📻 அக்டோபர் 30  📺 

புனித மர்செல்லுஸ் (-298)


298-ஆம் ஆண்டில் மாக்சிமியன் பேரரசன் சிறப்புடன் தன் பிறந்த விழாவைக் கொண்டாடினான். ஸ்பெயின் நாட்டில் மர்செல்லுஸ் நூற்றுவர் தலைவனாக இருந்தார். இவர் கிறிஸ்தவர். நான் கிறிஸ்தவன் என்று சொல்லி தேவதைகளுக்குக் கொடுக்கப்பட்ட பலிகளில் பங்கு கொள்ள மறுத்தார். தமது போர்க் கருவிகளையும் பதவியின் குறியான திராட்சைக் கிளையையும் கீழே போட்டார். பட்டாளத்தின் தலைவன் இதைக் கேள்விப்பட்டு நம் புனிதரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். கொண்டாட்டங்கள் முடிந்ததும் நம் புனிதர் தலைவன் முன் கொண்டு வரப்பட்டார். அங்கு தான் கிறிஸ்தவன் என இவர் அறிவித்தார். இவரை மாக்சிமியன், செசார் கொன்ஸ்தான்சியுஸ் என்பவர்கள் முன் கொண்டு போக வேண்டும் என தலைவன் கூறினான். செசார் கிறிஸ்தவர்களை அன்புடன் நடத்தியதால் தலைவன் நம் புனிதரை வேறொருவரிடம் அனுப்பினான். அவனோ இவரைச் சாவுக்கு தீர்ப்பிட்டான். இது அநியாயமான தீர்ப்பானதால் குமாஸ்தாவான காசியான் இத்தீர்ப்பை எழுத மறுத்ததால் காசியானையும் சாவுக்குத் தீர்ப்பிட்டான். நம் புனிதர் அக்டோபர் 30-ஆம் நாளிலும், புனித காசியான் அதே ஆண்டு டிசம்பர் 3-ஆம் நாளிலும் கொல்லப்பட்டார்கள்.


சிந்தனை:

உலக பதவியை மதிப்பதை விட கடவுளுக்கு சேவை செய்வதையே அதிகமாக மதிக்க வேண்டும். இதற்கு நம் புனிதர் சிறந்த எடுத்துக் காட்டு.


செபம்:

ஆண்டவரே, இவ்வுலக சலுகைகளை விட உமது சலுகைகளையே நாங்கள் அதிகமாக மதிக்கும் வரம் தாரும்.