புனித பிரான்சிஸ் சவேரியார் (1506 – 1552)
இந்தியாவின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படும் இவர் ஸ்பெயின் நாட்டில் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர். 18-ஆம் வயதில் கல்வி கற்க பாரிஸ் நகருக்குச் சென்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் புனித லொயோலா இஞ்ஞாசியார் அந்நகருக்கு வந்து, பிரான்சிஸ் தங்கி இருந்த புனித பார்பரம்மாள் கல்லூரியில் தங்கினார். அந்த சமயத்தில் பிரான்சிஸ் உலக மகிமை பேர் கீர்த்தியைத் தேடி வந்தார். இஞ்ஞாசியாருடன் சேர்ந்ததால் முற்றிலும் மனம் மாறி அவருடைய சீடரானார்.
1536-ஆம் ஆண்டில் இஞ்ஞாசியாருடைய முதல் தோழர்களோடு வெனிஸ் நகருக்குச் சென்று உரோமையை சந்தித்த பிறகு வெனிஸ் நகரில் 1537-ஆம் ஆண்டில் இவர் குருப்பட்டம் பெற்றார். இயேசு சபையின் முதல் உறுப்பினரான இவர்கள் பாப்பானவரது பிரதிநிதியின் முன்னிலையில் முதல் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார்கள். இயேசு சபை ஸ்தாபிக்கப்பட்ட சற்று பின் பிரான்சிஸ், போர்த்துக்கல் நாட்டுக்கு அனுப்பப்பட்டு 1541-ல் இந்தியாவுக்கு புறப்பட்டார். அடுத்த ஆண்டு கோவாவில் இறங்கினார். அந்தப் பட்டணத்தை தமது உழைப்பாலும், செபத்தாலும், தவத்தாலும் முற்றிலும் சீர்படுத்தினார். கோவா நகரில் அவிசுவாசிகளை இவர் மனந்திருப்பினார். தெருக்கள் வழியாக ஒரு சிறு மணியை அடித்துக் கொண்டு போவார். சிறுவர்களைத் தம்மிடம் அழைப்பார். அவர்கள் வந்து அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். நமது திருவேதத்தைப் பற்றி அவர்களுக்குப் போதிப்பார். செபங்களும், பாட்டுக்களும் அவர்களுக்குக் கற்பிப்பார். சிறுவர்கள் வீட்டிற்குப் போய், தம் பெற்றோரை வற்புறுத்தி அழைப்பார்கள். பெற்றோர் வந்தனர். கிறிஸ்தவர் ஆயினர். தென் இந்தியா, இலங்கை, மொலாக்காய், ஜப்பான் முதலிய நாடுகளில் வேதம் போதித்தார். “கடவுளை மக்கள் அறியாத ஓர் இடம் பூமியில் இருக்கிறது என்று நான் அறிவேனானால் ஒரு போதும் இளைப்பாற முடியாது” என்று இவர் அடிக்கடி சொல்வார். ஜப்பானில் வேதம் போதித்த பின் சீனாவுக்குப் போக வேண்டும். அங்கு மக்களை மனந்திருப்பியபின் ஐரோப்பாவுக்குப் போய் அங்குள்ள மக்களை, பாவிகளை மனந்திருப்ப வேண்டும் என்று இவர் திட்டமிட்டிருந்தார். இலட்சம் மைல் தூரம் வெறுங்காலுடன் நடந்து சென்று ஏறக்குறை நூறு ஊர்களிலும், தீவுகளிலும் வேதம் போதித்து அனேக இலட்சம் மக்களை மெய்யங் கடவுளிடம் கொண்டு வந்தார். சீனாவுக்கு புறப்பட்டுப் போகும் பொழுது சான்சியன் தீவில் 02.12.1552-ல் இவர் உயிர் துறந்தார். இவருடன் அருகில் இருந்த வெள்ளையர்கள் இவருடைய வேலைக்காரரில் ஒருவன் இவரைக் கைவிட்டான். தம் தேவ எஜமான் இயேசுவைப் போல எல்லோராலும் கைவிடப்பட்டவராய் உயிர் நீத்தார்.
சிந்தனை:
“கடவுளை மக்கள் அறியாத ஓர் இடம் பூமியில் இருக்கிறது என்று நான் அறிவேனானால் நான் ஒரு போதும் இளைப்பாற முடியாது” என்று இவர் அடிக்கடி சொல்வார். நமது ஆர்வத்தை இவரது ஆர்வத்துடன் ஒப்பிட்டு பார்ப்போம்.
செபம்:
புனித சவேரியாரே, ஆர்வம் நிறைந்த ஆயர்களையும் குருக்களையும் திருச்சபைக்கு நிரம்பத் தாரும்.