புனித மார்ட்டின் தெபொரெஸ் (1569 – 1639)
இவர் தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள லீமா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். இவருடைய தாய் விடுதலையடைந்த நீக்ரோ பெண். இவர் பிறந்ததும் தந்தை தன் மனைவியையும் மகனையும் கைவிட்டுச் சென்றார். மார்ட்டின் தரித்திரத்தில் வளர்ந்தார். ஏழைகள் மீதும் துன்புற்றோர் மீதும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். பன்னிரண்டு வயதில் ஒரு வைத்தியரிடம் வேலைக்குச் சென்றார். தமது சம்பளத்தில் ஒரு பகுதியை மருத்துவமனைகளிலும், சிறைகளிலும் இருந்த ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுப்பார்.
பதினைந்தாவது வயதில் இவர் புனித சுவாமிநாதரது சபையில் சேர்ந்து பிறர் மீது அன்பு, கீழ்ப்படிதல், தாழ்ச்சி என்னும் புண்ணியங்களில் சிறந்து விளங்கினார். இதைக் கண்ட குருக்கள் இவரைத் துணைச் சகோதரராக்கினார்கள். இரவில் பல மணி நேரமாக இவர் ஞான நூல்களைப் படிப்பார். செபிப்பார், தவ முயற்சிகள் செய்வார். புதுமைகள் செய்யும் வரத்தை கடவுள் இவருக்கு அளித்திருந்தார். இதை மறைக்க முயன்ற போதிலும் இவர் புனிதரென மக்கள் வெகு சீக்கிரம் அறிய வந்தார்கள். “சமாதானத்தின் தூதர்” “இரக்கத்தின் சம்மனசு” என இவரை அழைப்பார்கள். நோயாளிகளைத் தொட்டு அவர்களுக்காக செபித்து அவர்கள் மீது சிலுவை அடையாளம் வரைவார். உடனே சுகம் கிடைக்கும். வரும் காரியங்களை முன்னறிவிப்பார். சில சமயங்களில் இவர் ஓர் இடத்தில் இருந்தும் பிறர் கண்களுக்கு தென்பட மாட்டார். மனிதரின் உள்ளங்களின் இரகசியத்தை அறிவார். தொலைவில் இருப்பவர்களின் வெளிப்படாத விருப்பங்களையும் அறிந்து கொள்வார். லீமா நகரை விட்டு அவர் ஒரு போதும் கிளம்பியதே இல்லை என்றாலும் மெக்சிகோ, அல்ஜியேர்ஸ், பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் தீவுகள், சீனா, ஜப்பான் முதலிய இடங்களில் இவர் தோன்றி நோயாளிகளுக்கும் துன்புற்றோருக்கும் துணை புரிந்திருக்கிறார். இவர் அருகில் வானதூதர்கள் இருப்பதை சன்னியாசிகள் பார்த்திருக்கிறார்கள். இவர் பரவசத்தில் இருக்கையில் ஓர் அபூர்வ ஒளி இவரைச் சூழ்ந்திருப்பதை கண்டிருக்கிறார்கள். குருக்களிடம் திரு அருட்சாதனங்களை பெற விசுவாசிகளை இவர் நன்கு தயாரிப்பார். ஸ்பெயின் நாட்டினர் நீக்ரோக்கள், இந்தியர்கள் ஆகியவர் அனைவருக்கும் சேவை செய்வார். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 160 ஏழைகளுக்கு உணவு கொடுப்பர். பணக்காரர்களிடமிருந்து உதவி பெற்று வாரந்தோறும் 26,000 ரூபாய் பெறுமதிப்புள்ள பொருட்களை ஏழைகளுக்கு வழங்குவார். திருச்சிலுவைப் பள்ளி இவரது முயற்சியால் தொடங்கப்பட்டது. இவர் தமது 6-வது வயதில் இறந்த போது லீமா நகர் மக்கள் அனைவருமே துக்கம் கொண்டாடினார்கள். இரு ஆயர்களும் பெருநாட்டின் வைஸ்ராயும், அரசாங்க உயர் அதிகாரி ஒருவரும் இவரது பிரேதப் பெட்டியைத் தூக்கிச் சென்றார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இவரது உடல் அழியாமல் இருந்தது.
சிந்தனை:
பிறருக்கு சேவை செய்வதில் எல்லையற்ற ஆனந்தம் காண வேண்டும்.
செபம்:
ஆண்டவரே, ஏழைகள் மீதும் பாவிகள் மீதும் அனுதாபத்தை மக்களின் உள்ளங்களில் எழுப்புவீராக.