கன்னிமரியாள் ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது
பழைய ஏற்பாட்டில் யூதமக்கள் தங்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தைகளை தேவாலயத்தில் கடவுளின் சேவைக்கு கையளிப்பதாக வாக்குறுதி செய்வார்கள். சிறு பெண்களும் தங்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்து தேவாலயத்தில் வாழ்ந்து கடவுளுக்குச் சேவை செய்யலாம். பரிசுத்த பெண்கள் இச்சிறுமியரைப் பராமரித்து ஐந்து வயது முடியும் முன்னரே சிறுவர் சிறுமியரை தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று குருவிடம் அவர்களைக் கையளிப்பார்கள். குரு அவர்களை கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பார். சிறுமிகள் விரும்பினால் அங்கேயே தங்கலாம். திருவுடைகள் தயாரித்தும் திருவழிபாட்டு நேரத்தில் துணை புரிந்தும் வேறு பல ஆராதனைச் சடங்குகளில் பங்கும் பெற்றும் அவர்கள் தேவாலயத்தில் நேரத்தைக் கழிப்பார்கள். இதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படும். சிறுமி மரியாளுக்கு மூன்று வயதானதும் அவள் தேவாலயத்துக்குச் செல்ல விரும்பினாள். அவளை விட்டுப் பிரிவது பெற்றோருக்கு கடினமாக இருந்தது என்றாலும் கடவுளது சித்தத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களே குழந்தையை ஆலயத்துக்கு எடுத்துச் சென்று கடவுளுக்கு அவளை ஒப்புக் கொடுத்தனர். புனித மரியாள் தன் கன்னிமையையும் தன்னை முழுமையுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தாள். கிரேக்க மக்கள் இவ்விழாவை ‘இறைவனின் அன்னை ஆலயத்தில் நுழைந்த விழா’ என்று கொண்டாடுகின்றனர்.
ஆதியிலிருந்தே இவ்விழா திருச்சபையில் கொண்டாடப்படுகிறது.
சிந்தனை:
மரியாள் தன் பெற்றோரை நேசித்தாள். கடவுளை அதிகமாக நேசித்தாள். அதனால் தான் பெற்றோரை விட்டுப் பிரிந்து இளம் வயதிலிருந்தே தேவாலயத்தில் வாழ்ந்து பிள்ளைகளுக்கு இவள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டானாள்.
செபம்:
பரிசுத்த கன்னிமரியே, நாங்கள் பெற்றோரை விட கடவுளை அதிகமாக நேசிக்கும் வரம் பெற்றுத் தாரும்.