புனித முதல் சாந்தப்பர் (-100)
இவர் புனித இராயப்பருக்குப் பின் மூன்றாவது பாப்பு. இவர் உரோமையில் பிறந்தார். யூத குலத்தை சேர்ந்தவர் என்று இவர் கொரிந்தியருக்கு எழுதிய நிருவத்தில் இருந்து அறிகிறோம். புனித இராயப்பரும் சின்னப்பரும் இவரை மனந்திருப்பினார்கள். புனித சின்னப்பர் பிலிப்பியர்களுக்கு எழுதிய நிரூபத்தில் சாந்தப்பதை “என் உடன் உழைப்பாளன்” என்கிறார். இவர் புனித சின்னப்பருடன் உரோமைக்குச் சென்றார்; அங்கு புனித இராயப்பரால் ஆயராக்கப்பட்டார். இராயப்பரும், சின்னப்பரும் கொல்லப்பட்ட பிறகு புனித லீனுஸ் என்பவரும் அவருக்குப் பின் புனித கிளேத்துஸ் என்பவரும் இவருக்குப் பின் சாந்தப்படும் பாப்பு ஆனார்கள். கொரிந்து நகரில் கிறிஸ்தவர்களிடையே வாக்கு வாதங்களும், பிளவுகளும் ஏற்பட்டன. அந்த சமயத்தில் அப்போஸ்தலரான புனித அருளப்பர் உயிரோடு இருந்த போதிலும் உரோமைக்கு எழுதி புனித சாந்தப்பரது தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்தார்கள். இதிலிருந்து பாப்பானவரே அகில திருச்சபைக்கும் தலைவர் என ஆதியில் இருந்தே விசுவாசிகள் ஏற்று வந்திருக்கிறார்கள் என்று அறிய வருகிறோம். சாந்தப்ப கொரிந்தியர்களுக்கு ஒரு நிரூபம் எழுதினார். நியாயமான அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று விசுவாசிகளுக்கு கட்டளையிடுகிறார். இந்த நிரூபத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டு வந்தது. வேதாகமத்திற்கு அடுத்தபடியாக இதை விசுவாசிகள் மதித்து வந்தனர். இரண்டாம் முறையாகவும் அவர் கொரிந்திய மக்களுக்கு ஒரு நிரூபம் எழுதியில் நித்தியத்தை முன்னிட்டு இவ்வுலகின் வீண் பெருமைகளை நிந்திக்கும்படி விசுவாசிகளுக்கு அவர் போதிக்கிறார். பேரரசரான திராஜன் இவரை நாடு கடத்தினான். கிரிமியா என்னுமிடத்தில் இவர் சலவைக்கல் வெட்ட வற்புறுத்தப்பட்டார். இங்கு இரண்டாயிரம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்கள் இவரை தந்தையாகவும் மேய்ப்பனாகவும் மதித்துப் பின்பற்றினர். ஒரு முறை கொடிய தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது சாந்தப்பர் நின்றிருந்த குன்றின் மீது நின்ற ஒரு செம்மறி தண்ணீர் கிடைக்கக்கூடிய இடத்தை தன் காலால் சுட்டிக்காட்டியது. இந்தப் புதுமையைக் கண்ட மக்கள் ஏராளமாக மனந்திரும்பினர். எனவே அரசன் இவரை செர்சனிஸ் என்னும் நாட்டிற்குக் கடத்தி கழுத்தில் ஓர் இயந்திரக் கல்லைக் கட்டி இவரை கடலில் ஆழ்த்தினான்.
சிந்தனை:
நித்தியத்தை முன்னிட்டு இவ்வுலகின் வீண்பெருமை மகிமைகளை நிந்திப்போம்.
செபம்:
ஆண்டவரே, நித்தியத்தைப் பற்றி நாங்கள் அடிக்கடி நினைக்கும் வரம் தாரும்.