புனித நர்சீசுஸ் (110 – 222)
இவர் 80 வயதில் ஆயரானார். இவர் ஆயராகும் பொழுது எருசலேம் நகர், உரோமையால் அழிக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதிரியான் பேரரசன் அந்நகரை வேறொரு பெயருடன் கட்டியெழுப்பியிருந்தான்.
195-ஆம் ஆண்டில் பாலஸ்தீனாவில் உள்ள ஆயர்கள் செசாரியா நகரில் ஒரு சங்கத்தைக் கூட்டினார்கள். நம் புனிதரும் செசாரியா நகரின் ஆயரான தெயப்பித்துஸ் என்பவரும் தலைமை தாங்கினார்கள். இயேசு உயிர்த்த விழா எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமையிலேயே கொண்டாடப்பட வேண்டுமென சங்கம் தீர்மானித்தது. நம் புனிதர் பல புதுமைகளைச் செய்தார். இவர் தூயவர் என்றாலும் இவருடைய மந்தையைச் சேர்ந்தவர்களே இவரைப் பற்றி அபாண்டங்கள் சொல்லி வந்தனர். இவரை மாசற்றவர் எனக் கடவுள் காட்டினார். இவரைத் தூற்றினவர்கள் போட்ட சாபங்கள் அவர்களிடமே நிறைவேறியது.
நம் புனிதர் யெருசலேமை விட்டுப் புறப்பட்டு பல ஆண்டுகளை தனிமையில் செலவழித்தார். அவர் இவ்விதம் வாழ்ந்த காலத்தில் மூன்று ஆயர்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைமாவட்டத்தை ஆண்டு வந்தார்கள். விசுவாசிகள் விரும்பிக் கேட்டுக் கொண்டமையால் இவர் திரும்பவும் ஆயர் பதவியை ஏற்றுக் கொண்டார். முதிர் பிராயத்தில் அலெக்ஸாண்டர் என்பவரை தம் துணைவராக நியமித்தார். இவர் தொடர்ந்து விசுவாசிகளுக்கு சேவை செய்தார். தமது செபங்களாலும், பிரசங்கங்களாலும் மக்கள் ஒற்றுமையாக வாழ உதவி செய்தார். கர்த்தர் உயிர்த்த விழாவுக்கு முந்திய இரவில் விளக்குகள் எரிக்க எண்ணெய் இல்லை. நம் புனிதர் தண்ணீரை எண்ணெயாக மாற்றினார்.
சிந்தனை:
இவர் தமது செபங்களாலும், பிரசங்கங்களினாலும் மக்களிடையே சிறந்த ஒற்றுமையை ஏற்படுத்தினார். பிளவுபட்டு நிற்கும் கிறிஸ்தவர்கள் அவிசுவாசிகளுக்கு பெரும் இடறலாக இருக்கிறார்கள்.
செபம்:
ஆண்டவரே, பிளவுபட்டுக் கிடக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஒற்றுமை மனப்பான்மையைத் தாரும்.