புனித எலிஜியுஸ் (588 – 660)
இவர் பிரான்ஸ் நாட்டில் 588-ஆம் ஆண்டையொட்டி பிறந்தார். அரண்மனையில் தங்கவேலை செய்த ஒருவரிடம் வேலை கற்கும்படி இவர் அனுப்பப்பட்டார். இவர் நல்லவராக இருந்தமையால் இவர் மீது எல்லோரும் அன்பாக இருந்தார்கள். அப்பொழுது நாட்டை ஆண்டு வந்த அரசனின் பெயர் 2-ஆம் குளோத்தேர். இவருடைய பொக்கிஷத்தாரின் பெயர் பொபோ. பொபோ இவரை அரசருக்கு சிபாரிசு செய்தார். அரசர் பொன்னும் இரத்தினக் கற்களும் கொடுத்து ஓர் அரியணை உண்டாக்கும்படி நம் புனிதருக்கு உத்தரவிட்டார். நம் புனிதரோ அரசர் கொடுத்த பொருட்களைக் கொண்டு இரண்டு அழகிய ஆசனங்களை அமைத்தார். இவரது திறமையைக் கண்ட அரசர் இவருக்கு அரண்மனையில் உயர்ந்த வேலை கொடுத்தார். சில ஆண்டுகளாக அரண்மனையில் வாழ்ந்த இவர் துறவி ஆக உறுதி செய்தார்.
குளோத்தேர் மன்னர் இறந்ததும் அவருடைய மகனான தகொபேர் அரியணையில் அமர்ந்து அரசரானார். இவரும் தம் தந்தையைப் போல் நம் புனிதரை மதித்து வந்தார். நம் புனிதர் மீது அநேகர் பொறாமை கொண்டு அபாண்டங்களைச் சொல்லி வந்தும் அவற்றை அரசர் நம்பவில்லை. அந்த சமயத்தில் அரண்மனையில் புனிதர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எலிஜியுஸ் என்பவரது உற்ற நண்பர்கள். அவர்கள் எல்லோரும் ஆயர் ஆனார்கள். அவர்களில் மூவர் புனிதராக வந்திக்கப்படுகிறார்கள். புனித ஓவன், புனித தேசிதேரியுஸ், புனித சுல்ப்பீஸ் என்பவை அவர்களது பெயர்கள்.
எலிஜியுஸ் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். குருக்களையும் மக்களையும் சீர்திருத்தியபின் அவிசுவாசிகளை மனந்திருப்பும் வேலையில் ஈடுபட்டார். பல நாடுகளுக்குப் போய் வேதம் போதித்து வேதத்தில் சேர விரும்பியவர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சி அளித்த பின்னரே ஞானஸ்நாம் கொடுப்பார். அறியாமையையும் தீமையையும் எதிர்த்து ஒவ்வொரு நாளும் மறையுரைகள் நிகழ்த்தியவர். 19 ஆண்டுகளுக்கு மேலாக மறைமாவட்டத்தை நடத்தியபின் 659 அல்லது 665-ல் இறந்தார்.
சிந்தனை:
புதிதாய் வேதத்தில் சேர விரும்புகிறவர்கள் கடைசிவரை வேதத்தில் நிலைத்திருக்க இவர் ஆவன செய்தார். கிறிஸ்துநாதரை ஆராதிக்கத் தொடங்கியவர்களில் பலர் அவரை விட்டுப் பிரியும் காரணங்களில் ஒன்று. கிறிஸ்துநாதரைப் பற்றி அவர்கள் ஆற அமர கற்பிக்கப்படாதது தான்.
செபம்:
ஆண்டவரே, விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தாரும்.