முத்திப்பேறு பெற்ற அந்தோனி பல்தினுச்சி (1665 – 1717)
இவர் இயேசு சபையில் சேர்ந்து மத்திய இத்தாலியாவில் வேதம் போதித்து புகழ் பெற்றார். இவரது தலைமை ஸ்தானம் பிரஸ்காற்றி என்னும் இடத்தில் இருந்தது. அங்கிருந்து புறப்பட்டு வெறும் காலுடன் நடப்பார். மழையையும் குளிரையும் கவனிக்கமாட்டார். குதிரை மீது சாமான்களை ஏற்றிச் செல்வார். இவ்விதம் எண்ண முடியாத சிறு கிராமங்களைச் சந்தித்தார். இவரது வாழ்வின் கடைசி 20 ஆண்டுகளில் 448 இடங்களில் இவர் பொது தியான பிரசங்கங்கள் செய்திருக்கிறார். தேவ கிருபையால் இவருக்கு அபார வெற்றி கிடைத்தது. மக்கள் தங்கள் பாவங்களுக்காக உண்மையாகவே துயரப்பட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். அதற்காக இவர் வெகு சிரமப்பட்டு தேடி பல சிறு கதைகள் சொல்லி, உருக்கமாக பிரசங்கம் செய்தார். மக்கள் எப்படியாவது மோட்சம் சேர வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தோடு பேசுவார். சில சமயங்களில் பிரசங்கத் தொட்டியில் இருந்து கொண்டே தம்மைக் கசையால் அடிப்பார். இறுதியில் தவப்பவனி நடைபெறும். இவர் இரும்புச் சங்கிலி தரித்துக் கொள்வார். பாரச்சிலுவை ஒன்றை தூக்கிச் செல்வார். மக்கள் அனைவரும் தலையில் முள்முடி தரித்திருப்பார்கள். தங்களை கசையால் அடித்து கொள்வார்கள். கடைசிநாள் காலையில் எல்லா விசுவாசிகளும் திருப்பலி கண்டு நன்மை வாங்குவார்கள். பிற்பகலில் நெருப்பு வளர்க்கப்படும். கெட்ட புத்தகங்களையும் சூதாட்ட பலகைகளையும் நெருப்பில் எரிப்பார்கள். சண்டைக் கருவிகளும் ஈட்டிகளும் நூற்றுக் கணக்கில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.
சிந்தனை:
பாவத்துக்கு மன்னிப்புக் கிடைக்க வேண்டுமானால் பாவம் செய்ததற்காக துயரப்பட வேண்டும். பாவத்தை வெறுக்க வேண்டும். இனி பாவம் செய்யமாட்டேன் என்று தீர்மானம் செய்ய வேண்டும்.
செபம்:
ஆண்டவரே! பாவம் செய்ததற்கான துக்கம், பாவத்தின் மீது வெறுப்பு, இனி பாவம் செய்ய மாட்டேன் என்கிற உறுதியான தீர்மானம் ஆகியவையின்றி எந்த பாவத்திற்கும் மன்னிப்புக் கிடையாது என்ற உண்மையை கிறிஸ்தவர்கள் அனைவரும் அறிந்து ஒழுகச் செய்யும்.