புனித கத்தரீன் ஸபூரே (1806-1875)
இவள் பாரிஸ் நகரில் உள்ள ‘பிறர்சிநேக புதல்விகளின் சபை’ மடத்தின் சிறுவயதிலேயே சேர்ந்து நவ கன்னியானாள். ஓர் இரவு இவள் நித்திரை செய்யும்போது ஒரு சிறுவன் வந்து இவளை எழுப்பி தேவதாய் உனக்காகக் கோவிலில் கர்திருக்கிறாள் என்றான். கத்திரீன் அமரும் ஆசனத்தில் அழகிய பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். கத்தரீன் அவளை அணுகினாள். துன்பநேரத்தில் எப்படி நடக்க வேண்டுமென்று அந்தப் பெண் அவளுக்கு எடுத்துரைத்து திருப்பேழையைச் சுட்டிக்காட்டி அது சர்வ ஆறுதலின் ஊற்று என்றாள். கத்தரீனுக்கு ஒரு முக்கியமான வேலைக் கொடுக்கப் போவதாகவும், இதனால் அவளுக்கு மிகுந்த துன்பங்கள் ஏற்படும் என்றும் கூறி திருச்சபைக்கு விரோதமாக ஏற்பட இருந்த பெரும் கலகத்தை தேவதாய் முன்னறிவித்தாள். இந்த கலகம் பாரிஸ் நகரில் 1870-ஆம் ஆண்டில் நடந்தது.
நவம்பர் 27-ஆம் நாளன்று முட்டை வடிவமான ஓர் ஒளி அன்னையை சுற்றி நிற்க காட்சி கொடுத்தாள். “பாவமில்லாமல் உற்பவித்த ஓ மரியாயே, உம்மைத் தேடி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்னும் சொற்கள் தங்க எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. அப்பொழுது ஒரு குரல் கேட்டது. “இதைப்போல் ஓர் சுரூபம் செய்து தரித்திருக்க வேண்டும். நம்பிக்கையுடன் இதைக் தரித்திருக்கிறவர்களுக்கு பெரும் வரப்பிரசாதங்கள் அளிக்கப்படும்” என்று அந்தக் குரல் கூறியது. அன்னையின் கரங்களிலிருந்து கதிர்கள் வெளிவந்தது. அவை அன்னையிடம் கேட்பவர்களுக்கு அளிக்கும் வரங்களைக் குறிப்பிட்டன. இதை தேவதாயே எடுத்துரைத்தாள். சுரூபத்தின் அடுத்த பக்கத்தில் ஆ என்னும் எழுத்தும் அதன் மேல் ஒரு சிலுவையும், முட்களால் சூழப்பட்ட இயேசுவின் திரு இருதயமும், வரளால் ஊடுருவப்பட்ட மரியாயின் இருதயமும் இருக்க வேண்டும். இதையும் தேவதாயே தெரிவித்தாள். டிசம்பர் மாதத்தில் தேவதாய் காட்சி கொடுத்து திருப்பேழைக்கு மேல் நின்றாள். அன்னை விவரித்த சுரூபத்தை செய்து அந்த பக்தியை பரப்ப வேண்டுமென்றும் அன்னை கட்டளையிட்டாள். இந்த சுரூபத்தால் ஏராளமான புதுமைகள் நடந்ததால் புதுமைச் சுரூபம் என்று அழைக்கத் தொடங்கினர். இந்த சுரூபத்தைத் தரித்திருந்தால் மட்டும் போதாது. தேவதாயைப் போல வாழ முயற்சிக்க வேண்டும். பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே, உம்மைத் தேடி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற சிறு மன்றாட்டை அடிக்கடி செபிக்க வேண்டும்.
சிந்தனை:
திருப்பேழையானது ஆறுதலின் ஊற்று.
செபம்:
பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே, உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.