புனித செசீலியா
இவள் உரோமையில் பிறந்தாள். இளம் வயதிலேயே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததால் மணமுடிக்க விருப்பமில்லை. என்றாலும் வலேரியன் என்ற வாலிபனை மணமுடிக்க வற்புறுத்தப்பட்டாள். மணமுடித்த அன்று அவள் தன் கணவனை நோக்கி “கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்கு காவலராய் இருக்கிறார். எனவே கடவுளது கோபத்தை உம்மீது வரச் செய்யும் எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது” என்றாள். வலேரியன் அவளைப் பார்த்து “கடவுளின் அந்தத் தூதரை நான் பார்ப்பேனானானல் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பேன்” என்றார். அப்பொழுது செசீலியா, “ஞானஸ்நானம் பெற்றால் ஒழிய அவரைப் பார்க்க முடியாது” என்றாள். சுரங்களில் வசித்த உர்பன் என்னும் பாப்பானவரிடம் வலேரியன் போய் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார். வீட்டிற்குத் திரும்பியதும் தன் மனைவியின் அருகில் ஓர் அழகிய வானதூதர் நிற்பதைக் கண்டார். வலேரியனுடைய சகோதரர் திபூர்சியுஸையும் செசீலியா மனந்திருப்பினாள். அல்மாகுஸ் என்னும் உரோமை அதிகாரி இரு சகோதரர்களையும் பிடித்து வேதத்துக்காக அவர்களை கொன்றான். சில நாட்களுக்குப் பின் செசீலியம்மாளையும் வேதத்துக்காக கொன்றார்கள். இவர்கள் கொல்லப்பட்டது மாற்குஸ் அவுரேலியுஸ் என்பவனது ஆட்சியில் அல்லது கொமோதுஸ் என்பவனது ஆட்சியில்; 161-ஆம் ஆண்டுக்கும் 190-ஆம் ஆண்டுக்கும் மத்தியில் இது நடந்தது.
புனித செசீலியம்மாளின் பெயர் திருச்சபையில் எப்பொழுதும் பிரசித்தி பெற்று வந்திருக்கிறது. திருப்பலி செபங்களின் போது ஆதிகாலத்திலிருந்தே அவளது பெயரைக் காண்கிறோம். கோவில் பாடகரின் பாதுகாவலியாக இவள் வந்திக்கப்படுகிறாள்.
சிந்தனை:
இவளது முயற்சியால் இருவர் மெய்யான கடவுளை அறிய வந்தனர். இதுவரை எனது முயற்சியால் யாராவது அவரை அறிய வந்திருக்கிறாரா? நல்ல நூல்களின் வழியாகவும் அவரை பிறர் அறியச் செய்யலாம்.
செபம்:
ஆண்டவரே, உம் மக்கள் உம்மையறிந்து நேசிக்கும் வரம் தாரும்.