-ஆம் வயதில் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்தாள். மக்கள் தவம் செய்ய வேண்டும் என்று வித்தர்பேர் நகர் தெருக்களில் பிரசங்கிக்கத் தொடங்கினாள். “விசுவாசிகள் பாப்பானவருக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். பட்டணத்தைக் கைப்பற்றியிருக்கும் ஜெர்மெனியின் பேரரசன் இரண்டாம் பிரடெரிக் என்பவனை எதிர்க்க வேண்டும்” என்று நகர மக்களைத் தூண்டிய இச்சிறுமி அதிக வல்லமையோடும் அதிகாரத்தோடும் பேசுவாள். புதுமைகள் செய்வாள், இதைக் கண்ட அதிகாரி ஒருவன் இவளையும் இவள் குடும்பத்தினரையும் நகரிலிருந்து வெளியேற்றினான்.
அதன் பின் இவள் ஊர் ஊராய்ப் போய், பாப்பானவரை ஆதரித்துப் பேசினாள். வருங்காரியங்களை முன்னறிவிப்பாள். பேரரசன் பத்து நாட்களுக்குள் சாவான் என்று அறிவித்தான். ஓர் ஊரில் மாந்திரீகப் பெண் நகர மக்களில் அநேகரைக் கெடுத்துக் கொண்டிருந்தாள். ரோஸ் ஒரு புதுமை செய்து அவளை மனந்திருப்பினாள். மூன்று மணி நேரமாக நெருப்பில் நின்றாள். இவளுக்கு எவ்வித தீமையும் ஏற்படவில்லை. ஏழைக் கிளாரம்மாள் சபைக்கன்னியர் இவளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இவளோ நகருக்கு வெளியே போய் ஒரு குடிசையில் தனி வாழ்வு நடத்தி வந்தாள். “நான் இறந்த பின் ஏழைக் கிளாரம்மாள் மடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவேன்” என்று அவள் முன்னறிவித்தாள். அது அப்படியே நடந்தது. அடுத்த ஆண்டு வசந்த கால்தில், 17-ஆம் வயதில் ரோஸ் இறந்தாள். நாலாம் அலெக்சாந்தர் பாப்பு அவளது உடலை ஏழைக் கிளாரம்மாள் மடத்தில் புதைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
சிந்தனை:
பாப்பானவர் தவறா வரமுடையவர். எனினும் அவருக்காக நாம் அடிக்கடி செபிக்க வேண்டும்.
செபம்:
ஆண்டவரே, திருத்தந்தை பாப்பானவரைக் காப்பாற்றும்.