நவம்பர் 1
📻 📺

புனிதர் அனைவரின் பெருவிழா

திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் திருச்சபையால் வந்திக்கப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேத சாட்சிகளே. வேதசாட்சிகளிலும் அனைவரது விழாக்களும் தனித்தனியாக கொண்டாடப்படுவதில்லை. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான புனிதர்களும் மோட்சத்தில் புனிதர்களாக பேரின்ப பாக்கியம் அனுபவித்து வருகிறார்கள்.

இன்று நாம் மோட்சத்தில் இருக்கும் புனிதர் அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களது மகிமையையும் மாட்சிமையையும் திருச்சபை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. புனிதர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல, எண்ண முடியாத வேறு நீதிமான்களையும் நாம் காண்கிறோம். அவர்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வாழ்ந்தவர்கள். அவர்கள் கடவுளைப் புகழ்கிறார்கள். கடவுளுடைய செம்மறியானவரையும் அவர்கள் வாழ்த்துகிறார்கள். இந்த நம் சகோதரர்களுடன் நாமும் கூடி மகிழ்வோம். புனிதரின் சமுதீத பிரயோசனத்தால் இவர்களுடன் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

மோட்சத்திலிருக்கும் புனிதர்களுடன் தேவபயத்துடன் வாழ்வதுடன் கடவுளது கட்டளைகளை அனுசரித்து நடக்க வேண்டும். எளிய மனத்தோராய் சாந்த குணம், வேதனைகளில் பொறுமை, நீதி, அனுதாபம், கற்பு, துன்பங்களில் சகிப்பு என்னும் புண்ணியங்களை அனுசரிக்க வேண்டும். நமது உழைப்புகளிலும் பிரச்சனைகளிலும் இயேசுவிடமே இளைப்பாற்றி காண வேண்டும்.


சிந்தனை:

இறந்த முன்னோர் அனைவரும் மோட்சத்தில் புனிதர்களாகத் திகழ்கிறார்கள். புனிதர்களின் சமுதீத பிரயோசனத்தால் நாம் அவர்களோடு உறவு கொண்டிருக்கிறோம். இந்த உறவைப் பயன்படுத்துவோம். அடிக்கடி அவர்களது உதவியைத் தேடுவோம்.


செபம்:

சகல மோட்சவாசிகளே, இந்த உலகில் இருக்கும் உங்கள் நேசர்களுக்காக இறைவனை மன்றாடுங்கள்.